Published:Updated:

கலகல கடைசி பக்கம்

ஃபேஸ்புக் பிரச்னைவீயெஸ்வி, ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

ஃபேஸ்புக் பிரச்னைவீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

கவான் ரமணர் உட்பட பலரும் 'ஐ’  அதாவது 'நான்’ என்னும் உணர்வை அழிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு ஐபோனைக்கூடத் துறக்க இயலவில்லை! 

நண்பர் ஒருவரும் அப்படித்தான், எப்போதும் ஐபோனும் கையுமாக அலைவார். இரு தினங்களுக்கு முன் கடும் கோபத்துடன் வந்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. அருகில் வந்ததும் அவருடைய சிடுசிடுப்புக்குக் காரணம் வினவினேன். 

'பின்னே என்ன சார்... இன்னிக்கு என்னோட பிறந்தநாள்...' என்றவரை இடமறித்து,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஓ! வாழ்த்துக்கள்...' என்று கைகொடுத்தேன்.

நண்பரின் முகம் லேசாக மலர்ந்தது.

'நீ இப்படி நேர்முகமா வாழ்த்தறது எவ்வளவு நல்லா இருக்கு. ஆனா, என் வீட்டுலதான்...' என்று இழுத்தவர் வார்த்தையை முடிக்காமல், பெருமூச்சு விட்டார்!

'என்னாச்சு? நல்ல நாளும் அதுவும் ஏதாவது பிரச்னையா?' என்று கேட்டேன்.

'ஆமாம்... இந்த ஐபோன்தான் பிரச்னை. என் மனைவி, மகன், மகள் மூணுபேரும் ஃபேஸ்புக்லதான் வாழ்த்து சொன்னாங்க. முகத்துக்கு நேரா ஒருத்தர்கூட என்னை வாழ்த்தவும் இல்லை, வாழ்த்த வயதில்லை என்று வணங்கவும் இல்லை!'

கலகல கடைசி பக்கம்

'அப்படியா?'

'ஆமாம். அதுவும் என் பசங்களோட முகநூல் ஸ்டேட்டஸைப் பார்க்கணுமே. 'இந்த உலகத்துலேயே என்னோட அப்பாதான் தி பெஸ்ட்... அவரைப் போல அன்பான, இனிமையான, பண்பான அப்பாவை எங்கும் பார்க்கமுடியாது. நூறு வயசு வரை இது மாதிரி அப்பாவாவே அவர் இருக்கணும்’னு இவங்க எழுத, அதுக்கு ஐநூறு லைக் வேற! இதையெல்லாம் நேர்ல சொன்னா குறைஞ்சா போயிடுவாங்க?'

நண்பரின் கவலைக்குக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொண்டேன். அவரை ஆற்றுப்படுத்தும் விதமாக, 'அதுக்கெல்லாம் இந்த காலத்து யூத்களுக்கு நேரம் கிடையாது சார்' என்றேன்.

ஆனாலும் நண்பர் விடுவதாக இல்லை. 'பிறந்த நாள் வாழ்த்து மட்டும் இல்லை சார்... காலேஜ் ஃபீஸ் கட்டணும்னாகூட என் பொண்ணு முகநூல்லேதான் எனக்கு மெஸேஜ் அனுப்புவாள். பணம் அனுப்பிவெச்சா, பீஸை கட்டிட்டு, ரசீதை ஸ்கேன் பண்ணி எனக்கு மெயில் பண்ணிடுவாள்.'

'நவீன கால யுவதி..'

'அவள் பரவாயில்லே. என் மகன் இன்னும் மோசம்! மாசக் கடைசில 'செலவுக்கு ஐநூறு ரூபாய் வேணும் டாடி. உங்க சட்டைப் பையில் இருந்து எடுத்துக்கலாமான்னு கேட்டு ஃபேஸ்புக்ல சாட் பண்ணுவான். இத்தனைக்கும் நான் வீட்லதான் இருப்பேன். நானும் வேறு வழி இல்லாமல், 'மாசக் கடைசி... கையில் பணம் இல்லை. எனக்குக் கடன் கொடுப்பாரும் யாரும் இல்லைன்’னு வெட்கத்தைவிட்டு பதில் போட்டாகணும்'' என்று வாட்டர் ஹீட்டராகக் கொதித்தார் நண்பர்!

ஆக, இந்த நவீன யுகத்தில் குழந்தைகள், அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் பேசிய மழலைச் சொல்லை மலரும் நினைவுகள் மாதிரி நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட வேண்டியதுதான் போலிருக்கிறது. அவர்கள் வளர்ந்த பின்னர், இந்த ஐபோன் யுகத்தில் மழலைச் சொல் நேரில் கிட்டாது. குழலோசையையும் யாழோசையையும்தான் கேட்டு இன்புற வேண்டும் போலிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism