ஸ்ரீசாயிநாதரின் மகா சமாதிக்குப் பிறகு, அவருடைய சமாதி மந்திருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறையத் தொடங்கியது. ஆனால், சாயிநாதர் தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும் தாம் உயிர்ப்புடன் இருப்பதாகவும், தம்மை நம்பிச் சரண் அடைந்தவர்களை அனைத்துத் துன்பங்களில் இருந்தும் பாதுகாப்பதாகவும் கூறி இருந்தது எப்படி பொய்யாகப் போகும்? துன்பப்படும் மக்களை ஆற்றுப்படுத்தி, தம்மிடம் அழைத்து வருவதற்குத் தகுந்த நபர் ஒருவரை அவருடைய ஜீவித காலத்திலேயே இந்த உலகத்தில் தோன்றச் செய்துவிட்டார். அவர்தான் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமிஜி. 

அவருடைய பிறப்பே சாயிநாதரின் சங்கல்பத்தினால் நிகழ்ந்தது என்பதுதான் உண்மை. அவர் பிறந்த விதமும் அதையே உறுதிப்படுத்துகிறது. ஆம், உலக மக்கள் அனைவரையும் சாயிநாதரிடம் ஆற்றுப்படுத்தி, அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வலிகளை எல்லாம் இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காகவே தோன்றிய நரசிம்ம ஸ்வாமிஜி, தாம் பிறக்கும்போது தன் தாய்க்குப் பிரசவ வலியைக்கூடக் கொடுக்காமல் பிறந்தார்.

ஈரோடு அருகில் உள்ள பவானி என்ற புனிதத் தலத்தில், 1874ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மாலை, புனர்பூச நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு அதன் தகப்பனார் வெங்கடகிரி ஐயர், ராமநாதன் என்று பெயர் சூட்டினார். ஆனால், குழந்தையின் தாய் அங்கச்சி அம்மாளின் விருப்பத்தின்படி, குழந்தைக்கு நரசிம்மர் என்ற பெயரும் சூட்டப்பட்டது. தாயின் விருப்பத்தின் படி சூட்டப்பட்ட நரசிம்மர் என்ற பெயரே பின்னாளில் நிலைத்துவிட்டது.  

பிள்ளைப் பருவத்திலேயே நரசிம்மரிடம் தலைமைக்கு உரிய பண்புகள் அமைந்திருந்தன. தந்தையைப் போலவே சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார் நரசிம்மர். உரிய வயதில் அவருக்குப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். செல்வம் சேர்ப்பதை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை செலுத்தினார் நரசிம்மர். தம்மிடம் வரக் கூடிய வழக்குகளை நீதிமன்றம் வரை கொண்டு போகாமல், இருதரப்பினரிடமும் பேசி சமரசம் செய்துவிடுவார். இதனால், அவருக்குப் பல முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைத்தது. அதன் காரணமாகவே சேலம் நகராட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 22

பாபாவின் புகழைப் பரப்ப வேண்டும் என்பதற்காகவே தோன்றியவர் என்பதால், அதற்கேற்ப அவரின் மனதைப் பக்குவப்படுத்துவது போலவே அவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்துப் பல சோக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முதலில் பெற்றோரும், தொடர்ந்து அவருடைய ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோரும் இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். அத்துடன் தம்முடைய கடமைகள் முடிந்துவிட்டதாகக் கருதி, ஒரு துறவியைப்போல் வாழத் தொடங்கினார். அந்நிலையில், அவருடைய மனைவியும் ஒருநாள் இறந்துவிடவே, எந்த ஓர் உடைமையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார் நரசிம்மர். சிருங்கேரி, திருவண்ணாமலை ரமணாசிரமம் எனப் பல இடங்களுக்குச் சென்றும், அவருடைய மனம் ஏனோ அமைதி இல்லாமல் தவித்தது. அவருக்குத் தக்க குருநாதர் கிடைக்கவே இல்லை. கடைசியில், அவர் சகோரி என்னும் இடத்தில் இருந்த உபாசனி பாபாவிடம் சென்றார். சாயிநாதரின் பூரண அருளைப் பெற்றவர் இந்த உபாசனி பாபா. அவருடன் சில காலம் தங்கி இருந்த பின்னும், தமக்கு ஒரு குருநாதர் கிடைக்காத வருத்தத்தில் மன அமைதி இழந்த நரசிம்ம ஸ்வாமிஜி, தன் மகனிடமே சென்றுவிடலாம் என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அவரை சாயிநாதர் அவ்வளவு லேசில் விட்டு விடுவாரா என்ன? வழியில் நரசிம்மரைச் சந்தித்த ஒருவர், அவரை உடனே ஷீர்டிக்குச் செல்லுமாறு கூறினார். ஆனால், '18 வருஷங்களுக்கு முன்பே மகா சமாதி அடைந்துவிட்ட ஒருவரிடம் எனக்கு என்ன வேலை?’ என்று மறுத்துவிட்டுக் கிளம்பி விட்டார் நரசிம்மர். ஆனாலும், அவருடைய கால்கள் என்னவோ அங்கிருந்து சுமார் 9 மைல் தொலைவில் உள்ள ஷீர்டியை நோக்கியே தன்னிச்சையாக நடந்தன. சாயிநாதர் அவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது போலும்!

ஷீர்டி சாயிநாதரின் சமாதி மந்திருக்குச் சென்று தியானம் செய்தார். அக்கணமே சாயிநாதர் அவரை ஆட்கொண்டு விட்டார். அதுவரை அமைதி இல்லாமல் தவித்த நரசிம்ம ஸ்வாமிஜி பூரண மன அமைதி பெற்றதுடன், சாயிநாதரே தம்முடைய குரு, அவருடைய மகிமைகளைப் பரப்புவது ஒன்றே இனி தனது கடமை என்ற முடிவுக்கு வந்து விட்டார். 'அகில இந்திய சாயி சமாஜம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியதுடன், ஷீர்டி சாயிநாதர் சமாதி மந்திரில் நடை பெற்று வந்த பூஜை முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். இவரே சம்ஸ்கிருத மொழியில், சாயிநாதரின் அஷ்டோத்திர சத நாமாவளியை இயற்றியவர் ஆவார்.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 22

இந்தியா முழுவதும் பயணம் செய்து சாயிநாதரின் மகிமைகளைப் பரப்பிய நரசிம்ம ஸ்வாமிஜி, சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீசாயிநாதருக்காக ஓர் ஆலயம் நிர்மாணித்தார். இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து சாயிநாதரின் அருள் பெற்றுச் செல்கின்றனர்.ஸ்ரீசாயிநாதரின் மகா சமாதிக்குப் பிறகு சுமார் 18 ஆண்டுகள் மட்டுமே மறைந்திருந்த சாயிநாதரின் அருள்திறம், நரசிம்ம ஸ்வாமிஜியின் மூலமாக வெளிப்பட்டு, பலரது வாழ்க்கையிலும் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சாயிநாதரால் பரிபூரணமாக ஆட்கொள்ளப்பட்டு, அவருடைய அனுக்கிரஹத்தினால் பலரது வாழ்க்கையிலும் சந்தோஷமும் சாந்தியும் நிலவச் செய்த நரசிம்ம ஸ்வாமிஜி 1956ம் ஆண்டு சாயிநாதரின் திருவடிகளில் ஐக்கியம் ஆனார்.

அடுத்ததாக, 1990களின் தொடக்கத்தில் சாயிநாதரால் ஆட்கொள்ளப்பட்டவர் குமார்பாபா என்பவர். நரசிம்ம ஸ்வாமிஜி சாயிநாதரின் அஷ்டோத்திர சத நமாவளியை சம்ஸ்கிருதத்தில் இயற்றியதாகப் படித்தோம். அதன் அடிப்படையில் சாயிநாதரின் 108 போற்றிகளை சாயிநாதரே அவ்வப்போது குறிப்பால் உணர்த்த, குமார்பாபா அவற்றைத் தொகுத்து 'அன்ன பாபா போற்றிகள்’ என ஒரு நாமாவளியை தமிழில் இயற்றியிருக்கிறார்.

ஆசாரமான வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த குமார், மதுரை மீனாட்சி அம்பிகையின் உபாசகர் ஆவார். அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்றவர். திருமணத்துக்குப் பிறகும் ஒரு துறவியைப் போலவே வாழ்க்கை நடத்தியவர். வாய்த்த மனைவி ஸ்ரீமதியும் கணவரின் மனநிலைக்கு ஏற்பத் தன்னையும் மாற்றிக்கொண்டு, ஆன்மிக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். மதுரை மீனாட்சி அம்பிகையை உபாசித்தபடி அமைதி யாகச் சென்றுகொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் பாபா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

94ம் ஆண்டில் குமார், தன்னுடைய நண்பர் கள் வற்புறுத்தவே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பாபா கோயிலுக்குச் சென்றார். அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த பாபாவின் பாதுகைகளில் தலை பதித்து நமஸ்காரம் செய்தபோது, 'நீ என் பணிக்காகத் தோன்றியவன். எப்போது நீ என்னிடம் வரப்போகிறாய்?’ என்று பாபா கேட்பதுபோல் தோன்றியது. குமாருக்கு பாபாவிடம் அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. எனவே, அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அதே நண்பர்களுடன் மறுபடியும் பாபா கோயிலுக்குச் சென்றபோது,  பாபா அதே கேள்வியை திரும்பவும் அழுத்தமாகக் கேட்பதுபோல் தோன்றியது. குமாருக்கு மிகுந்த குழப்பமாகிவிட்டது. 'நாமோ மீனாட்சியின் உபாசகராக இருக்கிறோம். நாம் எப்படி பாபாவின் பணிகளில் ஈடுபடுவது?’ என்று நினைத்துத் திகைத்தவர், தன்னுடைய எண்ணத்தை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவர்கள், ''நீ வணங்கும் மீனாட்சி அம்மனையே பிரார்த்தனை செய்து ஒரு முடிவுக்கு வரலாமே?'' என்றார்கள்.

அதேபோல், குமாரும் உடனே கிளம்பி மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்பிகையைத் தரிசித்துவிட்டு, கோயிலில் சற்றுநேரம் தியானத் தில் ஆழ்ந்திருந்தபோது, மீனாட்சி அம்பிகையின் சந்நிதியில் இருந்து பாபா வெளிப்படுவது போன்ற காட்சி தோன்றியதுடன், பாபாவின் பணிகளில் ஈடுபடுவதற்கு அம்பிகையே தமக்கு உத்தரவு கொடுத்தது போலவும் ஓர் உணர்வு தோன்றியது குமாருக்கு. மனத் தெளிவு பெற்றவ ராக சென்னைக்குத் திரும்பிய குமார், கனவில் பாபா சொன்னபடி, 'அன்ன பாபா பிரார்த்தனை மையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பாபாவின் மகிமைகளைப் பலரிடமும் கொண்டு சேர்க்கத் தொடங்கினார். அதுமுதல் அவர் குமார்பாபா என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றார்.

பாபாவின் திருவுள்ளப்படி அவருக்குக் கோயில் கட்ட குமார் பாபா நினைத்தபோது, பாபாவே அவருடைய கனவில் தோன்றி, 'கட்டப்போகும் கோயிலில் தாம் அன்னபாபா என்ற பெயரில் அருள்புரியப் போவதாகவும், எப்படி அன்னப் பறவை பாலில் இருந்து நீரைப் பிரித்துப் பாலை மட்டும் அருந்துகிறதோ, அப்படி

என்னை வழிபடும் பக்தர்களின் பாவங்களைப் பிரித்து நீக்கிவிட்டு, அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் அருள்வேன்’ என்று கூறியதுடன், அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியும் அருள்புரிந்தார். குமார் பாபாவும் அதேபோல் குமணன்சாவடி பகுதியில் 'அன்ன பாபா மந்திர்’ என்ற பெயரில் கோயில் அமைத்து, பாபாவின் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கான சாயிநாதரின் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அவரையும் சாயிநாதர் தம்முடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டார்.

இப்படியாக பாபா அவ்வப்போது சிலரை அடையாளம் கண்டு தம்முடைய திருப்பணி களில் அவர்களை ஈடுபடுத்தி, அதன்மூலம் நம்பிக்கையையும் பொறுமையையும் காணிக் கையாகக் கொண்டு தம்மைச் சரண் அடைப வர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் சாந்தியையும் வழங்கி வருகின்றார்.

சாயிநாதரின் அருளாடல்கள் ஒவ்வொன்றுமே... ஏன், அவருடைய மகாசமாதியும்கூட ஒரு தத்துவத்தை மறைபொருளாக நமக்கு உணர்த்தவே செய்கிறது. எப்படி..?

(அடுத்த இதழில் நிறைவுறும்)