பாரதத்தில் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. அவை: பீமாசங்கரம், திரியம்பகம், குங்குமணேஸ்வரம், வைத்தியநாதம், நாகநாதம் (அவுண்டா), சோமநாதபுரம், ஓங்காரம், உஜ்ஜயினி, கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், ராமேஸ்வரம். இந்தத் தலங்களில், மிகச் சிறப்பான சோமநாத புரத்தையே இந்த இதழில் தரிசிக்கப்போகிறோம். சந்திரபுரம் என்றும் சூரியபுரம் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட பிரபாஸ் பாடன், ஸ்ரீ கிருஷ்ணரின் காலத்துக்கு முன்பிருந்தே பிரபலமான தீர்த்த யாத்திரைத் தலமாகத் திகழ்ந்தது. கதிரவனின் பிரகாசமும், நிலவின் குளிர்ச்சியும் பொருந்திய தலம் என்பதால் இதற்கு பிரபாஸ் பாடன் என்று பெயர். இந்தத் தலத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அடிக்கடி யாத்திரைகள் மேற்கொண்டிருக்கிறார்! 

அதனாலேயே இது யாதவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் அப்பழுக்கற்ற யாத்திரைத் தலமானது. யதுகுலத்தின் அழிவுக்குப் பிறகு, கண் ணன் மண்ணுலகு விடுத்து விண்ணுலகு ஏகியதும் இந்தத் தலத்தில்தான்.

இந்தத் தலம் மட்டும் இவ்வளவு சிறப்புகளைப் பெற்றது எவ்வாறு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தட்சன், தன்னுடைய இருபத்தேழு மகள் களையும் சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். சந்திரனும் தன் மனைவியருடன் மாண்புடன் வாழ்ந்துகொண்டிருந்தான். எனினும், மனைவியரில் ரோகிணியை அளவுக்கு அதிகமாக நேசித்தான். அதனால் ஆதங்கம் கொண்ட மற்ற மனைவியர், இதுகுறித்து தந்தையிடம் புகார் கூறினார்கள். இதனால், தர்மசங்கடத்துக்கு ஆளான தட்சன், மருமகனான சந்திரனை அழைத்து அன்புடன் எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கையை சந்திரன் பொருட்படுத்த வில்லை. இதனால் கோபம் கொண்ட தட்சன், 'குஷ்டநோயால் பீடிக்கப்பட்டு நாளுக்கு நாள் நலிந்து, அழிந்துபோகக்கடவது’ என்று சந்திரனைச் சபித்தார்.

ஜோதிர்லிங்கமே... ஜடாதரா !

சந்திரனைக் குஷ்டம் பீடித்தது. அவன் உலாப் போகும் வேகம் குறைந்தது. அதனால் அவனியை இருள் சூழத் தொடங்கியது. சந்திரனைக் காணாத ஆழியும் ஆங்காரம் கொண்டு மண்ணுலகையே மூழ்கடித்துவிடுவது போல் பேரலைகளுடன் கரை நோக்கிப் பாய்ந்தது.

சந்திரனும் உடல் தேய்ந்து, மனம் நொந்து, தன் மாமனாரின் பாதம் பணிந்து சாப விமோசனம் வேண்டினான். தட்சனும் மனமிரங்கினார்; சாப விமோசனத்துக்கு வழிகாட்டினார். 'சேவலின்

தொடை வடிவில் இருக்கும் சிவலிங்கம் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்துப் பிரதிஷ்டை செய்து, தவமிருந்து வணங்கினால், சாபத்துக்குப் பரிகாரம் கிடைக்கும்' என்றார்.

சந்திரனும் தட்சன் கூறியதுபோன்ற சிவ லிங்கத்தை தரணியெங்கும் தேடினான். இறுதியில், பிரபஞ்சத்திலேயே மேலான தலமான பிரபாஸ் பாடனில் அத்தகைய சிவலிங்கத்தைக் கண்டான். அதனை கோலாகலமாகப் பிரதிஷ்டை செய்து, வேள்விகள் நடத்தி, ஆழ்தவத்தில் ஈடுபட்டான். இதன் பலனாக சிவ தரிசனம் கிடைத்தது. சந்திரன் இழந்த பொலிவை ஒரேயடியாக மீட்டுத் தர இயலாது என்றாலும், சிறிது சிறிதாக அவன் தேய்ந்து கரைந்து போன பின்னர், மறுபடியும் சிறிது சிறிதாக வளர்ந்து அடுத்த 15 நாட்களில் பூரண அழகைப் பெறும் வண்ணம் அருள் செய்தார் சிவபெருமான்.

ஜோதிர்லிங்கமே... ஜடாதரா !

இங்ஙனம், சந்திரனே சிவனருள் பெற்ற தலம் என்பதால், இந்தத் தலம் தியானம் புரிவதற்கு உகந்த தலமாகப் போற்றப்படுகிறது. புராதனமான இந்த ஆலயம், சரித்திரப் பிரசித்தியும்

பெற்றது. பாரதத்தின் மேல் படையெடுத்து வந்த கஜினி முகமதுவால் 17 முறை சின்னாபின்னப் படுத்தப்பட்ட தலம் இது. மேலும், ஆலயத்தின் அத்தனை சொத்துகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. சந்திரன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் சிதைக்கப்பட்டுவிட்டது. பழைய ஆலயத்தின் முன், வாசலில் இருந்த அற்புத வேலைப்பாடுகளைக் கொண்ட பிரமாண்ட மரக்கதவு, இன்றும் ஆக்ரா கோட்டையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆயினும், பழைய ஆலயம் போலவே எழுப்பப் பட்டிருக்கும் இப்போதைய புது ஆலயமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கூம்பு வடிவ கோபுர உச்சியில் சூலமும், நந்தியும், உடுக்கையும் கொண்ட முக்கோணக்கொடி படபடக்கிறது.

முழுக்க முழுக்கக் காவி பூசப்பட்ட முன் வாசல் மண்டபம், அதன் இருபுறங்களிலும் துலங்கும் மாட உப்பரிகைகளைத் தரிசித்தபடி உள்ளே நுழைந்தால், பரந்த புல்வெளி. அதனை மையமாக ஊடறுத்துச் செல்கிறது பிரதான பாதை ஒன்று. அதன் நட்ட நடுவே ஒரு பாதை, ஆலயம் நோக்கிச் செல்கிறது.

வட்ட விதானக் கூரையுடன் கூடிய ஆலயத்தில், முதலில் நம்மை வரவேற்பது, கலையழகுடன் கட்டப்பட்ட முகப்பு மண்டபம். அதில் நுழைந் ததும், இடப் புறத்தில் விநாயகர்; வலப்புறம்  ஆஞ்சநேயர்.  இந்த மண்டபத்தை அடுத்துக் கருவறை முன் மண்டபம். இந்த மண்டபம் நன்கு அகலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பக்தர்கள் வருகை புரிந்தாலும், அத்தனை பேரும் இங்கே நின்று கருவறைக் கடவுளை தரிசித்து வணங்க வழி செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் முடிவில், கருவறைக்கு இடப்புறம் அன்னை திரிபுரசுந்தரியின் சந்நிதி; வலப்புறம் அம்பா சந்நிதி. அம்பாவுக்கு முன்பாக அகண்ட தீபம் அணையாமல் எரிகிறது.  

ஜோதிர்லிங்கமே... ஜடாதரா !

கருவறைக்கு வெளியே, பிறை சூடிய பெருமானை தரிசிக்க வந்திருக்கும் பக்தர்களின் பஜனைப் பாடல்கள். பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறைக் கடவுளுக்கு ஆரத்தி எடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சங்கு முழங்க, அத்துடன் 'ஜல் ஜல்’ என்று ஜால்ராவும், டமாரமும் அதிர... மெள்ள திரைவிலக, புஷ்ப அலங்காரத்தில், சிரசில் ருத்ராட்ச மாலைகளும், திருநீற்றுப் பட்டையுடன் சந்திரப் பிறையும் துலங்க, லிங்கத் திருமேனியராக அற்புத தரிசனம் தருகிறார் சோமநாதர். எண்ணற்ற இடர்களைச் சந்தித்திருந்தாலும், அந்தச் சந்நிதியில் சாந்நித்யம் நிலவுவதை உணர முடிகிறது. கருவறையில் சோமநாதருக்கு நேர் பின்னால் ஒரு சிறு மாடச் சந்நிதியில் பார்வதி. அன்னைக்கு வலது புறம் பிரம்மா; இடது புறம் விஷ்ணு. கருவறை தரிசனம் முடிந்து, ஆலய வெளிப் பிராகாரத்தை வலம் வந்து, ஆலய வாசலை நெருங்கும்போது இடது புறத்தில் கஷ்டபஞ்சன அனுமார். இவரை வழிபட, நம் கஷ்டங்கள் யாவும் தொலையும்.

குஜராத்தில் பஞ்ச துவாரகை யாத்திரை மேற்கொள்பவர்கள் பிரபாஸ் பாடனில் எழுந்தருளியிருக்கும் ஜோதிர்லிங்கமான சோம நாதரையும் தரிசிக்கலாம். அல்லது, ஜோதிர்லிங்கத் தல யாத்திரை மேற்கொண்டும் பிரபாஸ் பாடன் சோமநாதரை தரிசிக்கலாம்.  

படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்  : பிரபாஸ் பாடன் எனும் சோம்நாத்பூர்

தலம் அமைந்திருக்கும் மாநிலம் : குஜராத்

இறைவனின் திருநாமம் : அருள்மிகு சோமநாதர்

இறைவியின் திருநாமம் : அருள்மிகு பார்வதி

எப்படிப் போவது?: பாரதத்தின் அனைத்துப் பெருநகரங்களில் இருந்தும் அஹமதாபாத்துக்கு ரயில் மற்றும் விமானத்தில் செல்லலாம். அங்கிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் இருக்கும் சோம்நாத்பூருக்கு ரயில், பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்.

எங்கே தங்குவது? : பிரபாஸ் பாடனிலும், அருகில் உள்ள வேராவலிலும் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம்: காலை 6 முதல் பகல் 12.30 மணி வரை; மாலை 4 முதல் இரவு 9 மணி வரை.