Published:Updated:

தீமை விரட்டும், மக்களைக் காக்கும் மலையாளச் சாமி வழிபாடு!

தீமை விரட்டும், மக்களைக் காக்கும் மலையாளச் சாமி வழிபாடு!
தீமை விரட்டும், மக்களைக் காக்கும் மலையாளச் சாமி வழிபாடு!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் அமைந்துள்ளது சேளூர் எனும் கிராமம். இந்தக் கிராமம் பரமத்திவேலூரிலிருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரின் தென்பகுதியில் காளியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. கருவறையின் மேல் விதானத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் கருவறைக்குள் பத்திரகாளி அம்மன் சிலை வடக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உள்ளே கிழக்குப் பக்கம் மலையாளச் சாமி சிலை தனியாகக் காணப்படுகிறது. சிலை சிறியதாகக் கல்லில் வடிக்கப்பட்டுக் கருமை நிறத்துடன் காணப்படுகிறது. வலக் கையில் வேலும், இடக் கையில் கம்புமாகக் காட்சியளிக்கிறது.

கேரளாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த தெய்வம் என்பதால், மேற்கு பார்த்த வண்ணம் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். மலையாளச் சாமி சிலையின் வலப் பக்கம் ஒரு பெரிய ஈட்டி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய ஈட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சாமிக்கு நேர்த்திக்கடனாக ஈட்டியைக் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் உள்ளது.

இக் கோயில் வாசலின் முன்பு மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று காணப்படுகிறது. அதில் பெரிய சங்கிலி ஒன்று சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலின் வடக்குப் பக்கம் மதுரை வீரன் சாமி சிலை உள்ளது. மதுரை வீரன் சிலையை அடுத்து வடக்குப் பக்கம் பாவாயி, குமாரசாமி சிலைகள் அமைந்துள்ளன. அதற்கு மேற்குப் பக்கத்தில் முனியப்பசாமி சிலை காணப்படுகிறது. இந்தச் சிலைகளின் முன்பக்கம் ‘காளிஊஞ்சல்’ எனும் ஓர் ஊஞ்சல் காணப்படுகிறது. இந்த ஊஞ்சலில் காளி அமர்ந்து ஊஞ்சல் ஆடுவதாக இந்தப் பகுதி மக்களிடம் ஓர் ஐதீகம் உள்ளது. கோயிலின் வடக்கு வாசலில் வெளிப்புறம் இரு வீரர்கள் குதிரை மீது அமர்ந்திருக்கும் நிலையில் இரண்டு சிலைகள் காணப்படுகின்றன. இந்தக் குதிரைச் சிலைகளுக்கு முன்பாக சற்று நீளமான கல் ஒன்று காணப்படுகிறது. அதன் அடியில் ஒரு வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது நடுகல் வழிபாட்டின் எச்சமாகத் தெரிகிறது.

மலையாளச் சாமி வழிபாட்டின் தோற்றம் பற்றி இந்த மக்களிடம் ஒரு வாய்மொழிக்கதை வழக்கில் உள்ளது.

சுமார் 10 தலைமுறைகளுக்கு முன்னர், கேரளத்தைச் சேர்ந்த சிவகுரு ஐயர் என்பவருக்கு ஒரு மகள் இருந்தாள். ஆண் வாரிசு இல்லை. எனவே, தமிழகத்திலிருந்து வீட்டு வேலை செய்வதற்காக வந்த ஆறுமுகப் பண்டாரம் எனும் சிறுவனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து வளர்த்தார். சிவகுரு ஐயர் இறந்த பிறகு ஆறுமுகப் பண்டாரம் தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது வளர்ப்புத் தாய் வீரம்மாளையும் தங்கை மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு, சிவகுரு ஐயர் பயன்படுத்திய சக்கரம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வழிநடந்து கொடுமுடி அருகில் உள்ள புதூர் பகுதிக்கு வந்து குடியேறினார். அங்கு, ஆறுமுகப் பண்டாரம் சேளூர் பகுதியிலிருந்த காளி கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்தார். அப்படிப் பணிபுரிந்த காலத்தில், மலையாள நாட்டில் இருந்துகொண்டு வந்த சக்கரத்தைக் கோயிலில் வைத்து வழிபட்டார். காலப்போக்கில் அது, மலையாளச் சாமி வழிபாடாக மாறியது.

இந்த வழிபாடு ஆரம்பகாலத்தில் மக்களிடம் அதிகம் பிரசித்திப் பெறவில்லை. ஆனால், பிற்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு இந்தச் சாமியைப் பிரபலமடையச் செய்தது.

அந்த அற்புத நிகழ்வு...

சேளுரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று காலரா நோய் பரவியது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் நோயால் பாதிக்கப்பட்டுப் பரிதவித்தனர். எனவே, மக்கள் அனைவரும் மலையாளச் சாமி கோயிலில் கூடி, கதறிக் கண்ணீர்விட்டு அழுது வழிபட்டனர். அப்போது ஒருவர் மீது ஆவாகணமாகி அருள் வந்து ஆடியபடி, “உங்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்க வேல் ஒன்று செய்து தாருங்கள்’’ என்று கேட்டது சாமி.

அங்கிருந்த மக்கள் தங்களுக்கு வேல் செய்யத் தெரியாது என்று கூறினர். அதைக் கேட்ட  சாமி, “வேல் செய்வதற்கு ஒரு குட்டைக் கொழுவும், ஒரு மூட்டை நெல் உமியும் கொண்டு வந்து கோயிலில் வைத்துவிட்டுச் செல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறியது. மக்களும் அவ்வாறே செய்தனர்.

மறுநாள் மலையாளச் சாமியின் கோயிலில் வேல் தயாராக இருந்தது. வேல் தயாராக இருந்ததன் பின்னணியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

ராசிபுரத்தைச் சேர்ந்த பட்டுநூல் வியாபாரம் செய்யும் ஒருவன் மாந்திரீகம் செய்யும் தொழிலைக் கற்கவேண்டி கேரள நாட்டுக்குச் சென்றான். அங்கு ஆசாரி ஒருவனுடன் நட்பு ஏற்பட்டது. சிறிது காலம் சென்றதும், பட்டுநூல் வியாபாரிக்கும் ஆசாரிக்கும் மாந்திரீகத் தொழிலில் பெரும் போட்டி ஏற்பட்டு அது பெரும்பகையாகவும் மாறியது. பட்டுநூல் வியாபாரி, ஆசாரியின் மனைவி மக்களை மாந்திரீகத்தால் கொன்றுவிட்டான். மேலும் ஆத்திரம் தீராமல் ஆசாரியையும் கொல்ல முயன்றான். எனவே, ஆசாரி அவனிடமிருந்து தப்பி, தமிழகத்தின் கொடுமுடி பகுதிக்கு வந்தான். பட்டுநூல்காரனும் அவனைக் கொல்ல விரட்டிக்கொண்டு வந்தான். ஆசாரி ஒரு பரிசல் மூலம் காவிரி ஆற்றைக் கடந்து பிலிக்கல்பாளையம் பகுதிக்கு வந்து ஒரு சத்திரத்தில் தங்கினான். அன்று இரவு ஊர்க்காவல் பணிசெய்யும் மலையாளச் சாமி வெள்ளைக் குதிரையில் கையில் தீச்சட்டியுடன் அங்கு வந்தது.

ஆசாரியிடம், “யாரப்பா நீ, எங்கிருந்து இங்கு வந்தாய்... எதற்காக இங்கு தங்கி இருக்கிறாய்?’’ என்று கேட்டது. ஆசாரி உண்மையைக் கூறாமல் மழுப்பினான். அப்போது மலையாளச் சாமி அவனிடம், “நீ ராசிபுரத்து பட்டுநூல்காரனுக்கு பயந்து இங்கு வந்து தங்கியிருக்கிறாய். சரியா?’’ என்று கேட்டது. ஆசாரியும் ஆச்சர்யத்துடன் “உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்று கேட்டான். உடனே மலையாளச் சாமி தான் யாரென்பதைக் கூறியதுடன், “நீ எனக்கு ஒரு வேல் செய்து கொடு. உன்னைக் கொல்ல நினைப்பவனை நான் கொல்கிறேன்’’ என்றும் கூறியது. மலையாளச் சாமி தான் கூறியபடியே பட்டுநூல் வியாபாரியைக் கொன்றது. ஆசாரியும் சாமி கூறியபடி மலையாளச் சாமி ஆலயத்தை அடைந்து வேல் செய்து, சாமியின் முன்பு குத்தி வைத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறினான். ஆசாரி வேல் செய்துவைத்ததும் காலரா நோயும் நீங்கியது, மகிழ்ச்சியடைந்த மக்கள் அனைவரும் மலையாளச் சாமியை வழிபட ஆரம்பித்தனர்.

மலையாளச் சாமி மலையாள நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதால், அந்தப் பெயர் பெற்றது என்றும், `மலையை ஆளும் சாமி’ என்பது மருவி, `மலையாளச் சாமி ஆனது என்றும் இம்மக்கள் கூறுகின்றனர். அதோடு, மலையாளச் சாமியைப் பெரியசாமி, கருப்பசாமி, சூலகருப்பன் என்றும் மக்கள் அழைக்கின்றனர். எனவே மலையாளச் சாமி என்பது கேரளாவில் இருந்துகொண்டுவரப்பட்ட கருப்பசாமி என்பது புலனாகிறது. கருப்பசாமி வழிபாடு கேரளாவின் ஆரியங்காவு, அச்சன்கோவில் பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. `கருப்பன் காதல்’ என்னும் கதைப்பாடல் கருப்பசாமி வரலாற்றை எடுத்துரைக்கிறது. இந்தக் கதைப்பாடலில், கருப்பன் ரவிவர்ம மகாராசனை எதிர்த்த பகைவரைச் சூறையிட்டதாகவும், வரகுணப்பாண்டியனின் படையை மீண்டோடத் துரத்தியதாகவும், விக்கிரமபாண்டிய நம்பி கருப்பனுக்கு மணிமண்டபம் அமைத்து வழிபட்டதாகவும் கூறுகிறது. மேலும், கருப்பன் ஐயப்பசாமியிடம் விடைபெற்று, தமிழகத்தின் திருமலை முருகனின் அருள்பெற்று வழிபாடு பெற்றதாகவும் தெரிவிக்கிறது. கருப்பசாமி வழிபாடு தமிழகத்திலும் பரவலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சேளூரிலிருந்த ஒருவர் சில தலைமுறைகளுக்கு முன்னர் மலையாளச் சாமிக்கு வாள் ஒன்று செய்துவைத்தார். அந்த வாளினை வாங்கல் என்னும் ஊரிலுள்ள மலையாளச் சாமி கோயிலுக்கு திருவிழா காலங்களில் கொண்டு சென்று வழிபடுவதும் வழக்கமாக உள்ளது. இதனை `வாங்கல் சடங்கு’ என்று மக்கள் கூறுகின்றனர். மலையாளச் சாமி வழிபாடு முத்தூர், கோயில் பாளையம், தோட்டக்குறிச்சி, பாப்பா வலசு, பழையபேட்டை, ஈழம்பூர், மூலனூர் முதலிய பல இடங்களிலும் உள்ளது. இந்த தெய்வத்தைப் பல சாதியைச் சேர்ந்த மக்கள் வழிபட்டுவருகின்றனர்.

மலையாளச் சாமியை நோய்வாய்ப்பட்டவர்கள் வழிபட்டால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. மலையாளச் சாமியின் பெருமையைப் பேசும் ஒரு வாய்மொழிக் கதையும் மக்களிடம் வழக்கில் உள்ளது.

அந்தக் கதை இதுதான்...

குமாரசாமிக் கவுண்டர் என்பவர் பூசாரி ஆறுமுகப் பண்டாரத்தின் தங்கை மீனாட்சியை மணமுடித்துத் தருமாறு வற்புறுத்திக் கேட்டார். குல மானம் காக்க அந்தப் பெண் உயிரை மாய்த்துக்கொண்டாள். அதன்பின், குமாரசாமி, பாவாயி என்ற பெண்ணை மணம் முடித்தார். குமாரசாமிக்குப் பகையாளிகள் அதிகம். அவர்கள், அவரைப் பழிவாங்க நினைத்தனர். எனவே, பாவாயிக்கும் குமாரசாமியின் தம்பி கந்தசாமிக்கும் தவறான உறவு இருப்பதாகத் திட்டமிட்டு ஒரு சதிச் செயலைச் செய்தனர். அதாவது, குமாரசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் பால் கொடுப்பதற்கு வந்த அவரின் தம்பி வீட்டுக்குள் சென்றதும் கதவை இழுத்துத் தாழிட்டனர். பின்பு குமாரசாமியிடம் சென்று தவறான செய்தியைக் கூறினர். கோபம் கொண்ட குமாரசாமி மனைவியைச் சந்தேகம் கொண்டு அடித்து உதைத்தார். பாவாயி, `நான் உத்தமி’ என்று கூறிக் கதறினாள். ஆனாலும் அதை நம்பாமல் குமாரசாமி மனைவியை வெட்டிக் கொல்லத் துணிந்தார். அப்போது பாவாயி, `என்னை மலையாளச் சாமி முன்பு வைத்து வெட்டுங்கள்’ என்று கூறினாள். குமாரசாமி அதன்படியே பாவாயியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வெட்டத் துணிந்தார். அப்போது பாவாயி,

`ஓரி கொட்டி பறை முழங்க

ஓவச்சாண்டி என்னைப் பெண்ணெடுக்க

நான் அவுசாரியா இருந்தா

இந்த ஊரு நல்லா இருக்கணும்

நான் உத்தமிப் பத்தினியா இருந்தா

என்னைத் தூத்திப் பேசினவங்க

வாழும் இந்த ஊரு

மண்மேடு மலைமேடாய்ப் போகணும்’

என்று மனம் வெந்து மண்ணை வாரி வீசிச் சாபமிட்டாள். அதன் பின்பும் நம்பாமல் குமாரசாமி பாவாயியை வெட்டிக் கொன்றார். சில நாள்களில் உண்மைநிலை தெரிந்ததும், குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். அவரின் தம்பி கந்தசாமியும் தன்னால்தான் அண்ணனும் அண்ணியும் இறந்தனர் என்று எண்ணி அவரும் உயிரை விட்டார். பாவாயியும் குமாரசாமியும் மலையாளச் சாமி பாதத்தினை வணங்கி அருகிலேயே வழிபாடு பெற்றனர் என்று மக்கள் கூறுகின்றனர்.

மலையாளச் சாமிக்கு தனி ஆலயம் இல்லாததால், மாரியம்மனுக்கும் பத்திரகாளி அம்மனுக்கும் விழா எடுக்கும் சித்திரை மாதத்தில் சிறப்பு பூசை செய்யப்படுகிறது. சிறப்பு பூசையின்போது சாராயம், கள், சுருட்டு, வடை, பொங்கல், பழம், தேங்காய் ஆகியவற்றைப் படையலிட்டு கிடா, சேவல் பலிகொடுப்பார்கள். மலையாளச் சாமியின் வேலில் எலுமிச்சைப் பழம் ஒன்றும் குத்திவைப்பார்கள். சேளூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மாரியம்மன், காளியம்மன், கொங்களம்மன், பகவதியம்மன், கருப்பண்ணசாமி கோயில்களில் விழா நடைபெறும்போது மலையாளச் சாமி கோயிலின் வேல் எடுத்துச் செல்லப்படும். எடுத்துச் செல்கிற வேலை காவிரி ஆற்றில் நீராட்டிப் புனிதப்படுத்துவார்கள். பின்னர் மாலை அணிவித்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். இது நீண்டகால வழக்கமாக உள்ளது. மேலும், பண்டிகைக் காலங்களில் இந்த வேல் வீடுவீடாக எடுத்துச் செல்லப்படும். மக்கள் வேலினை மஞ்சள் நீராட்டி, தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். மேலும், விழா முடிவுறும் மூன்றாம் நாள் அந்த வேலினை மலையாளச் சாமி கோயிலில் கொண்டு வந்து குத்திவைத்துவிடும் வழக்கமும் மக்களிடம் உள்ளது.

மலையாளச் சாமி கோயிலுக்கு 12 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் வரும் வருமானத்தை ஆறுமுகப் பண்டாரத்தின் வழிவந்த 16 குடும்பத்தினர் பயன்படுத்தி வாழ்ந்துவருகின்றனர். இந்தக் குடும்பத்தினர் வீரமாத்தி, மீனாட்சி எனும் இரண்டு பெண் தெய்வங்களையும் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர். இந்தத் தெய்வங்களின் வரலாற்றையும் ஒரு வாய்மொழிக்கதை எடுத்துரைக்கிறது.

ஆறுமுகப் பண்டாரத்தின் வளர்ப்புத் தாயாரும் வளர்ப்புத் தாயாரின் மகளாகிய மீனாட்சியும் அவருடன் வசித்து வந்தனர். இப்படி இருக்கையில், மீனாட்சியின் அழகில் மயங்கிய புதூரைச் சேர்ந்த வேட்டுவக் கவுண்டரான குமாரசாமி என்பவர் பெண் கேட்டார். அவரை எதிர்த்து அந்தப் பகுதியில் வாழ முடியாது. எனினும், வேற்று குலத்தவருக்குப் பெண் கொடுப்பது குலத்துக்கு இழுக்கு என்று வீரம்மாள் கருதினாள். எனவே குலமானம் காக்க மகளுடன் உயிரைவிடுவதே மேல் என்று கருதினாள். குமாரசாமியிடம், `என் மகள் மீனாட்சியை நீ திருமணம் செய்ய வேண்டுமென்றால், நானும் என் மகளும் சந்தனக் கட்டையினால் உருவான பூக்குழி [தீக்குழி]யில் இறங்கி மேடேறும் சடங்கு செய்ய வேண்டும்’ என்றாள். குமாரசாமியும் அதன்படியே, பூக்குழி இறங்க ஏற்பாடு செய்தார். வீரம்மாள் தன்னுடைய வளர்ப்பு மகன் ஆறுமுகப்பண்டாரத்திடம், `நானும் என் மகளும் தீயில் விழுந்து இறந்துபோகப் போகிறோம். எனவே நீ எங்கள் இரண்டு பேர் கைகளிலும் ஆளுக்கோர் எலுமிச்சைப் பழம் தந்து, இரண்டு பேருக்கும் ஆளுக்கொரு பூமாலையும் வாங்கிப் போடு. நாங்கள் எரிந்து சாம்பலானாலும், பூமாலையும் எலுமிச்சைப் பழமும், எங்கள் சேலையும் கருகாது. அதை நீ எடுத்துவைத்து வழிபடு. உன் குலத்தைக் காப்பாற்றுவோம்’ என்று கூறினாள். கூறியபடியே தாயும் மகளும் பூக்குழியில் உயிரைவிட்டனர்.

ஆறுமுகப் பண்டாரம் எரியாமல் இருந்த பழம், மாலை, சேலை ஆகியவற்றை எடுத்துவைத்து வழிபட்டார். அன்று முதல் அவரின் வழியினர் வீரம்மாளை வீரமாத்தியாகவும், அவள் மகள் மீனாட்சியை குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். வீரமாத்தியம்மன் கோயில் புதூரின் நுழைவாயிலில் அரச மரத்தடியில் அமைந்துள்ளது. வீரமாத்தி, மீனாட்சி இருவருக்கும் சிறிய சிலைகள் காணப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பூசை செய்கின்றபோது வளையல், பொட்டு, கண் மை, சீப்பு, கண்ணாடி, சேலை உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் படையலிடுகின்றனர். வெண்பொங்கலும் சுண்டலும் வைத்து வழிபடுகின்றனர். மக்கள் இந்த தெய்வ வழிபாட்டைச் `சீலைக்காரியம்மன்’ வழிபாடு என்று அழைக்கின்றனர். இதன் மூலம் மலையாளச் சாமி வழிபாடு என்பது தனித்துவம் கொண்டதாகவும் பிற வழிபாட்டு மரபுகளுடன் ஒன்றினைந்து இருப்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.