Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே! 

திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர். பல ரிஷிகள் தவம் இருந்த இந்தப் புனித க்ஷேத்திரத்தில் பார்கவர் என்னும் மகாமுனி தவம் மேற்கொள்ள வருகிறார். யோகநிஷ்டை யில் இருந்தவரின் தவத்தைக் கலைக்க அப்சரஸ் ஒருத்தி குறுக்கிடுகிறாள். அதன் விளைவாக அவர்கள் இருவருக்கும் பிண்ட வடிவில் ஒரு சிசு பிறக்கிறது. இருவரும் அந்த பிண்ட வடிவான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டுவிட்டு அகன்றுவிடுகின்றனர். கருணையே வடிவான மகாலட்சுமி தாயார்  அந்தக் குழந்தை மேல் கருணைகொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணன் ஆக்குகிறாள். பின்னர் அந்தக் குழந்தையின் அழு குரல் கேட்டு, அவ்வழியே சென்ற பிரம்புக்கூடை முடையும் திருவாளன் என்பவன் அந்தக்குழந்தையை எடுத்து தனது மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான். அந்தக் குழந்தைதான் திருமழிசையாழ்வார்.

உண்ணாமலும் உறங்காமலும் யோக நிஷ்டை யில் இருந்த திருமழிசையாழ்வாரின் தேஜஸில் மனதைப் பறிகொடுத்த ஒருவன் தன் மனைவி யுடன் வந்து ஒரு கிண்ணத்தில் பாலைக் கொடுத்து பருகும்படிக் கேட்டுக் கொண்டான். அவனுடைய பக்திக்குக் கட்டுப்பட்டவர்் சிறிது பாலை அவனுடைய மனைவியிடம் கொடுத்து பருகச் சொல்கிறார். அதன் பயனாக நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமழிசையாழ்வார் வேதங்கள் அனைத் தையும் கற்றார். பிற சமய நூல்களிலும் நுட்பமான தேர்ச்சி பெற்றார். பேயாழ்வாரின் சந்திப்புக்குப் பிறகு தீவிர வைஷ்ணவரான திருமழிசை ஆழ்வார், தனது வாதத் திறமையாலும், யோக நிஷ்டையாலும் பலப் பல சித்தர்களையும் யோகிகளையும் வெற்றி கொண்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 9

’அப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வாரைப் போல, பிற சமயங்களை எல்லாம் ஆராய்ந்து இறுதியாக வைணவ நெறியே சிறந்தது என்று கூறியதைப் போன்ற ஆராய்ச்சியை நான் மேற்கொள்ளவில்லையே! எனவே நான் திருக் கோளூரில் இருக்கத் தகுதியில்லாதவள் ஆனேன்' என்று அந்தப் பெண்பிள்ளை கூறுகிறாள்.

14. அவன் சிறியனென்றேனோ ஆழ்வாரைப் போலே!

இந்த வாக்கியத்தில் திருக்கோளூர் பெண் பிள்ளை குறிப்பிடும் ஆழ்வார் நம்மாழ்வார். ஆழ்வார்களில் மிக உன்னதமானவராகப் போற்றப் பெறுபவர் நம்மாழ்வார். மற்ற ஆழ்வார்கள் எம் பெருமானின் ஒவ்வோர் அம்சமாகப் பிறந்ததாகக் கூறும் வைஷ்ணவர்கள் நம்மாழ்வாரை மட்டும் விஷ்ணுவின் எட்டு அம்சங்களில் இருந்து ஒவ்வொன்றிலும் சிறிது சிறிதாகப் பெற்று அவதரித்ததாகக் கூறுவார்கள்.

திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரியில் பொற்காரி  உடையநங்கை தம்பதியர்க்குப் பிறந்தவர்தான் நம்மாழ்வார். பிறக்கும்போதே இவர் சடம் என்னும் மாயைக்குக் காரணமாகிய வாயுவை வென்றதால், அழுதல், அசைதல் இன்றி ஜடமாக இருந்தார். சூட்டிகையான குழந்தை இப்படி அசையாமல் கிடக்கிறதே என்று வருத்தப் பட்ட பெற்றோர், பெருமாள் சந்நிதிக்குக் கொண்டு சென்று சேவிக்கச் செய்கின்றனர். அப்போது அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலில் இருந்த தலவிருட்சமான உறங்காப் புளி மரப் பொந்தில் சென்று அமர்ந்துகொண்டு, அங்கேயே யோக நிலையில் இருந்தது.

அயோத்தி சென்ற மதுரகவி ஆழ்வார், தென் திசையில் இருந்து ஒரு ஒளி வான்வழி வருவதைக் கண்டு, அதைத் தொடர்ந்து வந்தவர் ஆழ்வார்திருநகரியை அடைந்தார். அங்கிருந்த உறங்காப்புளி மரப் பொந்தில் இருந்தே ஒளி வருவதையும் அந்த பொந்தில் ஒருவர் யோகநிஷ்டையில் இருப்பதையும் கண்டார். அவருடைய நிஷ்டை கலைவதற்காக ஒரு கல்லை எடுத்துப் போட, படுத்திருந்தவர் கண் திறந்து மதுரகவி ஆழ்வாரைப் பார்த்தார். தனது சீடன் இவன் என்பதை ஒரு கண்ணசைவின் மூலம் காட்டினார். மகிழ்ச்சியடைந்த மதுரகவி படுத்திருக்கும் சடகோபரை நோக்கி, 'செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்ற தத்துவார்த்தமான கேள்வியைக் கேட்டார். நம்மாழ்வார் சிரித்தபடி, ''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என்றார். அந்த உடலின் இன்பதுன்பங்களை அனுபவித்து அந்த உடலிலேயே கிடக்கும் என்று இதற்குப் பொருள்.

நம்மாழ்வாரால் எங்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்த மகாலட்சுமி எம்பெருமானிடம் விண்ணப்பிக்க, அதன் காரணமாக நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் உள்ள எம்பெருமான் அந்தந்த அர்ச்சாவதார மூர்த்தியாக நம்மாழ்வாருக்கு சேவை சாதித்தார். பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்ந்த நம்மாழ்வார் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே நான்கு வேதங்களின் சாரமாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற பிரபந்தங் களாக இயற்றினார். அப்படிப்பட்ட எட்டாம் திருவந்தாதியில் 2656வது பாசுரத்தில்

புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்

செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய், அவிவின்றி

யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,

ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

என்று கூறுகிறார். 'இந்த உலகமும் மேலுலகமும் உன்னிடத்தில் உள்ளன. நீயோ என் செவிவழியாக என் மனத்தினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கி விட்டாய். எனவே, நான் உன்னை விடப் பெரிய வன். நீ பெரியவனா என்பது யாருக்குத் தெரியும்? எம்பெருமானே, நீயே கூறு’ என்பது இதற்குப் பொருள். எல்லாம்வல்ல எம்பெருமானை உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொண்டதால் அந்த எம்பெருமானைக் காட்டிலும் தானே பெரியவன் என்ற நம்மாழ்வாரின் பெருமிதம் இந்தப் பாடலில் தெரிகிறது.

ஆழ்வார்திருநகரியில் பங்குனி உத்திரத்தின் போது பெருமாள் வீதி புறப்பாட்டை முடித்துக் கொண்டு காலையில் சுமார் ஒன்பது மணியளவில் தாயார் சந்நிதி முன்பு எழுந்தருளுவார். பெருமா ளுக்கு வேறு பல நாச்சியார்களுடன் உண்டான தொடர்பின் காரணமாக, தாயார் படார் என்று சந்நிதிக் கதவை மூடிவிடுவார். பெருமாள் எவ்வளவோ சமாதானம் செய்தும் பெரிய பிராட்டியின் கோபம் தணியாது. முடிவாக நம்மாழ்வார் பெரிய பிராட்டியின் அருகில் சென்று சமாதானம் செய்வார். உடனே தாயாரும், ''சரி, நமது பெரியன் சொல்படி பொறுத்துக் கொள்வோம்' என்று கூறிவிட்டு சந்நிதிக் கதவைத் திறக்க அனுமதிப்பாள். மகாலட்சுமியே சொன்ன பிறகு வேறு என்ன வேண்டும்? எனவே, நம்மாழ்வார்தான் பெருமாளைவிடப் பெரியவர் என்று பெருமைப்பட்டுக் கொள்வது தவறில்லை.

அப்படி ஒரு பெருமை தனக்குக் கிட்டாததால் அந்தத் திருக்கோளூரில் இருக்கத் தனக்கு யோக் கியதை இல்லை என்று அந்தப் பெண் பிள்ளை வெளியேறுகிறாள்.

ரகசியம் வெளிப்படும்

திருமகளே, வருக!

வீட்டின் வாயிலில் லட்சுமி ஐந்து வடிவங்களில் வீற்றிருக்கிறாள். அவளை மகிழ்விப்பதற்காகத்தான் விழா நாட்களில் வாசலில் மாவிலைத்தோரணம், பெரிய மாலைகள் முதலியவற்றை அணிவிக்கிறோம்.