சுந்தரநாராயணனின் வீட்டில் தங்கியிருந்த சித்ரா ராமமூர்த்தி மறுநாள் அதிகாலையில் எழுந்து தோட்டத்துப் பக்கமாகச் சென்றபோது, அவர் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. அங்கே இரண்டு அழகிய தெய்வத் திருவுருவங்கள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டார் அவர். ஆனாலும், அவர் மனதில் ஒரு குழப்பம். குழப்பத்துக்குக் காரணம், அவர் தரிசித்த தெய்வத் திருவுருவங்களின் முகத்தில் இனம்புரியாத சோகம் இழையோடுவதைப் போன்று இருந்தது. அதேநேரம், அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முந்தின தினம், அவரின் ஆன்மிக வழிகாட்டியான பெண்மணி சொன்ன வார்த்தைகள் அவருடைய நினைவுக்கு வந்து, அவரை சிலிர்க்கச் செய்தன. 

அங்கே அவர் தரிசித்த இரண்டு அழகிய தெய்வத் திருவுருவங்களுக்கு தாங்கள் முதலில் வாங்கி வந்த இரண்டு வஸ்திரங்கள் பொருந்தாது என்பதை உணர்ந்துகொண்டவரின் மனதில், ''நீங்கள் வாங்கி வந்த வஸ்திரங்கள் சிறியதாக உள்ளது. இதைவிடப் பெரிய அளவில் வாங்கிச் செல்லுங்கள்'' என்று தங்களை வழிநடத்தும் பெண்மணி சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன. தங்களைச் சரியாக ஆற்றுப் படுத்தியவரை மானசீகமாக நமஸ்கரித்தார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 4!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கே அவர் தரிசித்தது, அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தந்த பெருமாளையும் தாயாரையும்தான். பெருமாளுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில், அவருடைய நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் பெருமாளையும் தாயாரையும் தரிசித்த பூரிப்பில் திளைத்த சித்ரா, உடனே கணவர் ராமமூர்த்தி தங்கி இருந்த மடத்துக்கு விரைந்து சென்று, தான் பெருமாளையும் தாயாரையும் தரிசித்ததைக் கூறினார். அதைத் தொடர்ந்து, ராமமூர்த்தியும் மற்ற உறவினர்களும் சுந்தரநாராயணன் வீட்டுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்தனர். தாங்கள் எடுத்து வந்த வஸ்திரங் களையும் பட்டாச்சார்யார் ஒருவரைக் கொண்டு பெருமாளுக்கும் தாயாருக்கும் அர்ப்பணித்தனர். பின்னர், தங்கள் குலதெய்வ வழிபாட்டை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்ததுமே, பெருமாளிடம் தங்களை ஆற்றுப்படுத்திய பெண்மணியின் வீட்டுக்கு வந்து, நடந்த விஷயங்களைத் தெரிவித்தனர். மேலும் பெருமாள் மற்றும் தாயாரின் திருமுகத் தோற்றத்தில் காணப்பட்ட சோகம் பற்றிய தன்னுடைய குழப்பத்தையும் தனியாக அவரிடம் தெரிவித்தார் சித்ரா.

அதற்கு அந்தப் பெண்மணி, ''என்னால் ஆவது ஒன்றும் இல்லை. நடப்பது எல்லாமே என்னை ஆட்கொண்ட தாத்தாவின் லீலைகள்தான். அவர்தான் எனக்கு அந்தப் பெருமாளையும் தாயாரையும் கனவில் காட்டினார். அவர்தான் என் மூலமாக அந்தப் பெருமாளைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியவரவேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டார். இனிமேல் அந்தப் பெருமாள் பிரபலம் அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என்று சொன்னவர், தொடர்ந்து... ''முடிந்தால் பெருமாளும் தாயாரும் இருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்'' என்றார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 4!

ஆனால், பெருமாள் மற்றும் தாயாரின் திருமுகத் தோற்றம் பற்றி சித்ரா கேட்டதற்கு எதுவும் சொல்லாமலே மழுப்பிவிட்டார். ஒருவேளை, அதுவும்கூட காலப்போக்கில் வெளிப்படவேண்டிய தேவ ரகசியங்கள்தான் போலும்!

அவர்களின் ஆன்மிக குருவாக அந்தப் பெண்மணி என்று இதுவரை நாம் குறிப்பிட்டு வந்தவரைப் பற்றியும், அவரை ஆட்கொண்ட மகானைப் பற்றியும் நாம் இந்த இடத்தில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் பெண்மணியின் பெயர் பத்மா. எல்லோரும் அவரை பத்மா மாமி என்றே அன்புடன் அழைப்பார்கள். அவரை ஆட்கொண்டு அருளும் மகான், வேறு யாருமல்ல; கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் தம்முடைய பக்தர்களால் போற்றி வணங்கப்பெறும் ராகவேந்திரர்தான். ராகவேந்திரர் பத்மாவை ஆட்கொண்டு அருளியதன் பின்னணியிலும் பூர்வஜென்மத் தொடர்பு உண்டு. அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக, அந்த தெய்வத் திருவுருவங்கள் இருக்கும் வீட்டின் உரிமையாளரான சுந்தரநாராயணனைத் தன்னை வந்து பார்க்கும்படி ராமமூர்த்தியிடம் சொன்னபடி சுந்தரநாராயணன் பத்மா மாமியை வந்து பார்த்தாரா, அவர் சொன்னபடி செய்தாரா என்பதைப் பார்த்துவிடுவோம்.

பத்மா மாமியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்ட ராமமூர்த்தி, நேரே சுந்தரநாராயணன் வீட்டுக்குத்தான் சென்றார். அவரிடம் பத்மா மாமியைப் பற்றியும், அவர் மூலமாக ராகவேந்திரர் பக்தர்களுக்கு அருள்புரிவதைப் பற்றியும் சொல்லி, அவரைப் பார்க்க வரும்படி அழைத்தார். ஆனால், சுந்தரநாராயணன்தான் கடவுளையே நம்பாதவர் ஆயிற்றே! அவர் ராமமூர்த்தியின் அழைப்பை ஏற்கவில்லை. விடாக்கண்டனாக ராமமூர்த்தியும் விடுவதாக இல்லை. ''உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர் சொன்னதற்காக ஒருமுறை மட்டும் வந்துதான் பாருங்களேன்'' என்று வற்புறுத்தினார். தன்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்பதற்காக சுந்தரநாராயணனும் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். மறுநாள் மாலை போகலாம் என்று முடிவாகியது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 4!

மறுநாள், குறித்த நேரத்தில் ராமமூர்த்தி நீலநிறச் சட்டை அணிந்து, சுந்தரநாராயணனின் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்றைக்குப் பார்த்து சலவைக்குப் போட்டிருந்த உடைகள் வராததால், வேறு வழி இல்லாமல் சுந்தரநாராயணன் தன் மகனின் டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டு (அதுவும் நீல நிறம்தான்!) ராமமூர்த்தியுடன் பத்மா மாமி வீட்டுக்குப் புறப்பட்டார். அதே நேரத்தில் பத்மா மாமி தன் வீட்டுக்கு வந்திருந்த அன்பர்களிடம், ''இன்னும் சற்று நேரத்தில் நீலநிறச் சட்டை அணிந்து இங்கே இரண்டு பேர் வரப்போகிறார்கள்'' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்படி அவர் சொன்ன சற்றைக்கெல்லாம் ராமமூர்த்தியும் சுந்தரநாராயணனும் பத்மா மாமி சொன்னது போலவே  நீல நிறச் சட்டை அணிந்து அங்கே வந்து சேரவும், அங்கிருந்தவர்களுக்கெல்லாம் வியப்பான வியப்பு! விஷயம் அறிந்து ராமமூர்த்தி யும் சுந்தரநாராயணனும் கூட வியந்துதான் போனார்கள். ஆனாலும், சுந்தரநாராயணன் 'காக்கை உட்காரப் பனம்பழம்’ என்கிற விதமாக, இதற்கெல்லாம் மசியாதவர்போல் காணப்பட்டார்.

பத்மா மாமி அவரிடம், ''உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வத்திருவுருவங்களுக்குக் கோயில் கட்டவேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் உள்ளது. அதற்கான காரணம், வேளை வரும் போது உங்களுக்குத் தெரியவரும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தப் பணியை நீங்கள் நிறைவேற்றியே முடிப்பீர்கள். இவை என்னுடைய வார்த்தைகள் இல்லை. என்னை ஆட்கொண்ட மகான் ராகவேந்திரரின் வார்த்தைகள். அவர் எப்படியும் உங்களை இந்தத் திருப்பணியில் ஈடுபடச் செய்துவிடுவார்.

விரைவிலேயே உங்கள் வீடு ஒரு கோயிலாக மாறி, அங்கே நித்தியப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறப்போவதுடன், தாத்தா சொன்னபடி அந்த சித்தமல்லி விரைவிலேயே பக்தர்களின் சித்தமெல்லாம் நிறைந்திருக்கப் போகிறது'' என்றார். இங்கே தாத்தா என்று அவர் குறிப்பிட்டது மகான் ராகவேந்திரரைத்தான்!

இந்த பத்மா மாமியைப் பற்றி ஒரு விஷயம் சொல்லியாகவேண்டும். இவர் ஏற்கெனவே சக்தி விகடன் வாசகர்களுக்கு அறிமுகம் ஆனவர்தான். எப்படி என்கிறீர்களா? இவர் சொல்லித்தான் நம் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் பிரம்மன் அருள் புரியும் திருப்பட்டூர் திருத்தலம் வெளியுலகத்துக்குத் தெரிய வந்து இன்று பிரசித்தியுடன் திகழ்கிறது. அதேபோலவே இந்த சித்தமல்லி க்ஷேத்திரமும் பிரசித்தி பெறுவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

சுந்தரநாராயணன் விட்டேற்றியாக பத்மா மாமிக்குப் பதில் சொல்லிவிட்டுச் சென்றாலும்கூட, ராகவேந்திரர் அப்படியே விட்டுவிடுவாரா என்ன? அவருடைய லீலையின் காரணமாக சுந்தரநாராயணன் தன்னுடைய வீட்டில் இருந்த பெருமாளுக்கும் தாயாருக்கும் கோயில் கட்டும் திருப்பணிகளில் இறங்கிவிட்டார்.

பெருமாளும் தன்னை வந்து வழிபடும் பக்தர்களின் சோகங்களை எல்லாம் தன்னுடைய சுமைகளாக ஏற்றுக்கொண்டு அவர்களின் வேண்டுதலை விரைவிலேயே நிறை

வேற்றி அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார். அவருடைய திருக் கோயில் திருப்பணிகளும் வளர்ந்த வண்ணம் உள்ளன.

சரி, கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த சுந்தரநாராயணன் எப்படி மனம் மாறி, ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார்? மகான் ராகவேந்திரருக்கும் சுந்தரநாராயணனுக்கும் உள்ள பூர்வஜென்ம தொடர்புதான் என்ன?

சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism