Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

Published:Updated:

கல்லுருவிலே கபாலி! 

ஒரு காலத்தில் தாருக வனத்து முனிவர்கள் சிவ வழிபாட்டைக் கைவிட்டு, வேள்வியே பொருளெனக் கொண்டு இறுமாந்திருந்தனர். அவர் மனைவியரும் கற்பொழுக்கத்திலே தமக்கு நிகராவர் யாரும் இலர் என்று செருக்குற்றிருந்தனர். இவர்களது செருக்கையடக்கவும், இவர்களைக் கரையேற்றவுமே, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக இவர்கள் முன் தோன்றிப் பிச்சை எற்றார் என்பது புராணக் கதை. கபாலம் ஏந்தி பிக்ஷைக்குப் புறப்படும் அந்தக் கபாலியைதான், அந்த பிக்ஷாடனர் உருவைத்தான்,

அருட்களஞ்சியம்

''வேதம் அசைக்கும் கோவணமும்

மெய்யில் நீறும், உள்ளாளக்

கீதம் இசைக்கும் கனிவாயும்

உள்ளே நகையும் கிண்கிணி சூழ்

பாதமலரும் பாதுகையும்

பலிகொள் கலனும் கொண்டு, இரதி

மாதர் கணவன் தவவேடம்

எடுத்தால் ஒத்து வரும்''

என்று பரஞ்சோதி முனிவர் கண்குளிரக் காண்கிறார்; காது குளிரப் பாடுகிறார். இதே காட்சியை நீங்களும் காண விரும்பினால் பிக்ஷாண்டார் கோயிலுக்குப் போய் கர்ப்பக் கிருஹத்தில் ஒரே இருட்டில் புதைந்து கிடக்கும் மூல விக்கிரகத்தைத் தேடவேண்டாம்; நேரே கும்பகோணம் சென்று இந்திரனும் சூரியனும் வழிபட்ட அந்த நாகேஸ்வர ஸ்வாமியை வலம் வந்து சுவரைப் பாருங்கள். அங்கே ஒரு மாடத்தில் காட்சி கொடுப்பார் கபாலி. ஆம். நல்ல கருங்கல் உருவிலேதான். உருவில் சில பாகம் சிதைந்து போய்விட்டதுதான். எத்தனைதான் அந்தச் சிலை சிதிலமாயிருந்தாலும் அந்தக் 'கீதம் இசைக்கும் கனிவாயும் உள்ளே நகையும்’  உருப்பெற்று விடுகிறது இந்தக் கல்லுருவிலே. அதையே பார்த்துக் கொண்டிருக்கலாம் பல மணி நேரம். பலிகொள் கபாலம் ஏந்தி, அந்த இறைவன், மன்மதனே தவக்கோலம் பூண்டு நிற்பது போல் நிற்கிறார் அங்கே. சோழசாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்த காலத்தில் உருவாகியிருக்க வேண்டும் இந்தச் சிலை. சோழ மன்னர்களது புகழ் இமயம் வரை எட்டி நின்றது போல இந்த இறைவன் திருவுருவமும், கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது. அழகிய கிரீடம் வேறே அணி செய்கிறது. தவக்கோலத்திலும் ஒரு கவர்ச்சி நிறைந்த கோலமாயிருக்கிறது. இந்த உருவினைக் கண்டு, தாருகவனத்து ரிஷி பத்தினிகள் கூடத் தம் வசம் இழந்தனர் என்றால் அது சந்தேகப்படத் தக்கதில்லைதான்!

- தொ.மு.பாஸ்கர தொண்டைமான்

**1947 தீபாவளி மலரில் இருந்து..

யாக ரட்சணம்

'அண்ணா! இப்போதே துண்டம் துண்டமாகக் காண்பாய் அந்த ஆசாமிகளை இந்த நிலத்திலே!' என்று லட்சுமணன் அரக்கர்கள் இருந்த விண்ணை நோக்கி, வில்லை நோக்கி, தன்னை நோக்கிச் சொன்னதும், ராமன் உடனே விச்வாமித்திரனுடைய அந்த வேள்விச் சாலையைப் 'பந்தோபஸ்து’ செய்ய விரும்பினான், மாமிசத் துண்டுகளும் இரத்தமும் ஹோம அக்கினியிலே விழுந்து விழாதபடி,  அவர்கள் செத்தும் கெடுத்தார்கள் யாகத்தை என்று ஏற்படாதபடி.

சரகூடமும் அபய ஹஸ்தமும் அதற்காக என்ன செய்தான்? வேள்விச் சாலையைச் சுற்றிப் பந்தல் போட்டது போல் ஒரு கூடம் அமைக்கத் தொடங்கினான். நல்லது: அதற்குச் சாமான்? கையிலோ வில்லும் அம்பும்தான்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். ராமனோ தன் ஆயுதங்களாகிய அம்புகளைக் கொண்டே எங்கும் ஒரே புல்லுப் பந்தல் வேய்ந்துவிட்டானாம்;

அம்புகளை இடை விடாமல் தொடுத்துத் தொடுத்து, மேலே மேலே பின்னல் பின்னலாகத் தொடுத்து, அந்த அம்புக் கூட்டங்களின் நெருக்கத்தினாலேயே அந்த வேள்விச் சாலையை மறைத்துப் பாதுகாக்கும் ஒரு கூடம் போலே செய்துவிட்டானாம் ராமன். இதைச் சர கூடம் என்று சொல்வதுண்டு. முனிவர்களோ அரக்கர்களைக் கண்டதும் நடுங்கி, ராமனை அபயம் வேண்டுகிறார்கள்:

நஞ்(சு)ட எழுதலும் நடுங்கி நாள்மதிச்

செஞ்சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,

வஞ்சனை அரக்கரை வெருவி மாதவர்,

'அஞ்சன வண்ண! நின் அபயம்யாம்' என்றார்

அமிர்தத்திற்கு ஆசைப்பட்டுப் பாற்கடல் கடையும் போது 'கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ போல் கொடிய விஷம் தோன்றியதும், தேவர்கள் எல்லாம் நடுங்கிச் சிவபெருமானைச் சரணமடைந்தார்களல்லவா? அப்படியே கரிய கொடிய விஷயம் போன்ற வஞ்சனை நிறைந்த அரக்கர்களைக் கண்டதும் நடுங்கிப்போன முனிவர்களும் ராமனைச் சரணமடைந்தார்களாம். கம்பனுடைய சைவ வைஷ்ணவ சமரஸ உணர்ச்சிக்கு இந்த உபமானமும் ஒரு சாட்சி.

அந்த முனிவர்களுக்கு ராமன் அபயம் அளித்துக் கொண்டே வில் நாணையும் இழுத்துச் செவிப்புறம் நிறுத்துவதும், அம்புகளைச் சோனா மாரியாகப் பொழிந்து ராக்ஷஸ வதம் செய்வதும் என்ன படு வேகமாக நடைபெறுகின்றன!

'செவித்தலம் நிறுத்தி'ய கோதண்டத்தின் 'தெய்வ நாண்' எத்தனை பாணங்களை உதைத்துத் தள்ளியிருக்க வேண்டும், அந்த ராம பாணங்கள் எத்தனை ராட்சஸர்களை வதைத்துத் தள்ளியிருக்க வேண்டும்!  என்றெல்லாம் சொல்லாமலே, 'அந்த நிலப்பகுதி கடலும் குன்றும் ஆகிவிட்டது!' என்று சொல்வதிலேதான் என்ன சொற்செட்டு!

புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்,

குவித்தனன் அரக்கர்தம் சிரத்தின் குன்றமே!

அருட்களஞ்சியம்

யுத்த சமயத்திலே ராமன் வேள்விச் சாலைக்கு அம்புப் பந்தல் போட்டது போல் இப்போது பிணக் குன்றுகளுக்கும் இரத்தக் கடலுக்கும் மேலே ஒரு பந்தல் போட்டுவிட்டனவாம் பிணம் தின்ன வந்த கழுகு முதலிய பறவைகளெல்லாம். அந்தப் பறவைப் பந்தலைக் கிழித்துக் கொண்டு இறங்கியதாம். ராமன்மீது தேவர்களின் பூமழை. அவ்வளவு மிகுதியாக அள்ளி அள்ளிச் சொரிந்து கொண்டேயிருந்தார்களாம் பூக்களை.

பந்தரைக் கிழித்தது பரந்த பூமழை;

அந்தர துந்துமி அலையின் ஆர்த்தன;

இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்,

சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.

வேள்வி இனிது நிறைவேறியதால் விச்வாமித்திரன் உள்ளம் குளிர்ந்து போயிற்று. அந்த இனிய சிந்தனையி லிருந்து பிறக்கும் உபசாரமும் எவ்வளவோ குளிர்ச்சி யாகப் பூமழை பொழிவது போலவே இருக்கவேண்டு மல்லவா? வசீகரமான இன்னிசை மழைபோலவும் இருந்தது அந்தப்பேச்சு என்றும் ஊகித்துக் கொள்ளலாம், 'இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான்' என்று கம்பர் கூறுவதிலிருந்து.

மறுநாள் காலையிலே ராமன் விச்வா மித்திரனைத் தொழுது நின்று, '’இன்றைக்கு அடியேன் செய்ய வேண்டிய பணி யாதோ? நியமித்தருள வேணும்'' என்று வினவினான் வெகு விநயமாக. அதற்கு விச்வாமித்திரன்,

  ''அரிய யான்சொலின், ஐய! நிற்(கு)

  அரியதொன்(று) இல்லை;

   பெரிய காரியம் உள, அவை

   முடிப்பது பின்னர்;

  விரியும் வார்புனல் மருதம்சூழ்

மிதிலையர் கோமான்

புரியும் வேள்வியும் காண்டும்நாம்;

எழுகெ''ன்று போனார்.

'’ராவண வதம்'' என்ற அந்தத் தனிப் பெருங்காரியத்திற்கு இன்றி யமையாத சீதா கல்யாணத்தை அடுத்தபடியாகக் குறிப்பிட்ட போதிலும், இதையும் குறிப்பாகவே  மூடு மந்திரமாகவே  சொல்லு கிறான். இந்த வேள்வியிலிருந்து அந்த வேள்விக்குப் போகலாம் என்றுதான் சொல்லுகிறான். ஸித்தாச்ரம வேள்வியிலிருந்து மிதிலையில் ஜனகன் நடத்தும் வேள்வி காணப் போகலாம் என்கிறான். கல்யாணம் என்ற மண வேள்வியை இப்போது ராமனுக்குத் தெரிய வேண்டாமென்று மறைத்து விடுகிறான்.

அந்த மிதிலையைத்தான் எவ்வளவு வசீகரமாக, '’விரியும் வார்புனல் மருதம்சூழ் மிதிலை' என்று அந்த நீர்வள நிலவளங் களைச் சுருங்கச் சொல்லி வர்ணிக்கிறான்! '’அங்கே நடக்கும் யாகத்தையும் போய்ப் பார்ப்போம்' என்று சொல்லிப் 'புறப்படு' என்று துரிதப்படுத்துகிறான். இந்த '’எழுக' என்ற சிறு வார்த்தையிலேயே, அந்தக் கல்யாண விஷயமாக விச்வாமித்திரனுக்கு உள்ள வேகத்தை எவ்வளவு நன்றாக மறைத்துக் காட்டுகிறான் கவிஞன்!

அமிர்தம் கடைந்த கதை!

முனிவன் ராம லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு சோணை என்ற ஆற்றின் கரைக்கு வந்ததும் சூரியாஸ்தமனம் ஆகிவிட்டது. அன்றிரவு மூவரும் அந்த ஆற்றங் கரையிலே ஒரு சோலையில் தங்கினார்கள். '’இந்தச் சோலையில் ஏதாவது விசேஷம் உண்டா?' என்று ராமன் கேட்டான். அதற்கு விச்வாமித்திரன்; '’இங்கே காசியப மஹரிஷியின் மனைவியாகிய திதி என்பவள் தவம் செய்தாள். அவளுடைய புத்திரர்களான அசுரர்கள் அமிர்தம் உண்ட தேவர்களை ஜயிக்க முடியாமல் மாண்டு போனார்கள். அந்தப் புத்திர சோகத்திற்குப் பின்புதான் இங்கே அந்த அம்மாள் தவம் செய்யத் தொடங்கினாள்' என்ற பீடிகையுடன் அமிர்தம் கடைந்த கதையைச் சொல்லத் தொடங்கினான். ராம லட்சுமணர்கள் ஆவலாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

'’யாவர்க்கும் தாயாகிய அழகுத் தெய்வம் வைகுண்ட லோகத்திலே தன் பரிபூர்ண ஸௌந்தர்யத்துடன் மகாலக்ஷ்மியாக வீற்றிருக்கிறாளல்லவா? ஒரு வித்யாதரப் பெண் ஒரு சமயம் யாழ்கொண்டு இசை பாடிப் புகழ்ந்ததும், அந்த அழகுத் தேவி உத்ஸாகமாய்த் தனது பூமாலை ஒன்றைக் கூந்தலிலிருந்து வெகுமானமாய்க் கொடுத்தாள். அந்த மாலையை அவள் தன் யாழியிலே கட்டிக்கொண்டு குதூகலமாய் அந்த விஷ்ணு லோகத்திலிருந்து பிரம லோகத்திற்கு வந்தாள். வழியில் ஸாக்ஷாத் துர்வாஸ மஹரிஷியை  கோபத்திற்கும் சாபத்திற்கும் பேர் போன அந்த முனிவரையே  சந்தித்து விட்டாள்.

யாழும் கையுமாக அக் கன்னிகையைக் கண்டதும் ஆறாத கோபங்களும் ஆறிப் போய்விட்டன துர்வாஸருக்கு!

அவள் அடிகளை வணங்கித் துதித்து நின்றார் முனிவர். அந்த முனிவர் அப்படி நின்றதும் அவளுக்குக் குதூகலம் அதிகரித்து விட்டது.

'’ஸர்வேச்வரனுடைய மார்பிலே இருந்து உயிர்களை எல்லாம் ஈன்றெடுத்த தாயாகிய அழகுத் தெய்வம் முடியிலே சூட்டி யிருந்த மாலை இது!' என்று வித்யாதரப் பெண் சொல்லிக் கொடுத்ததும் துர்வாஸருக்கும் உத்ஸாகம் பிறந்து விட்டது பிரமாதமாக.

குதூகலத்தோடு ஆடிக்கொண்டு தேவலோகம் போகிறார் துர்வாஸ மஹரிஷி. எதிரே இவரும் வியக்கும்படி அந்த ஸ்வர்க்க லோகத்திலே தேவேந்திரன் பவனி வந்தான் ஐராவதத்தின் மேல் ஏறி!

பவனி வரும் தேவேந்திரனுடைய ஆடம்பர வைபவங்களைக் கண் முன் கொண்டு வரும் போதே, எதிரே பைத்தியம் பிடித்தவர்போல் ஆடிக்கொண்டே வரும் துர்வாஸரையும் ராம லட்சுமணர்களின் மனக் கண் முன் நிறுத்துகிறான் விச்வாமித்திரன்.

பவனியை வியந்து நோக்கிய துர்வாஸ முனிவர் இந்தப் படாடோபங்களைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போகிறாரா? யானை மேல் இருக்கும் தேவராஜா, எதிரே தெய்வப் பெண்களின் நடனத்தைப் பரிகசிப்பது போல் ஆடி ஆடி கடந்து வரும் முனிவரை மரியாதை செய்யப் போகிறானா? இனி என்ன நடக்கப் போகிறது?  என்றெல்லாம் ராம லட்சுமணர்களின் உள்ளம் எதிர்பார்த்து மேலே மேலே கதை கேட்பதில் முனைந்திருக்குமல்லவா?

**  3.9.44, 10.9.44 ஆனந்த விகடன்

இதழ்களில் இருந்து...