தொடர்கள்
Published:Updated:

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!எஸ்.கண்ணன்கோபாலன்

டி மாதம் என்றாலே அம்பிகைக்குக் கொண்டாட்டம்தானே?! அனைத்து கோயில் களிலும் விழாக்கோலம்தான். அப்படித்தான் மாங்காட்டில் கோயில் கொண்டு மங்கலங்கள் அருளும் அம்பிகை காமாட்சியின் திருக்கோயிலும் விழாக் கோலம் பூண்டிருந்தது. வருடம் முழுக்கவே அம்பிகையின் கோயிலில் திருவிழாக் கோலம்தான் என்றாலும் ஆடிமாதம் இன்னும் விசேஷம். 

கடந்த 9ம் தேதியன்று மாங்காட்டில் காலையில் சுதர்சன ஹோமமும் மாலையில் அன்னை காமாட்சியின் தங்கத் தேர் விழாவும் நடைபெற இருப்பதாகக் கேள்விப்பட்டதும், நமக்குள் ஒரு கேள்வி எழவே செய்தது. பொதுவாக சுதர்சன ஹோமம் என்பது பெருமாள் கோயில்களில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், காமாட்சி அம்மனுக்கும் சுதர்சன ஹோமத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற அந்தக் கேள்வியுடனே நாம் மாங்காடு சென்றோம். நேராக காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற நாம் அங்கிருந்தவர்களிடம், சுதர்சன ஹோமம் எங்கே நடைபெறுகின்றது என்று கேட்டபோது, அருகில் இருந்த வைகுண்டபெருமாள் கோயிலில் நடைபெற்று வருவதாகக் கூறவே, நாம் அங்கே சென்றோம்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

சுதர்சன ஹோமத்துக்கான ஏற்பாடுகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, காமாட்சி அம்மன் கோயில் சார்பாக வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டோம். பாலு என்ற அந்த அன்பர், ''அதைப் பற்றி நான் சொல்வதை விடவும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் சொல்வதுதான் சரியாக இருக்கும். இன்னும் சற்றுநேரத்தில் அவர் இங்கே வந்துவிடுவார். நீங்கள் அவரிடமே பேசிக்கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டார்.

சுதர்சன ஹோமத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் பெரியமுறை பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையில் ஹோமத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சற்று நேரத்திலேயே மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலின் பரம்பரை அறங்காவலரான மணலி ஆர்.சீனிவாசன் கோயிலுக்கு வந்துவிட்டார். சுதர்சன ஹோமத்துக்கான சங்கல்பம் முடிந்தபிறகு நாம் அவரிடம் சென்று நாம் சக்தி விகடனில் இருந்து வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, காமாட்சி அம்மன் கோயில் சார்பாக சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டோம். தாம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்ல இருப்பதால், அங்கே வந்துவிடுமாறு கூறி, உடனிருந்த பாலுவிடம் நம்மை அங்கே அழைத்து வருமாறு கூறினார்.

நம்மை அழைத்துச் சென்ற பாலு, முதலில் அம்பிகையை தரிசிக்கச் செய்தார். ஸ்ரீ சக்ர மகாமேருவுடன் அம்பிகை நின்ற கோலத்தில் அழகுத் திருக்காட்சி தந்தாள். மகாமேருவின் மீதாக பல வண்ண புடைவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பக்தர்களின் காணிக்கைதான். ஒரு காலத்தில் மாற்று வஸ்திரம் தவிர வேறு வஸ்திரம் இல்லாத அம்பிகைக்கு இன்று புடைவைகளுக்குப் பஞ்சமே இல்லை என்றால் அதற்குக் காரணம் நடமாடும் தெய்வமென பக்தர்களால் போற்றப் பெற்ற காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அனுக்கிரஹம்தான் என்றே சொல்லவேண்டும். அதுபற்றிப் பிறகு பார்ப்போம். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்பிகையின் சந்நிதிக்கு இடப்புறத்தில் பஞ்சாக்னி நடுவில் ஒரு திருவடி ஊன்றி, மற்றொரு திருவடி மடித்து தவக் கோலம் புரியும் அன்னையின் சந்நிதி அமைந்திருக்கிறது. அவளையும் மனம் குளிர தரிசித்த பிறகு, கோயிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசனை சந்திக்கச் சென்றோம்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

நீண்டகால விகடன் வாசகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம், காமாட்சி அம்மன் கோயில் சார்பாக வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெறுவதற்கான காரணத்தைக் கேட்டோம்.

''மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுடன் சேர்ந்ததுதான் வைகுண்ட பெருமாள் கோயில் மற்றும் வெள்ளீஸ்வரர் கோயில். வைகுண்ட பெருமாள் கோயிலில் சுதர்சன பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது எனக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அந்நிலையில் தனக்கு உகந்த ஆடி மாதத்தில் வைகுண்டபெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடத்தவேண்டும் என்று ஆறு வருஷங்களுக்கு முன் அம்பாளின் உத்தரவு கிடைத்தது. அதன்படி கடந்த ஆறு வருஷமாக நடத்தி வருகிறோம். சுதர்சன ஹோமம் நடத்த ஆரம்பித்த 3வது வருஷமே வைகுண்டபெருமாள் கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த வருஷம் சம்ப்ரோக்ஷணமும் நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், சுதர்சன ஹோமம் நடத்த ஆரம்பித்ததன் பலனாக சுதர்சன ஆழ்வாருக்குத் தனிச் சந்நிதி அமைந்துவிட்டது என்பதுதான்.’ என்றவர் தொடர்ந்து, ''தன் அண்ணனின் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்ற பிறகே தன் கோயிலில் திருப்பணிகள் தொடங்கவேண்டும் என்பதுதான் அம்பிகையின் சித்தம் போலும். அதேபோல் தற்போது அம்பிகையின் ஆலயத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார். மாங்காட்டில் உள்ள இந்த மூன்று கோயில்களுடன் சென்னை பூக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சென்னமல்லீஸ்வரர் கோயில் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோயிலுக்கும் இவர்தான் பரம்பரை அறங்காவலராக இருந்து சிறப்புடன் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

அவரிடம் இருந்து விடைபெற்று வெளியில் வந்ததும், ஓரிடத்தில் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டுவதையும், அதற்குப் பக்கத்திலேயே இன்னும் சில பெண்கள் தொட்டில் கட்டுவதையும் பார்த்தோம். அது பற்றித் தெரிந்துகொள்ள முடியுமா என்று கேட்டபோது, நம்மை தலைமை அர்ச்சகர் ரவி குருக்களிடம் அழைத்துச் சென்றார் பாலு.

''திருமணம் தடைப்படும் பெண்ணோ அல்லது ஆணோ இங்கு வந்து மஞ்சள் கயிறு வாங்கிக் கட்டிவிட்டு அம்பாளை வேண்டிக்கொண்டால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெண்ணோ பிள்ளையோ வரமுடியாத நிலையில் பெற்றோரே அப்படிச் செய்து வேண்டிக் கொள்ளலாம். அதேபோல், திருமணமாகி இரண்டு மூன்று வருஷங்கள் சென்றும் குழந்தை இல்லாத தம்பதியர் கோயிலுக்கு வந்து தொட்டில் வாங்கி அம்பாள் திருவடியில் வைத்துப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டு கட்டிவிட்டுச் சென்றால் அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'’ என்றார் ரவி குருக்கள்.

அதற்குள், சுதர்சன ஹோம பூர்ணாஹுதி நடைபெற இருப்பதாகச் சொல்லி நம்மை மீண்டும் வைகுண்ட பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் பாலு. திரளான பக்தர்கள் குழுமி இருக்க, பூர்ணாஹுதியுடன் சுதர்சன ஹோமம் நிறைவுபெற்றது.

ரவி குருக்கள் அங்கிருந்த கனகா என்ற பக்தையை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். கடந்த 30 வருஷங்களுக்கும் மேலாக காமாட்சி அம்மனை தவறாமல் தரிசித்து வருபவராம் அவர். அவரிடம் பேசியபோது, ''எனக்கு காமாட்சி அம்மன்தான் எல்லாமே! அவளுடைய அனுக்கிரஹத்தால்தான் நாங்கள் நன்றாக இருக்கிறோம். எனக்கு எந்த ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றாலும், அவளை வேண்டிக் கொண்டதுமே நடந்துவிடுகிறது. அதேபோல் அம்பாளுக்கு உகந்த ஆடி மாதத்தில் அவளுடைய அண்ணனான வைகுண்ட பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சுதர்சன ஹோமத்தையும் நான் தவறாமல் தரிசித்து வருகிறேன். அம்பாள் நமக்குத் தேவையானவற்றை மட்டுமல்ல, அவளுக்குத் தேவையானவற்றையும் அவளே நிறைவேற்றிக் கொள்கிறாள். அப்படித்தான் 1994ம் ஆண்டு அம்பாள் பவனி வர தங்கத் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அம்பாளின் அருளால் மிக விரைவிலேயே அது தயாராகி, 2001ம் வருஷத்தில் இருந்து, தங்கத் தேர் பவனி நடைபெறத் தொடங்கிவிட்டது'' என்றார்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

நாம் பெருமாளை தரிசிக்கச் சென்றோம். வைகுண்டத்தில் இருப்பது போலவே அமர்ந்த கோலத்தில் தேவிபூமிதேவி பிராட்டியாருடன் திருக்காட்சி தருகிறார் பெருமாள். பெருமாளின் கீழ் வலக் கரத்தில் ஒரு மோதிரம் இருப்பதையும், அடுத்து அவருடைய மேல் வலக் கரத்தில் பிரயோக நிலையில் சக்கரம் இருப்பதையும் கண்ட நாம் அதற்கான காரணம் குறித்து பெருமாள் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்த்தசாரதி பட்டரிடம் விவரம் கேட்டோம். அவர் சொன்னதே ஒரு ரசமான லௌகிக விஷயம்.

''இங்கே அம்பாள் சிவபெருமானைத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தவம் இருக்கிறாள். அவளுடைய தவத்துக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்பதற்காக தன்னுடைய கரத்தில் பிரயோக நிலையில் சக்கரத்தையும், தவம் கனிந்து திருமணம் நடைபெறும் வேளையில் சீதனமாகத் தருவதற்காக மோதிரமும் வைத்திருக்கிறார்'' என்றார். தெய்வங்களே ஆனாலும் அர்ச்சாவதாரமாக பூமிக்கு வந்துவிட்டால் நம்மைப் போல் லௌகிகமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும் போலும்!

சுதர்சன ஹோமத்துடன் மதிய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன. இனி மாலையில்தான் அம்பாளின் கோயிலில் தங்கத் தேர் வைபவம் என்பதால், இடைப்பட்ட நேரத்தில் இன்னும் சில புராதனமான தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். ரவி குருக்கள், நம்மை நாகராஜ குருக்கள் என்ற ஒரு முதியவரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் பேசியபோதுதான் காஞ்சி முனிவருக்கும் மாங்காடு அம்பிகைக்கும் உள்ள தெய்விக பந்தம் தெரியவந்து, நம்மைச் சிலிர்க்கச் செய்தது.

''1967ம் வருஷம் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் அம்பாள் ஆலயம் அவ்வளவாக பிரசித்தி பெற்று இருக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் கோயிலின் சுற்றுப்புறத்தில் சமூகவிரோதச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த நிலையில்தான் காஞ்சி பெரியவர் இங்கே விஜயம் செய்தார். அவர் வரும்போது  இரவு நெருங்கிவிட்டது. கோயிலுக்குள் வந்தவர் அப்படியே சிலிர்த்துவிட்டார். அப்படி அவர் பரவசப்பட்டு நின்றதற்குக் காரணம், பின்னர்தான் எங்களுக்குப் புரியவந்தது. அம்பிகை மகாமேருவின் மேல் நின்ற திருக்கோலத்தில் அவருக்குப் பிரத்யட்சமாகக் காட்சி தந்தாளாம். மஹா ஸ்வாமிகளிடம் ஆலயத்தின் வறிய நிலை பற்றியும், அம்பிகைக்கு சரியான வஸ்திரம்கூட இல்லாதது பற்றியும் கூறி இருக்கிறார் குருக்கள்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

அதைக் கேட்ட பெரியவா, நள்ளிரவு கோயிலில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, கோயிலைச் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி வைக்குமாறு கட்டளை இட்டார். பெரியவா சொன்னபடியே செய்தார்கள். மறுநாள் பெரியவா தம்மை தரிசிக்க வந்தவர்களிடம், 'அம்பிகைக்கு யாரேனும் நல்ல புடைவை வாங்கித் தருகிறீர்களா?’ என்று கேட்டார். பெரியவா இப்படிக் கேட்டதுமே அங்கிருந்தவர்களில் இருவர் மறுநாளே இரண்டு புடைவைகளை வாங்கிக் கொண்டு வந்தனர். ஒருவர் சிவப்பு நிறப் புடைவையும், மற்றவர் மஞ்சள் நிறப் புடைவையும் வாங்கி வந்தனர். பெரியவா எந்தப் புடைவையை அம்பிகைக்கு ஏற்றுக் கொள்ளப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்தவர்களிடம். ஒரு புடைவையை எடுத்தால் மற்றவர் வருத்தப்படுவார் என்பதால், பெரியவா அங்கிருந்தவர்களிடம் கொஞ்சம் மஞ்சளை வாங்கி வரச் சொல்லி அதை இரண்டு புடைவைகளிலும் பூசி, இரண்டையும் அம்பாளுக்கே சார்த்தும்படியாகக் கூறினார். தொடர்ந்து, 'ஆதிசங்கர பகவத்  பாதாள் வழிபட்ட இந்த அம்பாள் கோயிலுக்கு இனி ஒரு குறையும் இருக்காது. இவளை வழிபடுபவர்களுக்கும் ஒரு குறையும் இருக்காது’ என்று அனுக்கிரஹம் செய்தார். அன்று பெரியவா அப்படி அனுக்கிரஹம் செய்ததில் இருந்து கோயிலும் பிரசித்தி பெற்றது; வழிபடும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றி வைப்பதால், பக்தர்களின் கைங்கர்யத்தால் அம்பிகைக்கும் வண்ண வண்ணப் புடைவைகள் குவிந்தபடி இருக்கின்றன.'' என்றார்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

முதிர்ந்த வயதிலும் நமக்குப் பொறுமையாக விவரங்களைக் கூறிய அவருக்கு நன்றி கூறி, அங்கிருந்து புறப்பட்டோம். தங்கத் தேர் மாலை 6 மணிக்கு என்பதால், நாம் அதற்குள் மதிய உணவை முடித்துக் கொண்டு, திரும்பவும் மாலை 5 மணிக்கே கோயிலுக்கு வந்துவிட்டோம்.

மங்கலம் அருள்வாள் மாங்காடு காமாட்சி !

கோயிலில் தங்கத் தேர் புறப்பாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சரியாக மாலை 630 மணிக்கெல்லாம் கலைமகளும் அலைமகளும் இருபுறமும் திகழ, மலைமகளாம் அன்னை மாங்காடு காமாட்சியின் தங்கத் தேர் பவனி கோயில் பிராகாரத்தில் தொடங்கிவிட்டது. வண்ண மலர்களாலும் வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் ஜோதி ஸ்வரூபமாக பவனி வந்த அம்பிகையைக் கண்குளிர தரிசித்த மன நிறைவுடன் அங்கிருந்து புறப்பட்ட நம் மனதில், 'அம்பாள் கோயிலுக்கும் சரி, அவளை வழிபடும் பக்தர்களுக்கும் சரி, இனி ஒரு குறையும் இருக்காது’ என்ற காஞ்சி முனிவரின் மொழிகளே தெய்வத்தின் குரலாக ஒலிக்க, மனம் நிறைந்த பரவசத்துடன் அங்கிருந்து புறப்பட்டோம்.

படங்கள்: ர.சதானந்த்,

தே.அசோக்குமார்