சுந்தரநாராயணன் பத்மா மாமியிடம் விட்டேற்றியாக பதில் சொல்லிவிட்டு வந்தாலும்கூட, பெருமாள் அவரை அப்படியே விட்டுவிடுவாரா என்ன? அவரால்தானே பெருமாளின் திருப்பணிகள் நடைபெறவேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறது? அந்த விதியும்கூட அவருடைய முன் ஜன்ம வினைப்பயன் காரணமாகத்தான் அவருக்கு அமைந்தது. எனவே, விதைத்தவன்தானே அறுவடை செய்யவேண்டும்? முன் ஜன்மத்தில் அவர் விதைத்தது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக, ஆண்டாண்டு காலமாக கடவுள் மறுப்பாளராகவே இருந்து வந்த சுந்தரநாராயணன், அந்த ஓர் இரவிலேயே கடவுளை ஏற்றுக் கொண்டது எப்படி? 

தன்னால் பெருமாள் திருப்பணியில் ஈடுபட முடியாது என்று பத்மா மாமியிடம் சவால் விடுவதுபோல் சொல்லிவிட்டு, நேரே சென்னையில் உள்ள தன் மகனின் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சுந்தரநாராயணன். அவருடன் சென்ற அவரின் மனைவி ஜெயலக்ஷ்மிக்கு கணவரின் இந்தப் போக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம், அவர் பத்மா மாமி வீட்டுக்குச் சென்றபோது, அவருக்குள் அதுவரை இல்லாத ஒருவித பரவச உணர்வு ஏற்பட்டு, அவரை சிலிர்ப்படையச் செய்திருந்தது. தனக்கு ஏற்பட்ட அந்தப் பரவச அனுபவத்தைப் பற்றிக் கணவரிடம் சொல்லி, பத்மா மாமி சொன்னதுபோல் பெருமாளின் திருப்பணிகளை மேற்கொள்ளலாமே என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சுந்தரநாராயணன் ஏற்பதாக இல்லை.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 5!
சித்தமெல்லாம் சித்தமல்லி - 5!

அன்று இரவு, அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எங்கும் பூரண நிசப்தமாக இருந்த அந்த நடுநிசி 12:30 மணி வேளையில் சுந்தரநாராயணனை யாரோ தட்டி எழுப்புவதுபோல் இருந்தது. திடுக்கிட்டு விழித்தவரின் மனதில், ஏதேதோ மறைபொருள் செறிந்த வாக்கியங்கள் தோன்றுவதுபோல் இருந்தது. திரும்பத் திரும்ப மனதில் தோன்றிய அந்த வாக்கியங்களை, தூக்கக் கலக்கத்திலேயே தன்னிச்சையாக எழுந்து, ஒரு பேப்பரை எடுத்து, அதில் எழுதத் தொடங்கினார். அது அழகிய கவிதையாக அமைந்திருந்ததை, காலையில் கண்விழித்துப் பார்த்த பின்புதான் அவர் உணர்ந்தார். 'புதையுண்டு கிடந்தாய் பூமித் தாய் உள்ளே; புத்தி கெட்ட எனக்குப் புதையலாய் கிடைத்தாய்’ என்று தொடங்கும் அந்தக் கவிதை, 'மூல ராமனை பூஜித்த அருளாளர் அருளாலே அகிலம் புகழ ஆராதனை செய்வோம் வாரீர்,’ என்று உலகத்தவரை அழைப்பதுபோல் முடிந்திருந்தது.

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல, கவி பாடும் திறனும்கூட இல்லாத தனக்கு எப்படி இப்படி ஒரு கவிதை எழுத வந்தது என்று அவருக்கு ஒரே ஆச்சர்யம்! ஆனாலும்கூட, அவர் அப்போதும் தனது கொள்கையில் இருந்து சற்றும் மாறவே இல்லை. இறைவனின் அனுக்கிரஹம் தனக்குப் பூரணமாகக் கிடைத்திருப்பதை உணராமல், தன் போக்கிலேயே பிடிவாதமாக இருந்த சுந்தரநாராயணன் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்தான். ஆனால், அவரை அந்த நிலையிலேயே விட்டுவிட பெருமாள் தயாராக இல்லை. மறுநாள் இரவு, அவருக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கச் சித்தம் கொண்டுவிட்டார். அந்த விவரம் எதுவும் புரியாதவராக, மறுநாள் காலையில், தான் எழுதிய கவிதையுடன் பத்மா மாமியைப் பார்க்கச் சென்றார் சுந்தரநாராயணன்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 5!

அவருடைய கவிதையைப் படித்துப் பார்த்த பத்மா மாமி, ''இப்போதாவது தாத்தா (ஸ்ரீராகவேந்திரர்) சொல்லுவதை நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அப்போதும்கூட, பட்டும்படாமலும்தான் பதில் சொன்னார் சுந்தரநாராயணன். பின்னர் தன் மனைவியை மகன் வீட்டில் விட்டுவிட்டு, அவர் மட்டும் தனியே சித்தமல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.

அன்று மாலையில் அவருடைய வீட்டு வேலையாள் அவரிடம் வந்து, ''ஐயா, நேற்று நீங்கள் சொன்னதுபோலவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டேன்'' என்று சொன்னார். சுந்தரநாராயணனுக்கோ ஆச்சர்யம் ப்ளஸ் குழப்பம்! காரணம், அவர் சற்று முன்புதான் சென்னையில் இருந்து வந்திருந்தார். அப்படியிருக்க, அவர் எப்படி வேலையாளிடம் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும்படி சொல்லி இருக்க முடியும்? எனவே, 'நான் உன்னிடம் எப்போது அப்படி சொன்னேன்?' என்று கேட்டார். ''நேற்று ராத்திரி நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னை எழுப்பி, மறக்காமல் தண்ணீர் பாய்ச்சும்படி சொன்னீர்களே ஐயா!' என்றார் வேலையாள். சுந்தரநாராயணனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதாவது, முந்தைய தினம் அவர் பத்மா மாமி வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பெருமாளைப் பற்றி மாமி சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு, ''ஆமாம், நீங்கள்தான் பெருமாளின் அருளைப் பற்றி உயர்வாகச் சொல்கிறீர்கள். கடந்த பல வருஷமாகவே என்னுடைய நிலத்தில் விளைச்சலே இல்லை. ஒரே வறட்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் பெருமாளுக்கு உண்மையிலேயே சக்தி இருக்குமானால், என்னுடைய நிலத்தில் நல்ல விளைச்சல் ஏற்பட வழி செய்யட்டுமே, பார்க்கலாம்!'' என்று சவால் விடுவது போல் சொல்லியிருந்தார். அதற்கு மாமி, ''நிச்சயம் பெருமாள் நல்ல விளைச்சல் தருவார். அப்படித் தந்தால், ஒரு மூட்டை நெல்லை பெருமாளுக்குக் காணிக்கையாகத் தருவீர்களா?'' என்று கேட்டார். சுந்தரநாராயணனும் சம்மதித்தார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 5!

பெருமாள் தன்னுடைய அருள் திறனை சுந்தரநாராயணன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் சென்னையில் இருந்த நேரத்தில், அவருடைய உருவத்தில் சென்று வேலையாளை எழுப்பி, 'வாய்க்காலில் தண்ணீர் வருகிறது. வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சு’ என்று உத்தரவு கொடுத்தார்போலும்! நடந்தது பெருமாளின் லீலைதான் என்பதை சுந்தரநாராயணன் புரிந்து, சிலிர்த்தார். சொல்லிவைத்தது போலவே, அந்த வருஷம் அவருடைய வயலில் அமோக விளைச்சல்! அவரும் ஒரு மூட்டை நெல்லை பெருமாளுக்குக் காணிக்கையாகத் தந்துவிட்டார்.

தன் உருவில் வந்து பெருமாள் நிகழ்த்திய அருளாடலை எண்ணி வியந்தவர், அப்போதே பெருமாளுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையாவது போடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்த எண்ணமே மனதில் சுற்றிச் சுழல, அப்படியே அன்றிரவு படுத்துத் தூங்கியும் போனார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 5!

அன்றைய இரவில்தான் அவருடைய வாழ்க்கையை அடியோடு திசை மாற்றிப் போட்ட அற்புதம் நிகழ்ந்தது. அன்று நள்ளிரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை, 50 வருஷ காலமா என்னை வெயிலிலும் மழையிலும் அல்லல்படச் செய்துவிட்டாயே? உன் குலமும் உலகத்தவர் நலமும் தழைக்கச் செய்வதற்காக வந்த என்னை இப்படியா விட்டு வைத்திருப்பாய்? ஒரு கீற்றுக் கொட்டகையாவது போட மாட்டாயா?’ என்று யாரோ கேட்பதுபோல் இருந்தது. உலகத்தவரின் நலனுக்காகவே வெளிப்பட்ட அந்தப் பெருமாளைத் தவிர, வேறு யார் இப்படிக் கேட்கமுடியும்? தனக்கொரு கோயில் கொண்டு உலக மக்களுக்கு அருள்புரியவேண்டும் என்ற காரணத்தால்தான் சுந்தரநாராயணனிடம் பெருமாள் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டதுமே, சுந்தரநாராயணனுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தவர், கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்தவர், வழக்கப்படி காபி குடித்த பிறகு வெற்றிலை போட்டுக் கொண்டார். சற்றுப் பொறுத்து பின்வாசல் பக்கம் வந்தவர், எப்போதும்போல் வெற்றிலைச் சக்கையை அங்கிருந்த சுவர் ஓரமாகத் துப்ப யத்தனித்தபோது, மங்கலாகத் தெரிந்த ஓர் உருவம், ''என் மீதா துப்பப் பார்க்கிறாய்?'' என்று அதட்டுவதுபோல் கேட்டது. அவ்வளவுதான்... 1000 வோல்ட் மின்சாரம் உடலில் பாய்ந்ததுபோல் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார் சுந்தரநாராயணன்.

அங்கே அவர் கண்ட காட்சி..?

சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதீஷ்குமார்