Published:Updated:

கலகல கடைசி பக்கம்

சந்நியாசியின் இலக்கணம்!வீயெஸ்வி , ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

சந்நியாசியின் இலக்கணம்!வீயெஸ்வி , ஓவியம்: வேலன்

Published:Updated:

முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து முக்கால் பங்குடன் தான் சுயமாக சம்பாதித்த சொத்து கால் பங்கும் சேர்ந்து கொள்ள, தலை கால் புரியாமல் ஆட்டம் போட்டும் இன்னும் களைத்துப் போகவில்லை என்னுடைய பணக்கார நண்பன். 

அரண்மனை மாதிரியான வீடு. எந்நேரமும் ஏசி ஓடிக் கொண்டிருக்கும்; அணைக்கப்படாமல் எரியும் விளக்குகள் பிரகாசத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும். ஆள் உயர உயர் ஜாதி நாய்கள் புல்வெளியில் நடைபழகிக் கொண்டிருக்கும். கப்பல் மாதிரியான வெளிநாட்டுக் கார் வகைகள் அணி வகுத்து நிற்கும். காவலுக்கு நான்கு பேர் நான்கு மூலைகளில் நின்று கொண்டிருப்பார்கள். 'என்ன புண்ணியம் செய்தேனோ யான் இவனை நண்பனாகப் பெற..’ என்று நினைத்துக் கொண்டே நண்பனின் அரண்மனைக்குள் ஒரு மாலை வேளையில் நுழைந்தேன்.

'எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி..’ என்று டி.எம்.எஸ்.குரல் காற்றில் தவழ்ந்து வந்தது.

ஒவ்வொரு அறையாக நுழைந்து, வெளியே வந்து... நண்பனைக் கண்டுபிடிப்பதற்குள் எனக்குக் கால்கள் வலித்தன. கடைசியில் படுக்கை அறையில் தன்னந்தனியாக கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த நண்பனைக் கண்டேன். சட்டைக்கு வெளியே தடிமனான தங்கச் சங்கிலி. வலது கை மணிக்கட்டில் பிரேஸ்லெட். அநேகமாக எல்லா விரல்களிலுமே தங்க, வைர மோதிரங்கள்.

என்னைப் பார்த்ததும் சோகம் கலந்த புன்னகையைச் சிதற விட்டான்.

கலகல கடைசி பக்கம்

''ஏன் ஒரு மாதிரியா இருக்கே? எதுக்கு என்னை அவசரமா வரச் சொல்லி வாட்ஸ் அப்ல தகவல் அனுப்பினே?' என்றேன்.

''வர வர வாழ்க்கை மேலேயே எனக்கு வெறுப்பு வந்துடுச்சு... எதுவுமே பிடிக்கலே... யாரையுமே ரசிக்கலே...'' என்றான்.

''அதனால்..?''

'’பேசாம சந்நியாசம் வாங்கிட்டு எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போயிடலாம்னு தோணுது... யோசிச்சுப் பார்த்தா அதுவும் முடியாதுன்னு புரியுது...'

'ஏன்?'

'இந்த நாலாயிரம் சதுர அடி பங்களா... பகட்டான வாழ்க்கை முறை... லௌகீக சுகங்கள்... இப்படி எல்லாத்தையும் துறந்துட்டு போக மனசு இடம் கொடுக்கலே... இப்போ நான் அனுபவிக்கற அத்தனை சௌகரியங்களோட சந்நியாசியா வாழ முடியுமா?' என்று அப்பாவியாகக் கேட்டான் நண்பன்.

முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் எழுதியிருப்பதை அவனுக்கு மேற்கோள் காட்டினேன். சந்நியாசி எப்போதும் எளிமையான ஆடைகளை உடுத்தணும். சாப்பாட்டுல ருசியைப் பற்றி கவலைப்படக் கூடாது. தேவையில்லாமல் பேசக் கூடாது. தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். மணிக்கணக்கில் தூங்கக் கூடாது. மற்றவர்களின் குறைபாடுகளை பெரிதுபடுத்தக் கூடாது. வரவு செலவு பற்றியும் கவலை கொள்ளக் கூடாது. அடக்கமாக இருத்தல் அவசியம். ஒரே இடத்தில் தங்கியிருக்கக் கூடாது. இவை எல்லாம் உனக்கு சாத்தியமா?' என்று கேட்டேன் நண்பனிடம்.

மௌன சாமியாராகி விட்டான் அவன்  அடுத்த சில நிமிடங்களுக்கு!