'முருகன் கை வேலை வணங்குவதே வேலை என்றிருக்கும் அடியார் இல்லங்களைத் துயரங்கள் அணுகாது; வறுமை மற்றும் பிணிகள் எதுவும் தீண்டாது. இத்தகு மகிமைகள் மிகுந்த வேலாயுதத்தின் அருட்கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் எனும் நோக்கில், வேல்மாறல் பாராயணம் பூஜையை தொடர்ந்து நடத்தி வருகிறது சக்தி விகடன். 

அந்த வகையில், கடந்த ஜூலை19 ஞாயிறு அன்று, திருப்பூர் அருகில் உள்ள மலைக்கோயில் ஸ்ரீ குழந்தைவேலாயுத ஸ்வாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அருகிலுள்ள குழந்தை வேலாயுத ஸ்வாமி திருமண மண்டபத்தில் வேல்மாறல் பாராயணம்  பூஜையும் சிறப்பாக நடந்தேறின. பூஜைக்கான ஏற்பாடுகளை 'திருப்பூர் குன்று தோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழு’வினர், மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.  

திருப்பூரில் இருந்து சோமனூர் செல்லும் வழியில் மங்கலம் எனும் கிராமத்தைத் தாண்டி, சுமார் 4 கி.மீ. தொலைவில், மெயின் சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி அமைந்திருக்கிறது மலைக்கோயில். என்றாலும், போக்குவரத்துச் சிரமங்களைப் பொருட்படுத்தாமல், காலையி லேயே திரளாகக் குவிந்துவிட்டனர் வாசகர்கள். காலை 8 மணியளவில் கோயிலில் குழந்தை வேலாயுத ஸ்வாமிக்கு விசேஷ அபிஷேகஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 மணியளவில், மண்டபத்தில் வேல்மாறல் பாராயணம் ஆரம்பமானது.

வேலுண்டு வினையில்லை !

''உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகத்திகழ்வது, அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு. இதன் 16 அடிகளை முன்னும் பின்னு மாக மாறி மாறி வருவது போல் 64 அடிகளாக அமைத்து 'வேல்மாறல்’ என்று தொகுத்தளித்தவர் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள். இந்தப் பாடலையே இங்கு பாராயணம் செய்யப் போகிறோம். இதைத் துவக்கமாகக் கொண்டு, உங்கள் வீட்டிலும் தொடர்ந்து பாராயணம் செய்து வாருங்கள். சகல பிணிகளும் நீங்கும்'' என்று, வேல்மாறல் பாராயணத்தின் மகிமையை விளக்கி, பாராயணத்தைத் துவக்கினார், வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்.அவருடன் திருமதி பவ்யா ஹரிசங்கரும் ராகத்துடன் இணைந்து பாட, அவர்களைப் பின்பற்றி வாசகவாசகியரும் பாராயணம் செய்தார்கள்.  

'திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனதுளத்தில் உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...’ எனத் துவங்கி, குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாசகர்கள் யாவரும் ஒருங்கிணைந்த குரலில்பாட, மண்டபத்தில் உருவான ஆன்மிக அதிர்வு, உள்ளம் சிலிர்க்கச் செய்தது.

வேலுண்டு வினையில்லை !

அதே வேளையில், மேடையில் மலர்ப்பந்தலின் கீழே வேலாயுதத்துக்கு... 16 வகை திரவியங் களால் அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் பூர்த்தியாவதற்கும் வேல்மாறல் பாராயணம் நிறைவுபெறுவதற்கும் நேரம் சரியாக இருந்தது. தொடர்ந்து, உலகம் நலமுறவும், வாசகர்களின் குடும்பங்கள் செழிக்கவும் சங்கல்பித்துக்கொண்டு, வேலுக்கு அர்ச்சனை வைபவங்களுடன் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. நேரில் கலந்து கொள்ளமுடியாத வாசகர்கள் அனுப்பி வைத்த பிரார்த்தனைகளுக்காகவும் முறையே சங்கல்பத்துடன் பூஜை நடந்தேறியது.

தொடர்ந்து, குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவினர் சார்பில் சண்முகம், திருமலைசாமி, ராஜாமணி முதலான ஆன்றோர்கள் நன்றி கூறினர். இதையடுத்து, உலகுக்கு நன்மை தரும் வேல்வழிபாட்டின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு ஊர்களில் சக்தி விகடன் தொடர்ந்து நடத்தி வரும் வேல்மாறல் பாராயண பூஜைக்கு தங்களின் பங்களிப்பாக இருக்கட்டும் என்னும் உயரிய நோக்கில், பூஜிக்கப்பட்ட வேலாயுதத்தை சக்தி விகடன் ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். நிறைவாக, வாசகர்கள் அனைவருக்கும் தலைவாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

பூஜையில் கலந்துகொண்ட மனநிறைவோடு வாசகர்கள் அனைவரும், 'துதிக்கும் அடியவர்க் கொருவர் கெடுக்க இடர் நினைக்கின்...’ துணைக்கு வரும் வேலாயுதத்தை அருகில் சென்று தொட்டு வணங்கி, விடைபெற்றார்கள்.

வணங்கும் அடியார்களின் வல்வினைகள் தீர்க்கும் 'சக்தி’ வேல் உங்களைத் தேடி உங்கள் ஊருக்கும் வரலாம்; காத்திருங்கள்!

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு