Published:Updated:

சனிப்பெயர்ச்சி... தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். அதன்படி தனுசு ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் ஆகியவற்றைப் பார்ப்போம். 

தனுசு ராசி அன்பர்களே! உங்களுடைய ராசிநாதன் குரு பகவான். அதிலும் குறிப்பாக, உங்கள் ராசிக்கு ஆயுதங்களுக்கு உரிய சின்னமாக வில்-அம்பு இருக்கிறது. நீங்கள் எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். இவவளவு நாள்களாக உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் இருந்து விரயச் செலவுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவர், இப்போது உங்கள் ஜன்ம ராசியிலேயே வந்து அமர்கிறார். இப்போதும் பண விஷயங்களைக் கையாளும்போது சற்று கவனமாக இருப்பதே நல்லது.

உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்கள், சகஊழியர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாகப் பேசுங்கள். நீங்கள் ஒன்று சொல்ல அவர்களாக வேறு ஒன்றைப் புரிந்துகொள்வார்கள். பொது மீடியாக்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் இவற்றிலிருந்து கொஞ்சம் காலத்துக்கு நீங்கள்  விலகி இருப்பது நல்லது.
சனிபகவான், 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பலவிதத்திலும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார். இதனால், கொடுக்கல், வாங்கலில் தடைகள் ஏற்பட்டன. தேவையற்ற நஷ்டம், இழப்புகள் ஏற்பட்டு, நல்ல தூக்கம் இல்லாமல்கூட போயிருக்கும். 

இனி அந்த நிலைமைகள் சீரடைந்து, நல்ல நிம்மதியான தூக்கம் வரும். வியாபரிகளுக்கு முன்னர் இருந்ததைவிட வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். அதே சமயம் புதிய முதலீடுகள், பெரிய முதலீடுகள் இதிலெல்லாம் ஈடுபட வேண்டாம். கொஞ்ச காலத்துக்கு அவற்றைத் தள்ளிப்போடுவது நல்லது. மற்றவர்களை முதலீடு செய்யச் சொல்லி அதில் நீங்கள் வேலை பார்க்கலாம். கமிஷன், ஏஜென்ட், கன்சல்டன்சி, ஸ்டேஷனரீஸ் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். 

சனிபகவான் பணியாட்களுக்கு உரிய கிரகம் என்பதால், மிகவும் நம்பிக்கையானவர்களை மட்டுமே வேலையில் வைத்துக்கொள்வது நல்லது. மாணவ மாணவிகள், டி.வி பார்த்துக்கொண்டே பாடம் எழுதுவது, பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். மிகவும் கவனமாகப் படிக்கவேண்டிய நேரமிது.  

வெளிநாட்டு வேலைகளுக்கு மனு செய்துவிட்டு, எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சில முன்னேற்றங்களையும் சனிபகவான் தந்து உதவுவார். 

தனுசு ராசிக்காரர்கள்,  சனிபகவானின் பாதிப்பிலிருந்து விலகி, மேலும் பல நல்ல பலன்களை அடைய, தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டுவந்தால். சிறப்பான பலன்களைப் பெறலாம்.


( தனுசு ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறிய இந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்).

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே இருக்கும் குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோயில், தென் மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவே மிகவும் பிரபலமானது. பல கோயில்களில் நவக்கிரகங்களில் ஒருவராக சனீஸ்வர பகவான் இருப்பார். வேறு சில கோயில்களில் சனீஸ்வரர் தனி சந்நிதியில் இருப்பார். ஆனால், இங்கு சுத்த சுயம்புவாக சனீஸ்வர பகவான் இருக்கிறார். இதனால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
தலபுராணம்:
குச்சனூர் சனீஸ்வரன் கோயில் முன்னொரு காலத்திலிருந்த சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. தற்போதுள்ள பெரியாறும், சுருளியாறும் இணைந்ததுதான் சுரபி ஆறு. 

செண்பகநல்லூர் என்ற பகுதியை தினகரன் என்ற அரசன் ஆண்டு வந்தான். தனக்குப் பிறகு தன் நாட்டை ஆள்வதற்கு வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வந்தான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டி வணங்கினான். 

ஒருநாள், கோயிலில் அசரீரி ஒன்று கேட்டது. `உன் அரண்மனையைத் தேடி ஒரு பிராமணச் சிறுவன் வருவான். முதலில் அவனை உன் மகனாக வளர்த்து வா. அதன் பிறகு உன் மனவிக்குக் குழந்தை பிறக்கும்' எனக் கூறியது அசரீரி.

அசரீரியில் சொன்னபடியே அனைத்தும் நடந்தன. பிராமணச் சிறுவனுக்குச் `சந்திரவதனன்’ என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். பிறகு, அரசிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அந்தக் குழந்தைக்கு `சதாகன்’ என்று பெயர் சூட்டி வளர்த்தனர். 

சந்திரவதனன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். அதனால் அவனையே பட்டத்து அரசனாக்கினான் தினகரன். இந்த நிலையில் அரசன் தினகரனை, சனிதோஷம் பிடித்து அவனைப் பாடாகப்படுத்தியது.

தந்தையின் துன்பம் கண்டு தாளாத சந்திரவதனன், சுரபி நதிக்கரையில் இரும்புக்கம்பியை சனி பகவானாக எண்ணி வணங்கினான். அவன் முன் தோன்றிய சனி பகவான், ''மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முற்பிறவிப் பாவ வினைகளுக்கு ஏற்ப இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாள்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. 

இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு, நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும்'' என்று கூறினார்.

சந்திரவதனன் தனது தந்தையின் துன்பத்தைப் போக்கும்படி வேண்டினான். அதற்கு பதிலாக ஏழரை நாழிகைக் காலம் சனீஸ்வர பகவான் அளித்த துன்பங்களையெல்லாம் தான் ஏற்றுக்கொண்டான். சனிபகவானும் தினகரனை விடுவித்தான். 

சந்திரவதனன், சனீஸ்வர பகவானிடம், சனி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்களை துன்பத்திலிருந்து மீட்க அங்கேயே எழுந்தருளும்படி வேண்டினான். சனீஸ்வரனும் அக்கோரிக்கையை ஒப்புக்கொண்டு, அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.
 

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்:
இங்குள்ள சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள், தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். 
 

வழிபடும் முறை:
சனீஸ்வர பகவானை கருங்குவளை மலராலும், வன்னி இலைகளாலும் அர்ச்சிக்கலாம். அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி, அதற்கு உணவிட்டு, வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம்வைத்து சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு