
கணபதியே சரணம்!ச.அருண்
தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 18 கிலோமீட்டரில் அமைந்துள்ள தலம் மெலட்டூர் என்கிற உன்னதபுரம். உன்னதபுரம் என்பதுதான் இந்தத் திருத்தலத்தின் முதற் பெயராகும். பாகவத மேளாக்களுக்குப் பெயர்பெற்ற ஊராக விளங்குவதால், மேளத்தூர் எனும் பெயர் பெற்றது, அப்பெயர் நாளடைவில் திரிந்து மெலட்டூர் என்றானது.
ஸ்தல வரலாறு: இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஸித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி தலமானது, ஸ்ரீகர்க மஹரிஷியின் ஞான புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் 81வது தலமாக அமைந்திருக்கிறது. குரு பரிகாரத் தலமான தென்குடி திட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்திக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற பெயர் வந்ததன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு கூறப்படுகிறது.
1899ம் ஆண்டு உத்தரவாஹினியாக பாயும் காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மிதந்தபடி வந்தவர்தான் இந்தக் கோயிலில் அருள்புரியும் கணபதி. அதனால், இவருக்கு 'மிதந்தீஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. தெற்கு திசை பார்த்தபடி கரை ஒதுங்கிய கணபதி விக்கிரஹத்தை கண்டெடுத்த அன்பர் ஒருவர் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தார். விநாயகரின் இந்தத் திருமேனி உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தோன்றியதாக சிவாசார்யார்கள் கூறுகின்றனர். இந்த விநாயகரின் கழுத்தை ஒட்டியபடி ருத்திராட்ச மாலை அணி செய்கிறது.

தெற்கு நோக்கி அமைந்துள்ள கோபுர வாயிலை நோக்கியவாறே, தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கிறார் ஸித்தி புத்தி சமேத விநாயகர். தெற்கு பார்த்து அருள்வதால் இவருக்கு தட்சிணாமூர்த்தி விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விநாயகரின் தனிக் கோயிலாக இந்தக் கோயில் இருந்தாலும் சிவாலயம் போலவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். சிவாலயத்தில் நடராஜ பெருமான் திருவுருவம் அமைந்திருப்பது போலவே இந்தக் கோயிலில் நர்த்தன கணபதி அருள் புரிகின்றார். அதேபோல் அஸ்திர தேவரைப் போலவே சூலாயுதம் தாங்கி சூலத்துறை கணபதியும் காட்சி அளிக்கிறார். இவர்களுடன் ஸித்தி புத்தி சமேதராக, செப்புத்திருமேனியில் சிரித்தவண்ணம் காட்சியளிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகர்.
மூலவர் சக்தி சமேதராய் இருந்தபோதிலும், ஸித்தி புத்தி தேவிமார்கள் சிலா ரூபமாக ப்ரதிஷ்டை செய்யப்படவில்லை. மாறாக மூலவரின் பீடத்திலேயே மந்த்ர ஸ்வரூபத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. சிவ சொரூபமாகவே விநாயகர் வீற்றிருப்பதால், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத வண்ணம், விநாயகப் பெருமானின் சந்நிதிக்கு, இடப்புறத்தில் யோக நிஷ்டையில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் ஸ்ரீகும்ப சண்டிகேஸ்வரர்.

விவாஹ வரமருளும் விநாயகர் : திருமணம் தடைப்பட்டு வரும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தி விநாயகரிடம் வேண்டிக் கொண்டால், உடனே திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேபோல் தம்பதியரிடையே கருத்து வேற்றுமை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பல பிரச்னைகளையும் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் தட்சிணாமூர்த்தி விநாயகர்.
வழிபடும் முறை : வெள்ளெருக்கம் பூவைப் ஓரிரவு முழுவது பாலில் போட்டு வைத்தால் அந்தப் பாலைத் தயிராய்த் திரிக்குமளவு தன் சூட்டையெல்லாம் பரிவர்த்தனை செய்து குளிர்ந்துவிடுகிறது அந்த எருக்கு மலர். அவ்வாறு குளிர்ந்த அம்மலரை விநாயகப் பெருமானுக்குச் சாற்றி வழிபடுவது, திருமண பாக்கியத்தைத் துரிதப்படுத்தும் என்கின்றனர் சான்றோர். அதேபோல்

அமராரவம்’ எனப்படும் நாயுருவிச் செடியின் மலரும், கமுக மலரும் இந்த கணேசப் பெருமானுக்கு, மிகவும் உகந்தவையாம். திருமண வரம் வேண்டி வருவோர்க்கு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, பங்காள மஞ்சள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை, திருமண வரம் வேண்டும் பக்தர்களின் கையில் ஒரு கங்கணம் போல் கட்டுகின்றனர். அவ்வாறு கட்டப்பட்ட நாளிலிருந்து, ஒரு மண்டலத்துக்குள் திருமணம் கைகூடி வருவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.

திருவிழா: ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பத்து நாட்கள் ப்ரம்மோற்ஸவம் நடைபெறுகிறது. குறிப்பாக ஐந்தாம் திருநாள், ஏழாம் திருநாள் மற்றும் ஒன்பதாம் திருநாள் ஆகியவை வெகு சிறப்புடைவையாகக் கூறப்படுகின்றன. ஐந்தாம் திருநாளன்று

ஆத்ம பூஜை’ கோலத்தில், தன்னைத்தானே விநாயகப் பெருமான் பூஜித்துக் கொள்ளும் திருக்காட்சி அரங்கேறுகிறது. ஏழாம் நாள் உற்ஸவத்தில், விநாயகப் பெருமான், ஸ்ரீஸித்தி புத்தி தேவியரை மணந்தருளும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் கணேசப் பெருமானின் திருத்தேர் பவனி அரங்கேறுகிறது. சுவாமியின் வீதியுலா ஏழு சுற்றுக்களைக் கொண்டதாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவை முறையே, மங்கல இசை முழங்க இரு சுற்றுக்களும், வேத பாராயணத்தோடு இரு சுற்றுக்களும், சங்கீத முழக்கத்தோடு ஒரு சுற்றும், மௌன நிலையில் ஒரு சுற்றும், இவை அத்தனையும் சேர்ந்த ஸமஷ்டி கோஷத்தோடு ஏழாம் சுற்றும் என நிறைவுறுகிறது.
பிரம்மோற்ஸவத்தின் நிறைவுநாளில் 'விருத்த காவேரி’யில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி விநாயகருக்குத் தீர்த்தவாரி வைபவமும் நடைபெறுகிறது.

எங்கே இருக்கிறது? தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில், 18 கிலோமீட்டர் தொலைவில் திட்டையை அடுத்து அமைந்துள்ளது மெலட்டூர். பேருந்து மூலம் வருபவர்களுக்கு, தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து 34கி, 34ஙி, 48கி எண்ணுள்ள பேருந்துகள் மெலட்டூருக்குச் செல்கின்றன. காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
படங்கள்: ம.அரவிந்த்