மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

மதம் சார்ந்ததா வேதம் ?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? அண்மையில் ஓர் உபந்யாச நிகழ்ச்சிக்குச் சென்று திரும்புகையில், எனக்கும் நண்பருக்கும் இடையே ஒரு விவாதம் எழுந்தது.  அதாவது, வேதங்களும் அதன் கருத்துகளும் தற்காலத்துக்குப் பொருந்தாதவை. ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் அப்போதைக்கு உகந்த சட்டதிட்டங்களுடன் உருவாக்கப்பட்டவையே வேதங்கள். எனவேதான், வேதவேதாந்தங்களும் அவற்றின் மூலம் உருவான மதக் கருத்துகளும் தற்போது எடுபடாமல் போய்விட்டன என்கிறார் நண்பர். அவருக்கு நம் வேதங்களின் தோற்றத்தை, அவற்றின் தத்துவ மேன்மைகளை விளக்கிச் சொல்ல வேண்டுகிறேன். 

கே.பார்த்தசாரதி, சென்னை - 4

முதல் கோணம்

வேதம் மதம் அல்ல. அதிலிருந்து உருவான ஸனாதனமும் மதம் அல்ல. வேதத்துக்குப் பேரறிவு என்று பெயர். மனித இனம் எட்டவேண்டிய இலக்கை அது சுட்டிக்காட்டும். வேதத்தின் வடிவம் ஒலி. அதன் கருத்து, ஒலியின் உயிரோட்டத்தை நிறைவு செய்யும் ஒளி (பரம்பொருள்) ஆகும். அதன் செயல்பாடு அறம்.

மனிதர்களை இரண்டு கால் பிராணிகள் என்றும், விலங்குகளை நான்குகால் பிராணிகள் என்றும் வேதம் சுட்டிக்காட்டும் (சம்னோ அஸ்து த்விபதேசம்சதுஷ்பதே). நாம் வாழும் உலகம் (பூமி), பறவை இனங்கள் வளைய வரும் இடைவெளி (அந்தரிகக்ஷம்), தேவர்கள் குடியிருக்கும் மேலுலகம் (த்யௌ:), தேசம், காலம் என்ற எல்லையைத் தாண்டி, ஆகாசம் போல் எங்கும் பரந்துவிரிந்து இருப்பது வேதம். ஒலி, ஆகாசத்தில் இருந்து வெளிப்படும் (சப்தகுணாகம் ஆகாசம்). ஐம்பெரும் பூதங்களில் காற்றும் நெருப்பும் அதன் உருவம். இப்படி, ஆகாசத்தில் உறைந்திருந்த ஒலியை தங்களின் மனக் கண்ணால் உணர்ந்து உள்வாங்கி, மனதில் பதியவைத்து, உலகம் உய்ய மகரிஷிகள் ஒலி வடிவில் வெளியிட்ட தகவல்களின்  தொகுப்பே வேதம். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லுரைகள் அதில் இருக்கும். உலக மக்கள் அத்தனைபேருக்கும் வழிகாட்டும் ஆசான் வேதம் என்று சொல்லலாம். மனித சிந்தனைக்கு எட்டாத விஷயங்களை வெளியிடுவதால், அது மற்ற இலக்கியங்களில் இருந்து மாறுபட்டது. வேதம், மனிதனால் இயற்றப்பட்டதல்ல. அதனாலேயே அது மதமாகாது.

கேள்வி - பதில்

? அப்படியென்றால், 'மதம்’ என்று எதைச் சொல்வது?

'மதம்’ என்ற சொல்லுக்கு எனது கருத்து, எனது அபிப்பிராயம், எனது கொள்கை, எனது மதிப்பீடு என்று பொருள். குறிப்பிட்ட சிந்தனையில் வெளிவந்த கொள்கையை பலபேர் பின்பற்றும்போது, அது மதமாக மாறிவிடுகிறது. 'அறியாமையில் இருந்து விலகி, பேரறிவை எட்டி, அதை தன்னில் உணர்ந்து, அதாக மாறி பிறவிக்கு முற்றுப்புள்ளி வைப்பதே பிறப்பின் எல்லை’ என்கிறது வேதம். உலகத்தைத் தோற்றுவித்தவன், பாதுகாப்பு அளிப்பவன், தன்னில் அதை அடக்கிக் கொண்டவன் பரம்பொருள் என்று உணர்வோம். அந்த உணர்வை வேத ஒலியில் இருந்து பெற முடியும். ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் பயன்படுவது அது. அந்த ஒலிக்கு எழுத்து வடிவம் இல்லை. அதை எழுதாக்கிளவி என்பார்கள்.

ஆசானிடம் இருந்து வெளிவந்த ஒலியை (வேதம்), காதால் கேட்டு மனதில் பதிய வைப்பது வேதத்தைக் கற்கும் முறை. ஒலி வடிவில் ஒருவரிடமிருந்து மற்றவரின் மனதில் இடம்பிடிக்கும். பிற்பாடு வந்த மனித இனம், அந்த ஒலிக்கு உகந்த எழுத்து வடிவை உருவாக்கி, புத்தக வடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எழுத்து வடிவத்தைப் பார்த்து ஒலி எழுப்பினால் மட்டுமே வேதமாகும். எழுத்து வடிவில் மட்டுமே தோன்று வது வேதம் அல்ல. ஒலியில் இருக்கும் தேவதைகளின் உருவத்துக்கும் வடிவம் ஒலிதான்!

? வேதத்தைப் பொறுத்தவரையில் ஒலியே பிரதானம் எனும்போது, கோயில்கள், விக்கிரக ஆராதனைகளுக்கு வேதம் இடம் தரவில்லையா?

விக்கிரக ஆராதனை, கோயில் போன்றவை வேதத்தில் இருக்காது. நீர், நெருப்பு, காற்று போன்ற வடிவங்களில் அதில் உறைந்த பரம்பொருளை வழிபடுவோம்.

ஒலியை மனதில் அசைபோடுவது ஜபம். ஒளியில் (நெருப்பில்) உணவை அளித்து (ஹவிஸ்ஸு) வழிபடுவது வேள்வி. மற்ற அலுவல்களில் இருந்து முற்றிலும் விடுபட்ட மனம் ஒளியில் (பரம் பொருள்) ஒன்றிக் கரைந்து விடுவது உபாசனை. இயற்கையின் வடிவம் அவன். பஞ்சபூதங்கள் படைப்புக்கு ஆதாரம் அவன். பரம்பொருளை பஞ்சபூத வடிவில்தான் அடையாளம் காட்ட இயலும். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகியவற்றின் ஒத்துழைப்பில் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியன நடைபெறுகின்றன. அத்தனை பொருட்களும் இந்த பூதங்களின் கலவையில் விளைந்தவையே. அவை இயங்க பரம்பொருளின் இணைப்பு வேண்டும். அப்படியான பரம்பொருளை வேதம் விளக்கிக்கூறும்.

? எனில், தெய்வ தத்துவங்களை போதிக்கும் புராணங்களுக்கும், இறைவனை வழிபடுவதற்கான நியதிகளைச் சொல்லும் ஆகமங்களுக்கும் முக்கியத்துவம் கிடையாதா?

நீங்கள் குறிப்பிடும் அத்தனைக்கும் மூலமாகத் திகழ்வது வேத ஒலியே ஆகும். 21 பிரிவுகளைக் கொண்டது ரிக் வேதம். 101 பிரிவுகளை உள்ளடக்கியது யஜுர் வேதம். 1000 பிரிவுகளைக் கொண்டது சாம வேதம். வேதம் எண்ணில் அடங்காத அளவு இருந்தது (அனந்தாவை வேதா:). அதை உள்வாங்கி வெளியிடும் திறமை மனித இனத்தில் குறைந்துகொண்டே வந்ததால், சில பகுதிகள் மட்டுமே தற்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

கேள்வி - பதில்

அறிவு (வேதம்) அத்தனை பேருக்கும் வேண்டும். அது ஒரு மதம் ஆகாது. அந்த அறிவின் பல பரிமாணங்கள் தரிசனங்களாகவும், ஆகமங்களா கவும், புராணங்களாகவும், சம்பிரதாயமாகவும் உருப்பெற்று வளர்ந்திருக்கின்றன. அவை அத்தனைக்கும் வேத ஒலியே மூலமாக இருப்பதால் உயிரோட்டத்துடன் விளங்குகிறது.

