Published:Updated:

கேள்வி - பதில்

பழைய பஞ்சாங்கமா நமது பண்பாடு ?!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

பழைய பஞ்சாங்கமா நமது பண்பாடு ?!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? உறவினர் ஒருவர் தன்னுடைய முன்னோர் தர்ப்பணத்துக்கான விஷயங்களை சேவா மையம் ஒன்றிடம் ஒப்படைத்துவிடுகிறார். இவர் பணம் மட்டும் கட்டிவிட்டால் போதுமாம். மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்களாம். 

'பித்ருக் கடன்கள் எல்லாம் நாமே செய்யவேண்டியது அல்லவா’ என்று கேட்டால், 'ஓய்... எந்தக் காலத்தில் இருக்கிறீர்..? காலம் மாறிப்போச்சு. அதற்கேற்ப நாமும் மாறிக்கணும்’ என்று எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சொல்வது சரியென்றால், நமது பண்பாடும் கலாசாரமும் என்னாவது?

வே. சிதம்பரச்செல்வன், அம்பாசமுத்திரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கோணம்

"நாம் செய்யவேண்டிய கடமைகளை சமூக சேவை மையங்களில் ஒப்படைப்பது சிறப்பில்லை. முதுமையில் காப்பாற்ற வேண்டிய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் ஒப்படைப்பது சரியல்ல. முன்னோர் ஆராதனை

களையும், அனுதினமும் செய்ய வேண்டிய பூஜைபுனஸ்காரங்களையும் நடைமுறைப்படுத்த சேவை மையங்களை அணுகுவது தவறு. உடல் மற்றும் மனநலனைப் பேணிகாப்பதற்கான கடமைகளை நாம்தான் ஏற்க வேண்டும்.

பெற்றோர்கள், முன்னோர்கள், தேவர்கள் ஆகியோரது இணைப்பு என்றென்றும் நமக்குத் தேவை. அலைபாயும் மனதை அடக்க, பாதுகாப்பை உறுதி செய்ய, சொந்தபந்தங்களின் தொடர்பில் ஏற்பட்ட நட்பில் நம்பிக்கை உறுதிப்பட, நமது செல்வத்தை முறையாகப் பகிர்ந்தளித்து மகிழ, குடும்பத்தாருடனும் பங்காளிகளுடனும் நெருக்கம் வளர மேற்சொன்ன கடமைகளை நாமே நிறைவேற்று வதுதான் சிறப்பு. தனிமனிதனுக்கு சந்தோஷம் இருக்காது. பிறரது இணைப்பில் சந்தோஷத்தை நுகர முடியும். பணத்தின் துணையால் சந்தோஷத்தை ஈட்டமுடியாது; சங்கடம்தான் வளரும். உண்மையான இன்பத்தை சுவைத்து மகிழ்வதற்கு, பலபேரின் இணைப்பு உதவும்.

கேள்வி - பதில்

கிராமங்களிலும் நகரங்களிலும் கூடி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் நாம். தனித்தனி வீடுகளில் வாழ்ந்தாலும் அசலோடு நெருக்கமாக இருபோம். கிராமங்களில் எல்லோரும் ஒன்றுகூடி பொது அறங்களைக் கொண்டாடு வோம். அக்கம்பக்கத்தாருக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் உதவி செய்வோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

? ஆனால், இன்றைய நிலை அப்படி இல்லையே?

உண்மைதான்! குளிர்பானம் அருந்திய பிறகு பாட்டிலை வீசி எறிவோம். உணவு உண்ட பிறகு தட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம். அதாவது, பயன்பட்ட பொருளைத் துறப்பது என்ற கலாசாரத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

புதுப்புதுப் பொருட்களை ஏற்பதில் ஆர்வம் வந்துவிட்டது. இல்லறத்தில் இணையும் மனைவியின் உறவு கசந்துவிட்டால், அவளுக்கு விவாகரத்து அளித்துவிட்டு, புதியவளை தேடும் நிலை வந்துவிட்டது. கலாசாரம் அலங்கோலம் ஆக்கப்பட்டுவிட்டாலும்கூட, அதையும் சிறப்புக் கலாசாரமாகக் கருதுவோம். இப்படி, மனம் போன போக்கில் வாழ நினைப்போம்; ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று நமது செயலுக்குப் பெருமையும் சேர்ப்போம்! ரத்த பந்த நெருக்கம், ஜீவாணுக்களின் தொடர்பில் ஏற்பட்ட நெருக்கம் ஆகிய இரண்டும் கழன்று போய்விட்டது. செல்வத்தால் ஏற்பட்ட நெருக்கம், தளராமல் தொடருகிறது. செல்வம் சரிந்த பிறகு அதுவும் கழன்றுவிடும்.

இந்தக் கோலாகலங்கள் அத்தனைக்கும் சுயநலமே காரணம். சுயநலமானது மற்றவர்களுடனான தொடர்பை அறுத்துவிடுகிறது. வீட்டில் நடந்தேறிய விசேஷங்கள், விழாக்கள், கொண்டாட்டங்கள் அத்தனையும் வெளியே சத்திரத்தில் இடம் பிடித்துவிட்டன. விருந்தோம் பலில் பிடிப்பு இல்லை. எவரோ ஒருவர் பொறுப்பேற்று வந்தவர் களுக்கு உணவளிப்பார். அவரது சேவைக்கு போதிய பணம் அளித்துவிடுவோம். உடலுழைப்பை முற்றிலும் துறந்துவிடுவோம். ஆரோக்கியத்தையும், கடமையையும் மறந்து விடுவோம்.

சுதந்திரம் பறிபோய்விடக்கூடாது. அதே நேரம், அந்த சுதந்திரமானது பொறுப்பு இல்லாததாக இருக்கவேண்டும்; பொறுப்பு சுமையாக இருக்கக் கூடாது... இன்றைய புதிய தலைமுறையினர் பலரிடமும் இப்படியான எண்ணமே அதிக அளவில் காணப்படுகிறது.

? தற்போதைய நிலவரத்தை நீங்களே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள். அப்படியிருக்க பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் அவர்களிடம் ஓதிக் கொண்டிருப்பது வீண் அல்லவா?

அதற்காக சும்மா இருந்துவிட முடியாது! இன்றைய தலைமுறை திருமணத் தேர்வில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறது. சுயநலம் குறுக்கிடுவதால், நல்ல துணையை கைவிட்டு விடுகிறது. வாழ்க்கைத் துணையாக வருபவர் ஒத்துப் போகாத நிலையில், திருமண முறிவை ஏற்றுக்கொள்கிறது. அவர்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தளர்ந்து காணப்படுகிறது. மனைவியாக வருபவளுக்கு அழகும், படிப்பும், பதவியும், கை நிறையச் சம்பளமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் தென்படுகிறது. அவர்களிடையே தாழ்வு மனப்பான்மையும், பாதுகாப்பு இன்மையும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி, வாழ்வை துயரத்தில் ஆழ்த்திவிடுகிறது.

சிறு வயதிலும், இளமையிலும், முதுமையிலும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து, உரிமையைப் பெறுவதில் மட்டும் முனைந்து செயல்படுகிறது. நமது பண்பாட்டையும் நாட்டின் பெருமையையும் மறந்து, ஏதோ சுற்றுலாப் பயணிகள் போலவும் வழிப்போக்கர்கள் போலவும் இருந்துகொண்டு, பண்பாட்டின் இழப்பில் தரம் தாழ்ந்த வாழ்க்கையை ஏற்று துயரத்தில் ஆழ்பவர்களும் இருக்கிறார்கள். அலசி ஆராயும் திறமையும், முதிர்ச்சி அடைந்த சிந்தனையும் எல்லோரிடமும் தென்படுவது இல்லை. பண்பாட்டின் இழப்பு பரவலாகத் தென்படுகிறது. ஆகவே, விழித்துக் கொண்டு பழைய பண்பாட்டைப் புதுப்பித்தால், வளமான வாழ்க்கையில் மூழ்கலாம்.

இரண்டாவது கோணம்

'மாறுதல் காலத்தின் அடையாளம்’ என்கிறது ஆயுர்வேதம் (பரிணாம: கால:). காலத்தின் கோலத்துக்கு ஏற்ப, அதனுடன் இணைந்து செயல்பட்டால்தான் வாழ்க்கை இனிக்கும். பல நூறு வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை முறையை இன்று கடைப்பிடிக்க இயலாது.

பல படையெடுப்புகளாலும், அவர்களது கலாசார கலப்பினாலும் கலங்கிப்போன நமது கலாசாரத்தை தெளியவைப்பது கடினம். அதுவும் தவிர, இப்போதைய தலைமுறைக்கு, பழைய பாரத கலாசாரத்தின் வாடையே பிடிக்காது.

