Published:Updated:

கலகல கடைசி பக்கம்

இப்படியும் சிலர்!வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

கலகல கடைசி பக்கம்

இப்படியும் சிலர்!வீயெஸ்வி, ஓவியம்: வேலன்

Published:Updated:

குடும்ப நண்பர் ஒருவர், தமது மனைவியுடன் கோவையில் முதியோர் இல்லம் ஒன்றில் வசிக்கிறார். இருவருக்கும் சம சப்தம ஜாதகம். எல்லா விஷயங்களிலும் ஒரே கண்ணோட்டம் கொண்டவர்கள். 

இருவரும் டிவியில் ஒரே தொடரைத்தான் பார்த்து ரசிப்பார்கள், இருவருக்குமே மோர்க் குழம்பு என்றால் உயிர். இப்படி, எந்த விஷயத்திலும் இவர்களுக்குள் மாற்றுக் கருத்தே கிடையாது. அடுத்தவரிடம் சண்டை என்றாலும் அப்படித்தான். இருவரும் ஜோடி சேர்ந்து டென்னிஸ் ஆட ஆரம்பித்து விடுவார்கள்; கலப்பு இரட்டையர் கணக்கில்!

அற்ப விஷயம் என்றாலும், இருவரும் நாலு கால் பாய்ச்சலில் (தவறாக எண்ணவேண்டாம்; இருவருக்கும் சேர்த்து நாலு கால் எனச் சொல்ல வந்தேன்!) தாவி வருவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் உதாரணம்...

'ராமநாதன் பேத்திக்குக் கல்யாணமாம். உனக்கான இன்விடேஷனை என்கிட்டே கொடுத்திருக்கார். நான் அந்தப் பக்கம் வரும்போது தரேன்' என்று அவர்களுக்கு டெலிஃபோனில் தகவல் வரும். ரிசீவரின் வாயைப் பொத்திக்கொண்டு, 'பெரிய மனுஷன்... இவன்கிட்டே கொடுத்திருக்கானாம் ராமநாதன்... நமக்கான இன்விடேஷனை!' என்பார் நண்பர் தம் மனைவியிடம். 'ரொம்ப மரியாதைதான். கிழிச்சுப் போடச் சொல்லுங்க அந்தப் பிசாத்து இன்விடேஷனை!' என்பார் நண்பரின் மனைவி ஆவேசத்துடன்.

கலகல கடைசி பக்கம்

அதே அழைப்பிதழ் மறுநாளே தபாலில் வரும். 'அஞ்சு ரூபாய் ஸ்டாம்பை ஒட்டி அனுப்பிட்டானா... பிச்சைக்காரப் பய!' என்பார் நண்பர். கூரியரிலேயே அனுப்பியிருந்தாலும், 'சரியான கஞ்சப் பயல். முப்பது ரூபாய்ல காரியத்தை முடிச்சுட்டான் பார்த்தியா?' என்பார். 'ஒரு நடை நேர்ல வந்து அழைச்சா கால் தேய்ஞ்சுடுமோ என்னவோ, அவருக்கு?' என்பார் நண்பரின் மனைவி.

இரண்டு நாள் கழித்து, ராமநாதனிடமிருந்து இந்தக் குடும்ப நண்பருக்கு போன் வரும். 'பேத்திக்குக் கல்யாணம். ஒண்ணு மிஸ் ஆனாலும் இன்னொன்னு கிடைக்குமேனு போஸ்ட்லேயும் கூரியரிலுமா பத்திரிகை அனுப்பியிருந்தேன். கட்டாயம் ரெண்டு பேரும் வந்து குழந்தைகளை ஆசீர்வதிக்கணும்!'

'ஏண்டா, இத்தனை நாளா நாங்க இருக்கோமா, செத்தோமானு கேட்க நாதியில்லே. இப்ப பேத்தி கல்யாணம்னதும் எங்க நினைப்பு வந்துடுச்சா? ஊர்ல பந்தலைப் பார்த்ததும் மார்ல சந்தனம் எடுத்துத் தடவிக்க நான் ஒண்ணும் காய்ஞ்சு போய் கிடக்கலே! நேர்ல வந்து அழைச்சா உங்க கௌரவம் குறைஞ்சுடுமோ..?' என்று பூமி அதிர ரிஸீவரை வைப்பார் குடும்ப நண்பர். 'நல்லா கேளுங்க, நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி!' என்பாள் சகதர்மிணி.

இவர்களைப் போன்ற பிரகிருதிகளை என்ன செய்யலாம்?

'அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு’ என்று ஒரு குறளிலும்,

'பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற’ என்று இன்னொரு குறளிலும் இவர்களைப் போன்றவர்களுக்குச் சாட்டையடி கொடுத்து இருக்கிறார் வள்ளுவர். வள்ளுவர் சொல்பேச்சு கேட்காமல் இருந்தால் இப்படித்தான்... வசதிகள் இருந்தும், வம்சம் வளர்ந்தும் முதியோர் இல்லத்தில்தான் வாசம் செய்யும்படி ஆகும்!