Published:Updated:

கேள்வி - பதில்

நம்பத் தகுந்ததா ஆன்மிகம் ?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

நம்பத் தகுந்ததா ஆன்மிகம் ?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? இயற்கையையும், அதில் கொட்டிக்கிடக்கும் இன்பங்களையும்  சுதந்திரமாக அனுபவிப்பதை விடுத்து, உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆன்மிகம் அவசியமானதா? அதேபோல் இல்லாத கடவுளை இருப்பதாகச் சொல்லி பயமுறுத்துவதும் மூடநம்பிக்கை அல்லவா? 

பட்டிமன்றம் ஒன்றில் செவிமடுத்த விவாதம் இது. ஆன்மிகத்தைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு, தகுந்த விளக்கம் தாருங்களேன்.

கே.வேதநாயகம், திருச்சி - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கோணம்

ஆன்மா, ஜீவாத்மா, உயிர், ப்ராணன், சைதன்யம்  இப்படி பல பெயர்களில் சிறப்பு பெற்ற ஒளிப்பிழம்பு, கண்களுக்கு புலப்படாத விளக்க இயலாத சக்தியாகத் திகழ்கிறது. அது, உலக இயக்கத்துக்குக் காரணமான பரம்பொருளின் அம்சம். எல்லோருக்கும் புரியவைக்கும் நோக்கில் அதை 'ஆன்மா’ என்று குறிப்பிடுவது உண்டு. எது வெளியேறினால் உடல் இயங்காதோ; உடல் பூத உடலாக மாறிவிடுமோ அதை 'ஆன்மா’ எனச் சொல்லலாம்.

? எனில், ஆன்மா இல்லையெனில் உடல் செயலிழந்துவிடுமா?

நிச்சயமாக! உடலில் இரண்டு பகுதிகள் தென்படுகின்றன. ஒன்று இயக்கும் பகுதி; மற்றது இயங்கும் பகுதி.

விருப்பம், எண்ணம், நினைவு போன்றவற் றுக்கு ஆதாரமாக விளங்குவது மனம். நினைத்துப் பார்க்கும் திறனுக்கு அந்தப் பெயர் பொருந்தும். முன் ஜன்ம செயல்பாட் டின் வாசனைகள், நீறு பூத்த நெருப்பாக அதில் இடம்பெற்றிருக்கும். ஒரு விஷயத்தில் திரும்பத் திரும்ப செயல்பட்டு, பழக்கப்பட்ட நிலையில் இயல்பாகவே மாறியிருப்பது வாசனை. அதற்குத் தானாக இயங்கும் சக்தி இல்லை. ஆனால், அதில் குவிந்து இருக்கும் எண்ணங்கள் நடை முறைக்கு வந்து உணரத் துடிக்கும். அது ஜடம். ஆன்மாவின் சேர்க்கையில் செயல்படுவது. அதன் உருவம் அணு அளவுதான் இருக்கும். அது, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எனும் நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. அதற்கு அந்த:கரணம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. மனம் எண்ணத்தை வெளியிடும். புத்தி அதை ஆராய்ந்து செயல்படப் பரிந்துரைக்கும். மனம் புலன்கள் வாயிலாக அதை நிறைவேற்றிக்கொள்ளும். அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அல்லது இகழ்ச்சியை மனம் உணரும்.

கேள்வி - பதில்

? ஆன்மாவும் மனமும் இயக்கு சக்திகள் எனில், இயங்கும் சக்தி எது?

உடலுறுப்புகள், அறிவுப் புலன்கள், செயல் புலன்கள் யாவும் தானாக செயல்படாது. மனதின் தூண்டுதலில் செயல்படும். அவை ஜடம். தனியே இயங்காது. ஆன்மாவும் மனமும் இயக்கும் பகுதி. உடலுறுப்புகளும் புலன்களும் இயங்கும் பகுதி. இரண்டின் இணைப்பில் உடலியக்கம் தொடர்ந்து செயல்படும்.

உடல், அதன் உறுப்புகள், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பால் எழும் தொடர்பு வாழ்க்கையாக மாறுகிறது என்கிறது ஆயுர்வேதம் (சரீரேந்திரியஸத்வ ஆன்ம ஸம்யோகோதாரி ஜீவிதம்). இயங்கும் பகுதி, இயக்கும் பகுதி இரண்டும் இணைந்துதான் முழுமை பெறும். இரண்டும் இணைந்து செயல்படும் நிலையை வாழ்வு எனலாம். ஆன்மாவின் தொடர்பில் மனம் உடலை இயக்குகிறது. மனதுக்கு இயக்கும் திறன் இருக்கவேண்டும். உடலுக்கு இயங்கும் திறன் இருக்க வேண்டும். மனம் திடம் பெற்றிருக்க வேண்டும். உடலும் வலுப்பெற்று இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று சுணக்கமுற்றால் மனம் துயரத்தைச் சந்திக்கும். உடல் வலுவாகத் திகழ உணவுக் கட்டுப்பாடும், சோர்வை எட்டாத செயல்பாடும் தேவை. மனம் திடம் பெற வேண்டும் எனில், தவறான சிந்தனைகளைத் தவிர்க்கவேண்டும். உணவுக் கட்டுப்பாடும், நல்ல சிந்தனையும் இந்த இரண்டையும் வளர்ச்சி பெறவைத்துப் பாதுக்கும்.

? உடலையும் உள்ளத்தையும் பேண என்ன வழி?

வேதம் சொல்லும் நல்லுரைகள், மகான்கள் பரிந்துரைக்கும் நல்லுரைகள், 'அறம் செய்ய விரும்பு; ஆறுவது சினம்’ போன்ற பேருரைகள், மனதை நல்ல சிந்தனையில் திருப்பிவிடும். உடலுக்கு இதமானவலுவூட்டும் தாவரங்களை உணவாக ஏற்கச் சொல்லும் ஆயுர்வேதத்தின் பரிந்துரைகள், உடலை வலுவாக்கி இயங்க வைக்கும். ஆசைகளின் உந்துதலில் மனம் நல்லது கெட்டதை அறியாது. புத்தி அதை ஆராய்வதற்கு உகந்த தகவலை எதிர்பார்க்கும். அத்தகைய தகவல்களை அற நூல்கள் அள்ளிக் கொடுக்கும். அதன் அடிப்படையில் ஆராய்ந்து நேர்வழியைப் பரிந்துரைக்கும். அதன் போக்கில் மனம் செயல்பட்டு, புலன்களின் உதவியில் மகிழ்ச்சி யான வாழ்க்கையை உணர்த்தும்.

ஆன்மாவோடு இணைந்த மனம், உடலை வழிநடத்தும். ஆன்மா, மனம், உடல், புலன்கள் ஆகிய அனைத்தையும் தினமும் கண்காணிக்க வேண்டும். மனம் சார்ந்த சிந்தனையும் வேண் டும்; உடல் சார்ந்த உழைப்பும் வேண்டும். ஆன்மிகமும் வேண்டும்; உலகவியலும் வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் தேவை; சிந்தனையிலும் சுத்தம் தேவை. காலையில் நீராடி உடல் சுத்தமாக வேண்டும். நெற்றியில் திலகமிட்டு கடவுளை மனம் நினைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவை ஏற்க வேண்டும். புலன்கள் தழைத்து ஓங்க உழைக்க வேண்டும். உள்ளத் தெளிவுக்கு அற நூல்கள் உரையை ஏற்கவேண்டும். அதன் வலுவுக்கு கடவுள் பெயரை மனம் அசைபோட வேண்டும்.

? கடவுள் பெயரைச் சிந்தித்தால் மட்டும் உள்ளம் சுத்தமாகிவிடுமா?

உலக இயக்கத்துக்குக் காரணமான பரம் பொருளை  அளவிட முடியாத சக்தியை (கடவுள்) மனம் அசைபோட அசைபோட அதன் இணைப்பில் திடம்பெற்று நம்பிக்கை யோடு இயக்கும் தகுதியும் வலுப்பெற்றுவிடும். உடலை நேர்வழியில் செலுத்த அற நூல்கள் ஒத்துழைக்கும். இயக்கும் பொருளை அலட்சியப் படுத்தி விட்டு இயங்கும் பொருளை மட்டும் கண்காணித்தால், வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்து விடும்.

கேள்வி - பதில்

இன்றையச் சூழலில் ஆன்மிகச் சிந்தனையின் அலட்சியமானது அத்தனை கோலாகலங் களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆன்மிகச் சிந்தனையின் இணைப்பில் மனிதன் முழுமையாகிறான். வேதம், சாஸ்திரம், புராணம், இதிஹாசம், சம்பிரதாயம் அத்தனையும் ஆன்மிகச் சிந்தனையின் உயர்வைப் பறைசாற்று கின்றன. ஆறாவது அறிவு பெறாத உயிரினங்கள் எல்லாம் உலகவியல் சுக போகங்களின் இணைப்பில் நிம்மதி பெற்று விடுகின்றன; முழுமை பெற்று விடுகின்றன. மனம் படைத்தவர்கள், ஆன்மிக சிந்தனையின் இணைப்பால் மட்டுமே முழுமை பெற முடியும். கோயில்கள், நதிகள், குளங்கள், தீர்த்தக்கரைகள், மகான்கள் தோன்றிய இடங்கள், அவர்களது நடைமுறைகள், ஆன்மிக சிந்தனையைத் திருப்பி விடும் தகுதி பெற்று விளங்குகின்றன.

ஆக, இயக்கும் பகுதியையும் இயங்கும் பகுதியையும் ஒருசேர உணர்ந்து, அவற்றின் பாதுகாப்பிலும் ஈடுபட்டு, கிடைத்த பிறவியைப் பயனுள்ளதாகச் செய்ய உணவுக் கட்டுப்பாடும் உயர்ந்த சிந்தனையும் ஒத்துழைக்கும்.

இரண்டாவது கோணம்

உயிரினங்களும் தாவரங்களும் இயற்கையின் படைப்பு. தான் உருவாக்கிய உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக தாவரங்களையும் உருவாக்கியது இயற்கை. உண்டு களித்து, உலக சுகத்தைச் சுவைக்கும் சுதந்திரத்தையும் அளித்துள்ளது. இயற்கையே அனைவரையும் வழிநடத்துகிறது.

இதைத்தான் உண்ண வேண்டும். இதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எல்லாம் இயற்கை அளித்த சுதந்திரத்தைப் பறிக்கும். உடலும் அதில் அடங்கிய உறுப்புகளும் ஒன்றுதான். தனித்தனியே இரண்டு பகுதிகள் இருக்க இடம் இல்லை. பிறக்கும்போது உயிரோடு பிறக்கிறான். இறக்கும்போது அத்தனையும் மறைந்துவிடும். இயக்கும் பகுதி, இயங்கும் பகுதி என்கிற பாகுபாட்டில் எந்தப் பெருமையும் இல்லை.

? எனில், எல்லாமே 'சுயம்பு’ என்கிறீர்களா?

உடல்தான் ஆன்மா. கண்ணுக்குப் புலப் படாத எந்த சக்தியும் அதில் ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை. உடல் அழிந்தால், அதன் உயிரும் (ஆன்மா) அழிந்துவிடும். திரும்பவும் பிறக்கும்போது உடலோடு உயிரும் இணைந்துவிடும். உடலை இயக்கத் தனியொரு கருவி தேவையில்லை. உடல் தானாகவே இயங்கும்.

மற்ற உயிரினங்கள் சுதந்திரமாக இயங்கு கின்றன. மடியும்போது மொத்தமாக மறைந்து விடுகின்றன. 'ஆன்மிக’ என்ற விளக்கம், இல்லாத ஒன்றுக்கான விளக்கம். வாழ்க்கையைச் சுவைக்க அதன் அறிவு தேவையற்றது. உலகில் தென்படும் மாறுபாடும். இயற்கையின் ஒத்துழைப்பில் நிகழ்ந்துவிடும். அதற்காக தனியே ஒரு கடவுளை ஓர் ஆன்மாவை உருவாக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றின் இணைப்பில் நாக்கிலும் உதட்டிலும் தானாகவே சிவப்பு நிறம்  தோன்றிவிடும். அதற்குக் காரணம் என்று தனியே ஒரு சக்தியை (கடவுளை) உருவாக்க வேண்டாம்.

மகிழ்ச்சிக்கோ, துயரத்துக்கோ, உழைப்புக்கோ, சிந்தனைக்கோ எந்த வகையிலும் தொடர்பில்லாத ஓர் ஆன்மா உடலில் இருப்பது வீண். 'ஆன்மா உடலை இயங்க வைப்பவன். ஆனால், அவன் எதிலும் தொடர்பு இல்லாதவன். மனம்தான் அத்தனையையும் இயக்குகிறது. மனம் ஜடம் அது செயல்படுவதற்கு ஆன்மாவின் தொடர்பு வேண்டும்’ என்ற விளக்கம் ஏற்புடையது அல்ல.

? பின்னர் இயக்கத்துக்குக் காரணம் எதுவென்று கருதுகிறீர்கள்?

உடலே ஆன்மாவின் செயலை ஏற்று நடத்துகிறது என்பது பொருந்தும். அது இருக்கும் பொருள். அது, உடலின் உருப்படிக ளோடு இணைந்திருக்கிறது. அது சுகதுக்கங்களின் உணருதலுக்குக் காரணமாகிறது. சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம். உடல் இருந்தால் உழைக்கலாம், உணரலாம், சிந்திக்கலாம், செயல்படலாம். எல்லா அலுவல்களும் உடல் இருப்பவனுக்குச் சாத்தியம்.

அதுபோல் உணவுக் கட்டுப்பாடோ, உயர்ந்த சிந்தனையோ வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது. தரமான, சுதந்திரமான வாழ்வை இயற்கை அளித்திருக்கிறது. அதில், மூன்றாவது ஒருவனை (ஆன்மா) தேவையில்லாமல் இணைக்க வேண்டாம். அறிமுகமாக முடியாதவனை எப்படி ஏற்க இயலும். அறிமுகமானாலும், எதிலும் பங்கு பெறாதவனை (ஆன்மா) எப்படிச் சேர்க்க இயலும்?

ஆட்டின் கழுத்தில் தொங்கு சதை போல், ஓர் ஆன்மாவை (கடவுளை) சுமக்க வேண்டிய அவசியம் என்ன? தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டிக்கொண்டிருப்பவன், எதிலும் தொடர்பு இல்லாதவன், செயல்படும் தகுதி படைத்தவன் (சைதன்யம்), ஆனால், எந்தச் செயலுக்கும் அவன் காரணமாகமாட்டான். சும்மா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சாட்சியாக இருப்பான்... இப்படியான விளக்க வுரைகளின் வாயிலாக, சும்மா இருப்பவனை செயல்பாட்டுக்கு உக்கமளிக்க வேண்டிய உடலுக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஆன்மாவை ஏன் ஏற்க வேண்டும்? நேரடியாக பயன்படாத ஒருவனை தலைவனாக எப்படிச் சித்திரிப்பது?

? அப்படியானால் கடவுள் தத்துவமே வீண் என்கிறீர்களா?

நாங்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. 'பயிர்கள் எப்படி முளைத்து, வளர்ந்து, பயன்பட்டு மறைகிறதோ, அப்படியே மனிதனும் தோன்றி பயன்பட்டு மறைகிறான்’ என்கிறது உபநிடதம் (ஸஸ்யமிவமர்த்ய:பச்யதெ ஸஸ்யமிவ ஆஜாயதெபுன:).

ஆன்மா (சாட்சி) இல்லாமலேயே சடங்குகள் பயனளிக்கும்போது, வீண் சுமையை உடலின் ஒரு பகுதியாக சுட்டிக் காட்டுவது சிந்தனைக்குப் பொருத்தமாக இல்லை. எத்தனை உயிரினங்கள் அதன் ஒத்துழைப்பு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வை முழுமையாக சுவைக்கின்றன தெரியுமா? உடலுக்கு உணவையும், இளைப்பாற உறக்கத்தையும், இன்பத்துக்கு உடலுறவையும் இயற்கை தந்து உதவும் நிலையில், ஆன்மாவின் பங்கு தேவையற்றதாகிவிடுகிறது.  இயற்கையே, தான் படைத்த உயிரினங்கள் மீது கவனம் செலுத்தி, பாதுகாத்துப் பராமரிக்கும் போது, வேதம், சாஸ்திரம் போன்றவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படாமல் போய் விடுகிறது. உடலை வளர்க்கவும், உள்ளத்தை உயர்த்தவும் நூலறிவோ, செயல்படும் விளக்கமோ தேவைப்படுவது இல்லை. ஆன்மிக அறிவோ, ஆயுர்வேதமோ நேரடி வாழ்க்கைக்குத் தேவை இல்லை. ஆகவே, உணவுக் கட்டுப்பாடும் உயர்ந்த சிந்தனையும் எந்த பலனையும் அளிக்காது.

மூன்றாவது கோணம்

மின்விசிறிக்கு சுற்றும் திறன் உண்டு. மின்சாரத்தின் இணைப்பில்தான் அது சுற்ற இயலும். மின்சாரத்தின் பணி தொடர்போடு நின்றுவிடும். சுற்றவைப்பது அதன் வேலை அல்ல. மின்விசிறியில் இருக்கும் ஜடமான யந்திரம் மின்சாரத்திடம் இருந்து ஊக்கம் பெற்று சுற்றவைக்கிறது. மின் இணைப்பானது ஜடமான ரயில் வண்டியை ஓடவைக்கிறது. ஓடும் பணியில் மின்சாரத்துக்குப் பங்கு இல்லை. எரிபொருளானது நான்குச் சக்கர வாகனங்களை இயங்கவைக்கும். ஆனால், வாகன இயக்கத்தில் அதன் நேரடி தொடர்பு இருக்காது. ஜடமான யந்திரம், எரிபொருளிடம் இருந்து ஊக்கம் பெற்று வாகனத்தை இயக்கும்.

? விஞ்ஞான உதாரணங்கள் எல்லாம் சரிதான். ஆனால், அவற்றின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

மூச்சுக்காற்று உடலை இயக்குகிறது. ஜடமான உடலும், அதன் உறுப்புகளும் காற்றின் தொடர்பில் தன்னிச்சையாக செயல்படுகின்றன. மூச்சுக்காற்றுக்கு, உடல் செயல்பாட்டில் நேரடித் தொடர்பு இல்லை. எப்படிச் செயல்பட வேண்டும் என்று நிர்ண யிப்பது, ஜடமான மனம்தான். அதற்கும் இயக்கும் மூச்சுக் காற்றுக் கும் சம்பந்தம் இல்லை. உணவை ஜீரணமாக்குவது பித்த நீர். அது ஜடம். உயிரின் தொடர்பில் பித்தநீர் செயல்படும். ஆகவே, காற்றுக்கு நேரடி யான தொடர்பு எதுவும் இல்லை. உடலோடு சம்பந்தப்படாதது மூச்சுக்காற்று. வெளியுலகத்தில் இருந்து உடலில் நுழைந்து சும்மாதான் இருக்கிறது. ஆனால், காற்று நுழையாத உடல் இயங்காது. காற்று கண்ணுக்குப் புலப்படாது. அதற்காக, உடலோடு நிரந்தரமாக ஒட்டாத காற்று தேவையற்றது என்ற முடிவுக்கு வர இயலாது!

ஆன்மா வெளியேறிய உடலை பூத உடல் என்கிறோம். தேகம் ஆன்மாவானால், அது பூத உடல் ஆகாது. ஆன்மா வெளியேறிய உடம்பில் எறும்பும் ஈயும் பற்றிக்கொள்கின்றன. தேகமே ஆன்மாவானால் எறும்பு முதலானவை நெருங்காமல் இருக்க வேண்டுமே?! உறங்கும் போது எந்த உயிரினமும் நம் காதிலோ, மூக்கிலோ, வாயிலோ நுழைவதில்லை. ஆன்மா வெளியேறினால் அத்தனையும் நுழைந்துவிடும். ஆன்மா வெளியேறியதும், காற்று இருந்தாலும் மூச்சு செயல்படுவதில்லை. ஆன்மா இருந்தால் மட்டுமே மூச்சுக் காற்று இயங்கும். பூத உடலில் மூக்கு இருந்தும் காற்றை ஏற்க இயலவில்லை. தேகமே ஆன்மாவானால் மூச்சு செயல்பட வேண்டுமே!

ஜடப்பொருள் வேறு, சைதன்யம் வேறு. உடல் வேறு (ஜடம்); சைதன்யம் (ஆன்மா) வேறு. தேகம் ஜடம். அதற்கு வேறாகத்தான் சைதன்யம் இருக்க இயலும். ஆன்மா அழிவற்றது; தேகம் அழிவைச் சந்திக்கும். அழியும் பொருளை (தேகத்தை) அழியாப் பொருளாக (ஆன்மா) ஆக்க முடியாது. அது இயற்கையின் நியதி. ஆன்மிகம் வேண்டாமென்றால் பிறப்பு வேண்டாம் என்று சொல்லவேண்டும். நீண்ட ஆயுளை விரும்புகிறோம். அதற்கு ஆன்மாவின் தொடர்பு நீண்டநாள் இருக்கவேண்டும் என்று பொருள். ஆன்மா வெளியேறினால் உலகத் தொடர்பு அத்தனையும் அறுந்துவிடுகிறது. உடலும் புதைக்கப்பட்டு விடுகிறது. ஆகவே, உடல் ஜடம்; அழியும் இயல்பு உடையது என்பது திண்ணம். ஆன்மாவுக்கு அழிவில்லை. அழிவில்லாத பொருள் ஒன்று இருந்தால் மட்டுமே உலக இயக்கம் தொடர்ந்து செயல்பட இயலும். எல்லாமே அழியும் பொருள்களாக மாறினால் உலகம் சூன்யமாகிவிடும்.

?ஆன்மாவுக்கு அழிவே கிடையாது என்பது என்ன நிச்சயம்?

'பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறந்தவனுக்குப் பிறப்பு உண்டு’ என்ற கண்ணனின் வார்த்தை, நிரந்தரமான ஆன்மாவின் உண்மையை வெளிப் படுத்துகிறது. பிறக்கும்போது இணைகிறது இறக்கும்போது விடுபடுகிறது. இணைதலும் விடுபடுதலும் தொடர வேண்டும் எனில் அது அழியாமல் இருக்கவேண்டும்.

இறப்பும், பிறப்பும் ஜடப்பொருளுக்குத்தான். சைதன்யத்துக்கு (ஆன்மா) இறப்பும் பிறப்பும் இல்லை. ஆகவே, தேகத்தையே ஆன்மாவாகச் சித்திரித்து, உண்மையான ஆன்மாவை மறுக்க இயலாது. தொலைக்காட்சியில் தெரியும் இந்திர ஜாலங்களுக்கு மின் தொடர்பு தேவை. ஆனால் மின்சாரம் அந்தக் காட்சிகளை வரையறுக்க வில்லை. ஆகாசத்தின் தொடர்பில் தொலைபேசி  இயங்குகிறது. ஆனால் ஆகாசம் தகவல்களில் சம்பந்தப்படவில்லை.

சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், காற்றும், மழையும், பருவ காலங்களும் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றை இயக்குவது பரம்பொருள். அவர் கண்ணுக்கு இலக்காகாமல் இருப்பதால் 'இல்லை’ என்று கூற இயலாது. ஆன்மா உடலில் நுழைவதும் வெளியேறுவதும் கண்ணுக்குப் புலப்படாது. எனினும் 'பிறந்தான்’ என்றும் இறந்தான் என்றும் சொல்லி அதன் வரவையும் அதன் வெளியேற்றத்தையும் உணர்கிறோம்.

? சரி! அதற்கும் உடல்உள்ள கட்டுப்பாடுகளுக்கும் என்ன சம்பந்தம்? வீணாக ஏன் உடலையும் உள்ளத்தையும் வருத்த வேண்டும்?

இயற்கை வளங்களை அத்தனை யையும் சகட்டுமேனிக்கு உணவாக ஏற்க இயலாது. பித்த நீருக்கு உகந்தபடி உணவு அமைய வேண்டும். விபரீதமானால் தேகம் என்ற யந்திரம் சீர் கெட்டு ஆன்மாவை வெளியேற்றிவிடும்.

உணவு சிந்தனையை மாற்றத்துக் கும் காரணம். தவறான உணவு, சிந்தனையை மாற்றி தவறான வழியில் திருப்பி வாழ்வை சீர்கெடச் செய்து, ஆன்மாவை வெளியேற்றி விடும். மது அருந்தி சிந்தனை மாற்றம் ஏற்பட்டு சீரழிந்தவர்கள் ஏராளம். தேகம் என்ற இயந்திரம் சரியாக செயல்பட உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

உடலில் இரு கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது. உடல் வளம் இருந்தும் உள்ளத்தின் சீர்கேட்டில் துயரத்தைச் சந்திப்பவர்கள் உண்டு. மன வளம் இருந்தும் ஜடமான தேகத்தின் சீர்கேட்டில் துயரத்தைச் சந்திப்பவர்களும் உண்டு. மனப்பிணி உடற்பிணி என்று பிரித்துக் கூறுவதும் உண்டு. மனநலம் பேண உயர்ந்த சிந்தனைகளும், உடல்நலம் பேண உணவுக் கட்டுப்பாடும் உதவும். இரண்டையும் ஒருசேர கவனிக்க ஆன்மிக அறிவும், லோகாயத அறிவும் அவசியம். ஆன்மா உடலில் இருக்கும் வரைதான் வாழ்க்கை. அதை நிலைநிறுத்த மனத்தூய்மையும் உடல் ஆரோக்கியமும் நிச்சயம் தேவை. ஆன்மிகம் தொடாத உடல் பாதுகாப்பு அசாத்தியம். ஆன்மிகம் இணைந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, வீம்பையும் பிடிவாதத்தையும் தூக்கி எறிந்து, உடலையும் உள்ளத்தையும் சீராக வைக்க உணவுக் கட்டுப்பாட்டையும் உயர்ந்த சிந்தனையையும் ஏற்கவேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

நாம் வாழப்பிறந்தவர்கள். இன்பத்தைச் சுவைத்து மகிழ வேண்டும்; துன்பம் தொடாமலும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் நமது முயற்சியில் ஈட்டிவிடலாம். உணவுக் கட்டுப்பாடும், உயர்ந்த சிந்தனையும் இருந்தால் துயரம் தொடாத இன்பம் பெறலாம். கட்டுப்பாடு தளர்ந்து சிந்தனை திசை திரும்பினால், துயரத்தில் ஆழ்ந்துவிடுவோம்.

உடலில் இருக்கும் இரு கூறுகளில் உடலானது ஜடம்; அழிந்து விடும். ஆன்மா அழியாது. அதன் அறிவு அழியாத ஆனந்தத் துக்கு வழிவகுக்கும். கண்ணுக்குப் புலப்படாததை 'இல்லை’ என்று சாதிப்பதில் இறங்கக்கூடாது.

கண்ணுக்கு புலப்படாத பல பொருட்களை ஏற்கிறோம். நமது கண்கள் அத்தனைக் காட்சி களையும் காட்டித் தருகிறது. ஆனால் நமது கண்களால் நம் கண்களையே (விழி  பார்வை பகுதி) பார்க்க இயலாது. கடவுளை, ஆன்மாவை பார்க்க இயலாது; உணரத்தான் இயலும். உலகத்தை இயக்கும் அந்தப் பரம்பொருள், நமது உடல் இயக்கத்திலும் ஆன்மா வடிவில் தென்படுகிறார். அவரை உணர ஆன்மிகம் தேவை. சுவையைச் சுவைத்து மகிழ உணவுக் கட்டுப்பாடும் தேவை. எதிர்சிந்தனை எல்லாவற்றையும் இழக்கவைக்கும். மனம் இருப்பவன் சிந்திக்க வேண்டும்; உண்மை புலப்படும்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.