மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே! 

கருணாமூர்த்தியான எம்பெருமான் எடுத்த அவதாரங்களில்,  ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவதாரம் ராம அவதாரம். மனிதனாகப் பிறந்த ராமபிரான் இந்த உலகத்தில் உள்ளவர்களுக்குப் பல நல்ல நெறிகளை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக உபதேசித்தார். பகவானின் அம்சமாகப் பிறந்த ராமபிரான் நினைத்திருந்தால், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதுமே, ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு இருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து, 'சீதையைக் கண்டீர்களோ, சீதையைக் கண்டீர்களோ?’ என மரம் செடி கொடிகளிடம் புலம்பினார்.

ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற ராம லட்சுமணர்கள், வழியில் ஜடாயு, ராவணனால் வீழ்த்தப்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றனர். ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற வழியை அவர்களுக்குக் காட்டவேண்டும் என்பதற்காகவே அதுவரை தன் உயிரைத் தக்க வைத்திருந்த ஜடாயு, அவர்களிடம் விவரம் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார். ஜடாயுவுக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்ததும், ராம லட்சுமணர்கள் ஜடாயு காட்டிய வழியில் செல்கின்றனர்.

வழியில் கபந்தன் என்ற கொடிய அரக் கனைப் பார்க்கின்றனர். அந்த அரக்கனுக்குத் தலை இல்லை. பெரிய பானை போன்ற வயிறு, குகை போன்ற வாய், கண், பனைமரம் போன்ற பருத்த தோள்கள் என கோரமாகக் காட்சி தந்தான்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11

அந்தத் தோள்களால் ராம லட்சுமணர்களை வாரியெடுத்து, வாயில் போட்டுக்கொள்ள முயல்கிறான் கபந்தன். அதன் பின்னரே இருவரும் அவன் தோள்கள் இரண்டையும் துண்டித்து, அவனைக் கொல்கின்றனர். அந்த அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனைத் தகனம் செய்கின்றனர். அப்போது அந்தச் சிதையில் இருந்து அழகிய உருவம் கொண்ட ஒருவன் வெளியில் வருகிறான். முற்பிறவியில் கந்தர்வனாக இருந்த தான், ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கனாக மாறிய தாகக் கூறுகிறான்.

பின்னர், அவன் ராம லட்சுமணர்களிடம், ''மேற்கு முகமாகச் சென்றால் ரிஷ்யமுகம் என்ற மலையும், அதன் அருகில் பம்பை என்ற நதியும் இருக்கும். அவ்விடத்தில் சூரியனின் அம்சமான சுக்ரீவன் என்ற வானரத் தலைவன், எவராலும் எதிர்க்க இயலாத வாலி என்ற தனது சகோதரனிடம் மனைவி மற்றும் ராஜ்ஜியத்தை இழந்து அநாதைபோல் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவனை நண்பனாகக் கொண்டால், உன் மனைவியை மீட்கலாம்' என்று வழி காட்டுகிறான்.

'அந்தக் கபந்தனைப் போல ஸ்ரீராமனுக்கு வழி காட்டவில்லையே நான்? பிறகு, இந்த ஊரில் இருந்து என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

18. அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே!

'அன்பினால் தாயினும் இனியவள்’ என்று கம்பன் திரிசடையை வர்ணிக்கிறான். மற்ற அரக்கியரைப்போல் இல்லாமல், மெல்லிய இடை உடையவளும், இனிய சொற்களைப் பேசுபவளாகவும் திகழும் அந்தத் திரிசடை தான் அசோகவனத்தில் சீதைக்குக் கிடைத்த ஒரே ஆறுதல். அவளிடம்தான் சீதை தன்னுடைய வருத்தங்களைச் சொல்லி, ஆறுதல் தேடுகிறாள்.

