Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள் !

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள் !

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

க்னத்தில் (பிறந்தவேளை) இருந்து 5, 7 அல்லது 9 ஆகிய வீடுகளில் ஒன்றில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், மனைவியின் இணைப்பில் ஏற்படும் இன்பத்தில் நெருடல் இருக்கும். அல்லது தாம்பத்திய சுகத்தின் முழுமையை அனுபவிக்க இயலாமல் போய்விடும். இல்லையெனில், மனைவியின் பங்கு போதுமான அளவில் இருக்காது. இப்படியும் சொல்லலாம்... மனைவி கைக்கு எட்டியும், மகிழ்ச்சியானது ஏதேனும் குறையோடுதான் அனுபவத்துக்கு வரும். 

ஜாதகனின் கர்மவினையின் காரணமாக தாம்பத்திய சுகத்தின் நிறைவு எட்டப்படவில்லை. இங்கு, மனைவியின் குறையைச் சுட்டிக்காட்ட வரவில்லை; முன் ஜென்மத்தில் செய்த செயல்பாட்டால் விளைந்த தவறுக்குத் தண்டனையாக, இப்படியான நிலையை அவன் அனுபவிக்க நேரிடுகிறது.

சூரியன் வெப்ப கிரகம். சுக்கிரன் தட்ப கிரகம். சூரியன் லக்ன காரகன் (ஆன்மா). சுக்கிரன் விவாஹ காரகன், களத்ர காரகன்,  உலகவியல் சுகபோகங்களுக்கும் காரகன். இந்த மூன்று தகுதியும் சுக்கிரனுக்கு உண்டு. சமச்சீரான வெட்பதட்பங்களின் இணைப்பானது, மூன்றாவது ஒரு சூழலைத் தோற்றுவிக்க முடியும். அது, சிற்றின்பத்தை நெருடலோடு அளித்து, மற்ற விஷயங்களில் நிறைவு இருந்தும் அவற்றையெல்லாம் சுவைத்து மகிழும் மனநிலை இல்லாமல் செய்து, ஒட்டுமொத்த இன்பமும் அனுபவத்துக்கு வராத சூழலை ஏற்படுத்திவிடுகிறது.

முன்னோர்கள் சொன்னார்கள் !

உதாரணம்  1: 5ம் வீடு முன் ஜன்ம கர்மவினையின் வடிகால். 9ம் வீடு அதன் அனுபவத்தின் அளவை சுட்டிக்காட்டும் இடம். கண்ணுக்குப் புலப்படாததால் அதை அதிருஷ்டம் (கண்ணுக் குப் புலப்படாதது) என்று சொல்வதுண்டு. 7ம் வீடு மனைவி. இது, அவளிடம் இருந்து பெறும் இன்பத்தின் அளவை வரையறுக்கும். ஆக, 5ம் வீடும், 9ம் வீடும் முறையே அவனது கர்மவினையையும் அதன் அளவை யும் குறிப்பிடும். 7ம் வீடு இழப்பை வெளிப் படுத்துகிறது. சூரியனும் சுக்கிரனும் இந்த மூன்றில் எங்கு இருந்தாலும் இந்த இழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும் என்று விளக்குகிறது ஜோதிடம்.

5ம் 9ம் தனது வழியில் இழப்பைச் சுட்டிக்காட்டுகின்றன; 7ம் வீடு மனைவி வாயிலாக சுட்டிக்காட்டுகிறது என்பதுதான் மாறுபாடு. ஜாதகத்தில் 7, 8 என்ற இரு வீடுகளிலும் மட்டும்தான் மனைவி சம்பந்தமான விஷயங்களை ஆராய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. 5, 7, 9ம் கூட மனைவி சுகத்தின் இழப்புக்குக் காரணமாகலாம். மனைவியின் தகுதி இழப்பும் இன்பத்தைக் குறைக்கும். தனது இயலாமையும் இன்பத்தைக் குறைக்கும். இரண்டு வழியிலும் இன்பம் குறைந்துவிடும் என்கிற நிலையில், இங்கு ஜாதகனின் கர்மவினை, அவனது இயலா மையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, மனைவி யாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணின் குறையாகக் கணிப்பது முறை ஆகாது. மின்சாரத்தின் பங்கு இல்லை என்றால் மின் விசிறி இயங்காது. அதேநேரம், மின்சாரத்தின் பங்கு இருந்தும் இயங்கவில்லையெனில், அதற்கு மின்விசிறியில் ஏற்பட்ட கோளாறே காரணமாகும்.

முன்னோர்கள் சொன்னார்கள் !

ஆகவே, பெண் ஜாதகத்தில் 7லும் அல்லது 8லும் செவ்வா யைப் பார்த்து, அவளுடைய தாலி பாக்கியம் அறுபட்டுவிடும் என்று எண்ணி, அதை அவளுடைய குறையாகச் சுட்டிக்காட்டும் நடைமுறை அறிவீனத்தின் வெளிப்பாடு ஆகும்.

அன்றைய நாளில், வாழாவெட்டியாக ஒதுக்கப்பட்ட அத்தனைபேரும் குற்றமற்றவர்கள் என்று சொல்ல இயலும். மகப்பேறு இல்லாததால் மட்டுமே ஒருத்தி வாழாவெட்டியாக மாட்டாள். அவளிடம் போதுமான இன்ப உணர்வை உணர முடியாததால் அப்படி ஒதுக்குவது உண்டு.

அதேபோல், மனமாற்றம் ஏற்பட்டு வாழாவெட்டியுடன் இணைந்து குடும்பம் நடத்தியவர்களும் இருந்தார்கள். இதிலிருந்து, கணவனின் குறைபாடு வாழாவெட்டி நடைமுறைக்கு ஊக்கமளித்தது என்றும் சொல்லலாம்.

பெண்ணின் செவ்வாய் தோஷத்தைப் பார்த்து, 'இவளை மணந்தால் கணவனுக்கு இழப்பு நிச்சயம்’ என்று பாமரர்களை நம்ப வைத்து, பெண்ணின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்துவது தகாத செயல். இரண்டு ஜாதகங்களிலும் செவ்வாய் தோஷத்தைப் பார்த்து, பிரபலங்களின் பரிந்துரையில் திருமணத்தில் இணைந்த தம்பதிகள் விவாஹரத்தைச் சந்தித்து, புதுத் திருமணத்தில் இணைந்திருக்கிறார்கள் (ஜாதகம் பார்க்காமலே இணைந்தவர்கள்). அதே போல், இருவரில் ஒருவர் மரணமுற்று புதுத் திருமணத்தில் இணைந்தவர்களும் உண்டு. வாழாவெட்டியாகும் நிலைக்கோ, கணவனின் மரணத்துக்கோ பெண் காரணமில்லை; ஜாதகனின் கர்மவினையின் வெளிப்பாடு தான் காரணம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மனைவியிடம் இன்பத்தைச் சுவைக்க முடியாமல் செய்யும் பொருட்டு கணவனின் மரணம் நிகழ, பெண்ணின் செவ்வாய் தோஷமே அவனுக்கு மரணம் அளித்தது என்ற விளக்கம் தருவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. இடையில், ஜோதிடத்தில் ஊடுருவிய பிரபலங்கள் சிலர் செய்த விளையாட்டு இது. இருவரில் ஒருவர் காரணமாக மற்றவர் இறப்பை ஏற்பார் என்ற கோட்பாடு ஜோதிடத்தில் வராது. இறப்பு நிச்சயம் உண்டு. அது எப்போது நிகழும் என்பதை அவரவர் ஜாதகம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒருவனது அற்பாயுளைக் கண்டு கொள்ளாமல் சேர்த்துவைத்த பிரபலங்களின் விளையாட்டில் மரணம் நிகழ்ந்ததே தவிர, பெண்ணின் செவ்வாய் தோஷம் மரணத்தை நிகழ்த்தவில்லை.

முன்னோர்கள் சொன்னார்கள் !

அதேபோல், இருவரது ஜாதகங்களில் ஒன்றுக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றொன்றுக்கு இல்லாத நிலையில், பரிஹாரம் வாயிலாக ஒட்டவைத்து திருமணத்தில் இணைக்கும் பிரபலங்களும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஜோதிடக் கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள். லக்னத்தில் இருந்தும், சந்திரனில் இருந்தும், சுக்கிரனில் இருந்தும் தோஷத்தைக் கணக்கிட்டு சிபாரிசு செய்யும் கணினியின் விளையாட்டால், விவாகரத்தைச் சந்தித்தவர்களும், கணவனை இழந்தவர்களும், மனைவியை இழந்தவர்களும் ஏராளம் தென்படுகிறார்கள்.

முன்னோர்கள் சொன்னார்கள் !

குழம்பில் சேர்க்கப்படும் எந்தவொரு பொருளுக்கும் ஓர் அளவு சொல்லப்படும். ஆனால், உப்புக்கு அளவு சொல்லமாட்டார்கள். 'தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும்’ என்று சொல்வார்கள். காய் கனிகள் நீர், புளி, காரம் ஆகியவற்றைக் கண்ணுற்று, அதற்கு உகந்த முறையில் உப்பின் அளவை மனம் அளந்து அளிக்கும். அதாவது, உப்பின் அளவை மனத்தால் மட்டுமே அளக்க இயலும். மற்ற அளவுகோல்கள் இங்கு பயன்படாது. அதுபோல், இருவரது தோஷ அளவை மனமே நிர்ணயிக்க வேண்டும்; கணினியால் நிர்ணயிக்க இயலாது. ஒன்று, இரண்டு என்ற எண்ணிக்கையும் நிர்ணயம் செய்யாது. அந்த எண்ணிக்கைகள் நம்மால் ஏற்படுத்தப்பட்டவை. தோஷத்தை எண்ணிக்கையில் நிர்ணயிக்கும் கோட்பாடு ஜோதிடத்தில் இல்லை. அவை, பிரபலங்கள் சிலரது இடைச்செருகல்கள்.

இப்படியான இடைச்செருகல்கள் அத்தனை யும் ஜோதிடத்துக்குக் களங்கம் விளைவிப்பதில் முற்றுப்பெறுகின்றன. படிப்பும், அனுபவமும், தெளிந்த மனமும்தான் தோஷ ஸாம்யத்தை

துல்லியமாக வரையறுக்கும். கையேடுகளாலும், கணினியாலும் வரையறுக்க இயலாது. கணினி வழங்குவதை (அதுவும் ஒருசில ஜோதிடர்களின் கைவண்ணமே) விஞ்ஞான முன்னேற்றமாகச் சுட்டிக்காட்டுவது அபத்தம். ஜோதிடத்தில் ஆழமாக இறங்கி அதன் கருத்துக்களை உள்வாங்கி, பரோபகார சிந்தனையோடு சேவையில் இறங்கவேண்டும். அதுதான் நாட்டுக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

முன்னோர்கள் சொன்னார்கள் !

உதாரணம்2: லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் தேய்பிறைச் சந்திரன். லக்னம், 7ம் வீடு, 12ம் வீடு ஆகியவற்றில் பாப கிரகங்கள் வீற்றிருக்கின்றன. இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், அவன் மனைவியின் சேர்க்கையால் ஏற்படும் இன்பத்தை இழப்பான் என்கிறது ஜோதிடம். சண்டைச் சச்சரவு, பிரிவு, ஆண்மை அல்லது பெண்மையின் குறைபாடு அல்லது இருவரில் ஒருவரது இழப்பு இவற்றில் ஏதாவது ஒன்று காரணமாகலாம். எனவே, ஆழ்ந்து ஆராய்ந்து முடிவை எட்டவேண்டும். கணினியையோ கையேடு களையோ நம்பக்கூடாது. அவை இரண்டும் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு ஜோதிட நுணுக்கங்களை அள்ளித்தரவில்லை. அது ஒரு மாயைத் தோற்றம்!

லக்னத்தில் சூரியன் பாப கிரகம். 5ல் சந்திரன்; தேய்பிறையில் பாபியாக மாறிவிடுகிறான். 7ல் சனி பாப கிரகம். 12ல் செவ்வாய் பாப கிரகம். பூர்வபுண்ய ஸ்தானத்தில், 5ல் பாப கிரகத்தின் இருப்பு, பாபத்தை (குறையை) அனுபவிக்கவைக்கிறது. 7ல் பாப கிரகம், மனைவியிடம் இருந்து இன்பத்தை ஏற்கவைக்காமல் செய்கிறது. லக்னத்தில் பாப கிரகம் சூரியன். இது, ஜாதகனுக்கு இன்பத்தைச் சுவைக்கும் தகுதியை இழக்கவைக்கிறது. 12ல் செவ்வாய் பாப கிரகம் இழப்பை வரவழைத்து, இன்பத்தைச் சுவைக்க இடமில்லாமல் செய்கிறது. இந்த நான்கு வெப்ப கிரகங்களும் கூட்டாக மாறுபட்ட கோணத்தில் தாக்குவதால், மனைவி சுகத்தை அடியோடு இழக்கவைக்கின்றன.

முன்னோர்கள் சொன்னார்கள் !

5ல் பாபி, பூர்ஜன்ம கர்மவினை யின் குறையைக் காட்டுகிறது. 7ல் சனி, மனைவியிடம் நெருடலை விளக்குகிறது. லக்னத்தில் சூரியன், அவனது தகுதியை குறைக்கிறது. 12ல் பாப கிரகம் செவ்வாய், இழப்பை நடைமுறைப்படுத்துகிறது. இங்கும் பெண்ணின் அல்லது ஆணின் 7 அல்லது 8ம் வீடுகளை எதிர்பார்க்கா மல் சுகத்தை இழக்கவைக்கிறது. ஆகவே, ஜாதகத்தில் ஏழு மற்றும் எட்டு ஆகியவற்றை மட்டுமே கண்ணுற்று முடிவை அறிவிக்கும் பிரபலங்களின் கோட்பாட்டில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

சந்திரன் மனதுக்குக் காரகன். அவன் தேய்பிறையைச் சந்தித்தவன். அவன் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி, விபரீத விளைவுகளை ஏற்கவைப்பான். 7ம் வீட்டில் சனி, மனைவியின் குறையைக் காரணமாக்கி, இழப்புக்கு ஒத்துழைப்பான்.

லக்னத்தில் சூரியன், தனது குறை வாயிலாக இழப்புக்கு உரமூட்டுவான். இழப்பைச் சந்திக்க வைக்க இவர்கள் மூவருக்கும் 12ல்  இருக்கும் செவ்வாய் ஊக்கம் அளிப்பான். இப்படி, தெளிவான விளக்கத்தை எடுத்துக்கொள்ளாமல், 7ல் சனியைப் பார்த்து, தோஷத்தின் தரம் குறைந்திருப்பதாக மதிப்பிட்டு, இணையை சேர்த்து சேவை செய்யும் மேதைகள் ஏமாந்துவிடுகிறார்கள்!

ஒரு பாவத்தை (ஒரு வீட்டின் தகுதியை) வரையறுக்க, மற்ற11 பாவங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். தனியொரு பாவத்தின் தரம் நடைமுறைக்கு வராது. அதோடு இணைந்த மற்ற பாவங்களின் (வீடுகளின்) தாக்கமும் அந்த (குறிப்பிட்ட) பாவத்துக்கு உண்டு. 7ல் இருக்கும் செவ்வாயை வரையறுக்க, லக்னம், 5, 9 ஆகிய பாவங்களையும் ஆராய வேண்டும்.

பூர்வபுண்ணியமும், ஆயுளும், அதிர்ஷ்டமும் வலுவாக இருக்கும் ஜாதகத்தில், 7ல் செவ்வாய் வலுவிழந்து இருக்க இடமுண்டு. 7ல் செவ்வாய் லக்னாதிபதியாகவோ, ஏழுக்கு உடையவனாகவோ, யோகக்காரகனாகவோ, வலுவிழந்தவனாகவோ மாறியிருந்தால், மனைவியால் கிடைக்கும் சுகத்தில் இழப்பு இருக்காது. மனைவி இழப்பும் கணவன் இழப்பும் நடைமுறையில் இருக்காது.

தீர்க்காயுள் யோகத்தை லக்னத்தின் ஆராய்ச்சியில் கண்டு கொள்ளலாம். பூர்வ புண்ணியத்தை 5வது வீட்டின் ஆராய்ச்சியில் எட்டலாம். 9வது வீடு அதிர்ஷ்டத்தை வரையறுக்கும். திருமணத்துக்கு இணையைச் சேர்த்து சேவை செய்ய விரும்புபவர்கள், மற்ற வீடுகளின் தரத்தை ஆராய்ந்த பிறகே, மனைவி அல்லது கணவனின் தரத்தை நிர்ணயிக்க இயலும்.முழுமையான ஜோதிட அறிவை எட்டிய பிறகே அதை எளிமையாக்க முற்பட வேண்டும்.

வெறும் பத்து பொருத்தத்தை நம்பிச் சேர்த்துவைப்பது தகாது. இதை நம்பி சேர்த்துவைத்து விபரீத பலனைச் சந்திக்கும்போது, ஜோதிடத்தைக் குறை கூறித் தப்பிப்பது சரியல்ல. வீதி (தெரு) கோணல்; அதனால்தான் எனது நாட்டியம் எடுபடவில்லை என்று சொல்லக்கூடாது!

தொடரும்...

முன்னோர்கள் சொன்னார்கள் !