? ஒட்டுமொத்தமாக இப்படியொரு முடிவுக்கு வரமுடியாது. பழம்பெருமை மீளாதா எனக் காத்திருப்பவர்களும் இருக்கிறார்களே?

அப்படியானவர்கள் சொற்ப எண்ணிக்கையே! வயது முதிர்ந்த தம்பதியைப் பார்த்து 'முதல் மனைவி யோடு அதாவது ஒரே மனைவியோடு முதுமை வரையிலும் எப்படித் தொடர முடிந்தது?’ என்று ஆச்சரியத்துடன் புதுத் தலைமுறை கேள்வி கேட்கும் அளவுக்கு பழைய கலாசாரம் கசந்துவிட்டது இன்றைக்கு. 'திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழலாம்... தவறில்லை!’ என்று சொல்பவர்களும் உண்டு. சம உரிமையும் சமூக நீதியும் பெண்களின் கற்பை கேலிக்கூத்தாக்கி விட்டன. 'அப்புறம் எதற்கு தாலி?’ என்று அதைக் கழற்றும் பணியை சீர்திருத்தவாதிகள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். 'கற்புக்கரசி’ 'மணாளனே மங்கையின் பாக்கியம்’ 'கணவனே கண்கண்ட தெய்வம்’ போன்ற பழைய

சினிமா தலைப்புகள் புதிய தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. பெண்ணான வள் பத்து மாதம் சுமந்து குழந்தையை ஈன்றெடுக்கிறாள். சம உரிமையை நிலைநாட்ட ஆணும் குழந்தையை ஈன்றெடுக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் சீர்திருத்தவாதியும் உண்டு. ஆண்களுக்கு கர்ப்பப் பையை இணைக்காமல் செய்துவிட்டது இயற்கை.

அதனால் சீர்திருத்தவாதி தோல்வியுற்று விட்டான்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானம் விந்து வங்கி மூலம் விந்துவை சேகரித்து, தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் செய்து, உடலுறுவு இன்றி குழந்தைச் செல்வத்தை அளிக்கிறது. கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த கற்பையும் துடைத்து எறிந்துவிட்டு, சம உரிமையை முழுமையாக்கிவிட்டது.

ஆக, பழைய பண்புகள் இன்று அரங்கேறாது. ஆசிரியை மாணவனைத் திருமணம் செய்துகொள்வதும், காதலனோடு இணைந்து கணவனை அழிக்கும் மனைவியும் தோன்றியபிறகு, பண்பைப் பற்றிப் பேசுவது தவறு.

? நோய்க்கு சிகிச்சை வேண்டாமா? இன்றைய சமுதாயப் பிணிகளுக்கு, நமது பண்டைய கலாசாரபண்பாடுகளைப் போதிப்பதுதானே சிறந்த மருந்தாக முடியும். அதை தவறு என்பது ஏன்?

ஏனெனில், துறவிகளும்கூட காலத்தை ஒட்டியே வாழவேண்டிய காலகட்டம் இது. பண்பையும் கலாசாரத்தையும் பற்றி கவலைப்பட முடியவில்லை. இன்றைக்கு, உழைக்காமலே ஊதியம் பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

வெள்ளையர் காலத்தில் கர்ப்பத்தைக் கலைத்தால் தண்டனை உண்டு. இன்று அப்படியல்ல; கர்ப்பத்தைக் கலைத்தால் வெகுமதி தரும் காலம் இது! குழந்தை, விலைபொருளாக மாறிவிட்டது. குழந்தையை தத்தெடுத்துக்கொண்டு, தனது மலட்டுத் தன்மையை மறைக்கலாம். நடை, உடை, பாவனை, வேஷம், அணுகு

முறை ஆகிய அனைத்திலும் புதுப்புது நடைமுறைகள் புகுந்த பிறகு, பழைய பண்பாட்டை புகுத்தும் முயற்சி வீணானது.

அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கக்கூடாது. சில புரோகித வர்க்கமும் பண்பை மறக்கடிக்க பல்வேறு புதுப்புது நடைமுறைகளைப் புகுத்தியிருக்கிறது. உயர்வாக மதிக்கப்

பட்ட அவர்களது அணுகுமுறை, இன்றைக்கு வேலை வாய்ப்பாக மாறியிருக்கிறது. கடன்பட்டு, பணத்தைச் செலவு செய்து, 17 வருடங்கள் படித்துப் பட்டம் பெற்று, இரவு பகலாக உழைத்து சம்பாதிக்கும் வர்க்கத்தைவிட எளிதில் அதீத வருமானம் சம்பாதித்து, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று மகிழ்கிறார்கள். விளைவு... பண்பு, கண்களுக்குப் புலப்படாமல் போய்விட்டது.

? ஆனால், அதைப் புலப்படுத்துவதற்கான மார்க்கம் வீண் என்பதல்லவா தங்கள் கருத்து?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதே எங்கள் கருத்து. பண்பின் சீரழிவு நாடு முழுவதும் எல்லோரிடமும் பரவி விரிவடைந்து இருக்கும்போது, அதை அகற்றி பண்பைக் கொண்டு வருவது இயலாத ஒன்று என்றே சொல்ல வருகிறோம்.உயர்ந்த பண்பு, கலாசாரம், ஒழுக்கம் ஆகியன ஏட்டளவிலேயே மிஞ்சியிருக்கும் நிலையில், அவற்றையெல்லம் புதுப்பிக்க முயற்சிப்பது வீண். உயிருள்ள வரையிலும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு புது கலாசாரம் வழிவகுக்கிறது. அப்படியொரு மகிழ்வான வாழ்வுக்கு பண்டைய கலாசாரம் உதவாது. எனவே, கலாசாரத்தைக் காக்க நமது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க முடியாது.

சுயநலம் மேலோங்கி இருக்கும் இன்னாளில் எதைச் செய்யலாம், எதைச் செய்ய இயலாது என்பதை ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் சிறப்பாகும். சுயநலம் விரும்பாத பண்பைப் புதுப்பிப்பதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. காலம் தரும் மாற்றத்தைப் பண்பாக நினைத்து வாழ்வதே சிறப்பு. பழைய பண்பு, புதிய நடைமுறை ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்ப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. நாம் வாழப் பிறந்தவர்கள். பண்புக்காக வாழ்க்கையை தியாகம் செய்ய இயலாது. இன்னும் பலநூறு வருடங்கள் கடந்த பிறகு, தற்போதுள்ள பண்புகளும் மறையப் போகின்றன. ஆகவே, வீண் கவலையை விடுங்கள்; நிம்மதியைத் தேடுங்கள்.

மூன்றாவது கோணம்

நாட்டை வலம் வந்த துரியோதனனுக்கு அத்தனைபேரும் துஷ்டர்களாகவே பட்டார்கள். தருமருக்கோ அத்தனை குடிமக்களும் நல்லவர்களாகப்பட்டார்கள். துரியோதனின் கண்ணோட்டத்திலான தங்களின் கணிப்பு ஏற்புடையது அல்ல.

பண்பு, கலாசாரம் ஒழுக்கம், அறம் ஆகியவற்றில் ஊறிய துறவிகளும், சீர்திருத்தவாதிகளும், புரோகித வர்க்கமும் இன்றைக்கும் நிறைய இருக்கிறார்கள். அவர்கள், ஒவ்வொரு நொடியும் சமுதாயத்தை உயர்த்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். 'உலகம் உய்ய மக்களிடம் ஒழுக்கம் தேவை, வாழ்க்கை இனிக்கக் கலாசாரம் தேவை, இணைந்து வாழ பண்பாடு தேவை’ என்கிற தாரக மந்திரத்தை ஓயாமல் ஓதும் வர்க்கம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

? ஆனால், அவையெல்லாம் பழைமைவாதி களுக்கானது என்பதே இன்றைய யதார்த்தம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

பண்புக்கும், கலாசாரத்துக்கும், ஒழுக்கத்துக்கும் 'பழைமை’ கிடையாது. அவை, என்றென்றும் புதுப்பொலிவுடன் விளங்குபவை; காலத்தால் மாறுபடாத தத்துவ விளக்கங்களாகத் திகழ்பவை. 'உண்மை பேசு, அறத்தைச் செயல்படுத்து’ (சத்யம் வத தர்மம் சர) இது வேத வாக்கு; காலங்கள் கடந்து சிரஞ்ஜீவியாக இருக்கும் தத்துவ விளக்கமாக வேதம் இப்படி குறிப்பிடுகிறது.

கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என்கிற பாகுபாடு நமது பண்புக்கும், கலாசாரத்துக்கும், ஒழுக்கத்துக்கும் கிடையாது.ஒட்டுமொத்த மனித இனமும் பாங்காக முன்னேறி பிறவிப்பயனை எட்ட, நமது பண்பான கலாசாரம் நிச்சயம் தேவை.  தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப வாழ்விலோ, சமுதாய வாழ்விலோ நெருடல் இல்லாமல் முன்னேறி செழிக்க, நமது பழம்பெரும் கலாசாரமே உதவும். போதுமான சிந்தனை வளம் பெறாத புதுத் தலை முறையினரின் பரிந்துரைகள், வாழ்க்கையைத் திசைதிருப்பி, அல்லல்படவைக்கும்.

கேள்வி - பதில்

? சிந்தனை வளத்தில் குறையில்லை; இப்போதுள்ள நிலைக்குக் காரணம் சிந்தனை மாற்றமே. அது காலத்தின் கட்டாயம் என்பதை மறுக்க முடியுமா?

இயற்கையின் படைப்பில் வந்த எந்த உயிரினங் களும் காலத்தின் தாக்கத்தில் மாறுவதில்லை. மனிதனே, தனது சிந்தனை மாற்றத்தை காலத்தில் திணித்து, மக்களை திசைமாற்றுகிறான். தாவர இனங்களும் விலங்கினங்களும் அப்படியல்ல; இன விருத்தியிலும் சேர்ந்து, வாழ்வதிலும் வெற்றிபெற்று விளங்குகின்றன. பல தலை முறைகளாக மனித இன இயல்புகள் தேய்ந்து வருகின்றன; விலங்கின இயல்பு வளர்ந்து வருகிறது. பண்பாட்டை ஏற்று வளராததால் சுயநலம் மேலோங்கி, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பண்பான கோட்பாட்டை மறந்து, எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற முடிவை எட்டிவிட்டது. இவை அத்தனைக்கும், சிந்தனைவளம் குன்றிய சிறுபிள்ளைத்தனமே காரணம். சம உரிமை, சமுதாய நீதி, பிறப்புரிமை, மனிதநேயம் போன்றவற்றை உதிர்த்து, சமுதாய சீர்திருத்தத்தில் இறங்கியவர்கள், மக்களின் இதய பரிவர்த்தனத்தில் (மனமாற்றம்) கவனம் செலுத்தாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். கையாலாகாதவர்களே தேவையற்ற விஷயங்களில் புரட்சி செய்வார்கள். அதை அறியாமல், ஆசைகள் நிறைவேறுவதில் ஆர்வம் கொண்ட மக்கள் தவறான வழிகாட்டுதலில் துயரத்தைச் சந்திப்பார்கள்.

வேதம், சாஸ்திரம் புராணம், இதிகாசம், சம்பிரதாயம் ஆகிய அத்தனையும் பண்பாட்டை வளர்க்கும் கருவிகள்; என்றென்றும் நம்மை அழியாமல் காப்பாற்றும் திறன் பெற்றவை. சமுதாயம் சீர்பட பண்டைய பொக்கிஷங்கள் தேவை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இதய பரிவர்த்தனத்தை எட்டாத வரையிலும் துயரத்தை மட்டுமே அளிக்கும். சீரழிந்த சமுதாயத்தைச் சீராக்கும் பணியில் பழைய பண்பாடும், அறமும், ஒழுக்கமும் மட்டுமே ஒத்துழைக்கும். சீர்திருத்தவாதிகள் அவ்வப்போது வெளியிடும் பரிந்துரைகள் எல்லாம் மக்களைச் சீர்திருத்தாது. அவை,  சீர்திருத்தவாதிகளை மட்டுமே வாழ வைக்கும்!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

பழைமை என்று எதையும் துறக்காதே; புதுமை என்று எதையும் ஏற்காதே. ஆராய்ந்து பார்த்து, ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் தத்துவங்களை அறிந்து, ஏற்பதும் இழப்பதும் நிகழவேண்டும்.

என்றைக்கும் புதுமைப் பொலிவுடன் விளங்கும் பண்டைய பொக்கிஷங்களை ஏற்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், தடுமாறாமல் தெம்போடு வீரநடை போட்டு வாழ்க்கையைச் சுவைத்து மகிழலாம். குடுகுடுப்பைக்காரன் 'நல்ல காலம் வருகிறது நல்ல காலம் வருகிறது’ என்று சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால், நாம் அளிக்கும் பொருளில் அவன் வாழ்க்கை சிறக்குமே தவிர, நாம் நல்ல காலத்தைச் சந்திக்க மாட்டோம். இன்றைய சீர்திருத்தவாதிகளும் அப்படித்தான்! சிந்தனை செய் மனமே!

பதில்கள் தொடரும்...