Published:Updated:

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 2

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 2
காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 2

காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 2

து ஒரு ஞாயிற்றுக்கிழமை... மென்மையான குளிர் கலந்த காற்று வீசும் அதிகாலை. சென்னையில் இருந்து ஞானமலைக்கு எங்கள் பயணம் தொடங்கியது. அங்கே தேனிலவு கொண்டாடிய தெய்வத் தம்பதியைப் பற்றிப் பேச்சு ஆரம்பித்தது. 'ஞானம் அருளும் ஞானமலையில் தேனிலவு' என்கிற செய்தியே எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருந்தது. ஆனால், அங்கே சென்ற பிறகுதான், நமக்கு ஓர் உண்மை விளங்கியது. அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், பயணத்தின்போது நாங்கள் கண்ட, கேட்ட சில சிலிர்ப்பூட்டும் விஷயங்களைப் பார்த்துவிடுவோமே...

பூந்தமல்லியை நெருங்கியபோது நம்முடன் வந்த நண்பர் ஒருவர் சொன்னார். ``இந்த ஊரில்தான் ஶ்ரீராமாநுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகள் அவதரித்தார். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே, தினமும் மலர்களைப் பறித்து, அவற்றால் மாலை தொடுத்து, அதை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் செல்வார். அங்கேயிருக்கும் வரதராஜ பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யமும், ஆலவட்ட (விசிறி) கைங்கர்யமும் செய்வார். பகவான் கைங்கர்யம் செய்வதற்காக தினமும் யாத்திரை மேற்கொண்டார்.

வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள், அவரால் காஞ்சிக்குப் போக இயலவில்லை. `ஐயோ... பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய முடியாமல் போய்விட்டதே... அவரை இன்றைக்கு தரிசிக்கும் பேறு கிடைக்காமல் போய்விட்டதே...’ என்று உள்ளம் நொந்து வருந்தினார். பக்தரின் வேதனையைப் பொறுக்க முடியாத பெருமாள் உடனே நேரில் தோன்றி அருளினார். திருக்கச்சி நம்பிகளுக்கு திருவரங்கம், திருப்பதி, காஞ்சி ஆகிய தலங்களில் எப்படிக் காட்சியளிக்கிறாரோ, அதே மூர்த்தங்களாகத் தோன்றி, முக்தியும் அருளினார். அதன் சாட்சியாகத்தான் பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில், `திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராஜ பெருமாள் கோயில்’ இருக்கிறது’’ என்றார் அந்த நண்பர். அந்த சிலிர்ப்பான வரலாற்றைக் கேட்டு, பெருமாளையும் திருக்கச்சி நம்பிகளையும் நினைத்து கண்ணை மூடி வேண்டினோம்.

நண்பர் திருக்கச்சி நம்பிகள் பற்றிய விஷயத்தைச் சொல்லி முடித்த சிறிது நேரத்தில் நாங்கள் ஶ்ரீபெரும்புதூரை அடைந்தோம். இந்தத் தலத்தில்தான் `மதப்புரட்சி செய்த மகான்’ என்ற சிறப்புக்குரிய ஶ்ரீராமாநுஜர் அவதரித்தார் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். உடனே எங்கள் பேச்சு ஸ்ரீராமாநுஜரை நோக்கித் திரும்பியது.

இப்படி பல சத்விஷயங்களைப் பேசியபடி சென்றதால், நேரம் போனதே தெரியவில்லை. காவேரிப்பாக்கத்தை நெருங்கிவிட்டோம். காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சற்றுத் தொலைவில் இடப்புறமாக ஒரு சாலை பிரிந்து சென்றது. ``அந்தப் பாதை சோளிங்கருக்குச் செல்லும் பாதை; அந்தப் பாதையில்தான் நாம் செல்லப் போகிறோம்’’ என்று கூறிய நண்பர், நமக்கு வலப்புறத்தில் பிரிந்த சாலையைக் காட்டி, ``அது திருப்பாற்கடலுக்குச் செல்லும் வழி’’ என்று கூறினார். அந்தத் தலத்தில் சைவ - வைஷ்ணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில், ஆவுடையார்மீது பெருமாள் நிற்கும் கோலத்தில் காட்சி தருவதாகவும், அந்த மூர்த்தியைப் பற்றி காஞ்சிப் பெரியவர் `தெய்வத்தின் குரல்’ நூலில் போற்றி இருப்பதையும் கூறினார். அதைக் கேட்டதும், மனிதர்களிடையே எந்தப் பேதமும் இருக்கக் கூடாது என்பதற்காக இறைவன்தான் எத்தனை எத்தனை லீலைகளை நிகழ்த்தவேண்டியிருக்கிறது?! என்று நமக்குத் தோன்றியது.

