Published:Updated:

பல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்! #AllAboutTiruvannamalai

பல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட  ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்!  #AllAboutTiruvannamalai
பல லட்சம் பக்தர்கள் அரோகரா கோஷமிட ஓடவிருக்கிறது திருவண்ணாமலைத் தேர்! #AllAboutTiruvannamalai

சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை... இந்த மூன்று தலங்களும் சிவனடியார்களுக்கு உடல், உயிர், ஆன்மா என்பார்கள். இதில்,  திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என எல்லா வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றாடம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் நெருப்புக்குரிய தலம். 

சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். நினைக்க முக்தியருளும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருவண்ணாமலை பாறைகள் 260 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. மஞ்சம்புல் மட்டுமே விளையக்கூடிய இந்தத் திருவண்ணாமலை 2688 அடிகள் உயரம் கொண்டது. எண்ணற்ற துறவிகளின் இருப்பிடமாகவும் சுனைகளின் ஊற்றாகவும் இந்த மலை இருந்து வருகிறது. 

கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியுள்ளது இந்த மலை. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த மலை இந்தத் திருவண்ணாமலை. 

திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது 'அண்ணாமலை' என்றானது. சோணாசலம், சோணகிரி, தென்கயிலை என எண்ணற்றப்பெயர்களால் திருவண்ணாமலை அழைக்கப்படுகிறது. லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ வடிவங்கள் தோன்றிய இடமிது. ஈசனிடம் இடப்பாகம் பெற்று அன்னை சக்தி அருள்பெற்ற இடமும் இதுதான். 

அருணகிரி நாதரை முருகப்பெருமான் ஆட்கொண்ட தலமிது. வல்லாள மகாராஜனுக்கு ஈசன் மகனாக மாறிய தலமும் இதுதான். இன்றும் அந்த ராஜனுக்காக ஈசன் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் இங்கு நடக்கிறது. இங்கு நடக்கும் காமன் தகனம் வேறெந்தக் கோயில்களிலும் நடக்காத நிகழ்வாகும். ஈசனே மலைவலம் வரும் ஊர் இது. இப்படி ஏகப்பட்ட பெருமைகளைக் கொண்ட திருவண்ணாமலை, பூலோக கயிலாயம் எனப்படுகிறது.

மலையே லிங்கமாகக் கருதப்பட்டாலும், இங்குள்ள திருவண்ணாமலை திருக்கோயில் பிரமாண்ட வடிவம் கொண்டது. இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத்தின் உயரம் 217 அடி. 24 ஏக்கர் பரப்பளவில் ஆறு சுற்றுப் பிராகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலில் ஒன்பது ராஜகோபுரங்கள், 142 தெய்வ சந்நிதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் பிள்ளையாருக்கு மட்டுமே 22 சந்நிதிகள் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 306 மண்டபங்கள், இரண்டு முருகன் சந்நிதிகள், பாதள லிங்கம், இரண்டு திருக்குளங்கள் எனப் பரந்து விரிந்த பெருங்கோயில் இது. இங்குள்ள ஈசர் அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் எனப்படுகிறார். சக்தி அபீதகுஜாம்பாள், உண்ணாமலை என்று வணங்கப்படுகிறார். மகிழமரமே தலமரம். அப்பர், சம்பந்தர் உள்ளிட்ட பல ஞானியர் பாடிய தலம். விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் உள்ளிட்ட முனிவர்கள் வணங்கிய தலம். 

திருவண்ணாமலையில் உலவித்திரியும் சித்தர்கள் பற்றி அறிய இந்த ஆடியோவைக் கேளுங்கள்!

குரல் - எஸ்.கதிரேசன் 

கோயிலிலிருந்து தொடங்கி, மலையை மையமாகக்கொண்டு கிரிவலப்பாதை உள்ளது. ராஜகோபுரத்திலிருந்து நீளும் இந்தப் பாதை, 14 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதையைச்சுற்றிலும் கிட்டத்தட்ட 100 கோயில்களும், மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. இந்த அழகிய பாதையை கிபி 1240-ம் ஆண்டு புனரமைப்பு செய்தவன் ஜடாவர்ம விக்கிரம பாண்டியன். சோணை நதி, அருணை நதி ஓடிக்கொண்டிருந்த பாதைதான் இப்போது கிரிவலப்பாதை. நான்கு யுகங்களாகப் பெருமைபெற்று விளங்கும் இந்த ஆலய வரலாற்றை ஒரு கட்டுரையில் விவரிக்க முடியாது.

 இந்தியாவின் அநேகப் புராணங்கள் இந்த திருவண்ணாமலையின் பெருமையைப் பேசுகின்றன. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது  நம்பிக்கை.  

கார்த்திகை தீபத்திருநாள் விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து, நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் ஆகியோர் கார்த்திகை தீபத்திருநாள் விரதத்தின் பயனால் பேரரசானார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அசுவன், கம்பளதாரன் என்ற இரு கின்னரர்கள், ஈசனை எண்ணியே சாம கானம் பாடி, திருவண்ணாமலையில் முக்தி பெற, அவர்களின் இசையில் மயங்கிய ஈசன் அவர்களையே தனது குண்டலமாக்கி, காதுகளில் அணிந்து, எப்போதும் இசையைக் கேட்கும் வண்ணம் அருள் புரிந்த திருநாள் கார்த்திகை தீபத்திருநாள்தான். 

வேதாரண்யத்தில் உள்ள மறைக்காட்டு நாதர் கோயிலில் யதேச்சையாக எலி ஒன்று விளக்கை தூண்டி ஒளி வீச செய்தது. அதனால் மகிழ்ந்த இறைவன் அந்த எலியை மறுபிறப்பில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்பது புராண வரலாறு. அந்த மகாபலி சக்கரவர்த்தி கொண்டாடிய விழா, தீபத்திருநாள். அன்னை சக்தி, பிரம்மா, ஸ்ரீராமர் என எல்லா தேவர்களும் கொண்டாடிய விழா இது. 

திரு அண்ணாமலையார் திருத்தலத்தின் பெருமைகளை அறிய இந்த வீடியோவைக் கிளிக் செய்யுங்கள்

நாளை(29.11.2017) திருவண்ணாமலையில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. காலையில் தொடங்கி இரவு வரை நான்கு மாடவீதிகளிலும் ஈசன், சக்தி, முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளின் உலா நடைபெறும். உண்ணாமலையம்மன் உலாவரும் திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்களால் அந்த நகரே நிரம்பி வழியும். 'கரும்புத் தொட்டிலிடுவது' இந்த விழாவின் முக்கிய அம்சம். எண்ணியவை யாவும் அருளும் திருவண்ணாமலை அண்ணாமலையார் நமது பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி சுபிட்சம் தரட்டும் என்று பிரார்த்திப்போம்...!