நிமித்தக் குறிகள் சில உள்ளன. நிமித்தம் அதாவது சகுனம் என்பது பண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்றாகவே இருந்துள்ளது. சங்க காலத்தில் நிமித்தம் என்ற சொல் பயன் படுத்தப்படவில்லை என்றாலும், அதற்குரிய பொருளில் புள் என்ற சொல் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற சொல் சகுனம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. ராமாயணத்திலும் சீதை தனக்கு நேர்ந்த நிமித்தங்களைச் சொல்லி வருத்தப்படுவதும், திரிசடை அதற்கு ஆறுதலாக தான் கண்ட நிமித்தங்களைச் சொல்வதும் ஆற்றுப்படுத்தும் விதத்தில் அமைந்த பகுதிகளாகும். குகன், அனசூயை, கபந்தன், திரிசடை, ஜடாயு, சபரி போன்ற கதாபாத்திரங்களே ஸ்ரீராமனின் உன்னத குணத்தை நமக்கு தெளிவுபடக் காட்டுகின்றன. அந்த வகையில், திரிசடையின் பாத்திரம் மிக முக்கியமானது. அவள் இல்லை என்றால் சீதை அசோகவனத்தில் உயிர்த் தியாகம் செய்துகொண்டிருப்பாள்.

நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்

சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?

பொலந் துடிமருங்குலாய்!  புருவம், கண், முதல்

வலம்துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 11

பொதுவாக இடது கண்ணும் வலது தோளும் துடிப்பது நல்ல நிமித்தமாகும் என்ற சீதை, இந்த அசோக வனத்தில் வலம் துடிக்காமல் இருப்பது கெட்ட நிமித்தத்தினாலா அல்லது தனது முன்வினைப்பயனா என்று கலங்குகிறாள்.

அப்போது திரிசடை தான் கண்ட ஒரு கனவைக் கூறி, சீதையைத் தேற்றுகிறாள்.

''ராவணன் தனது பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக் கொண்டு, கழுதை மேல் ஏறி, யமன் இருக்கும் தென் திசை நோக்கிப் போவது போலவும், அவனுடைய புதல்வர்களும் உறவினர்களும் அவன் சென்ற வழியிலேயே செல்வது போலவும், அப்படிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராதது போலவும் நான் கனவு கண்டேன். அது மட்டுமல்ல, ராவணின் யாக குண்டங்களில் அக்னிக்கு பதிலாக செங்கரையான் புற்று வளரக் கண்டேன். அவனுடைய அரண்மனையோ ஒளி இழந்து, இடி தாக்கி நொறுங்குவதாகக் கண்டேன். பெண் யானைக்கு மதம் பிடித்தது போலவும், பெரிய பெரிய முரசுகள் இடியைப் போல் முழங்குவது போலவும், மேகக் கூட்டம் இல்லாமலே இடி இடிப்பது போலவும், வானத்தில் உள்ள விண் மீன்கள் எல்லாம் கீழே வீழ்வது போலவும், இரவில் சூரியன் உதிப்பது போலவும் கனவு கண்டேன்' என்று தான் கண்ட கனவுக் காட்சிகளை சீதைக்கு விவரிக்கிறாள் திரிசடை.

மேலும், இலங்கை நகரம் சுழல்வது போலவும், கோட்டை மதில்கள் தீப்பற்றி எரிவது போலவும், மங்கல கலசங்கள் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், எங்கும் இருள் சூழ்வது போலவும் தான் கண்ட கனவுக் காட்சிகளை அடுக்கிக்  கொண்டே போகிறாள். எவ்வளவு நீளமான கனவுப் பட்டியல் இது?!

இப்படி, துயரத்தில் ஆழ்ந்த ஒருவருக்கு யாரேனும் ஆறுதல் சொன்னால், அவருடைய துயரங்களுக்குக் கட்டாயம் ஒரு வடிகால் கிடைக்கும் அல்லவா? 'அப்படி சீதையின் துயரத்தைக் குறைக்க திரிசடை ஆறுதல் சொன்னதுபோல், நான் சீதா பிராட்டிக்கு ஆறுதல் எதுவும் சொன்னேனா? இல்லையே! அப்படி இருக்க இந்த உத்தமமான திருக்கோளூரில் இருப்பதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேட்கிறாள் அந்தப் பெண்பிள்ளை.

ரகசியம் வெளிப்படும்