Published:Updated:

திருமிகு திருவேங்கடம்!

ஸ்ரீ நிவாஸா... கோவிந்தா...

திருமிகு திருவேங்கடம்!

வார்புனல் அந்தண் அருவிகள் சூழ்ந்த திருவேங்கடம், இமையோர்கள் இனம் இனமாய் ஏத்தி இறைஞ்சி, மெய்ந்நா மனத்தால் வழிபடும் திருவேங்கடம், அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடம், செடியார் வினைகள் தீர்க்கும் திருவேங்கடம் என்றெல்லாம் ஆழ்வார்கள் போற்றிப் புகழும் புண்ணிய பூமி திருப்பதி திருமலை. 

இந்தத் தலத்தின் மகிமை குறித்து ஜனக மகாராஜருக்கு, அவரு டைய குருவான ஸதாநந்தர் விளக்கியதாக பவிஷ்யோத்ர புரா ணம் விவரிக்கிறது.

க்ருதே வ்ருஷாத்ரிம் வக்ஷ்யந்தி த்ரேதாயாம் அஞ்ஜநாலம்

த்வாபரே ஸேஷஸைலேதி கலெளஶ்ரீவேங்கடாசலம்

அதாவது, கிருதயுகத்தில் 'வ்ருஷாத்ரி’ என்றும், திரேதா யுகத்தில் 'அஞ்ஜனா சலம்’ என்றும், துவாபர யுகத்தில் 'சேஷ ஸைலம்’ என்றும், கலி யுகத்தில் 'ஸ்ரீ வேங்கடாசலம்’ என்றும் அழைக்கப்படும் புண்ணிய பூமி திருமலை என்கிறது அந்தப் புராணம். இந்தத் திருநாமங்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்புக் காரணங்கள் உண்டு.

'வ்ருஷாத்ரி’: வ்ருஷபன் என்ற ராட்சஸன், திருமலையில் தவம் செய்து வந்த ரிஷிகளைத் துன்புறுத்தி வந்தான். அவனுடைய துன்புறுத்தலைப் பொறுக்கமுடியாத அந்த ரிஷிகள், எம்பெருமானைச் சரணம் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். பகவானும் அவர்களைக் காக்க முடிவு செய்து, அதற்கான தருணம் எதிர்நோக்கி இருந்தார்.

திருமிகு திருவேங்கடம்!

அந்த ராட்சஸன் திருமலையில் தும்புரு தீர்த்தக் கரையில்  அருளும் (மூன்றுவேளை ஸ்நானம் செய்து) நரசிம்ம விக்கிரகத்துக்கு பூஜை செய்வது வழக்கம். அதுவும் எப்படி? பூஜையின் முடிவில் தமது தலையை பூவாகக் கிள்ளி எடுத்து எம்பெருமான் திருவடிகளில் அர்ப்பணம் செய்வானாம். மறுகணம் அவனது தலை மீண்டும் முளைத்துவிடுமாம்! நம்மால் தலையை அறுத்து அர்ப்பணிக்க முடியாது என்பதால், தலைமுடியை மட்டும் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஸோம யாகம் செய்யும் கர்த்தா மொட்டையடித்துக்கொண்டு அந்த யாகத்தை செய்ய வேண்டும் என சாஸ்திரம் கட்டளையிடு கிறது. திருமலை எம்பெருமானை சேவிப்பதும் ஒரு வகையில் ஸோம யாகம் செய்வதற்குச் சமானமானது. ஆகையால் மொட்டை அடித்துக் கொள்ளும் வழக்கம் வந்திருக்கலாம்.

சரி, கதைக்கு வருவோம். இவ்வாறு வ்ருஷபன் ஐந்தாயிரம் வருட காலம் எம்பெருமானை பூஜை செய்து வழிபட்டான். பகவான் எதிரில் தோன்றினார். ''வ்ருஷபா! உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என வினவினார். அதற்கு அந்த ராட்சஸன், ''கேஸவா! எனக்கு சொர்க்கமோ மோட்சமோ எதுவும் தேவை இல்லை. நான் வேண்டுவது யுத்த பிக்ஷை. நீயும் நானும் மல்யுத்தம் செய்ய வேண்டும்'' என்றான். பகவானும் சம்மதித்தார். இருவரும் மல்யுத்தம் செய்தனர். வெகுநேரம் நீடித்தது யுத்தம். கடைசியில் பகவான், ''அரக்கர் குலத்தில் பிறந்தவனே! எனது பௌருஷத்தை  பலத்தைப் பார்'' எனக் கூறி, தமது விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். பின்னர், ரிஷிகளைப் பலவாறு துன்புறுத்திய அவனைக் கொல்லக் கருதி, சக்ராயுதத்தால் அவனுடைய தலையைய் கொய்துவிட நிச்சயித்தார்.

''ராக்ஷஸா! இதோ இந்த சக்ராயுதத்தால் பழத்தை மரத்திலிருந்து எடுப்பது போல், உன் தலையை உன் சரீரத்திலிருந்து எடுக்கப் போகிறேன்'' என்றார்.

அதற்கு அந்த ராட்சஸன், ''சக்ரபாணியே! உங்களை சேவிக்கிறேன். இந்த சக்ராயுதத்தின் மகிமையை அறிவேன். இதன் அனுக்கிரஹத்தால் கீர்த்திமான் என்ற அரசன் கீர்த்தியை பெற்றான். நானும் இதன் சம்பந்தத்தால், உங்களின் திவ்ய இடத்தை அடைவது நிச்சயம்'' என்று கூறியபடி பகவானுடைய பாதங்களைப் பற்றிக்கொண்டான். திண்கழல்களன்றோ அவை!

ஏவமுக்த்வாஹரே: பாதௌ பஸ்பர்சவ்ருஷபாஸுர:

வரம்யயாசே வ்ருஷப:ஸைலோமதபிதோஸ்த்விதி

என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அத்துடன், ''சுவாமி! இந்த மலை இனி எனது பெயரால்

திருமிகு திருவேங்கடம்!

அழைக்கப்படட்டும்'' என்றும் வேண்டிக்கொண்டான். எம்பெருமானும் அதை ஏற்றுக்கொள்ள,  சக்ராயுதத்தால் அந்த ராட்சஸன் தனது சரீரத்தை விட்டான்.  கிருத யுகத்தில் 'வ்ருஷாத்ரி’ என திருமலை அழைக்கப்பட்டது.

அஞ்ஜனாத்ரி: அனுமனின் தாய் அஞ்ஜனாதேவி. திருமலையில் ஆகாஸ கங்கையில் தவம் செய்து அனுமனைப் பெற்றதால், அவளின் பெயரில் 'அஞ்ஜனாத்ரி’ என த்ரேதாயுகத்தில் அழைக்கப்பட்டது.

சேஷாசலம்: எம்பெருமானுடைய ஆக்ஞையால், ஆதிசேஷனின் அம்சமான மலை ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து, வாயுபகவானால் பூலோகத்தில் இறக்கப்பட்டதாம். இதையொட்டி, 'சேஷாசலம்’ என துவாபர யுகத்தில் அழைக்கப்பட்டது.

வேங்கடாசலம்: காளஹஸ்தியைச் சேர்ந்த மாதவன் என்கிற அந்தணன், வேத வேதாங்கங்களை நன்கு அறிந்தவனாய் கல்வியிற் சிறந்து விளங்கினான். அவனுடைய 21வது வயதில் பாண்டிய தேசத்தைச் சார்ந்த சந்திரலேகை என்கிற கன்னிகையை மணம் புரிந்தான். வெகுநாட்கள் சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்த மாதவனின் வாழ்வில் விதி விளையாடியது. வழிதவறிப்போய் குந்தளை என்கிற பஞ்சம வர்ணத்தைச் சார்ந்த கன்னிகையை மணம் புரிந்து அவளுடன் 12 வருட காலம் இல்லறம் நடத்தினான். ஒரு நாள் அவள் மரணமடையவே, கிருஷ்ணா நதி தீரத்திலிருந்து ஊர் திரும்பினான். அங்கு, இவனைக் கவனிப்பார் இல்லை.

இந்தத் தருணத்தில், திருமலைக்கு யாத்திரையாகச் செல்லும் அரசர்களைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்கள், கபில தீர்த்தக் கரையில் தங்கி மொட்டையடித்துக் கொண்டு நீராடி, பித்ரு தர்ப்பணாதிகளைச் செய்தனர். மாதவனும் அப்படியே பித்ருக்களை வழிபட்டான். மறுநாள் விடியற்காலையில், அரசர்களைத் தொடர்ந்து மாதவனும் மலை ஏறினான். திருமலையில் இவன் கால் பட்டதும் அவன் சரீரத்தில் ஓர் மாற்றம் தென்பட்டது. அதுவரை செய்த பாபங்களை வாந்தியாக எடுத்தான். அவன் சரீரத்திலிருந்து தோன்றிய அக்னி பாபங்களைச் சுட்டெரித்தது. மாதவன் திருமலை சம்பந்தத்தால் புனிதனானான்.

பிரம்மாதி தேவதைகள் அங்கு கூடினர். பிரம்மா மாதவனை அணைத்துக்கொண்டு, ''மாதவா! பாபம் நீங்கப்பெற்றாய்! திரு மலையில் ஸ்வாமி புஷ்கரிணியில் நீராடு. வராஹப் பெருமாளை தரிசி. அடுத்த பிறவியில் நீ ஆகாசராஜா எனும் பெயரில் அரசனாகப் பிறந்து, புகழுடன் விளங்குவாய்'' என ஆசீர்வதித்தார்.

பிறகுப் பிரம்மா திருமலைக்கு 'வேங்கடாசலம்’ என பெயர் சூட்டினார். 'வேம்’ என்றால் பாபங்கள்; 'கட’ என்றால் அழிக் கிறார்; அசலம் என்றால் மலை என்று பொருள்.

'எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை

வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே

வானோர் மனச் சுடரை தூண்டும் மலை’ (முதல் திருவந்தாதி  26) என்று பொய்கையாழ்வார் திருமலையைப் புகழ்கிறார்.

திருமிகு திருவேங்கடம்!

'செல்வம் வேண்டுமென்று விரும்புகிறவர்களும், கைவல்யம் அனுபவிக்க விரும்புபவர்களும், பகவானின் பக்தர்களும் ஆகிய மூவருடைய பாபங்களான பெரிய தீயை அணைத்து அவர்களுடைய மனச் சுடரைத் தூண்டுகிற மலை’ என்கிறது அவரது பாசுரம்.

இத்தகு மகிமைமிகு திருமலையை நாமும் தரிசித்து, திருவேங்கட முடையானின் பூவார்கழல்களைத் தொழுது வணங்குவோம்.

பூக்கிணற்றில் புஷ்பங்கள்...

திருமலையில் வேங்கடாசலபதி மட்டுமே குடிகொண்டுள்ளார். மற்றைய கடவுளருக்கு எனச் சிற்பமோ, சித்திரமோகூடக் கிடையாது. எனவே, மற்ற தெய்வங்களுக்கு உரித்தான புஷ்பங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாத்தப்படும் பாவனையுடன் வேங்கடாசலபதியின் பாத கமலங்களிலேயே சமர்ப்பிக்கப்படுகின்றன.

மற்ற தெய்வங்களுக்கும் சேர்த்துச் சமர்ப்பிக்கப்பட்ட புஷ்பங்களைத் தனது பிரசாதமாக வேங்கடாசலபதி வழங்குவது முறையல்ல என்பதால், அவர் சந்நிதியில் இருக்கும் புஷ்பங்களைப் பக்தர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, அவையனைத்தும் கோயிலை ஒட்டியிருக்கும் பூக்கிணற்றில் சேர்க்கப்படுகின்றன. இந்த நியதியை ஏற்படுத்தியவர் ராமானுஜர்.

திருமிகு திருவேங்கடம்!

மேலும், கோயில்களில் மூலவருக்குப் புஷ்பம் சாத்தும்போது மார்க்கண்டேயர், பிருகு, பிரம்மன், சங்கரன் ஆகிய மற்றைய கடவுளருக்கும் புஷ்பாஞ்சலி செய்யவேண்டும் என்பது ஆகமவிதி.
சுப்ரபாதம்- அனுதினமும் வேங்கடாசலபதி சந்நிதிமுன் இசைக்கப்படும் பள்ளி எழுச்சிப்பாடல். இது, 29 சம்ஸ்கிருதப் பாசுரங்களை உள்ளடக்கியது. இது, 14-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரதிவாதி பயங்கரம் அன்னமாச்சாரியார் அவர்களால் இயற்றப்பட்டது.

திருமலையில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். அகங்காரத்தைக் களைந்து ஆண்டவன் பாதங்களில் சரணடையும் தத்துவத்தையே இந்தப் பிரார்த்தனை உணர்த்துகிறது.

திருமலையில் முடி செலுத்துமிடத்துக்கு கல்யாணக் கட்டம் என்று பெயர். முன்னொரு காலத்தில் திருப்பதியில் கல்யாணி என்ற நதி ஓடியது. அதன் துறைகளில் பக்தர்கள் தங்கள் முடியை மழித்துக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு மலையேறுவது வழக்கம். அதனால் முடி காணிக்கை செலுத்தும் இடம், ‘கல்யாணி காட்’ என்றழைக்கப்பட்டு, பின்னர் கல்யாணக் கட்டமாகிவிட்டது.

- பவித்ரன், சென்னை

அடுத்த கட்டுரைக்கு