Published:Updated:

திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன? #Tiruvannamalai

திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன?  #Tiruvannamalai
திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன? #Tiruvannamalai

ளி பொதுவானது. இன்னார் இனியார் அறியாதது. இருள் என்ற அச்சம் விலக்குவது. மனிதன் கண்ட முதல் அதிசயமே ஒளிதான். அதனாலேயே ஒளியைத் தந்த எல்லாவற்றையும் அவன் வணங்கினான். புற இருளைப் போக்குவது ஒளி. அக இருளைப் போக்குவது ஆன்மிகம். இதனாலேயே ஒளியைப் போற்றுவது ஆன்மிகத்தின் பணியாக இருக்கிறது. அகல் விளக்கோ, மெழுகுவத்தியோ, சந்திரப்பிறையோ, சூரிய பகவானோ... எப்படியோ ஒருவகையில் மனித இனம் ஒளியை வணங்கியே வருகிறது.

ஒளியை நீக்கிய உலகம் சூனியமானது. ஒளியே உலகத்தின் சலனத்துக்குக் காரணமாக விளங்குகிறது. இயக்கத்தின் ஆதாரமாக ஒளி இருந்து வருகிறது. இதனால்தான் இறைவன் `ஜோதிமயமானவன்’ என்று வணங்கப்படுகிறான். ஒளியேற்றி வணங்குவது, ஒளியாகவே வணங்குவது இரண்டுமே இந்தியப் பாரம்பர்யத்தின் வழிபாட்டு முறையாக இருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒளியைத் தரும் நெருப்பே முதன்மையாகக் கருதப்படுகிறது. நெருப்பை எதுவுமே அசுத்தமாக்க முடியாது. தானும் சுத்தமாகி, தன்னைப் பற்றும் எதையும் சுத்தமாக்குவதும் நெருப்புதான். நெருப்பே சிவமானது. நெருப்பு சிவப்பான வண்ணம் கொண்டது என்பதால், சிவப்பே `செம்மை’ என்று அழைக்கப்பட்டது. செம்மையின் வடமொழிப் பிரயோகமே சிவம் அல்லது சிவன். பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.

ஆறு ஆதார சக்திகளில் திருவண்ணாமலை மணிப்பூரகத் தலமாக இருக்கிறது. மணிப்பூரகம், வயிற்றுக்குச் சற்று மேலே இருந்து நெருப்புத் தத்துவத்தை சொல்லும் ஓர் ஆதார சக்தி. வயிற்றில் எரிந்துகொண்டிருக்கும் ஜடராக்கினியின் வடிவமே மணிப்பூரகம். நாம் உண்ணும் எல்லாவற்றையும் எரித்து, சக்தி வடிவமாக மாற்றும் இந்த மணிப்பூரகத்தைப்போலவே திருவண்ணாமலையும் சூட்சுமமாக பாவங்களை எரித்து, ஆன்மசக்தியை எழுப்பும் அற்புதத் தலமாக விளங்கி வருகிறது. நெருப்பாக எழுந்த சிவனை நினைவுபடுத்தும்விதமாகவே இன்று தீபத்திருவிழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்’ என்று பெயர் பெற்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும்விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவிருக்கிறது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா கொண்டாட்ட வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

பரணி தீபம் கோயிலில் ஏற்றப்படும் ஜீவாத்மா அம்சம் என்றால், மகாதீபம் மலைமீது ஏற்றப்படும் பரமாத்மா அம்சம். வலை வீசி மீன் பிடித்த சிவனின் திருவிளையாடலைக் குறிக்கும்விதமாகவே இன்றும் மலை மீது தீபத்தை ஏற்றிவைக்கும் பணியை பர்வதராஜ குலத்தவரான மீனவர்களே செய்து வருகிறார்கள். 11 நாள்கள் தொடர்ந்து எரியும்விதமாக 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் காடாத்துணி திரியைக்கொண்டு இந்த மகா தீபம் மலையின் மீது ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவின்போது மட்டுமே பொதுமக்கள் இந்த மலையின் மீது ஏறி தீபத்தை தரிசிக்கிறார்கள். சுமார் 20 லட்சம் மக்கள் கூடி இன்றைய தீபத்திருவிழாவை தரிசிக்க உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. நகரெங்கும் வாணவேடிக்கையும், தீபங்களின் அணிவகுப்பும், `அரோகரா’ கோஷமும் நிறைந்திருக்க, இன்றைய இரவு திருவண்ணாமலை நகரம் குபேரப்பட்டினமாக ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை. அன்பர்கள் எல்லோரும் இந்தத் தீபத்திருநாளில் ஈசனை தரிசித்து, மகாஜோதியை வணங்கி, கிரிவலம் செய்து சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகிறோம்.