Published:Updated:

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!
முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

ஸ்ரீநிவாஸா... கோவிந்தா...

ன்கவிபாடும் பரமகவிகள் என்று நம்மாழ்வாராலும், செந்தமிழ் பாடுவார் என்று திருமங்கையாழ்வாராலும் ஆதி பக்தர்கள் என்று ஸ்வாமி தேசிகனாலும் போற்றப் பட்டவர்கள் முதலாழ்வார்கள். பொய்கையாழ்வார்  பூதத்தாழ்வார்  பேயாழ்வார் என்று அழைக்கப் படும் முதலாழ்வார்கள் ஐப்பசி மாதத்தில் அவதரித்தார்கள். கல்லுயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சியிலே கால்நிலந் தோய்ந்து விண்ணோர் தொழும் திருவெஃகாவில் பெற்றாமரைப் பொய்கையில் ஐப்பசி மாதத்தில் சிரவண நட்சத்திரத்தில் ஸ்ரீ பாஞ்சஜந்ய அம்சமாக அவதரித்தவர் பொய்கையாழ்வார். 

கடல்மல்லைத் தலசயனம் என்று அழைக்கப்படும் திருக்கடல் மல்லையில் ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் கௌமோதகீ என்கிற கதாம்சராய் பூதத்தாழ்வார் உத்பல புஷ்பத்தில் அவதரித்தார். தேனமர் சோலை மாடமாமயிலை என்று போற்றப்படும் மயிலாப்பூரில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கிணற்றிலே அல்லிப் பூவில் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் ஸ்ரீ நந்தகாம்சராய் (வாள்) பேயாழ்வார் அவதரித்தார்.

மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் பகவத் விஷயத்தில் உண்டான ஆராக்காதல் முதலாழ்வார்களுக்கு மிகுந்து காணப்பட்டதால் நித்யஸூரிகளுக்கு ஒப்பாக இவர்கள் திகழ்ந்தனர். 'சிறந்தார் கெழுதுணையும் செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமாவையேன்’ (ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உய்வதற்குத் துணையாகின்ற செந்தாமரைக் கண்ணனான எம்பெருமானுடைய திருநாமத்தை மறப்பவர்களை மனுஷ்யப் பிறவியில் பிறந்தவர்களாக நினைக்க மாட்டேன்) என்று பூதத்தாழ்வார் அருளியபடி, அப்படிப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து வசிப்பதைக் காட்டிலும் காட்டில் வசிக்கலாமென்கிற எண்ணத்துடன் இந்த ஆழ்வார்கள் காடுகளில் வசிப்பர்.

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

இவ்வாறு காடு காடாகத் தேடிச் செல்லுகிற காலத்தில் திருக்கோவலூர் க்ஷேத்திரத்தில் மழையையும் காற்றையும் கண்டு ஒரு வீட்டின் இடைக்கழியில் (வாயிலுக்கும் உள்புறத்துக்கும் நடுவிலுள்ள பிரதேசத்தில்) பொய்கையாழ்வார் படுத்துக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் பூதத்தாழ்வார் மழைக்காக ஒதுங்க நினைத்தவர் இடைக்கழிக்கு வந்து சேர்ந்தார். அவ்விடமோ மிகவும் சிறியது. ஒருவராய் இருந்தால் படுக்கலாம். இருவரானால் படுக்க முடியாது.

வந்தவரை எதிர் கொண்டழைத்த பொய்கை ஆழ்வார் ’வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் ப்ரணமேத் புவி / தயோர் மத்யகத: ஸ்ரீ மாந் ஸங்க சக்ர கதாதர:' என்று சொல்லி நமஸ்கரித்து வரவேற்றார். இருவரும் இடைக்கழியிலே உட்கார்ந்திருந்தனர். சிறிதுநேரம் சென்றது. மூன்றாமவர் பேயாழ்வார் அவ்விடம் வந்து சேர்ந்தார். ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம்  மூன்றாமவர் வந்தால் உட்கார இடமில்லை. ஆகவே, மூன்று பேரும் நின்றுகொண்டு இருந்தனர்.

திருக்கோவலூர் எம்பெருமான் த்ரிவிக்ரமன் பெரியபிராட்டியாருடன் கூடியவனாய் இந்த பாகவதோத்தமர்கள் மத்தியில் புகுந்து அவர்களை நெருக்கினான்.

'நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா!’ என்று இந்நிகழ்ச்சிதனைப் பொய்கையாழ்வார் பாசுரமிட்டார். எம்பெருமான் இவ்வாறாக இவர்களை நெருக்கவே, ஆலையில் இட்ட கரும்பிலிருந்து கரும்புச்சாறு வெளியாவது போல இவர்களுக்கு ஞானம் பிறந்து  ஞானம் முற்றி பக்தியாகி  பக்தி மேலிட அவனை நீங்கமாட்டாதவர்களாய் எம்பெருமானுடைய வைபவங்களை தலா நூறு பாசுரங்கள் வீதம் பாடினர். இவர்களுடைய திவ்யப்ரபந்தமாகிய தீபத்தினால் (விளக்கினால்) உலகத்து அஞ்ஞானம் (அறிவின்மை) என்கிற அந்தகாரம் (இருள்) நீங்கியது.

வ்யாகரண சாஸ்திரத்தை உலகில் நடையாடச் செய்த பெருமை பாணிநி  காத்யாயநர்  பதஞ்ஜலி என்கிற மூன்று மஹரிஷிகளைச் சாரும். அந்த மூன்று ரிஷிகளும் ஸரீரத்தால் வேறுபட்டிருந்தாலும் அபிப்ராயத்தால் ஒத்த கருத்தை உடையவர்களாக இருந்து, அர்த்த ஸரீரத்தால் ஒன்றாக இருந்தார்கள். அவ்வாறே முதலாழ்வார்களும் திகழ்கின்றனர்.

'இம்மூவர்க்கும் அர்த்தமொன்றே. மூன்று ரிஷிகள் கூடி ஒரு வ்யாகரணத்துக்குக் கர்த்தாக் களானாற்போலே கர்த்ருபேத முண்டேயாகிலும் அர்த்த ஸரீரம் ஒன்று. (த்ரிமுநி வ்யாகரணம்) என்னுமாப்போலே’ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம் ரசிக்கத் தக்கது.

முதலாழ்வார்களின் பாசுரங்களில் இருந்து திருவேங்கடமுடையானை அவர்கள் துதித்த பகுதிகளிலிருந்து சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

உணர்வாரார் உன்பெருமை ஊழிதோறூழி

உணர்வாரார் உன்னுருவம் தன்னை  உணர்வாரார்

விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்!

நால்வேதப் பண்ணகத்தாய்! நீ கிடந்த பால்.

                 (பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதி  68)

'ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பவனே! இந்நிலவுலகிலும் அவதாரம் செய்தவனே! திருவேங்கட மலையில் நிற்பவனே! ஸ்வரத்தை முக்கியமாக உடைய நான்கு வேதங்களிலும் விளங்குபவனே! உன்னுடைய பெருமையை அறிய வல்லவர் யார்? கல்பங்கள்தோறும் ஆராய்ந்து

பார்த்தாலும் உன்னுடைய ஸ்வரூபத்தையும், ரூபத்தையும் யார் அறிய முடியும்? நீ பள்ளிகொண்டுள்ள ஷீராப்தியை (பாற்கடலை) யார் அளவிட்டு அறிய முடியும்?’ என்பது இப் பாசுரத்தின் திரண்ட பொருள்.

'மரம் போல் அழியக்கூடிய ஒரே தேஹத்தில் (ஸரீரத்தில்) அழுந்திக்கிடக்கும் ஜீவன் ப்ரக்ருதியினால் மயக்கப்பட்டுக் கஷ்டப்படுகிறான். தன்னிடம் மகிழ்வுற்றவனும் தன்னை விட வேறுபட்டவனுமான எம்பெருமானையும் அவனுடைய பெருமையையும் எப்போது காண்கிறானோ அப்போது வருத்தம் நீங்கப் பெறுகிறான்’ என்று உபநிஷதம் கூறுவதுபோல் கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமானே! உன்னை யார் உணர்வார்?

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

விண்ணகத்தாய், மண்ணகத்தாய் என்பதால் எம்பெருமான் பூமியில் அவதரித்தபடியால் ஸௌலப்யம் பேசப்படுகிறது. 'கடல் கிட்டிற்றென்னா பரிச்சேதிக்கப் போகாதிறே’ என்பது இங்குள்ள உரை. சமுத்திரம் அருகில் இருக்கிறபடியால் அது அளவிடக் கூடியதா? வேங்கடத்தாய் ஸம்ஸாரிகளுடைய ஸகலவித துக்கங்களும் நீங்கும்படித் திருமலையிலே வந்து நிற்கிறவனே! உன்னாலும் அறியவொண்ணாது உன் ஐஸ்வர்யம்.

இனி, பூதத்தாழ்வார் பாசுரங்களில் ஒன்றைப் பார்ப்போம்

போது அறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு, ஆங்கலர்ந்த

போதரிந்து கொண்டேத்தும் போது, உள்ளம்  போது

மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல

அணிவேங்கடவன் பேராய்ந்து.

    (பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி 72)

'குரங்குகள் விடியற்காலம் கண்விழித்து எழுந்து சென்று புஷ்பங்களுடன் கூடிய சுனைகளிலே நீராடி அப்போதே மலர்ந்த புஷ்பங்களைப் பறித்துக்கொண்டு வந்து ஸமர்ப்பித்து வேங்கடவனைத் துதி செய்கின்றன. மனமே! நீயும் அவ்வாறே செய்யப் புறப்படுவாயாக. உலகத்துக்கு ஆபரணம் போலுள்ள திருமலை எம்பெருமானுடைய திருநாமங்களை அநுஸந்தாநம் செய்துகொண்டு வேங்கடவன் திருவடித் தாமரைக்கே சென்று சேரும்படி புஷ்பங்களை ஸமர்ப்பணம் செய்!’ என்பது பாசுரத்தின் பொருள். கஜேந்த்ராழ்வான் எம்பெருமானுக்குப் பூவைப் பறிக்கும்போது முதலை கவ்விற்று. திருமலையில் உள்ள சுனைகளில் முதலைகள் இருந்தாலும், தேச மகிமையால் பக்தர்களுக்குத் தீங்கு இழைக்காமல் இருப்பதாக இங்கு வியாக்கியானம்.

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

வானரங்கள் மலர்ந்த பூக்களாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றன. அப்படிப்பட்ட பூக்களைப் பறிக்கின்றன. பக்திக்குப் போக்கு வீடாக ஒரு சப்தத்தை எழுப்பித் துதிக்கின்றன. 'மந்தி பாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்’ என்று திருப்பாணாழ்வார் அருளியபடி நித்யஸூரிகளின் ஸாமகானத்தையும் வானரங்களின் சப்தத்தையும் கவனிக்கும் எம்பெருமான் பக்தியை மட்டும் கணிசித்து ஏற்றுக்கொள்கிறான்.

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ் தாழ்ந்து, அருவி

உகுமதத்தால் கால் கழுவிக் கையால்  மிகு மதத்தேன்

விண்டமலர் கொண்டு விறல் வேங்கடவனையே,

கண்டு வணங்கும் களிறு.

          (பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி 70)

முதலாழ்வார்கள் போற்றிய வேங்கடவன்!

'யானை மத்தகம், கன்னம் இவற்றினின்று பாய்ந்து வாயிலே புகுகின்ற மதஜலத்தால் வாய் கொப்பளித்து (ஆசமனம் பண்ணி) மேலிருந்து கீழ்வரை அருவிபோல் வந்து பெருகுகின்ற மதஜலத்தினால் கால்களைக் கழுவிக்கொண்டு துதிக்கையினால் மிகுந்த மதத்தை உண்டு பண்ணக்கூடிய தேனையுடைய மலர்ந்த பூக்களைக் கொண்டு (திருமலையில் அறிவற்ற மிருகங்களுக்கும் தன் விஷயத்தில் ஞானத்தையும் பக்தியையும் உண்டாக்க வல்லவனான) வேங்கடவனை வணங்குகின்றது’ என்பது மேற்கூறிய பாசுரத்தின் பொருள். வேங்கட வெற்பென விளங்கும் வேதவெற்பான (மலையான) திருமலையையும் வேங்கடவனையும் முதலாழ்வார்கள் முப்பத்தெட்டு பாசுரங்களால் விளக்கி அருளியுள்ளனர்.

முதலாழ்வார்கள் திருவடிகளே ஸரணம்!

அடுத்த கட்டுரைக்கு