தான் கண்டெடுத்த தெய்வத் திருவுருவங்களை, தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் கேட்டுக்கொண்டதன்பேரில், வைத்தது வைத்தபடி இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டார் சுந்தரநாராயணன். மற்றபடி, அவர் அந்தத் திருவுருவங்களை உரிய முறையில் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் என்று நினைக்கவே இல்லை. 

ஆனால், அவருடைய மனைவி மட்டும் தினமும் அந்த தெய்வத் திருவுருவங்கள்

சித்தமெல்லாம் சித்தமல்லி - 3 !

வைக்கப்பட்டிருந்த இடத்தில் விளக்கு ஏற்றி, நைவேத்தியம் செய்து வழிபடுவதை ஆத்மார்த்தமாகச் செய்துவந்தார். அவருடைய பிள்ளைகளும் தாங்கள் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும், போட்டிகளில் ஜெயிக்கவேண்டும் என்பன போன்ற வேண்டுதல்களை பக்திபூர்வமாகச் செய்துவந்தனர். சொல்லப்போனால், அவர்கள் அந்தத் தெய்வத் திருவுருவங்களை, தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே பாவித்து, அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.

இதையெல்லாம் கண்டும் காணாதவர் போல் இருந்தாலும், மனைவி மற்றும் பிள்ளைகளின் மனப்போக்கில் சுந்தரநாராயணன் குறுக்கிடவில்லை. அதே நேரம், அவர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும்கூட அந்தத் தெய்வத் திருவுருவங்களுக்கு ஒரு சின்ன கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுக்கக்கூட மனம் வரவில்லை அவருக்கு.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 3 !

காலங்கள் கடந்தன. பிள்ளைகள் நல்லமுறையில் படித்துப் பணியில் சேர்ந்துவிட்டபடியால், சுந்தரநாராயணன் தம்பதியும் அடிக்கடி சென்னையிலேயே தங்கவேண்டி வந்தது. இதனால் பெருமாளையும் தாயாரையும் கவனிப்பார் இல்லாமல் போய்விட்டது. எத்தனை காலம்தான் இப்படியே இருப்பது? தவத்திற் சிறந்த மகானால் வழிபடப்பெற்ற அந்த தெய்வத் திருவுருவங்கள் மீண்டும் கோயில்கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருளவேண்டாமா?

அதற்கான காலமும் 2012ம் ஆண்டில் கனிந்து வந்தது.

சித்தமல்லியைச் சொந்த ஊராகக் கொண்டவர் ராமமூர்த்தி. சிறு வயதிலேயே பெற்றோருடன் சென்னைக்கு வந்துவிட்டார். வருடங்கள் பல சென்றாலும், தான் பிறந்த ஊரான சித்தமல்லியை அவர் மறக்கவில்லை. தன் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதற்கு முன்போ பின்போ ஊருக்குச் சென்று, அங்குள்ள சுந்தரநாராயண பெருமாள், கயிலாசநாதர், ஐயனார் உள்ளிட்ட கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதை ஓர் ஆன்மிகக் கடமையாகவே கொண்டு செய்துவந்தார். அவருடைய பிள்ளைக்குக் கடந்த 2012ம் ஆண்டு உபநயனம் நடந்தது. அதை முன்னிட்டு ஊருக்குச் சென்று, வழக்கம்போல் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்ய விரும்பினார். அதற்குத் தேவையான பூஜா பொருட்கள் மற்றும் வஸ்திரங்களை வாங்கிக்கொண்டார்.

ஊருக்குச் செல்வதற்கு முன், ஆன்மிக வழிகாட்டியாக தான் மதிக்கும் ஒரு பெண்மணியைச் சந்திக்கச் சென்றார். அந்தப் பெண்மணியை ஆட்கொண்ட மகான்தான், சித்தமல்லி விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்று அவருக்கு அருள்மொழி சொன்னவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 3 !

ராமமூர்த்தியும் அவருடைய மனைவி சித்ராவும், ஊரில் உள்ள தெய்வங்களுக்காகத் தாங்கள் வாங்கிய வஸ்திரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் சென்றனர். தாங்கள் எடுத்து வந்தவற்றைப் பூஜையறையில் வைத்து, அந்தப் பெண்மணியின் ஆசிகளை வேண்டினார்கள்.

அதற்கு முந்தின நாள் இரவு, அந்தப் பெண்மணியின் கனவில் தோன்றியிருந்தது ஓர் அபூர்வ காட்சி! அந்தப் பெண்மணியை ஆட்கொண்ட மகான் அவரின் கனவில் தோன்றி, சித்தமல்லி கிராமத்தில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தனக்கென ஒரு கூரை இல்லாத நிலையில் இருக்கும் தெய்வத் திருவுருவங்களைக் காட்டி, 'இந்தத் திருவுருவங்களுக்கு வஸ்திரம் கிடைக்கச் செய்! அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நாளை உன்னைப் பார்க்க வருவார்கள்’ என்று கூறி இருந்தார்.

கனவில் மகான் சொன்னதுபோலவே, மறுநாள் தன்னைப் பார்க்க வந்த ராமமூர்த்தி தம்பதியிடம் அந்தப் பெண்மணி, ''சித்தமல்லியில் வஸ்திரம்கூட இல்லாமல் இன்னும் இரண்டு தெய்வத்திருவுருவங்கள் இருப்பதாக என் கனவில் தாத்தா (அவர் தாத்தா என்று சொன்னது அவரை ஆட்கொண்ட மகானைத்தான்) வந்து சொன்னார். எனவே நீங்கள் இன்னும் இரண்டு வஸ்திரங்களை வாங்கிக்கொண்டு செல்லுங்கள்' என்று சொன்னார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர் சொன்னபடியே தாங்கள் ஏற்கெனவே வாங்கி இருந்ததுபோல் இரண்டு வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் அந்தப் பெண்மணியிடம் வந்தனர். அந்தப் பெண்மணி தொடர்ந்து, ''நீங்கள் இப்போது வாங்கியிருக்கும் அளவு போதாது. இன்னும் சற்றுப் பெரிய அளவில் வாங்கிக் கொண்டு போய், அந்தத் தெய்வத் திருவுருவங்களுக்குச் சார்த்துங்கள்' என்று சொன்னார்.

அப்படி வஸ்திரம்கூட இல்லாமல் பெரிய   அளவில் எந்தத் தெய்வத் திருவுருவங்களும் தம் ஊரில் இருப்பதாக ராமமூர்த்திக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அந்தப் பெண்மணி சொன்னபடியே மேலும் இரண்டு பெரிய வஸ்திரங்களை வாங்கிக்கொண்டு ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ராமமூர்த்தியின் தகப்பனார், சித்தமல்லியில் இருந்த சுந்தரநாராயணனைத் தொடர்பு கொண்டு, தாங்கள் மொத்தம் பதினைந்து பேர் ஒரு குழுவாக ஊருக்கு வர இருப்பதாகச் சொல்லி, இரவு தங்குவதற்கும், மறுநாள் கோயிலில் பூஜைகள் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.சுந்தரநாராயணனும் அப்ப டியே அவர்கள் தங்குவதற்கு மடமும், கோயிலில் பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஆனால், ராமமூர்த்தி குடும்பத்தினர் ஊருக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, சென்னையில் இருந்த சுந்தரநாராயணனின் அண்ணிக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவே, அவர் உடனே கிளம்பி சென்னைக்கு வரவேண்டியதாகிவிட்டது. இந்த விவரத்தை ராமமூர்த்தியின் அப்பாவுக்கு போன் செய்து தெரிவித்ததுடன், தன்னுடைய வீட்டுச் சாவியையும் கொடுத்துச் செல்வதாக வும், தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும்படி யும் சொல்லிவிட்டு, சென்னைக்குச் சென்று விட்டார் சுந்தரநாராயணன்.

ராமமூர்த்தி குடும்பத்தினர் வெள்ளிக் கிழமையன்று மாலை சித்தமல்லிக்கு வந்துவிட்டனர். ஆண்கள் மடத்திலும், பெண்கள் சுந்தரநாராயணன் வீட்டிலுமாகத் தங்கிக் கொண்டனர். ராமமூர்த்தியின் மனைவி சித்ராவும் சுந்தரநாராயணன் வீட்டிலேயே தங்கினார்.

பொழுது விடிந்தது. அன்று சனிக்கிழமை. திருவோண நட்சத்திரம். தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட சித்ரா, வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி...?!

சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதிஷ்குமார்

சித்தமெல்லாம் சித்தமல்லி - 3 !