சோளிங்கருக்குச் செல்லும் பாதையில் திரும்பினோம்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி இருந்தது. அதன் காரணமாகவே எங்கும் பசுமை தன் செழுமையையெல்லாம் பரப்பிக் காட்டிக்கொண்டிருந்தது. நிரம்பி வழிந்த ஏரியின் நீர், மதகுகள் வழியே வழிந்து கால்வாயில் சென்றுகொண்டிருந்த காட்சியைப் பார்த்தபடியே சென்றோம். `வேலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி’ என்ற பெருமைமிக்கது காவேரிப்பாக்கம் ஏரி. காற்றின் தாளத்துக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்த ஏரியின் நீர்ச் சத்தத்தைக் கேட்டபடி, மங்கலம் என்ற ஊரைக் கடந்தோம். அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருந்த கோவிந்தச்சேரி என்ற சிறிய கிராமத்தை அடைந்தோம். ஊரின் வாசலிலேயே, `ஞானமலை’ என்ற நுழைவுத் தோரண வளைவு எங்களை வரவேற்றது.

அதைக் கடந்து சுமார் 1 கி.மீ தூரம் சென்றதும், ஞானமலை அடிவாரம் தெரிந்தது. மலையில் இருக்கும் ஞானபண்டிதனின் ஆலயமும் தென்பட்டது. ஞானம் என்பது மிக உயர்வான நிலையல்லவா? எனவேதான், நமக்கெல்லாம் ஞானத்தை உபதேசிக்கும் முருகப் பெருமானின் ஆலயங்கள் எல்லாம் மிகவும் உயர்ந்த மலைப்பகுதிகளிலேயே காணப்படுகின்றன போலும்.

வள்ளிமலையில் வள்ளியை மணந்துகொண்ட முருகப் பெருமான், தணிகைமலைக்குத் திரும்பும் வழியில், இந்த மலையின் அழகைக் கண்டு, இங்கே இளைப்பாறத் தங்கிவிட்டாராம். நமக்கெல்லாம் ஞானம் அருள்வதற்காக ஞானமலையில் அமர்ந்த முருகப் பெருமானின் வாழ்க்கையை, நம்முடைய வாழ்க்கையைப்போலவே பாவித்து, முருகப் பெருமான் இளைப்பாறிய இடம் என்றும், தேனிலவு கண்ட இடம் என்றும் கூறுகிறோம் போலும். நம்மைப்போலவே இறைவனையும் பாவிப்பதுதானே உயர்ந்த பக்தி?! எனவே, பக்தர்கள் அப்படிக் குறிப்பிடுவதும் சரிதான் என்றே தோன்றியது.

நாம் அங்கே வரப்போகிறோம் என்பதை முன்னதாகவே தெரிவித்திருந்ததால், மலையடிவாரத்தில் இருந்த ஞானாச்ரமம் அறக்கட்டளை அலுவலகத்தில், அறக்கட்டளை நிர்வாகிகளும், ஊர் பெரியவர்களும் கூடியிருந்தார்கள். நம்மை வரவேற்றார்கள்.

ஞானமலையின் சிறப்புகள் பற்றி, அங்கிருந்த அன்பர்கள் பகிர்ந்துகொண்ட சிலிர்ப்பும் நெகிழ்ச்சியுமான அனுபவங்கள் பற்றி...

(பயணிப்போம்...)

படங்கள்:  வேலூர் வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு