Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

இந்த வருடம் (2017) டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, `ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். அதன்படி, அவர் சொன்ன மீன ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சிப் பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

மீன ராசி அன்பர்களே! உங்களுக்கு சனி பகவான் லாபத்துக்கும் விரயத்துக்கும் அதிபதியாக இருக்கிறார். அதாவது நல்லதுக்கும் கெட்டதுக்கும் உரியவர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக 9-ம் இடத்தில் இருந்தார். 9-ம் இடம் என்பது, தந்தையாருக்கு உரிய இடம். இதனால், தந்தையாருக்குச் சின்னச் சின்ன உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தியிருப்பார். தந்தை வழி பூர்வீகச் சொத்தைப் பெறுவதில்கூட சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். 

சனி பகவான் இப்போது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்துக்கு வருகிறார். மூன்று ஆண்டு காலம் இந்த இடத்தில் இருந்து நல்ல நல்ல பலன்களைத் தரப்போகிறார். சனி பகவானைப் பொறுத்தவரை 10-ம் இடம் என்பது முக்கியமான இடம். புதிதாகத் தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவர்கள் இப்போது தொழில் தொடங்கலாம். ஆனால், திடுதிப்பென அகலக்கால் வைக்காமல், சிறிய அளவில் முதலீடுகள் செய்யலாம். வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும்.  

10-ம் இடம் உத்தியோக ஸ்தானம் என்பதால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில்  உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைக் கொஞ்சம் கவனமாகச் செய்யுங்கள். சக ஊழியர்களால் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நேர் மூத்த அதிகாரியைவிட, மேல் மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். ஒரு சிலருக்கு வேலை மாற்றம், இட மாற்றம் ஆகியவை நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது. வீடு, மனை, சொத்து வாங்குவீர்கள்.

சனிபகவான் 7-ம் பார்வையாக உங்களின் 4-ம் இடத்தைப் பார்ப்பதால்,  தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.  மாணவ, மாணவிகள் படிப்பில் நல்லவிதமாக கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. கடைசி நேரத்தில், படித்துக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, வெளியில் சுற்றுவது இவற்றையெல்லாம் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.  கல்யாணம் ஆகாமலிருந்த கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். 

அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைக்கும். விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் வருமானம் பெருகும். வயலில் புழு, பூச்சிகளின் தொல்லைகள் குறையும். தண்ணீர் வசதிக்கு எந்தக் குறையும் இருக்காது. மகசூலும் அதிகரிக்கும்.
மீன ராசிக்காரர்கள், திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். 

(மீன ராசிக்காரர்கள், சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறிய இந்த வீடியோ லிங்க்கை கிளிக் செய்யவும்).

திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது லட்சுமி நாராயணன் கோயில். கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்காலுக்கும் இடையில்  அமைந்துள்ளதால், இந்த ஊருக்கு, `இடையாற்றுமங்கலம்’ என்று பெயர். 
500 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கோயில். கோயிலுக்குள் நுழைந்து சிறப்பு மண்டபத்தைக் கடந்ததும்,  மகா மண்டபத்தில் நின்ற நிலையில் பெருமாளை வணங்கி நிற்கும் கருடாழ்வார் தரிசனம் நம்மை வியக்கவைக்கும்.  

மண்டபத்தின் வலதுபுறம் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. சனிதோஷ நிவர்த்திக்கு இங்குள்ள ஆஞ்சநேயரை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர். 

இந்தக் கோயிலில் லட்சுமி நாராயணன், தாயாரை இடப்பக்க மடியில் அமர்த்தி சேவை சாதிக்கிறார். மணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்றுபடவும், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
 

அடுத்த கட்டுரைக்கு