ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறிவெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே

- திருமங்கையாழ்வார்

தொண்டை நாட்டிலுள்ள அந்தத் திருத்தலத்துக்கு சிறப்புகள் அதிகம். துளசி வனங்கள் நிறைந்திருந்ததால், பிருந்தாரண்ய க்ஷேத்திரம் எனப்பட்ட அந்தத் திருவிடத்தில், ஐந்து திருக்கோலங்களில் அர்ச்சாவதார தரிசனம் காட்டுகிறார் பெருமாள். இதனால் அந்தத் தலத்தின் பெருமை இன்னும் கூடிப்போனது! பெருமாளின் கருணையை நாடி, தினம் தினம் அடியார்கள் வந்தவண்ணம் இருக்கும் அந்தத் தலத்துக்கு, அல்லி மலர் நிறைந்த குளம் அழகு சேர்க்கும். எனவே அந்த ஊருக்கு, அற்புதமாய் ஒரு பெயர் சூட்டி அழகு பார்த்தார்கள் முன்னோர்கள்.

அந்தப் பெயர்... திருஅல்லிக்கேணி. இதுவே பிற்காலத்தில் திருவல்லிக்கேணி என்றானது!

##~##
பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீவேங்கட கிருஷ்ணனாகவும், மன்னாதன் எனும் சிறப்பு பெயர் கொண்டு புஜங்க சயனத்தில் திகழும் ஸ்ரீரங்கநாதராகவும், சீதா- லட்சுமணன்- பரத - சத்ருக்னன் மற்றும் அனுமனுடன் ஸ்ரீராமனாகவும், கருடன் மீதமர்ந்த கோலத்தில் ஸ்ரீவரத ராஜராகவும், ஸ்ரீதெள்ளிய சிங்கராகவும் பெருமாள் அருள்கோலம் காட்டும் அற்புதத் தலம் அல்லவா இது!

திருப்பதி பெருமாள், தூண்டீர மன்னன் ஸ¨மதி என்பவனிடம், 'பார்த்தசாரதி கோலத்தில் ஸ்ரீவேங்கட கிருஷ்ணனாக இந்தத் தலத்தில் கோயில் கொள்வேன்’ என்று வாக்கு தந்திருந் தாராம். அதன்படி, ஆத்ரேய மகரிஷியை கருவியாக்கி, பார்த்தசாரதியாக பெருமாள் கோயில் கொண்ட தலம் இதுவாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள் பலரும் இந்தத் தலத்தை, இன்னொரு திருப்பதியாய் போற்றுவார்கள்!

இந்த மகிமைகளையெல்லாம் அறிந்தே, அல்லிக்கேணி நாயகனை, பாக்களால் போற்றிச் சிலாகித்தனர் ஆழ்வார் பெருமக்கள். அவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக... யுகயுகமாய் இந்த திவ்விய தேசத்துப் பெருமாளை வழி பட்டும் அருள்பெற்றும் சிறந்த ரிஷிகளும் முனிவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர் அத்ரி முனிவர்.

ஒப்பிலா நாயகனை மனதில் நிறுத்தி, ஒப்பற்ற ஒரு வேண்டு தலுடன் கடும் தவமிருந்தார் அத்ரி. பிறவாமை வேண்டும் என்ற அந்த வேண்டுதலுடன் அவர் தவமியற்றிய திருவிடம்- பிருந்தாரண்ய க்ஷேத்திரம்; இன்றைய திருவல்லிக்கேணி!

நல்லோருக்கு எல்லாமும் நலமாகத்தானே அமையும்! அத்ரிக்கும் நல்லது விளையும் எனும் கட்டியத்துடன் வந்து சேர்ந்தார் 'விகடர்’ எனும் மாமுனிவர். வெகு சீக்கிரமே எம்பெருமானின் திருக்காட்சி கிடைக்கும் என்ற நல்ல செய்தியை அத்ரியிடம் உரைத்துச் சென்றார் அந்த மனிதர். மகிழ்ச்சியும் பரவசமுமாய் தனது தவத்தைத் தொடர்ந்தார் அத்ரி. அந்த மகரிஷி அருள்பெறும் காலமும் கனிந்தது.

ஒரு சுபமுகூர்த்த நாளில்... தேவர்கள் பூமாரிப் பொழிய ஆதிசேஷன், கருடாழ்வார், சேனைமுதலியார், சனகாதி முனிவர்கள் ஆகியோர் சேவை செய்ய... சூரியகோடி பிரகாசத்துடன் ஸததர்ஷ விமானத்தில் யோகாரூடராக... பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிங்க வடிவில் தரிசனம் தந்தது பரம்பொருள். நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து பணிந்த அத்ரி, ''பரம்பொருளே... எனக்கும் என் சீடர்களுக்கும் முக்தி கொடுங்கள்!'' என்று பிரார்த்திக்க, பெருமாளும் அப்படியே அருள்புரிந்தார். அதன்பின், அத்ரியின் வேண்டுகோளுக்கு இணங்கி திருவல்லிக்கேணியில்  எழுந்தருளினார்!

தமிழகத் தலைநகராம் சென்னையின் முக்கிய பகுதியாகத் திகழ்கிறது திருவல்லிக்கேணி. இங்கு, நடுநாயகமாய் அமைந் திருக்கிறது ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயில்.

ஆலயத்தின் எதிரே, பாற்கடலாய் பரந்துவிரிந்து கிடக்கிறது கைரவினி ஸரஸ் தீர்த்தம். இது... இந்த்ர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய 5 தீர்த்தங்களால் சூழப்பட்டதாக ஐதீகம். ராஜகோபுரத்துடன் கம்பீரமாகத் திகழும் ஆலயத்தில், ஸ்ரீவேங்கடகிருஷ்ணனையும், உற்ஸவர் பார்த்தசாரதியையும் முறையே தரிசித்து ஆலய வலம் வரும்போது, மேற்கு சுற்றில் அமைந்திருக்கிறது ஸ்ரீதெள்ளிய சிங்கரின் சந்நிதானம்.

த்வஜாரோஹண மண்டபம், கருடாழ்வார் சந்நிதி, கொடி மரம், பலிபீடம், துவாரபாலகர்கள், கல்யாண மண்டபம் என தனித்ததொரு கோயில் போன்றே அற்புதமாக அமைந் துள்ளது ஸ்ரீதெள்ளிய சிங்கரின் சந்நிதி. இதில் விசேஷம் என்னவென்றால், முக்கிய தினங்களில் இந்தத் தனி வாசல் வழியே ஸ்வாமி வெளியே புறப்பட்டுச் சென்று, இந்த வாசல் வழியாகவே உள்ளே வந்து விடுவாராம்.  

தசாவதாரம் திருத்தலங்கள்!

கருவறையில்... யோக வடிவில் மேற்கு நோக்கி அருள்கிறார் ஸ்ரீநரசிம்மர். 'தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே...’ என்று திருமங்கையாழ்வாரின் வழியற்றி, தீப தரிசனத்தில்  அல்லிக்கேணி சிங்கத்தை கண்ணால் தரிசித்து,

மனதால் பூஜித்து உருகினோம்! இடக் கை விரலால், 'அருகே வா’ என்று அன்பர்களை அழைத்து, வலக்

கரத்தால் பக்தர்களுக்கு அபயம் அருளும் தெள்ளிய சிங்கரின் தரிசனம்... அடடா அற்புதம்!

குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவும், தீராத பிணி தீரவும் இவரை வேண்டிக்கொண்டால், சடுதியில் பலன் கிடைக்குமாம்! 'பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்...’ என்ற வரிகளுக்கேற்ப, பள்ளிச் சிறார்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் ஸ்ரீதெள்ளிய சிங்கர்.  பிரகலாதனுக்கு அருளிய இந்த வள்ளல், அவனைப் போன்றே, தன் நாமத்தை உச்சரித்து வழிபடும் பிள்ளைகள், கல்வியிலும் வாழ்விலும் சிறக்க அருள்கிறாராம்!

தவிர... வறுமைகள், தீவினைகள் அகலவும், திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டியும் இவரை வழிபடுகின்றனர் பக்தர்கள்.தங்களின் குறை தீர ஸ்ரீதெள்ளிய நரசிங்கரைப் பிரார்த்திக்கும் அன்பர்கள் 3, 9, 12, 108 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், ஸ்வாமியை பிரதட்சணம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர். இன்னும் சிலர், இதே எண்ணிக்கையிலான நாட்களைக் கணக்கில் கொண்டு, தினமும் வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் பலித்ததும் ஸ்ரீதெள்ளிய சிங்கருக்கு பானகமும், தயிர்சாதமும் சமர்ப்பிப்பது விசேஷமாம்!

சுவாதி நட்சத்திர தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள், கார்த்திகை மாதம் முழுவதும் இவருக்கு விசேஷம். ஸ்ரீநரசிம்மருக்கு, பார்த்தசாரதியைப் போலவே ஆனி மாதத்தில் பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு நரசிம்மர், யோகத்தில் இருப்பதால் இவர் சந்நிதியின் கதவில் இருக்கும் மணிகளுக்குக்கூட நாக்கு கிடை யாது. ஓசை எழுப்பினால், இவரது யோகம் கலைந்துவிடுமாம்! உற்ஸவர் ஸ்ரீஅழகிய சிங்கரும் சிறந்த வரப்பிரசாதி!

தேர்வுக் காலம் நெருங்குகிறது, உங்கள் பிள்ளைகளுடன் சென்று அல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி யையும், ஸ்ரீதெள்ளிய சிங்கரையும் வழிபட்டு வாருங்கள். நற்கல்வி தந்து, குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றுவதுடன், உங்கள் இல்லத்திலும் இன்னல்களை நீக்கி, ஒளியேற்றுவார் அந்த நரசிம்மப் பரம்பொருள்!

- அவதாரம் தொடரும்...

சத்ரு பயம் நீக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

தசாவதாரம் திருத்தலங்கள்!

தென்தமிழ் நாட்டில் ஸ்ரீநரசிம்மர் குடியிருக்கும் சில தலங்களை, அஷ்ட நரசிம்ம தலங்களாகப் போற்றுவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது பரிக்கல். விழுப்புரம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல்.

ஸ்ரீநரசிம்மருக்காக வசந்தராஜன் என்ற மன்னனால் ஆரம்பிக்கப்பட்ட கோயில் திருப்பணி, பரிகலாசுரனால் தடைப்பட்டது. அரசன், தன் குருநாதரான வாமதேவ முனிவரை அணுகினான். வேறோர் இடத்தில் கோயில் கட்டுமாறு அறிவுறுத்திய வாமதேவர், அதற்காக மூன்று நாட்கள் இரவும் பகலும் இடையறாது வேள்வி நடத்துமாறும் மன்னனைப் பணித்தார். அதன்படியே வேள்வி தொடங்கியது. அதையறிந்து ஆவேசத்துடன் வந்த அசுரன், வேள்விச்சாலையைச் சிதறடித்தான். மன்னனைத் தேடினான். வசந்தராஜனோ, குருதேவரின் அறிவுரைப்படி புதரில் மறைந்திருந்து, மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அசுரன், புதரை விலக்கி மன்னனைத் தாக்கினான்; கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளந்தான்.

முன்பு, தூணைப் பிளந்து வெளியேறி இரண்யனை வதைத்த நரசிம்மர், இப்போது அசுரனால் பிளக்கப்பட்ட வசந்தராஜனின் தலையில் இருந்து தோன்றி, பரிகலாசுரனை வதைத்தார். பிறகு, மன்னனை உயிர்ப்பித்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்தார். பரிகலாசுரனை வதைத்ததால் இந்தத் தலம் பரிகலாபுரம் எனப்பட்டு, பிறகு பரிக்கல் என்று மருவியதாம். இந்தத் தலம் வந்து ஸ்ரீநரசிம்மரை வழிபட, கடன்களும் நோய்களும் தீரும்; எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகள் விலகும் என்பர்.