மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

15. ஏதேனும் என்றேனோ 

குலசேகரரைப் போலே!

குலசேகர ஆழ்வார் சேர நாட்டின் மன்னர். இவர் கலியுகம் பிறந்த 28வது வருடமான பராபவ வருடம் மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி திதியில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

தனது பராக்கிரமத்தால் சோழர்களையும் பாண்டியர்களையும் வென்றவர். சாம்ராஜ்யத் துக்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும்கூட, அவருக்கு லௌகிக விஷயங்களில் அவ்வள வாக நாட்டம் இருக்க வில்லை. பரத்வம் என்பது எது, அதை அடைவது எப்படி என்பதிலேயே அவருடைய கவனம் எல்லாம் இருந்து வந்தது.செங்கமலக் கண்ணனான திருமாலின் திருவடிகளே முடிவான பரத்வம் என்ற பேருண்மையும் அவருக்குப் புரிந்தது. அதன்பிறகு அந்த பரத்வத்தை அடைய வேண்டி, பஞ்ச சம்ஸ்காரங்களையும் கடைப் பிடித்து இறைத் தொண்டு ஆற்றிவந்தார்.

திருமாலின் பத்து அவதாரங்களில் இவருக்கு ஸ்ரீ ராமபிரானிடம் அளவற்ற ஈடுபாடு. ராமபிரானிடம் இவருக்கு இருந்த அன்பை விளக்க ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை ஒரு பாகவதோத்தமர் ராமாயண உபந்நியாசம் செய்து கொண்டிருந்தபோது, ராமனை எதிர்த்து கரன் என்பவன் பெரும் சேனையுடன் வந்த கட்டத்தை மிக ரசமாக, ஏதோ நேரில் நிகழ்ந்தது போல சொல்லிக் கொண்டிருந்தார். குலசேகரரோ, 'காட்டில் ராமன் எவ்வித படைபலமும் இல்லாமல், எதிர்த்துவரும் கரனை எவ்வாறு எதிர்கொள்வார்’ என்று நினைத்தவராகத் தன் படைகளைத் தயார்படுத்தி ராமனின் உதவிக்கு அனுப்புமாறு படைத்தளபதிக்கு உத்தரவு போடுகிறார். அந்த அளவுக்கு ராமனிடம் ஈடுபாடு கொண்டிருந்தார்!

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 10

அதேபோல் அவருக்குத் திருவேங்கடமுடை யானிடமும் அளவற்ற பக்தி ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர் பத்து பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

'ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்

ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்

கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

என்பது முதற் பாசுரம்.

'நப்பின்னை பிராட்டியை மணப்பதற்கு ஏழு எருதுகளைத் தழுவிய கண்ணனுக்கு அடிமையாக இருக்கவே எனக்குப் பிரியம். நல்ல வளைந்த சங்கத்தை தனது இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடவன் வாழும் திருமலையில் உள்ள கோனேரி தீர்த்தத்தில் ஒரு கொக்காக பிறக்கும் பாக்கியம் கிடைத்தால்கூட அதுவே எனக்குப் போதும் என்கிறார்.

திருவேங்கட மலையில் கொக்காகப் பிறக்க விரும்பிய குலசேகரருக்கு ஓர் ஐயம் எழுகிறது. கொக்காகப் பிறந்து வேடுவன் அம்புக்கு இரையானால் என்ன செய்வது என்பதுதான் அந்தச் சந்தேகம். எனவே மீனாகப் பிறக்க விரும்புகிறார். அப்போதும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. மீனாகப் பிறந்து கொக்கின் பசிக்கு இரையாகி விட்டால் என்ன செய்வது?  இப்படியாக ஒவ்வொரு பிறப்பாக விரும்பிய குலசேகரர், இறுதியாக தான் என்னவாகப் பிறக்கவேண்டும் என்று விரும்புகிறார் தெரியுமா?

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

எனப் பாடுகிறார். அதாவது, வேங்கடவன் கோயில் வாசலில் படியாகப் பிறக்க விரும்புகிறாராம். 'அடியார்கள் மட்டுமின்றி அரம்பையர்களும் வானவர்களும் வேங்கட வனை தரிசிக்க ஏறும் படியாகக் கிடக்க மாட்டேனோ’ என்கிறார் ஆழ்வார். இந்த இடத்தில் வைணவ நெறியின் சிறப்பம்சமான பாகவதோத்தமர்களைக் கொண்டாடும் பண்பு விளக்கப்படுகிறது. இந்தப் பாசுரம் பாட பெற்றதன் பின்னர்தான் வேங்கட மலையில் சந்நிதிக்கு முன்பு இருக்கும் படிக்கட்டு குலேகரர் படி என்று அழைக்கப்படுகிறது. அது மட்டுமா?

உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்

அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்

செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

தேவருலகத்தை ஆளும் பேறு கிடைத்தால்கூட விரும்பமாட்டேன். திருவேங்கடவன் அருளாட்சி செலுத்தும் திருமலை மீது ஏதோ ஒன்றாக ஆகமாட்டேனா என்கிறார்.

அதனால்தான் திருக்கோளூர் பெண் பிள்ளை, 'ஏதேனும் என்றேனோ குலசேகரைப் போலே!’ எனக் கேட்கிறாள்.

16. யான் சத்யம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே!

இந்த வாக்கியத்தைப் புரிந்து கொண்டால் ஸ்ரீ கிருஷ்ண தத்துவம் முழுவதையும் புரிந்து கொண்டதாகும்.

மகாபாரதத்தில் அளவுக்கு அதிகமாகப் பொய் பேசும் ஒரு கதாபாத்திரம் உண்டு என்றால், அது கிருஷ்ணன் என்றுதான் சொல்வார்கள். அப்படிப்பட்ட கிருஷ்ணனே ஒருமுறை சத்தியம் செய்ய நேரிடுகிறது. அதுவும் என்ன சத்தியம்? 'நான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது உண்மையானால்’ என்ற சத்தியம். இதைக் கேட்கும்போது நமக்கு விசித்திரமாகத் தோன்றும். ஆனால், அந்த சத்தியத்தை அவன் காப்பாற்றவும் செய்கிறான். எப்படி?

மகாபாரதப்போர் முடிந்து விடுகிறது. பாண்டவர்களால் தன் தந்தையையும் தன் உயிரினும் மேலான கௌரவ நண்பர்களையும் பலி கொடுத்த அசுவத்தாமன் அவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறான். பாண்டவர்கள் வெளியே சென்ற வேளையில் உள்ளே நுழையும் அசுவத்தாமன், உறங்கிக் கொண்டிருக்கும் உபபாண்டவர்களை பாண்டவர்கள் எனத் தவறாக நினைத்து அவர்களையும் பாஞ்சாலன் மற்றும் பிரதியும்னனையும் வெட்டிக் கொன்று விடுகிறான். பாசறை திரும்பும் பாண்டவர்கள் இந்த அட்டூழியத்தைச் செய்த அசுவத்தாமனைத் தேடி வியாசருடைய குடிலுக்குச் செல்கின்றனர்.

அவர்களைக் கண்டதும் தான் கொன்றது உப பாண்டவர்களைத்தான் என்பதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை ப்ரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மேல் ஏவுகிறான். பதிலுக்கு அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை அசுவத்தாமன் மேல் ஏவுகிறான். ப்ரம்மாஸ்திரத்தின் பின்விளைவுகள் மிகவும் மோசமானவை என்பதை அறிந்த வியாச பகவான் இருவரையும் தங்கள் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். அர்ஜுனனுக்கு பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் மந்திரம் தெரியும் என்பதால் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். அசுவத்தாமனுக்கு அந்த மந்திரம் தெரியாததால், அந்த அஸ்திரம் உத்தரையின் வயிற்றில் வளரும் ஒரே குலக் கொழுந்தான பரீட்சித்துவைப் பதம் பார்க்கச் செல்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தை உத்தரையின் கருப்பைக்குள் செலுத்தி

அந்த சிசுவைக் காப்பாற்றிவிடுகிறார். இருப்பினும் அந்த சிசு பிறக்கும்போது ஜீவனில்லாமல் பிறக் கிறது. உத்தரை கண்ணனே சரணாகதி என்று அவர் காலை பிடித்து அழுகிறாள். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர்,

'நான் எப்போதும் சத்தியம் பேசுபவன் என்பது உண்மையானால் நான் சத்தியன் என்பது உண்மையானால், நான் தினமும் பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவன் என்பது உண்மையானால் இந்தக் குழந்தை பிழைத்து எழட்டும்' என்று தன் கால் கட்டை விரலால் குழந்தையின் உடலெங்கும் நீவி விடுகிறான். குழந்தை பரீஷிக்கப்பட்டு  உயிர்த்தது. எனவேதான் அதற்கு பரீட்சித்து என்று பெயர் ஏற்பட்டது.

இங்கே, கிருஷ்ணர் சத்யம் பேசுபவரா என்று கேள்விக்காவது, அவர் சொல்வதும் செய்வதும் சத்யசங்கல்பத்தின் காரணமாகத் தான் என்று கூறிவிடலாம். ஆனால், தன்னை அவன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று கூறியதும், அது உண்மை என்ற விதமாக குழந்தை பரீட்சித்து உயிர் பிழைத்ததும் எப்படி?

இதே சந்தேகம் நாரதருக்கும் ஏற்பட்டது. ஒருமுறை பிரம்மா மூவுலகங்களிலும் நைஷ்டிக பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பது ஸ்ரீ  கிருஷ்ணர் என்று கூறிவிடுகிறார். நாரதர் தான்தானே உண்மையாக நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் என்பதால், பிரம்மாவிடம் போய் நியாயம் கேட்கிறார்.

அதற்கு பிரம்மா ''உன் சந்தேகத்தை நித்திய உபவாசியான துர்வாசர் தீர்த்து வைப்பார்' என்கிறார். நாரதருக்கோ இன்னும் ஆச்சர்யம். ''ஒரு வேளை பசியைக் கூட பொறுக்காமல் சாபம் இடும் துர்வாசர் எப்படி நித்திய உபவாசியாக இருக்க முடியும்?' என்று பிரம்மாவிடம் கேட்கிறார்.

''இதற்கான விடையை ஸ்ரீ கிருஷ்ணரிடம் நீ கேட்டு தெரிந்து கொள்' என்று பிரம்மா கூறி விடுகிறார்.

நேராக துர்வாசரிடம் சென்ற நாரதர், 'கிருஷ்ணன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது எப்படி பொருந்தும்?'' என்று கேட்கிறார். அதற்கு துர்வாசர்,

''மகாவிஷ்ணு தன்னுடைய ராமாவதாரத் தின்போது ஒருமுறை தண்டகாரண்யம் வழியாகப் போகும்போது, அங்கிருந்த ரிஷிகள் எல்லாம் ஸ்ரீ ராமனின் தோளழகைக் கண்டு மயங்கி 'ஒரு முறையாவது இந்த பேரழகன் தோளைப் பொருத மாட்டோமா?' என்று காமுற்றனராம். எனவேதான் பகவான் மறுபிறவியில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரிக்க, அந்த ரிஷிகள் கோபிகைகளாக அவதரிக்கின்றனர். எனவே, பதினாயிரம் மனைவியர் என்பதன் பொருள், பகவான் ஒருவனே சரணாகதன் மற்ற அனைவரும் சரணம் அனுஷ்டிப்பவர் என்பதுதான்.

கிருஷ்ணன் நைஷ்டிக பிரம்மச்சாரிதானா என்ற தன்னுடைய சந்தேகத்தை துர்வாசர் மூலமாக நிவர்த்தி செய்துகொண்ட  நாரதர், அடுத்த சந்தேகமான துர்வாசர் நித்திய உபவாசிதானா என்பதை நிவர்த்தி செய்துகொள்ள நேரே பகவானிடம் செல்கிறார்.

''அனைவரும் துர்வாசரை நித்திய உபவாசர் என்கிறார்களே அது எப்படி?' என்று கேட்டார்.

'பொறு நாரதரே! இன்று துர்வாசர் அளவுக்கதிகமான உணவு உண்டுவிட்டார். என் வயிறு வலிக்கிறது. ருக்மிணியிடம் சிறிது சுக்கும் வெல்லமும் வாங்கி சாப்பிட்டு வருகிறேன்' என்று உள்ளே போனாராம்.

திரும்பி வந்த பகவானிடம் ''துர்வாசர் உணவு உண்டால் உமக்கு எப்படி வயிறு வலிக்கும்?'' என்று கேட்டார் நாரதர்.

அதற்கு பகவான் சிரித்துக்கொண்டே ''துர்வாசர் ஒருவர்தான் தான் உணவு உண்பதற்கு முன்பு, 'சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து’ என்று சொல்லிவிட்டு சாப்பிடுவார். எனவே அவர் உண்ணும் உணவு என்னை வந்தடைவதால் அவர் நித்திய உபவாசராகவே இருக்கிறார்.' என்றாராம். கிருஷ்ண தத்துவம் முழுவதையும் அறிந்துகொண்ட நாரதர் பகவானை வணங்கி விட்டுச் சென்றதாக பாகவதக் கதை.

'அப்படிப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரைப் போல யான் சத்தியம் என்றேனோ? இல்லையே. அதன் பிறகு எதற்காக இந்த ஊரில் இருக்க வேண்டும்?' என்று கேட்டாள் அந்தப் பெண் பிள்ளை.

ரகசியம் வெளிப்படும்