மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

திருக்கோயில் விமானங்கள் 

கோயிலுக்கு ஆதியில் விமானம் என்றும், ப்ராஸாதம் என்றும் பெயர்கள் வழங்கின. இன்று கர்ப்பக்கிரகத்தின் மேல் பாகமாகிய சிகரத்தை மாத்திரம் விமானமென்று சொல்கிறோம். சிற்ப சாஸ்திரப்படி விமானம், கர்ப்பக்கிரகத்தையே குறிக்கும்.

கர்ப்பக்கிரகத்தின் கீழ் பாகம், கெட்டியான அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட மேடை யாகும். இதற்கு 'ஜகதி’ என்று பெயர். அதன்மேல் கட்டப் படும் சுவருக்குக் 'கடி’ என்று பெயர். இதில் பத்மம், குமுதம், காந்தம் என்கிற பலவித வேலைப்பாடுகள் செய் யப்பட்டிருக்கும்.

அருட்களஞ்சியம்

விமான தளத்தில் தோரணங் கள் செய்திருப்பார்கள். இவை மகர தோரணம், பத்ர தோரணம் என்று பலவகைப்படும். விமானத்தின் மேல் பாகத்தில் 'க்ரீவ’ என்பதையும், அதற்கு சிகரத்தையும் கட்டி, உச்சியில் ஸ்தூபியை அமைப்பார்கள்.

பல்லவர் காலத்துக் கோயில்களில் கர்ப்பக்கிருக மாடத்தின் மேல், கர்ப்பக் கிருகங்களின் அமைப்பை பார்க்கிறோம். இதை அனுசரித்து காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் ஆலயத்திலும், உத்திரமேரூர், திருக்கோஷ்டியூர், மதுரை கூடலழகர் கோயில்களிலும் கர்ப்பக்கிரகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருப்பதைக் காணலாம்.

அருட்களஞ்சியம்

சோழ மன்னர்கள் விமானத்தை அதிக உயரமாகக் கட்டி, பலவித வேலைப்பாடுகளுடன் கருங்கல்லில் அமைத்தார்கள். ராஜ ராஜ சோழன் அமைத்த தஞ்சைப் பெரிய கோயில் விமானமும், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானமும், தாராசுரம் கோயில் விமானமும் சோழர்காலத்தில் எவ்வாறு விமானங்கள் அமைக்கப்பட்டன என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அருட்களஞ்சியம்

பிற்காலத்தில், ஆலய வாயில்களில் கோபுரங்களை உயரமாகக் கட்டி, விமானத்தைச் சிறியதாக அமைத்தார்கள். விமான தரிசனமும் கோபுர தரிசனமும் பக்தனுடைய ஊனக்கண்ணில் புலப்பட்டு, அவனுடைய அகக்கண்ணைத் திறந்துவிடுகின்றன.

எம்.கே.ரங்கசாமி அய்யங்கார்

** 1969 ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இருந்து...

கன்னிப் போர்

தாடகையின் வீழ்ச்சிக்குப் பொருத்தமுள்ள உபமானம் காட்டுகிறான் கவிஞன். தாடகை வதத்தோடு தொடங்கிய துஷ்டநிக்கிரகம் ராவண வதத்தோடு முடிவு பெறுவதுதானே ராமாயணம்? அந்த ராவண வதத்துக்கு ஒரு துர்நிமித்தமான முற்குறியாக  உற்பாதமாக  அவனது வெற்றிக் கொடி இற்று விழுந்ததுபோல விழுந்துவிட்டாளாம் தாடகை.

அருட்களஞ்சியம்

முடியுடை அரக்கற்(கு) அந்நாள் முந்திஉற்

                                பாதமாகப்,

படியிடை இற்று வீழ்ந்த வெற்றிஅம் பதாகை

                                  ஒத்தாள்!

ராவண சக்ரவர்த்தியின் ஏகாதிபத்ய ஆட்சி, மகோன்னத நிலையில் இருக்கிறது. அந்த அரண்மனையிலே அவனுடைய ஜயக் கொடி எவ்வளவு அழகாய், எவ்வளவு பிரகாசமாய், எவ்வளவு கோலாகலமாய், நிகரற்றதாய்ப் பறந்துகொண்டிருக்கிறது!

துஷ்ட ராட்சஸர்களின் வாழ்வுக்கும், சாது ஜனங்களின் தாழ்வுக்கும் ஓர் அறிகுறியாகப் பறந்துகொண்டிருக்கும் அந்தக் கொடி கட்டியிருக்கும் வடக்கயிற்றையும் கறையான் அரித்து விடுமென்று யார் கண்டார்? அரித்து வருகிறது என்று கூடத் தெரியாமலே உள்ளுக்குள்ளேயிருந்து செல்லுப் பிடித்து விட்டதாம். கயிறு இற்றுப்போய்் கொடி விழுந்த பின்புதான் தெரியவருகிறது, ராவணாதி ராட்சஸ சம்ஹாரத்துக்குத் தொடக்கம் ஆகிவிட்டதென்று!

ராவணனுக்குப் பாட்டி; கொடுமையிலும் வலிமையிலும் ஒருங்கே மூத்து முதிர்ந்தவள். இவள் வீழ்ச்சி, 'அந்த ராட்சஸ சக்ரவர்த்தியின் வெற்றிகளுக்கெல்லாம் இனி வீழ்ச்சிதான்; விநாச காலம்தான்!’ என்று சாதுக்களின் உள்ளத்திலே நம்பிக்கை உண்டாக்குகிறதாம். தேவர்களோ தாடகை சம்ஹாரத்தில் பெரு மகிழ்ச்சியுற்று, தாங்கள் இனி ராவணேச்வரனுக்கு அடிமை இல்லை  என்று கனவு காணத் துணிந்துவிட்டார்களாம்.

ராமனது முதற்போராகிய இந்தத் தாடகா யுத்தத்தை 'கன்னிப் போர்’ என்கிறார் கவிஞன்.

வானவில்லின்மீது பூமழை!

தேவ ராஜ்ஜியத்துக்குச் சுதந்திரம் இனி வந்துவிடும் என்று கூடத் தோன்றவில்லை; சுதந்திரம் வந்துவிட்டதாகவே தோன்றி விட்டதாம். எதிர் காலத்தை இறந்த காலமாக்கிய அந்த நெஞ்சுத் துணிவோடு, தாங்களே அந்த வெற்றியை அடைந்துவிட்டவர்களைப்போல் 'ஜம்’மென்று வான வீதியிலிருந்து இறங்கி வருகிறார்கள், விசுவாமித்திரனை நோக்கி.

வந்து, அவ்வளவு சந்தோஷத்தையும் அந்த முனிவனோடு எப்படிப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்! பார்க்கலாமே...

''யாமும்எம் இருக்கை பெற்றோம்;

உனக்(கு) இடை யூறும் இல்லை;

கோமகற்(கு) இனி நீ தெய்வப்

படைக்கலம் கொடுத்தி' என்னா

மாமுனிக்(கு) உரைத்துப் பின்னர்

விற்கொண்ட மழைய னான்மேல்

பூமழை பொழிந்து வாழ்த்தி

விண்ணவர் போயி னாரே.

'எங்கள் சுதந்திரத்துக்கும் இடையூறில்லை; உன் யாகத்துக்கும் இடையூறில்லை!' என்று மஹரிஷியைப் பார்த்துச் சொன்னவர்கள், 'இனி, நீ ராமனுக்கு உன்னிடத்திலுள்ள அஸ்திரங்களையெல்லாம் கொடுப்பாயாக' என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

ராமன் சுத்த வீரன் என்பது தெரிந்து விட்டதல்லவா? எனவே, ''நம்பிக் கொடுக்கலாம்; எப்பேர்ப்பட்ட தெய்வத் தன்மை வாய்ந்த ஆயுதங்களையும் தைரியமாக உபயோகிப்பான்; தரும வழியில் உபயோகிப்பான்' என்று குறிப்பாகக் கூறுகிறார்கள்.

இப்படி, விசுவாமித்திரனை நோக்கித் தங்கள் கருத்தை உணர்த்திவிட்டு, இருப்பிடம் போவதற்கு முன், ராமனுடைய அந்த விஜய சௌந்தரியத்தையும் நோக்கினார்களாம்; கண்ணும் கருத்தும் ஒருங்கே குளிர! நோக்கியதும், ''ஆஹா! என்ன வசீகரமான அழகு!' என்ற மோகித்துப் போனார்கள். போரிலே சீறிய அழகு, இப்போது ஆறிக் கொஞ்சுகிறது அந்த மேனியிலே!

மழை மேகத்துக்கு இடையே 'இந்திர வில்’ என்ற வானவில் வீசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அவ்வளவு மோகனமாக இருக்கிறது, ஜகன்மோகன வீர மூர்த்தியை ஜகன் மோகன சாந்த மூர்த்தியாக்கிய தெய்விக அழகும்! தாடகா யுத்தத்தில் பொன்னெடுங் குன்றம்போல், புயல் காற்றைப் போல் ஜொலித்த வீர சௌந்தரியம், இப்போது வானவில்லைப் போல் வசீகரிக்கிறதாம் தேவருள்ளத்தை.

ரத்தினஹாரமும் பொன்னாபரணமும் மின்னிக் கொண்டிருந்த நீலச் சுடர் மேனியிலே, அந்த விஜய கோதண்டம் என்ற வில்லும் எவ்வளவு அழகாய் இசைந்திருக்கிறது! ஆயுதத்தையும் ஆபரணமாக்கிக் கொண்ட இந்த அழகைக் கண்டதும், பூ மழை பொழிந்து வாழ்த்துகிறார்களாம் தேவர்கள்.

தேவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்க ராமனுக்கு அஸ்திரங்களைக் கொடுக்கிறான் விசுவாமித்திரன். ராமனுடைய சாந்தமான விஜய சௌந்தர்யத்துக்கு வானவில்லோடு கூடிய மழைமேகத்தை உபமானமாக்கிய கவிஞன், குறி தவறாத அந்த அஸ்திரங்களுக்கு என்ன உபமானம் கொடுக்கப் போகிறான்?

கம்பன் பாடிக் கொண்டிருக்கிறான், ராமாயணத்தின் இந்தப் பகுதியை ஆனந்தமாக. ஆருயிர்த் தோழனும் ஒப்பற்ற கலை வள்ளலுமாகிய சடையப்பனும் பிறரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஆனந்தமாக. பளிச்சென்று காதிலே விழுகிறது, பின் வரும் பாட்டு:

விண்ணவர் போய பின்றை,

விரிந்தபூ மழையி னாலே

தண்ணெனும் கானம் நீங்கித்

தாங்கருந் தவத்தின் மிக்கோன்,

மண்ணவர் வறுமை நோய்க்கு

மருந்தெனும் சடையன் வெண்ணெய்

அண்ணல்தன் சொல்லே அன்ன

படைக்கலம் அருளி னானே!

திகைத்துப் போயிருப்பார்களல்லவா, இந்த உபமானத்தையும் நன்றி அறிவையும் தெரிந்துகொண்டதும், சடையப்பன் முதலானவர்களெல்லாம்?

பூமியிலே வறுமை நோய் எங்கே வந்தாலும் அங்கே போய் உபசரிக்குமாம் சடையப்பனுடைய வள்ளன்மை. தன்னுடைய ஊர், தன்னுடைய நாடு, உற்றார், உறவினர் என்ற குறுகிய திருஷ்டியே கிடையாது. இலங்கைத் தீவில் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தை நிவர்த்திக்கக் கப்பல் கப்பலாய் நெல் அனுப்பி வைத்தானாம். இத்தகைய லோகோபகாரியை 'மண்ணவர் வறுமை நோய்க்கு மருத்துவன்' என்றுகூடக் கம்பன் சொல்லவில்லை; 'மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து! என்றே குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

'உதவுவேன்’ என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் போதுமாம்;

அந்தச் சொல் தவறுவதே இல்லையாம். அத்தகைய சொல்லைப் போல் குறி தவறாத அஸ்திரங்களை ராமனுக்குக் கொடுத்தருளினானாம் விசுவாமித்திரன்.

மஹரிஷிகளின் சொல்லும், மஹா கவிகளின் சொல்லும் ஏற்கெனவே உபமானமாகி விட்டன ராமனுக்கு. இப்பொழுது ராமனுக்குக் கிடைக்கும் பாணங்களுக்குக் கலா ரஸிகனான சடையப்ப வள்ளலின் சொல் உபமானமாகிறது!

** 23.7.44, 30.7.44 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...

அருட்களஞ்சியம்