Published:Updated:

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

ஸ்ரீநிவாஸா... கோவிந்தா...ஓவியங்கள்: ஜெ.பி.

'வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற் கென்னை விதிக்கிற்றியே’ என்றும், 'காட்டில் வேங்கடம்’ என்றும் கோதைப் பிராட்டியாலும், 'விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா அடியேனிடரைக் களையாயே’ என்று திருமங்கையாழ்வாராலும், 'இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்’ எனத் திருவரகத்தமுதனாராலும், 'வேங்கடவெற்பன விளங்கும் வேத வெற்பே’ என்று ஸ்வாமி தேசிகனாலும் மற்றமுள்ள ஆசார்யர்களாலும் சீர் கலந்த சொற்களால் சீர் மன்னு செந்தமிழ் மாலை கொண்டு துதிக்கப்பெற்ற திருவேங்கடமுடையான் உறையும் திருமலையின் அடிவாரத்திலிருந்து எம்பெருமான் ஸ்ரீ நிவாஸன் நித்யவாஸம் புரியும் ஆனந்தவிமானம் வரையிலும் உள்ள சில இடங்கள், பக்தர்கள் அவசியம் தரிசிக்கவேண்டியவை. அந்தப் புண்ணிய இடங்கள் சிலவற்றை நாமும் தரிசிப்போம். 

பாதாள மண்டபம்: இது மலை அடிவாரத்தில் உள்ளது.ஸ்ரீ நிவா ஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரிய தாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர் கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

தலயேரு குண்டு: பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

கும்மர மண்டபம்: தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீ நிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்களைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

முக்கு பாவி: திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். 'முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு  என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

த்ரோவ்வ நரஸிம்முடு: திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.

கண்டா மண்டபம்: திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி  சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் இந்த கண்டா  நாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே சாப்பிடுவார்களாம்.

மோகாள்ள முடுபு: திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது.

அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்க ளாம். எம்பெருமானாருக்கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

அவ்வசரிகோண: மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. 'அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.

த்ரோவ்வ பாஷ்யகாருலு: திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. 'த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.

ஸார்ல பெட்டெலு: மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!

இனி, திருமலையை அடைந்தவுடன் அங்கே இருக்கும் சில இடங்களை இப்போது தரிசிப்போம்.

ஹைஜ ஸிலா தோரணம்: திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

நாராயணகிரி பாதாலு: பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மாயாவீ பரமாநந்தம் த்யக்த்வா வைகுண்ட முத்தமம்

ஸ்வாமி புஷ்கரிணீ தீரே ரமயா ஸஹ மோததே

என்று புராணம் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்தி லிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.

அடிவாரம் முதல் ஆனந்த நிலையம் வரை!

இந்த இடங்கள் மட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபமும் கொலு மண்டபமும், திருமலை நம்பி ஸந்நிதியும், அநந்தாழ்வான் தோட்ட மும், வஸந்த மண்டபமும் திருமலையில் உள்ளன. மேலும் ஸ்ரீ மத் அழகியசிங்கர் நிர்மாணித்துள்ள ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம், பரகால மடம், பெரிய ஜீயர் மடம், சின்ன ஜீயர் மடம் ஆகியனவும் திருமலையில் அழகுற மிளிர்கின்றன.தேவஸ்தானத்தார் தெலுங்கு மொழியில் பிரசுரித்துள்ள ஓர் நூலை உறுதுணையாகக் கொண்டு அடியேன் இவ்விஷயங்களைப் பகிர்ந்துள்ளேன்.

அடுத்த கட்டுரைக்கு