Published:Updated:

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

Published:Updated:

கோவை, ஆனைக்கட்டி ஆஸ்ரமத்தில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழாவுக்குச் சென்றிருந்தபோது, ஆன்மிகம் மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான நம்முடைய சந்தேகங்களை கேள்விகளாக ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் முன் வைத்தோம். அவற்றுக்கு ஸ்வாமிஜி தந்த பதில்கள் இங்கே உங்களுக்காக... 

*  தியானம் செய்வதற்கு அமைதியான இடம் அவசியம்தானா? எல்லோருக்கும் அப்படி ஓர் இடம் அமைவது சாத்தியமா?

அமைதி என்பது புறச்சூழலால் கிடைப்பதல்ல. மனநிலையைப் பொறுத்தே ஒருவருக்கு அமைதி ஏற்படுகிறது. தியானம் செய்வதற்கு அமைதியான இடம் தேடி ஒருவர் தன்னுடைய கிராமத்தில் இருந்து வடக்கே ரிஷிகேஷ், பத்ரிநாத் எனப் பல இடங்களுக்கும் சென்றார். அங்கெல்லாம் அவருக்கு தங்குவதற்கு இடமும் சாப்பிட உணவும் கிடைத்தாலும்கூட, அமைதி மட்டும் கிடைக்கவில்லை. பறவைகளின் கூச்சலோ அல்லது வேறு ஏதேனும் இரைச்சலோ அவரை அமைதி இல்லாமல் தவிக்கச் செய்தது. கடைசியில் தமது ஊருக்கே வந்துவிட்டார்.

பறவைகள் கூவிக் கொண்டிருந்தாலும்கூட, அவைகள் பாட்டுக்குக் கூவிக்கொண்டு இருக்கட்டும், நாம் நம் வேலையைப் பார்க்கலாம் என்று இருப்பதுதான் மனம் அமைதி பெற உகந்த வழி. மனதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டால் நாளடைவில் அது அமைதியான நிலையை அடைந்துவிடும்.

* வேதாந்த ஞானம் வாழ்க்கைக்கு முன்னேற்றம் தருமா? அதனால் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும் பலன் என்ன?

வேதாந்த ஞானம் வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரும் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால், மற்ற விஷயங்களைத் திட்டம் வகுத்து ஒரு தொகுப்பாக மக்களுக்குக் கொடுப்பதைப் போல வேதாந்த ஞானத்தையும் மக்களுக்கு வியாபார ரீதியாக கொடுத்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு அதில் வெற்றி கிடைக்கலாம். ஆனால், அது வியாபார வெற்றியாகத்தான் இருக்குமே தவிர, வேதாந்தத்தின் வெற்றி என்று சொல்ல முடியாது. இன்று எதையும் விளம்பரப்படுத்தி விலைபேசி விற்று லாபம் சம்பாதிக்கலாம். அது சாத்தியம்தான். அதேபோல் வேதாந்த ஞானத்தையும்கூட நீங்கள் வியாபார ரீதியில் மக்களுக்குக் கொடுத்து லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் அது உங்கள் வெற்றி ஆகாது.

வேதாந்த ஞானம் பின் எதற்குத்தான் பயன்படும், அதன் குறிக்கோள் என்ன என்று கேட்டால், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பிலும் பொருளிலும் இறைவன் இருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதுதான்! அந்த ஞானத்தை நீங்கள் அடைந்துவிட்டால் ஆசை, கோபம், காமம் போன்ற பலவீனங்களில் இருந்து முழுமையாக விடுபட்டு விடுவீர்கள்.

* சத்சங்கம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி?

சதசங்கம் உங்களை நாடி வருவதில்லை. அது உள்ள இடத்தில் அதை நீங்கள் உணர்வது தான் அவசியம். நல்ல உணர்வுகள் பரவி இருக்கும் இடத்தில் அது கோயிலாக இருக்கலாம், ஆசிரமமாக இருக்கலாம், தியான மண்டபமாகவும் இருக்கலாம். அங்கே நீங்கள் இருந்தாலே போதும். அதன் நன்மையை நீங்கள் உணரமுடியும். ஒரு பஜனை நடக்கும் இடத்தில் நல்ல இசையைக் கேட்கும்போது உங்கள் உணர்வு இப்படி உயர்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அப்போதே நீங்கள் சத்சங்கத்தின் பலனை அடைந்துவிட்டதாகத்தான் பொருள்.

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

* இறைவனை பூஜிப்பதும் ஆராதனை செய்வதும் அவசியமா?

பூஜையில் இரண்டு விதமான காரியங்கள் அடங்கியுள்ளன. ஒன்று சடங்கு. அதன்மூலம் நாம் இறைவனின் கருணையை வேண்டலாம். மற்றது இறைவனின் புகழைப் பாடுவது. இறைவனை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்வாகப் பாடுகின்றோமோ அந்த அளவுக்கு நாம் நம்மை மிகவும் சிறியவனாக உணர்வோம். அகங்காரம் ஒடுங்கி விடும். சொல்லப்போனால் உலகில் உள்ள படைப்புக்கள் அனைத்தும் இறைவனே! அப்படி உள்ளபோது நாம் யாரை எதைப் புகழ்ந்தாலும் அது இறைவனைப் புகழ்வதாகத்தானே அர்த்தம்! அப்படி நாம் இறைவனின் புகழைப் பாடப்பாட நம்மிடம் பணிவு உண்டாகிறது.  அப்போது நம் மனக்கலக்கம், குற்ற உணர்வுகள் எல்லாமே ஒடுங்கி மனத் தெளிவு உண்டாகிறது. பூஜை, பஜனை அனைத்தின் நோக்கமும் இதுதான்.

* நாம் எல்லோரும் இறைவனின் அம்சம் என்றால், நான் இறைவனை வழிபடுவது என்பது நானே என்னை வழிபடுவதுபோல் ஆகாதா?

நாம் இறைவன் தங்கும் இடம் என்றோ, எல்லா படைப்புகளிலும் இறைவன் உள்ளான் என்றோ பூரணமாக உணருவதற்கு பூஜை அவசியம். கடலில் அலைகள் உருண்டு வருகின்றன. அலை என்பது கடலின் ஒரு பகுதி. ஆனாலும், அதை நாம் கடல் என்று சொல்வதில்லை. இல்லையே. அலை தன்னைக் கடல் என்று சொல்லிக் கொண்டாலும் தவறு இல்லை. தன் மனம், உடல், சித்தம் அனைத்திலும் இறைவனை உணர்ந்துவிட்டால், சூட்சும சரீரத்தில் இறைவன் உள்ளதாகக் கருதினால், அது அலையானது தன்னைக் கடல் என்று சொல்வதுபோலத்தான். அலை கடலில் இருந்து வருகிறது. திரும்பவும் கடலுக்குள்ளேயே சென்று மறைகிறது. அதேபோல் இறைவனில் இருந்து வந்த நாம் திரும்பவும் இறைவனிடமே சென்று சேரவேண்டும். இந்த விழிப்பு உணர்வு பெற்ற மகான்கள்கூட தாங்கள் மீண்டும் இறைவனை அடைய பூஜையில் ஈடுபடுவார்கள்; அந்த நிலையை அடைய முயற்சிப்பார்கள். அதைப்போல நாமும் பூஜையைத் துணையாகக் கொண்டு இறைவனை உணரும் சக்தியை, நம்மை இறைவனில் ஒரு பகுதியாக உணரும் சக்தியைத் தருமாறு பிரார்த்திக்கவேண்டும்.

* மகான்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே... அப்படி இருக்க அவர்களை இறைவனுக்குச் சமமாக நினைத்து வணங்கலாமா?

தாராளமாக வணங்கலாம். மகான்களை மட்டுமில்லை... வயதில் மூத்தோரையும் நம்முடைய பெற்றோரையும் கடவுளாக பாவித்து வழிபடுவது நமது வழக்கத்தில் உள்ளதுதான். தான் என்கிற அகந்தையை அகற்றியவர் அனைவருமே ஞானிகள்தான். அவர்களை வணங்கலாம்.

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?

* பக்தர்களைத்தான் இறைவன் அதிகமாகச் சோதிப் பதாகச் சொல்கிறார்கள். தன்னை நம்பிச் சரணடைந்த பக்தனை இறைவன் இப்படிச் சோதிப்பது சரிதானா?

சோதனை என்பது அவரவருடைய பூர்வஜென்ம கர்மாவைப் பொறுத்தும், அவரவர்களின் பாவபுண்ணியங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு ஏற்படுகிறது. ஆண்டவன் சோதிக்கிறான் என்றால், கர்மாவாகவும், கர்ம நியதியாகவும், கர்மபலனைக் கொடுப்பவனாகவும் இருக்கும் ஈஸ்வரன்தான் பக்தனைச் சோதிக்கின்றான் என்று பொருள். நம்முடைய பக்தியினால், அந்தக் கர்மாவின் வினைப்பயனைச் சற்று குறைக்கலாம். துன்பங்கள் அதிகமாக இருக்கும்போது அப்போது பகவான் நம்மை சோதிப்பதுபோல் தோன்றும். நாம் எதிர்நீச்சல் போடும்போது பலனே இல்லாததுபோல் தெரியும். ஆனால், நீச்சலுக்குப் பலன் இருப்பதால்தான் ஒருவன் இருக்கிற இடத்திலாவது நிலையாக இருக்கிறான்.

* சந்நியாசிகள் ஏன் காவி ஆடை உடுத்தவேண்டும்? வெள்ளை ஆடை உடுத்தி துறவியாக இருக்கமுடியாதா?

சந்நியாசி என்று சொல்லும் போது, அதற்கான சில நியமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, காவி உடுத்துவது. காவி அக்னியின் நிறம். அக்னி பிரகாசமானது.  அந்தப் பிரகாசம் ஞானத்தைக் குறிக்கிறது. அக்னியின் பிரகாசம் இருளைப் போக்குவதுபோல், ஞானமும் அறியாமை என்னும் இருளைப் போக்குகிறது. அதனால் ஞானத்தைக் குறிக்கும் காவி ஆடையை சந்நியாசிகள் உடுத்துகிறார்கள்.

* புதிதாக சந்நியாசம் மேற் கொள்ள வருபவர்களுக்கு சந்நியாசம் வழங்குவீர்களா? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்?

எந்தவித புருஷார்த்தங்களிலும் அதாவது காமங்களிலும் இச்சை இல்லாதபோது, ஆன்மிகத்தில் முழுமனதோடு ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் ஒருவருக்கு ஏற்படும். அப்போது அதற்கென ஒரு வாழ்க்கை முறையை அவர் ஏற்படுத்திக் கொள்வது உண்டு. ஆக, எல்லாவற்றையும் துறந்து, இறைவனைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வாழ்வதற்கு ஏற்ற வாழ்க்கை முறைதான் சந்நியாசம். இது மோட்சம் என்னும் பரமபுருஷார்த்தத்தை அடையும் வழி. அதை கிருஹஸ்தாசிரம நிலையில் இருந்தபடியும் அடையலாம். ஏனெனில், ஆன்மிகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதையே பிரதான நோக்கமாக வைத்து, மனப்பக்குவத்தோடு வாழ்வதுதான் சந்நியாசம். அதற்காக எல்லோரும் என்னிடம் வந்து சந்நியாசம் வேண்டும் என்றால், அதை என்னால் வழங்க முடியாது.

தொகுப்பு: எஸ்.கே.

படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?