Published:Updated:

புண்ணிய பூமி! - 04

புண்ணிய பூமி!
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய பூமி! ( புண்ணிய பூமி! )

புண்ணிய பூமி !காஷ்யபன், ஓவியம்: ஜெ.பி.

கிலத்தின்  நலம்  காக்கும்  பொருட்டு அந்தணர் கள் வளர்க்கும் யாகங்களில் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளுள் எவரேனும் ஒருவருக்கு அளிப்பது என்று ஒரு சமயம் ரிஷிகள் பலர் ஒன்று கூடி முடிவு செய்தனர். 

மும்மூர்த்திகளுள் சாந்தகுணம் கொண்டவர் எவரோ அவருக்கே அவிர்பாகத்தை அளிப்பது என்றும் அவர்கள் தீர்மானித்தனர். மும்மூர்த்திகளுள் சாந்த குணமுடையவர்  யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிருகு பிரம்மலோகம் சென்றார். பிரம்மன் அவரை அவமதித்தான். அங்கிருந்து கயிலாயம் சென்றார். மனையாளுடன் தனித்து இருந்த மகேசுவர னும் மகரிஷியை மதிக்காமல் ஏசினார்.

வாடிப் போன பிருகு மகரிஷி வைகுண் டம் சென்றார். அரங்கனோ ஆதிசேஷன் மீது படுத்துப் பொய் உறக்கம் பூண்டிருந் தார். திருமகள் அவரின் கால் பற்றி நீவிக் கொண்டிருந்தாள். பிருகு முனி சாரங்கனைச் சமீபித்தார். உன்மத்தம் பிடித்தவர் போல் ஒப்பிலியப்பனின் மார்பில் உதைத்தார். திருமகள் திகைத்துப் போனாள். அரங்கன் அலர்மலர்ந்தார். படுத்திருந்தவர் எழுந்து பிருகு முனிவரின் பாதம் பற்றினார்.  

புண்ணிய பூமி! - 04

'மகரிஷி, தங்களின் பாதம் பட்டு என் உடல் இன்று புனிதமானது. ஆனால் மிருதுவான உங்கள் கால், கடினமான என் உடலைத் தாக்கியதால் உங்களுக்கு எவ்வளவு வலி உண்டானதோ! நான் உங்கள் காலைப் பிடித்துவிடுகிறேன்' என்று கூறி அவரது காலை இதமாகப் பிடித்துவிட்டார். பிருகு ஆனந்தப்பட்டார். மாலனை உதைத்ததற்காக மன்னிப்பு கோரினார். பின்னர், 'மும்மூர்த்திகளில் சாந்தமூர்த்தியாகிய உமக்கே இனி நாங்கள் வளர்க்கும் யாகங்களின் அவிர்பாகம் வந்தடையும்' என்று கூறித் திரும்பினார்.

முனிவர் சென்ற பின் திருமகள் திருமாலி டம், 'பிருகு முனிவர் உங்கள் மார்பில் எப்படி உதைக்கலாம்? எந்நேரமும் உங்கள் மார்பில் உறையும் என்னையுமல்லவா உதைத்தது போலாயிற்று? அவரை நீங்கள் தண்டித்தேயாக வேண்டும்' என்று கோபமாக முறையிட, திருமால் திருமகளைச் சமாதானப் படுத்த முயன்றார். 'எட்டி உதைத்தவருக்கு பதிலடி கொடுக்காமல் உபசாரமா’ என மகாலட்சுமி மனம் வெறுத்து, வைகுண்டத்தை விட்டு பூவுலகு வந்தாள். பஞ்சகங்கை நதி பாயும் ஓரிடத்தில் நிலை கொண்டாள்.

புண்ணிய பூமி! - 04

அவள் பூமிக்கு வந்து சேர்ந்தது சரியான யுகசந்தி காலம். யுகத்துக்கு ஒரு முறை நேரும் பிரளயம் அப்போது ஏற்பட்டது. ஞாலத்தின் மற்ற பகுதிகளை எல்லாம் பொங்குமாங்கடல் கொண்டு விட, தான் வந்து தங்கிய இடத்தை அன்னை மகாலட்சுமி தன் கரங்களின் வீரத்தாலும், கருணை நிறை அருளினா லும், நீரில் மூழ்காமல் மேலே உயர்த்தி நிறுத்திக் காத்தருளினாள். அதன் பொருட்டு அந்தப் பகுதிக்குக் கரவீர் என்ற காரணப்பெயர் ஏற்பட்டது. கர என்றால் கை. வீர் என்றால் வீரம். அதன் பின்னர் அன்னை கடுந்தவத்தில் ஆழ்ந்தாள். காலம் காற்றாய்ப் பறந்தது.

கோலாசுரன் என்னும் ஓர் அசுரன் இந்த இடத்தில் கோலோச்சத் தொடங்கினான். எளியவர் அனைவருக்கும் எண்ணிலடங்கா இன்னல்கள் விளைவித்தான். அல்லலுற் றவர்கள் மகாலட்சுமியை  வேண்டினர். அன்னை அலர் மலர்ந்தாள். கோலாசுரனின் கொட்டங்கள் பற்றி அறிந்தாள். மாலனிடம் திடீர் ஊடல் கொண்டதற்கும், தனிமை நாடி இப்பிரதேசத்துக்கு வந்து, தான் தவம் செய்ய ஆரம்பித்ததற்கும் காரணம் என்ன என்று அன்னைக்கு இப்போது புரிந்தது.

போருக்குப் புறப்பட்டாள். பிரளயத்தையே எதிர்த்த வலுவான கைகளுடனும், அந்தக் கைகளில் ஒன்றில் கதாயுதமும் ஏந்தி, சிங்கத்தின் மீது ஆரோகணித்து வந்து அசுரனை எதிர்த்தாள். அவனை வதைத்தாள். அசுரனுடன் அன்னை போரிட்ட நிலம், சேறும் சகதியுமாக ஒரு குளம் போல் தாழ்ந்துவிட்டது. அந்தப் பள்ளத்திலேயே அன்னை சந்நிதி கொண்டாள். ஒரு குளத்தை விரும்பி அன்னை கோயில் கொண்டதால் அந்த இடம் கரவீர் என்ற பெயரில் இருந்து மாறி குளபுரம் என்று குறிப்பிடப்பட்டது. பின்னாட் களில் குளபுரம், கொல்லாபுரமாகி இன்றைக்குக் கோல்ஹாபூர் என்று வழங்கப்படுகிறது.

பிரம்மஹத்தி (அந்தணனை மாய்ப்பது) ஸ்த்ரீ ஹத்யா (மங்கையை மாய்ப்பது), கோஹத்யா (பசு வதம்) ஆகிய பெரும் பாவங்கள் செய்தவர்கள் கூட கரவீர் வந்து அன்னை மகாலட்சுமியின் அருளால் தமது கர்மங்களைத் தொலைக்கலாம் என்பது இத்தலத்தின் இன்றியமையாத அருள் நலன் என்பதால், காசியைவிடவும் கரவீர் உயர்ந்தது என்று கூறப்படுகிறது.

புண்ணிய பூமி! - 04

ஒரு முறை அகத்தியர், ஒரு நிர்பந்தம் காரண மாகக் காசியை விட்டு வெளியேற நேர்ந்தது. அவ்வாறு வெளியேறிய சிறிது நேரத்திலேயே காசிநாதனைப் பிரிய நேர்ந்த துக்கத்தைத் தாள மாட்டாமல் அவர் ஓரிடத்தில் மயங்கி விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்து எழுந்தவர் காசிக்குத் திரும்பச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். காசியைப் போன்ற உன்னதமான தலம் ஒன்றைத் தனக்குக் காட்டியருளுமாறு கடவுளை வேண்டினார். அவர் முன் தோன்றிய கடவுள், காசியையொத்த கரவீரநகரி கோல்ஹாப்பூர் என்ற ஓர் இடம் இருப்பதாகக் குறிப்பிட்டு, அங்கே சென்று குடியேறுமாறு கூறி மறைந்தார். இதன் காரண மாகவே மகாலட்சுமி எங்கெல்லாம் வாழ்கிறாளோ அந்த இடமெல்லாம் காசியை விடச் சிறந்த தலம் என்ற கூற்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் பஞ்சகங்கை நதி பாய்கிறது. படித்துறையில் காசியில் இருப்பது போன்றே அத்தனை கடவுளருக்கும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

கல்வெட்டுச் செய்திகள் கோலாப்பூரும், மகா லட்சுமி கோயிலும் மிகவும் தொன்மையானவை என்பதைத் தெரிவிக்கின்றன. கி.மு. 109ம்ஆண்டில் கொங்கணத்திலிருந்து கோல்ஹாபூருக்கு வந்த கர்ணதேவ் என்ற மன்னன், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, மிகச் சிறிய கோயிலாக இருந்த அன்னையின் ஆலயத்தைக் கண்டான். பக்தி மேலீட்டால் காடுகளை எல்லாம் அழித்து ஆலயத்தை அனைவரும் காணும்படி வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தான்.

கி.பி. 9ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்கள் அன்னையின் ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டினார்கள். அடுத்து வந்த அரசர்கள் வைரவைடூரியங்களாலும், பொன் ஆபரணங்களாலும் அன்னையை அலங்கரித்து அழகு பார்த்தனர். பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் அமைத்தனர். நாளுக்கு நாள் ஆலயத்தின் பொலிவு கூடிக்கொண்டே இருக்கிறது.

புண்ணிய பூமி! - 04

ஆலயத்துக்கு நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள். மகாத்வாரம் என்னும் பிரதான மேற்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால் அணி வகுத்து நிற்கும் அழகான தீபஸ்தம்பங்களைக் காணலாம்.  

அதை அடுத்து வழவழப்பான, சதுரமான கருந் தூண்கள் தாங்கும் கருட மண்டபம். இங்கு கருவறையை நோக்கியவண்ணம் கருடர் எழுந்தருளியிருக்கிறார். கருடரைக் கடந்தால் இன்னுமொரு கல் மண்டபத்தில் கணபதி அன்னையை நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கி முன்னேறினால் கருவறை. அங்கு யுகம் யுகமாய் அருள் பாலிக்கும் அன்னை மகாலட்சுமி.

ஒரு சதுர பீடத்தின் மேல் நின்ற திருக்கோலத்தில் அன்னை அருள்கிறாள். இந்த அன்னையின் அழகுச் சிற்பம் அரிதினும் அரிதான கரும் ரத்தினக் கல்லொன்றில் வடிக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் அன்னைக்கு ஆதிசேஷன் குடை பிடித்து நிழல் தருகிறான். நான்கு திருக்கரங்கள். ஒன்றில் கதை தாங்கி அதனைத் தரையில் ஊன்றி இருக்கிறாள் அன்னை. இன்னொரு திருக்கரத்தில் மாதுளங்கனி. மற்றுமொரு கரம் கேடயம் தாங்குகிறது. பிறிதொரு கரத்தில் அமுதசுரபி!

அகங்குளிர அன்னையைத் தரிசித்து விட்டு வலம் வந்தால், மகாலட்சுமித்தாயாரின் வலப் புறத்தில் அன்னை மாகாளியும், இடப்புறத்தில் அன்னை சரஸ்வதியும் தனித் தனிச் சந்நிதிகளில் தரிசனம் அளிக்கிறார்கள்.

கருவறை கோபுரம் மகாராஷ்டிர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கடாசலபதியும், காத்யாயினியும், கௌரிசங்கரும் கோபுர கோஷ்டங்களில் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

நவகிரகங்கள், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், பாண்டுரங்கன், பவானி, ராமர்சீதாலட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் பரிவார தேவதைகளாக தரிசனம் தரும் ஆலயத்தின் பிராகாரத்தில், பாதாளத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பூமாதேவியை வராகமூர்த்தி மீட்டு வரும் நிலையில் ஓர் அரிதான சிற்பம் அமைந்திருக்கிறது.

கருவறைக் கோபுரத்தின் சுற்றுச் சுவரில் நேர்த்தியான நடன மாதர்களின் சிற்பங்கள் கண்களைக் கவர்கின்றன.

ஒவ்வொரு வெள்ளியன்றும், பௌர்ணமி தினத்தன்றும் உற்சவ அன்னை ஆலயப் பிராகாரத் தில் திரு உலா வருகிறாள். ஆண்டுக்காண்டு கொண்டாடப்படும் கோயிலின் கோலாகலத் திருவிழா நவராத்திரித் திருவிழா.  

அன்னையின் கர்ப்பகிருகத்தில் ஒரு பலகணி இருக்கிறது. இதன் வழியாக, அந்திச் சூரியன் தன் பொற்கதிர்களால் ஆண்டுக்கு இரண்டு முறை அன்னையைத் தரிசித்துவிட்டு அகமகிழ்ந்து அகன்று போகிறான்.

மார்ச்சிலும் செப்டம்பரிலும் நிகழும் இந்த அரிய நிகழ்வின்போது, அன்னை எந்த அலங்காரங்களும் இன்றி ஆதவன் ஒளியில் அபாரமாகக் காட்சி தருகிறாள். 'கதிர் விழா, கதிர் விழா’ என்று இந்த வைபவத்தைக் காண மக்கள் அலை அலையாய் வந்து அன்னையைத் தரிசித்து ஆனந்தமடைகிறார்கள்.

கோடிக்கணக்கான மக்கள் மீது கருணை செலுத்தி அனைவரையும் ஆசீர்வதித்துக் காத்துக் கொண்டிருக்கும் கோல்ஹாபூர் மகாலட்சுமியை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். அது இம்மைக்கும் நல்லது; ஏனை மறுமைக்கும் உகந்தது.

படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்  : கோலாப்பூர் என்னும் கொல்லாபுரம்

தலம் அமைந்திருக்கும் மாநிலம் : மஹாராஷ்டிரா

அன்னையின் திருநாமம் : மகாலக்ஷ்மி

எப்படிப் போவது?  : சென்னையில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் பயணித்து ஷோலாப்பூரில் இறங்கி அங்கிருந்து கோலாப்பூருக்குப் பேருந்தில் செல்லலாம். மும்பை, பெங்களூரில் இருந்து நேரடியாக ரயில் வசதி உள்ளது.

எங்கே தங்குவது? : கோலாப்பூரில் குறைந்த பொருட் செலவில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.

தரிசன நேரம் : காலை 5.00 முதல் இரவு 10.30 வரை இடைவிடாத தரிசனம்.