அந்த பொக்கிஷத்தை மனித சிந்தனையில் வெளிவந்த மதமாக சித்திரிப்பது அறியாமை. அதை மதமாக சித்தரித்து மனித இனத்தின் காதில் எட்டாமல் செய்வது தவறு. அதன் இழப்பு மனப்போராட்டத்துக்கும், அதன் மூலம் சமுதாய கொந்தளிப்புக்கும் வழிவகுத்து உள்ளது. 'ஸத்யம் வத தர்மம் சர...’ உண்மையைப் பேசு; கடமையைச் செய் என்ற வேத ஒலி, காதில் விழுந்தால் அவன் விழித்துக்கொள்வான்; சமுதாயம் சொர்க்கமாகும்.

இரண்டாவது கோணம்

நீரில் இருந்து உருப்பெற்ற உயிரினம், படிப் படியாக பரிணாம வளர்ச்சி பெற்று, மனித இனம் உருவெடுத்திருக்கிறது என்று டார்வின் விகாச வாதத்தை வெளியிட்டார். கற்காலத்தில் இருந்து நெருப்பை மூட்டி உணவைத் தயாரித்து முன்னேறி வந்தான் மனிதன். விருப்பத்தை வெளிப்படுத்த தனது அங்க அசைவு களைப் பயன்படுத்தினான் ('சேஷ்டாமயீபாஷா’). கை, கால், கண் போன்ற வற்றின் அசைவால் தங்களது எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்கள் மனிதர்கள். இப்படி யான செயல்களுக்கு அதிகமான வேலைப்பளு ஏறியதால், பேசும் திறன் வெளிப்பட்டது.

? எனில், வேதம் மனிதர்களால் உருவானது எனச் சொல்ல வருகிறீர்களா?

ஆமாம்! ஆதிகாலத்தில் உடற்மொழியைக் கையாண்ட மனிதன் ஒரு நிலைக்கு பிறகு, தனது விருப்பங்களை வெளியிட ஒலி எழுப்பினான். பின்னர் படிப்படியாக அந்த ஒலிக்கு எழுத்து வடிவம் கொடுத்து, பேசிப் பழகத் தெரிந்து கொண்டான் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்கிறார்கள். ஆக, ஒலி எழுப்பத் தெரிந்தவனால் உருவாக்கப்பட்டதுதான் வேதம். அன்றைய சமுதாயத்துக்கு உகந்த முறையிலான சட்டதிட்டங்கள் அந்த ஒலி வடிவிலான வேதத்தில் இருக்கும். அவ்வளவே!

இப்படி, மனிதனால் உருவாக்கப்பட்டதும் அவனது சிந்தனையில் உருவானதுமான வேதம், ஒரு மதமாகவே இருக்க இயலும். அதுவும் தவிர வேதம் போற்றப்படுவதும், அதன் கருத்தை ஏற்று செயல்படுவதும், அதை வைத்து மனித இனத்தை செம்மைப் படுத்துவதும் உலகின் சிறு பகுதியான பாரதத்தில் மட்டும்தான் தென்படுகிறது. இங்கும் ஒரு சிறுபகுதி மக்கள்தான் அதை விடாமல் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். உலக மக்களோடு இணைந்து வாழ நினைப்பவர்கள், ஒலி வடிவான வேதத்தை அறவே மறந்து விட்டார்கள்.

? எதன் அடிப்படையில் இப்படியொரு கருத்தை சொல்கிறீர்கள்?

கேள்வி - பதில்

தற்போது, வேதம் ஒலி வடிவில் மிளிரவில்லை. புத்தக வடிவிலும் கணினியிலுமாக ஒதுங்கி விட்டது. ஒலி காதில் விழாது. காலத்துக்கு உகந்த கல்வியைக் கற்க இயலாதவர்களில் சிலர், வேலை வாய்ப்பாக அந்த ஒலியை எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒலியை அசைபோடுவது (ஜபம்). ஒளியில் உணவளிப்பது (வேள்வி). அலுவல்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஒளியில் மனம் ஒன்றிவிடுவது (உபாசனை). இவை அத்தனையும் மறைந்து விட்டன. இன்றைய சமுதாயச் சூழலில் அதற்கு இடமில்லாமல் போய்விட்டது. அங்குமிங்கும் தென்படும் வேத ஒலிகள், அன்றாட வாழ்க்கைக் குப் பயன்படும் பணத்தை ஈட்டவே வகை செய்கின்றன. அதைப் படித்தவர்களிலும் மனக் கொந்தளிப்பும் போராட்டமும் தென்படுகின்றன.

அப்படியிருக்க, சமுதாயக் கொந்தளிப்பை இல்லாமல் செய்யும் வல்லமை அதற்கு எப்படி இருக்கும் என்ற எண்ணத்தால், மனித சிந்தனை யானது நம்பிக்கை இழந்து திகழ்கிறது. அதன் உயர்வையும், வளர்ச்சியையும் புள்ளி விவரங் களாக உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தாலும், இன்றைய சமுதாயப் பயன்பாட்டுக்கு அது உதவாமல் இருப்பது கண்கூடு.

அது, ஒருசாராரின் எண்ணமாகிப் போனதால், மதமாக மாறி மறைந்துகொண்டிருக்கிறது. தற்காலச் சூழலில் பயனளிக்கும் தகுதியை இழந்துவிட்டதால், அந்த மதம் ஒதுக்கவேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.

? எல்லோருக்கும் தேவையான பேரறிவாகிய வேதத்தை, 'மதம்’ என்று சொல்லும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

சிந்தனை மாற்றத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டிருப்பதுதான் உலக இயல்பு. கடவுளின் மூச்சுக் காற்று வேதம் என்ற ஒரு தகவல் உண்டு. அவரால் இயற்றப்பட்டதால் அது மதமாக இருந்து கொண்டிருக்கிறது. அது, அவரது விருப்பம். அதை ஏற்றுக்கொண்ட சிலர், அதை மதமாக உருவாக்கினார்கள். எல்லோர் சிந்தனையிலும் உருவாகாமல் இருப்பதால், அது மனித இனத்தின் பொதுச் சொத்தாக முடியாது.

வேத ஒலி முழுப் பயனையும் அளிக்கும் என்றால், அதன் விரிவாக்கமான தரிசனங்களும், புராணங்களும், இதிகாசங்களும், ஸம்பிரதாயங் களும் மாறுபட்ட கருத்தில் தங்களது கொள்கை களை உயர்வாகச் சித்தரிப்பது ஏன்? மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான். மதக் கோட்பாடுகளைத் திணித்து, அவரவரது தனிச் சிந்தனையை முடக்கிவிட்டு, முன்னேற்றத்துக்கு தடையை ஏற்படுத்துவது தவறு. ஆகையால் மதம் என்ற மாயை மனித முன்னேற்ற சிந்தனையை வளரவிடாமல் தடுப்பதால், வேதமும் மதமாகவே இருப்பதால், அதைக் கடைப்பிடிப்பது, மனித முன்னேற்றத்துக்கு தடை போட்டுவிடும்.

மூன்றாவது கோணம்

மனித சிந்தனைக்கு எட்டாத விஷயங்களையே வேதம் வெளியிடும். சிந்தனைக்கு எட்டும் விஷயங்களை வெளியிடத் தேவை இல்லை. புலன்களாலோ, அனுமானத்தினாலோ, சிந்தனையின் மதிப்பீட்டிலோ தெரிந்துகொள்ள இயலாத தகவல்கள் வேதத்தில் இருக்கும் (ப்ரத்யக்ஷேண அனுமித்யாவா யஸ்தூபாயோ...).

வேதம் என்ற சொல்லுக்கு பேரறிவு (ஞானம்) என்று பொருள். அறியாமையில் ஆழ்ந்த சிந்தனையால், பேரறிவை எட்ட இயலாது. பேரறிவே ஒருவனது முன்னேற்றத்தின் எல்லை. சிற்றறிவை வைத்துக்கொண்டு, தனது சித்து விளையாட்டில் மனித சிந்தனையை திசை திருப்பி அலைக்கழிப்பது தவறாகும்.

பேரறிவை எட்டாத வரையிலும், தனது சிந்தனையை உயர்வாக வைத்து சொல் வளத்தால் மக்களை ஈர்த்து தவறான வழிகாட்டும் நாடகம் தொடரக்கூடாது. அப்படியான நாடகத்தை காலத்துக்கு உகந்த சிந்தனையாக சித்திரிப்பதை, சிந்தனை வளம் பெறாதவர்களும், பேரறிவை எட்டாதவர்களும் எளிதாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள். எண்ணிக்கையில் அதிகமான அவர்களின் கோட்பாடு மதமாக மாறிவிடுகிறது. அது சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிவிடும்

? எனில், மதங்களைவிடவும் உயர்வானது வேதம் எனச் சொல்ல வருகிறீர்களா?

வேதத்தின் கருத்துக்களை குறிப்பிட்ட மதமாகவும், அந்த மதத்தைச் சேர்ந்தது என்றும் சித்திரிப்பது தவறு என்கிறோம். மனத்தெளிவை அளித்து, உள்ளதை உள்ளபடி உள்வாங்கி அறிவைப் புகட்டும் வேதம் மதமாக உருவாகாது.

மதம் என்பது மனித சிந்தனையை முடக்கி, அவர்களை மாக்களாக மாற்றும். வேதம் மனித சிந்தனைக்கு உகந்த தகவல்களை அளித்து, அவனை சிந்தனையில் உயர்ந்த மனிதனாக மாற்றி, தெய்விகத் தன்மையை அடையவைக்கும். உலகத்தையே ஒரு குடும்பமாகப் பார்க்க வைக்கும். உயிரினங்களை எல்லாம் தனது ஆன்மாவாக உணரவைக்கும்.

எல்லாம் ஒன்றுதான் என்ற உணர்வு, பகையை உருவாகாமல் தடுத்து, நட்பில் இணையவைத்து நாட்டையும் வீட்டையும் செழிக்கவைக்கும். உலக அமைதியே வேதத்தின் குறிக்கோள். அதை மனித சிந்தனைக்கு ஊட்டி, மண்ணுலகை விண்ணுலகமாக மாற்றிவிடும்.

எல்லையற்ற இயற்கைப் படைப்பில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள மனிதனால் இயலாது. நிலத்தில் உருவாகும் உயிரினங்களைவிட, நீரில் வாழும் உயிரினங்கள் பன்மடங்கு தென்படும். அவற்றை ஒட்டுமொத்தமாக ஆராய்ச்சி செய்ய மனித இன சிந்தனைக்குத் தகுதி இல்லை.

? அப்படியென்ன மேம்பட்ட சிந்தனைகளை வேதம் அளித்திருக்கிறது?

வேதத்தின் சிந்தனை எந்த மனித சிந்தனையிலும் தோன்றாது. எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்களில் கைகளால் உணவருந்தும் இயல்பு உடையவை மூன்றுதான். மனிதன், குரங்கு, யானை. இப்படியான சிந்தனை மனிதனில் தென்படாது.

உறக்கத்தில் உயிர் பிரியாது. உயிர் பிரியும் நேரத்தில் அவன் விழித்துக்கொள்வான் என்று தகவல் அளிக்கும் வேதம். இதுவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. பஞ்சபூதங்களின் ஆற்றலும் அவற்றின் செயல்பாடுகளும் மனித சிந்தனைக்கு எட்டாதது. அவற்றை வேதம் சொல்லித்தான் தெரிந்துகொள்ள இயலும்.

உடலுக்குள் ஊடுருவிய ஆன்மாவையும், அதன் தொடர்பில் இயங்கும் மனதையும் தெரிந்துகொள்ள மனித சிந்தனையால் இயலவில்லை. மனிதன் இயங்குவதை வைத்து மதிப்பீடு செய்யத் தான் இயலும். அவ்வளவு ஏன் ... ஆன்மாவின் தரம், மனிதனின் செயல்பாடு ஆகியனவும் மனித சிந்தனைக்கு எட்டாது; வேதம் சொன்னதை ஏற்க வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படி, தனது செயல்பாட்டையே தெரிந்துகொள்ள இயலாத மனித சிந்தைக்கு, உலகை உயர்வாக்கும் சிந்தனை எப்படி உதிக்கும்?! ஏழைக்கு உதவியதை புரட்சிகரமான சிந்தனையாகப் பறை சாற்றும் அற்ப சிந்தனையால், உலக இயக்கத்தை எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?!

மதம் மனிதப் பண்பை வளர்க்காது; வேதம் வளர்க்கும். ஒட்டு மொத்த மனித இனத்தின் உண்மையான வழிகாட்டியாக இருப்பதால் வேதம் மதமாகாது. உலக அறிவு நிறைவை எட்டுவதற்கு வேத அறிவு பயன்படும். பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாசத்தில், ஒலி வடிவில் தோன்றிய வேதம் மனித இனத்தின் படைப்பாக முடியாது. இயற்கையில் உருவான ஒலி, இயற்கையின் படைப்புகள் அத்தனையும் உயிரினங்களின் பயன்பாட்டுக்கு உதவும். பேசத் தெரிந்து ஆறறிவு பெற்ற மனிதனை, இயற்கையில் தோன்றிய ஒலி (வேதம்) பண்பட்டவனாக மாற்றும். தானும் உயர்ந்து உலகத்தையும் முன்னேற வைக்க வேதம் உதவும். ஆகவே, குறுகிய வட்டத்தில் ஒடுங்கிய சிந்தனையின் விளைவாகத் தோன்றிய மதத்தில் வேதத்தை அடக்கும் முயற்சி அறிவீனம்

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனித சிந்தனையானது சுயநலத்தின் துணையோடு உருவாகும். வேத சிந்தனையானது பொதுநலனை பாதுகாக்கும் முறையில் உருவாகும். சுயநலத்தில் ஊறிய மனித சிந்தனையில் உருவானது மதம். அது, பொது நலத்தின் எதிரி. அது மறைய வேண்டும். தான் படைத்த உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் ஏற்பட்ட இயற்கை, தனது ஒலியின் (வேதம்) வாயிலாக உயிரினங்களுக்கு... அதிலும் குறிப்பாக ஆறறிவு பெற்றவர்களுக்கு அவர்கள் சிந்தனைக்குத் தகவல் அளிக்கும் வாயிலாக உலகை உய்யவைக்க முற்பட்டது. ஆறறிவு பெற்றவனால்தான் அதை உள்வாங்கி செயல்பட இயலும்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியைக் குறிக்கோளாக வைத்து அதற்கு வேண்டிய தகவல்களை திரட்டித் தந்திருக்கிறது, இயற்கையில் தோன்றிய வேதம். சிந்தித்துப் பாருங்கள், அது எப்படி மதமாகும்? மனித சிந்தனையில் தோன்ற இயலாத அரும்பெரும் தகவல்களை அள்ளித் தருகிறது வேதம். கடலில் மூழ்கி முத்தை எடுக்க வேண்டும். வேதத்தில் மூழ்கித்தான் தகவலைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பதில்கள் தொடரும்...

கேள்வி - பதில்