Published:Updated:

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

ஆலயம் தேடுவொம் !தி.ஜெயப்பிரகாஷ்

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

ஆலயம் தேடுவொம் !தி.ஜெயப்பிரகாஷ்

Published:Updated:

திருவிடைமருதூர் என்றதும், கும்பகோணம்  மயிலாடுதுறை பாதையில் உள்ளதும், மத்தியார்ஜுனம் எனப் புராணங்களால் போற்றப்படுவதுமான அருள்மிகு மகாலிங்க ஸ்வாமி திருக்கோயிலே நம் நினைவுக்கு வரும். இதே திருப்பெயரில் அமைந்த மற்றொரு திருத்தலமும் உண்டு. அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவனாருக்கும் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி என்றே திருநாமம்! 

கும்பகோணம் அருகில் காவிரிக்கரையில் அமைந்த திருவிடைமருதூரும், திருவலஞ்சுழியும் தேவாரப் பாடல் பெற்ற புனிதத் தலங்கள் என்பதால், இந்த ஊர்களின் பெயர்களையே பிற்காலத்தில் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள சிற்றூர்களுக்கும் சூட்டிச் சிறப்பித்தார்களாம். அவ்வாறு திருவிடைமருதூர் எனும் பெயர் பெற்ற தலத்தையே இந்த இதழ் ஆலயம் தேடுவோம் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நாகை மாவட்டம்  திருக்குவளைக்கு அருகில் அமைந்துள்ளது இந்தத் திருவிடைமருதூர். அதாவது திருத்துறைப்பூண்டி நாகை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீர்மலை பஞ்சாயத்து எனும் சிற்றூரில் இருந்து மேற்கே பிரியும் உட்புறச் சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த திருவிடைமருதூரை அடையலாம். சோழர்கள் காலத்தில் கீழத்தஞ்சை என்று வழங்கப்பட்ட பகுதியில் அடங்கியிருந்த இந்த ஊர், சாத்தாமங்கலம் என்ற பெயரில் திகழ்ந்தது. இங்கு மகாலிங்க சுவாமியின் திருக்கோயிலைக் கட்டியது, மூன்றாம் குலோத்துங்கச் சோழன். ஆகவே, குலோத்துங்க சோழீச்சரம் என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்துக்கு உண்டு.

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

பாடல் பெற்ற திருவிடைமருதூருக்கு பயணித்து மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க இயலாதவர்களுக்காக, இந்தப் பகுதியில் அதே பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டது என்றொரு தகவலும் உண்டு. சோழர்களின் கட்டடக் கலையை வெளிப்படுத்தித் திகழும் இந்த ஆலயத்தில், பெருவிளமா முலையம்மன் எனும் திருப் பெயருடன் அருள்கிறாள் அம்பாள்.

கோயிலின் அடித்தளம் முழுவதும் பளபளக்கும் சலவைக் கற்களைப் போன்ற கருங்கற்களால் அமைத்து, அதன்மீது செங்கற்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது கற்றளியும் மண்தளியும் இணைந்த கலவையாகத் திகழ்கிறது கட்டுமானம். இரண்டு பிராகாரங்கள், மகா மண்டபம், அர்த்த மண்டபத்துடன் திகழும் ஆலயத்தைப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் விழாக்களும் இறைவைபவங்களும் சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கக் கூடும் என்றறிய முடிகிறது.

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

அதேபோன்று, சிற்பக் கலைக்கும் இங்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். கணபதி, இரண்யகசிபுவை வதைக்கும் நரசிம்மம், நடன மாதுக்கள், குழலூதும் கண்ணன், பிட்சாடனர் என்று எங்கெல்லாம் வாய்ப்பு கிட்டியதோ அங்கெல்லாம், தங்களின் கலைத்திறனை வெளிப் படுத்தி முத்திரை பதித்திருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் அமைப்பும்கூட அவ்வளவு அழகு! இன்னொரு சிறப்பம்சம், ஈஸ்வரனை வணங்கும் நிலையில் திருவீதியில் அமைந்திருக்கும் மூன்றாம் குலோத்துங்கனின் சிலை. முகத்தில் பக்தி பாவனை துலங்கும் அதேவேளையில், கம்பீரத்துக்கும் குறையில்லாமல் வணங்கி நிற்கிறான் சோழன்.

இவ்வூரைப் பற்றியும், இந்தத் தலத்தைப் பற்றியும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் உண்டு என்கிறார்கள்.

இப்படி, சோழர்களின் கலைநயத்துக்கும் சிவ பக்திக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இந்த ஆலயம், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்துபோனது. இன்றைக்கு தன் அடையாளத்தையே இழக்கும் நிலையில் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. கோயிலின் சுற்றுச் சுவரும், பரிவார ஆலயங் களும் இருந்த இடமே தெரியாத அளவுக்குக் காணாமல் போய்விட்டன. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி விமானங்களும் பழுதடைந்து கிடக்கின்றன.

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

பரிவார மூர்த்திகளான விநாயகர், தேவியர்களுடன் அருளும் முருகன், சூரியன், திருமால், ஸ்ரீ தேவி மற்றும் பைரவர் ஆகியோரது திருமேனிகளை, அம்மன் சந்நிதி முன்பாக ஒரு தற்காலிக கூடம் அமைத்து, அதில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். தினமும் நித்தியப்படி பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறதாம்.

ஆலய அர்ச்சகர் ரவிக்குமார், ''ஸ்வாமி அருளால் தின பூஜைகள் நடந்துவருகின்றன. மற்றபடி பிரதோஷம், சிவராத்திரி போன்ற வழிபாடுகளின் போது, பக்தர்கள் சற்று அதிகமாக வருகிறார்கள். எனக்கும் சரி, இந்த ஊர் மக்களுக்கும் சரி... இந்தக் கோயிலில் கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது என்றே தெரியாது. அவ்வப்போது வெளியூர்களில் இருந்து வரும் அன்பர்கள் சிலர், 'இது சோழர் காலத்துக் கோயில், வரலாற்று ரீதியாக முக்கியமானது’ என்று சிலாகித்துச் சொல்வார்கள். எங்களுக்கும் ரொம்பப் பெருமிதமா இருக்கும். இன்னும்... திருப் பணிகள் ஆரம்பித்து, இந்தக் கோயில் பழைய பொலிவை மீண்டும் பெற்றால்தான் எங்களுக்கு முழுமையான சந்தோஷம். அதற்கு ஈஸ்வரன் நிச்சயம் அருள் புரிவார்'' என்றார் நம்பிக்கையுடன்.

சோழ மண்டலத்தில் ஆலயங்கள் பல அமைத்து, நமது பக்தி நெறியை பார்போற்ற ஆட்சி செய்தவன் மூன்றாம் குலோத்துங் கன். இதோ, காலகாலமாக அவனது பெயரைத் தாங்கி நின்ற குலோத்துங்கச் சோழீச்சரம் இன்றைக்கு முறையாகப் பராமரிக்க வழியின்றி பொலிவிழந்து நிற்கிறது.

கும்பாபிஷேகம் காணுமா குலோத்துங்க சோழீச்சரம் ?

திருப்பணிகளைத் துவக்குவதற்கான முயற்சிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. அன்பர்கள் சிலர் ஒன்றிணைந்து 'திருவிடைமருதூர் நாதர் இறைப்பணிக் குழு’ எனும் அமைப்பை நிர்மாணித் திருக்கிறார்கள். நாமும், புராதனமான இந்தக் கோயில் மீண்டும் பொலிவு பெற, நம்மால் இயன்றதைச் செய்வோம்.

'சிவாலயம் புனரமைக்க வேண்டும் என்று நினைத்தாலே கோடி கோடி புண்ணியம் உண்டு’ என்பார்கள் பெரியோர்கள். இதோ, சிவத் திருப்பணியில் பங்குபெற அரிய வாய்ப்பு நமக்கு. குலோத்துங்க சோழீச்சரம் எனும் இந்த திருவிடைமருதூர் கோயில் சீர் பெற உதவுவோம்; மகாலிங்க ஸ்வாமியின் திருவருளால் நம் வாழ்வும் சீர்பெற்றுச் சிறக்கும்.

படங்கள்: ம.அரவிந்த்