Published:Updated:

துறை காட்டி கரையேற்றிய வள்ளல் !

ஆலயம் தேடுவோம் !எஸ்.கண்ணன்கோபாலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்பார்கள். மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சிறப்பு? மயிலாடுதுறையைச் சுற்றிலும் சிவபெருமான் ஐந்து திருத்தலங்களில் வள்ளலாக எழுந்தருளியிருக்கிறார் என்பதால்தான் இந்தச் சிறப்பு. மயிலாடுதுறை மயூரநாதர் வள்ளல் பெருமானாக நடுவில் இருக்க, அவரைச் சுற்றிலும் நான்கு திருத்தலங்களில் சிவபெருமான் நான்கு வள்ளல்களாகக் கோயில் கொண்டு அருள்புரிகின்றார். அந்த நான்கு திருத்தலங்களில் ஒன்றுதான், நாம் இப்போது 'ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசிக்கப்போகும் திருவிளநகர் துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில். 

அது என்ன துறைகாட்டும் வள்ளல்? அதற்கான விளக்கம் தலவரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.  

முன்னொரு காலத்தில் இந்த ஊரில் அருள்வித்தன் என்ற அந்தணன் வசித்து வந்தான். சதாசர்வ காலமும் சர்வேஸ்வரனையே சிந்தையில் இருத்தி தியானிக்கும் பக்தனான அவன், தினமும் அதிகாலையில் நந்தவனங்களுக்குச் சென்று வண்டு நுகராத மலர்களைச் சேகரித்து, விளநகர் சிவனாருக்கு அர்ச்சனை செய்வதற்காக அர்ப்பணிப்பதைத் தன்னுடைய நித்தியக் கடமையாகக் கொண்டிருந்தான். எத்தனை இடையூறு வந்தாலும், அவன் தன்னுடைய சிவத் திருப்பணியை நிறுத்தாமல் செய்து வந்தான்.

துறை காட்டி கரையேற்றிய வள்ளல் !

ஒருநாள், அருள்வித்தன் மலர்களைச் சேகரித்துக்கொண்டு காவிரி ஆற்றில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தபோது, அவனுடைய சிவபக்தியை உலகத்தவருக்கு உணர்த்திடத் திருவுள்ளம் கொண்ட சிவனார், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளம் படிப்படியாக உயர்ந்து, அவன் முகத்தைத் தொட்டபடி ஓட, அப்போதும் அவன் தன் கையில் இருந்த மலர்க் குடலையைக் கையில் இருந்து நழுவவிட்டுவிடாமல் இறுகப் பிடித்துக்கொண்டு, சிவபூஜைக்கு நேரமாகிவிட்டதே என்ற தவிப்புடன், வினைகள் தீர்க்கும் விளநகர்நாதனைப் பிரார்த்தித்தான். இருபுறக் கரைகளில் இருந்த மக்கள் அவனுடைய நிலையைக் கண்டு தவித்துச் செய்வதறியாதிருந்த நிலையில், அருள்வித்தனின் சிவபக்தியை அனைவரும் உணரும்படியாகச் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவனார், அவன் கரையேற வேண்டிய துறையின் வழியை அசரீரியாக உணர்த்தி அருள்புரிந்தார். அதன் காரணமாகவே இத்தலத்து இறைவனுக்குத் துறைகாட்டும் வள்ளல் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

பிற்காலத்தில், ஞானசம்பந்தப் பெருமான் பல சிவாலயங்களைத் தரிசித்தபடி மயூரநாதர் கோயிலுக்குச் செல்லும்போது, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கண்ட ஞானசம்பந்தப் பெருமான், 'ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தைக் கடந்து கரையேற ஒரு துறையினைக் காட்டுவோர் எவரேனும் உள்ளாரோ?’ என்று மனதில் நினைத்த வேளையில், வேடன் ஒருவன் அவரைத் தாம் அழைத்துச் செல்வதாகக் கூறி ஆற்றில் இறங்க, வெள்ளம் ஞானசம்பந்தப் பெருமானின் பாதத்தின் அளவாகக் குறைந்துவிட்டது. காவிரியின் தென்கரை சேர்ந்த சம்பந்தப் பெருமான், தனக்குத் துறை காட்டிய வேடனைத் திரும்பிப் பார்க்க, அங்கே வேடனைக் காணவில்லை. அந்த விளநகர் இறைவனே வேடனாக வந்து தமக்குத் துறை காட்டி அருளியவர் என்று தெளிந்த சம்பந்தப் பெருமான், விளநகர் சிவனாரைப் பதிகம் பாடி போற்றி வணங்கினார்.

துறை காட்டி கரையேற்றிய வள்ளல் !

கபித்தன் என்ற அசுரன் இந்தத் தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்ற செய்தியும் தலவரலாற்றில் காணப்படுகிறது.

இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் திருப்பெயர் துறைகாட்டும் வள்ளல். அம்பிகையின் திருநாமம் வேய்த்தோளி அம்மை என்பதாகும். இந்தக் கோயிலின் தலவிருட்சம் விழல் விருட்சமாகும். அதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு விழல் நகர் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே காலப்போக்கில் விளநகர் என்று அமைந்துவிட்டதாக ஊர்ப்பெரியவர்கள் கூறுகிறார்கள்.

பிரதோஷ காலங்களிலும் சோமவாரங்களிலும் இங்கு வந்து இறைவனுக்கு வில்வமாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கையில் பலதரப்பட்ட துயரங்களில் சிக்கித் தவிப்பவர்களின் பிரச்னைகள் நீங்கி, அவர்களின் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுவார் என்கிறார்கள் உள்ளூர் அன்பர்கள். மேலும் இந்தக் கோயிலில் தனிச் சந்நிதியில் சனீஸ்வர பகவான் தன்னுடைய வாகனத்துடன் காட்சி தருகிறார். சனிக்கிழமை மற்றும் சனி ஹோரைகளில் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட சனிக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காலம் காலமாகப் பல்வேறு மன்னர்களின் திருப்பணிகளால் சிறப்புற்றுத் திகழ்ந்த, மிகவும் பழைமையான இந்தக் கோயிலின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கோபுரங்களில் எல்லாம் செடிகொடிகள் முளைத்தும், அங்கங்கே வெடிப்புற்றும் காணப்படுகிறது. உடனடியாகத் திருப்பணிகள் மேற்கொள்ளவில்லை என்றால், கோயில் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் நிலை.

இப்போதும் காரணாகம ஆகமத்தின்படி ஐந்துகால பூஜைகள் நடைபெற்று வருவதாகச் சொன்ன ஊர்ப் பெரியவரிடம், ''கோயில் கோபுரங்களில் எல்லாம் இப்படிச் செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றதே, விரைவில் ஒரு கமிட்டி அமைத்து, திருப்பணிகளைத் தொடங்கக்கூடாதா?'' என்று கேட்டதற்கு, ''இந்தக் கோயில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. அங்கேதான் நீங்கள் கேட்கவேண்டும்'' என்றார்.

துறை காட்டி கரையேற்றிய வள்ளல் !

தருமபுர ஆதீனத் தரப்பில் விசாரித்தோம். ''தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் கோயிலின் திருப்பணிகளை மேற் கொள்ள உத்தேசித்து, அறநிலையத் துறையின் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார். அனுமதி கிடைத்ததுமே திருப்பணிகள் தொடங்கப்பட்டுவிடும்'' என்று தெரிவித்தார்கள்.

நம்பி வந்து வழிபடுபவர்களின்  வாழ்க்கை சிறக்க நல்லதொரு வழியினை நாளும் காட்டி அருளும் விளநகர்நாதனின் திருக்கோயில் திருப்பணிகளுக்கான அறநிலையத் துறையின் அனுமதி விரைவில் கிடைக்கப் பெறவேண்டும்; கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, நல்லபடியாக நிறைவேறி, கோயில் உடனடியாக பூரண பொலிவு பெற வேண்டும். இதற்கு அந்தத் துறை காட்டும் வள்ளல் பெருமான்தான் வழிகாட்டி அருள்புரியவேண்டும்.

விளநகராம் திருத்தலத்தில் அருட்கோலம் கொண்டிருக்கும் இறைவனின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியை வழங்குவோம். 'புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய’ அந்தத் துறை காட்டிய வள்ளல் பெருமானின் பேரருளால், நமக்கும் நம் சந்ததியினருக்கும் துயரங்கள் எதுவும் இல்லாத நல்லதொரு வாழ்க்கை அமையப் பெறுவோம்.

நமசிவாய போற்றி! நாதன் தாள் போற்றி, போற்றி!

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கு இருக்கிறது? எப்படிச் செல்வது?

துறை காட்டி கரையேற்றிய வள்ளல் !

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது விளநகர் திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பக்தர்கள் கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு