பாபாவின் பரிசாகத் தனக்குப் பிறந்த குழந்தையுடன் மனைவியையும் அழைத்துக்கொண்டு ஷீர்டிக்கு வந்த ரேகே, துவாரகாமாயிக்குச் சென்று பாபாவை நமஸ்கரித்து, அவருடைய திருவடிகளில் தன் குழந்தையை வைத்து, ஆசீர்வதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 21

பாபா அந்தக் குழந்தையை எடுத்துக் கொஞ்சியபடியே, ''ரேகே நீ என்னுடைய குழந்தை. சரி, இந்தக் குழந்தை யாருடையது?'' என்று கேட்டார் பாபா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேகே, ''இதுவும் உங்களுடைய குழந்தைதான்'' என்று கூறினார்.

''நல்லது. அப்படியானால், என்னுடைய இந்தக் குழந்தையைப் பத்திரமாக எடுத்துச் சென்று, உங்கள் பொறுப்பில் வளர்த்து வாருங்கள்'' என்று கூறி, குழந்தையை ரேகேவிடம் தந்த பாபா, உதி பிரசாதமும் கொடுத்து ஆசீர்வதித்தார்.

சுற்றிலும் இருந்தவர்களுக்கு பாபாவின் வார்த்தைகளில் ஏதோ மறைபொருள் இருப்பதாகவே தோன்றியது. ரேகே தம்பதியினரும் அப்படித்தான் நினைத்தார்கள். அந்த மறைபொருள் என்னவென்று விரைவில் அவர்களுக்குப் புரியவே வந்தது.

நாட்கள் கடந்தன. குழந்தைக்கு இரண்டு வயது நெருங்கும்போது, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. எத்தனையோ மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைகள் செய்தும், குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மருத்துவர்கள் ஆறுதல் கூறினாலும் ரேகேவுக்கு என்னவோ மருத்துவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை.

ஒருநாள், காய்ச்சலின் கொடுமை அதிகரித்து, குழந்தை துடிக்கத் தொடங்கியது. அதன் துன்பத்தைக் கண்டு மனம் பொறுக்காத ரேகே, குழந்தையைக் கொண்டுபோய் பூஜை அறையில் பாபாவின் திருவுருவப் படத்தின் முன் படுக்க வைத்து, ''பாபா,

நீங்கள் சொன்னதுபோல் இந்தக் குழந்தை உங்களுடையது தான். ஆனால், இந்தக் குழந்தை பிறப்பதற்குக் காரணமாக இருந்தவன் என்கிற முறையில், இந்தக் குழந்தையின் கர்மாக்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். அன்பு கூர்ந்து, இந்தக் குழந்தையின் காய்ச்சலை நீக்கி, பூரண உடல்நலத்தைக் கொடுத்து அருளுங்கள். இல்லையென்றால், இந்தக் குழந்தையை நீங்களே எடுத்துக்கொண்டு, குழந்தைக்கு நிம்மதியைத் தந்து அருளுங்கள்'' என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 21

சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை மெள்ளச் சிரித்தபடி உடலைத் துறந்து, பாபாவின் திருவடிகளில் சங்கமித்தது. குழந்தையின் பிரிவு கண்டு ரேகே தம்பதியினர் வருத்தமுற்றாலும், இடிந்துபோய்விடவில்லை. அதற்காகத்தான் பாபா ஆரம்பத்தில் இருந்தே ரேகேவின் குழந்தையைத் தன்னுடைய குழந்தை என்றே கூறி, அவர்களுக்கு அந்தக் குழந்தையின்பேரில் அளவுக்கதிகமான பிடிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

குழந்தை இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, ரேகே ஷீர்டிக்குச் சென்று, துவாரகாமாயியில் பாபாவை நமஸ்கரித்தார். பாபா அங்கிருந்த பக்தர்களிடம் ரேகேவைச் சுட்டிக்காட்டி, ''இவர் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா?'' என்று கேட்டார்.

எதற்காக பாபா இப்படிக் கேட்கிறார் என்று தெரியாமல் திகைத்த பக்தர்கள், ''இவர் பெயர் ரேகே. இவர் இந்தூரில் வசிக்கிறார்'' என்றனர்.

''இவருக்குக் குழந்தை இருக்கிறதா?''  இது பாபாவின் அடுத்த கேள்வி.

''இவருக்கு ஒரு குழந்தை இருந்தது. சில மாதங் களுக்கு முன்பு அது இறந்துவிட்டது'' என்றனர்.

''குழந்தை இறக்கவில்லை. அந்தக் குழந்தை என்னுடையது. அதன் கர்மவினைகளை தான்

ஏற்றுக்கொள்வதாகவும், குழந்தையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ரேகே. அதன்படி, அந்தக் குழந்தையை நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது அது இங்கே இருக்கிறது'' என்று தம் இதயத்தைக் காட்டிச் சொன்னார்.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் பாபா, தம்முடைய இதயத்தில் ரேகேவின் குழந்தை இருப்பதாகச் சொன்னதைக் கேட்டு, ரேகே மிகவும் நெகிழ்ந்து போனார்.

பாபாவின் மகாசமாதிக்குப் பிறகும் நீண்ட காலம் வாழ்ந்திருந்த ரேகே, தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ மகான்களைச் சந்தித்திருக்கிறார். அத்தனை மகான்களிலும் அவர் சாய்நாதரையே தரிசித்தார். அந்த மகான்களும் அவர் சாய்நாதருக்கு உரியவர் என்றே உறுதிப்படுத்தினர்.

சாய்நாதர், ரேகேவைத் தம்முடைய பிள்ளையாகவும் ராதாகிருஷ்ணமாயியை தம் பக்தர்களின் தாயாக மட்டுமின்றி தமது தாயாகவும் ஏற்றுக்கொண்டார் என்றால், சாயிநாதரையே தன்னுடைய பிள்ளையாக வரித்துக் கொண்டாள் ஒரு பெண்மணி. உலகம் அனைத்துக்கும் தாயான அந்த தயாபரனுக்கே தாயாகும் பாக்கியம் செய்த அந்தப் பெண்மணியின் பெயர் பாயாஜாபாய்.

தாத்யாகோடே என்பவரின் அன்னையான அந்தப் பெண்மணி பாபாவை தெய்வமாகவே எண்ணி, பக்தி செலுத்தி வந்தாள். அந்த பக்தியே நாளடைவில் தாய்மை அன்பாகக் கனிந்தது. ஆம். பாயாஜாபாய் பாபாவைத் தன்னுடைய பிள்ளையாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டாள்.

ஸ்ரீசாயி பிரசாதம் - 21

அது, பாபா ஷீர்டிக்கு வந்த தொடக்கக் காலம். அவர் தினமும் பகல் பொழுதில் வீடு வீடாகச்சென்று பிக்ஷை ஏற்பது வழக்கம். பாபா அப்படி பிக்ஷை எடுப்பது பிடிக்காத பாயாஜாபாய், அவருக்கு இனிமேல் தானே உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள். அதன்படியே செய்தும் வந்தாள். பாபாவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், பாயாஜாபாய்க்கு தினமும் பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து உணவு கொடுப்பது சிரமமாக இருந்தது. காரணம், பாபா எங்கே இருப்பார் என்பதே யாருக்கும் தெரியாதபடி காடுமேடெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பார் சில நேரங்களில் எங்கேனும் கண்காணாத இடத்தில், தனிமையில் தியானத்தில் அமர்ந்துவிடுவார். ஆனாலும், பாயாஜாபாய் தளர்ந்துபோகவில்லை. எப்பாடுபட்டாவது அவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவருக்கு உணவு கொடுத்த பிறகே, தான் உண்பதை வழக்கமாகக் கொண்டாள். பாபா எவ்வளவு நேரம் தியானத்தில் இருந்தாலும், கொஞ்சமும் சலிப்பின்றிக் காத்திருந்து, பாபா தியான நிலையில் இருந்து மீண்டவுடன் அவருக்கு உணவு உபசரித்து, உண்ணச் செய்வாள். சில நேரம் பாபாவுக்கு ஊட்டிவிடவும் செய்வாள்.

அப்படி ஒருநாள், பாபா தியான நிலையில் இருந்து விடுபட்டதும், பாயாஜாபாய் அவருக்கு உணவு கொடுத்தபடி, ''பாபா, நீங்கள் கடவுளின் அம்சம்! நீங்கள் இப்படி ஆண்டியைப் போல் வீடுவீடாகச் சென்று பிக்ஷை எடுக்கலாமா?'' என்று கேட்டாள். அதற்கு பாபா சொன்னார்...

''தாயே, ஒருவர் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும், அது நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. ஆண்டியாக இருப்பதுதான் என்றும் நிலையானது. அது ஆனந்தமானதும்கூட!'' என்றார்.

பாபாவின் மொழிகளில் இருந்த எளிமையைக் கண்ட பாயாஜாபாய், அதற்குமேல் அவரிடம் விவாதம் செய்யவில்லை. வழக்கம்போலவே ஒவ்வொரு நாளும் பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து, அவருக்கு உணவு அளிப்பதை ஒரு வேள்வியாகவே செய்து வந்தாள். சில காலம் கழித்து, பாயாஜாபாயை அலைக்கழிக்க விரும்பாத பாபா, அவளின் வருகைக்காகவும் அவள் அன்புடன் தரப்போகும் உணவுக்காகவும் துவாரகாமாயியை விட்டு எங்கும் செல்லாமல் காத்திருக்கலானார்.

மனிதகுலம் உய்வும் உயர்வும் பெறவேண்டும் என்பதற்காக, கலியுக தெய்வமாகத் தோன்றிய அந்த மகான் இப்படியாக எண்ணற்ற அருளாடல்களைத் தமது ஜீவித காலத்தில் நிகழ்த்தி இருக்கிறார். தம்முடைய மகாசமாதிக்குப் பிறகும்கூட நிகழ்த்தி வருகிறார்.

அவருடைய மகாசமாதிக்குப் பிறகு, ஷீர்டிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. ஆனால், பாபா அந்த நிலையை அப்படியே நீடிக்கவிடவில்லை. தம்முடைய அருள்திறனை உலகம் உணரும்படி செய்வதற்காக ஒருவரை ஆட்கொண்டார். அவர் பெயர் நரஸிம்ம ஸ்வாமிஜி என்பதாகும். தமிழகத்தைச் சேர்ந்தவரான நரஸிம்ம ஸ்வாமிஜியை பாபா தம்முடைய சேவைக்கு ஈர்த்துக்கொண்டதே ஒரு சிலிர்ப்பான அனுபவம்.

பிரசாதம் பெருகும்

ஸ்ரீசாயி பிரசாதம் - 21
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism