பிறந்தவேளை (லக்னம்) கன்னி ராசி. அதற்கு 7ம் இடம் மீன ராசி. அதில் சனி அமர்ந்தி ருக்கிறான். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால், தாம்பத்தியம் நெருடலைச் சந்திக்கும் என்கிறது ஜோதிடம் (உதாரணம்: 1).
சனி வெப்ப கிரகம். அவன் 7ல் இருப்பதால் எதிரிடையான பலனை ஏற்படுத்துவான். அவன் 7ல் அமர்ந்து, ஏழாம் பார்வையாக (முழுப் பார்வை) லக்னத்தைப் பார்க்கிறான். ஆக, லக்னத்தின் அனுபவத்தைச் சுவைப்பதில் இடையூறு ஏற்படுத்துகிறான். அந்த சனி 5 மற்றும் 6க்கு உடையவன். 5 கர்மவினை; 6ல் எதிரிடை யான பலத்தை அளிப்பவன். 6க்கு உடையவனாக இருந்து, 7ல் அமர்ந்து லக்னத்தில் பார்வையைச் செலுத்தி, ஜாதகனின் கர்மவினையை (தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியின்மை) நடை முறைபடுத்துகிறான். 7க்கு உடையவன் குருவாக இருந்தும் நல்லதை எட்ட முடியவில்லை. 6க்கு உடையவன் 7ல் அமர்ந்திருக்கும் நிலையானது, முந்திக்கொண்டு விபரீத பலனை அளித்து விடுகிறது. இங்கு ஜாதகனின் (புருஷன்) குறை சுட்டிக் காட்டப்படுகிறது. அவனது ஜாதகத்தில் 6க்கு உடையவன், 7ல் அமர்ந்து செயல்பட்டான். ஆகவே, சுகமின்மைக்கு மனைவியை குறை சொல்ல இயலாது. நல்ல அமைதி கிடைத்தும் தனது கர்மவினை அனுபவிக்க முடியாமல் தடுத்துவிட்டது என்று ஜோதிடம் விளக்கும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புருஷ ஜாதகத்தின் லக்னத்தில் இருந்து 7 (மீன ராசி) வரப் போகும் மனைவியின் லக்னமாகும். அவளது லக்னத்தில் சனி வீற்றிருக்கிறான்; லக்னத் துக்கு தகுதி இழப்பை ஏற்படுத்துகிறான். அத்துடன், அவன் 7ம் பார்வையாக கணவனின் லக்னத்தை (கன்னி) பார்ப்பதால் கணவனுக்கும் தகுதி இழப்பை ஏற்படுத்துக்கிறான். 7ம் இடம் அதாவது கன்னி அவனது பதி செளக்கியத்தை வரையறுக் கும் இடம். அதை குறைத்துவிடுகிறான் சனி. ஜாதகனுடைய மனைவியின் லக்னத்துக்கு (மீனம்) 12க்கு உடையவனாக சனி இருப்பதால் (விரயம் இழப்பு) தாம்பத்திய சுகத்தின் இழப்பை நடை முறைப்படுத்துகிறான் என்று ஜோதிடம் விளக்கும். இருவரின் சேர்க்கையில் உருவாவது தாம்பத்திய சுகம். ஆகையால், இரண்டுபேரிலும் தகுதியின்மையை சுட்டிக்காட்டுகிறான், வெப்ப கிரகமான சனி.

ஜாதகனின் கர்மவினையானது, லக்னத்தில் இருந்து 7ல் சனி இருக்கும் வேளையை, அதுவும் 6க்கு உடையவனாக இருக்கும் நிலையில் அந்த ஜாதகனின் பிறப்பு வேளையாக தேர்ந்தெடுத்தது. மருத்துவர் தன் விருப்பப்படி பிரசவ காலத்தை நிர்ணயிக்கிறார். பெண்ணின் பெற்றோரிடம் 'நல்லநேரம் பார்த்துச் சொல்லுங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். அவர்கள் சொல்லும் நேரத்தில் பிரசவம் நடந்துவிடுகிறது. இங்கே மருத்துவரின் வாயிலாக கர்மவினை செயல்பட்டுவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாகக் குறித்த வேளையில் பிரசவம் நிகழாமல், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ நடைபெற, மருத்துவரும் பெண்ணின் பெற்றோரும் ஏமாந்துபோவதும் உண்டு.
இன்றைய மனித சிந்தனை கர்மவினைக்கு அடிபணியுமே ஒழிய, அதற்கு எதிராக செயல்பட இயலாது. ஜோதிட சிந்தனையை ஒதுக்கிவிட்டு, தனது பழக்கப்பட்ட சிந்தனையில் பலனைச் சொல்லி பாமரர்களை ஈர்ப்பதற்காக, விஞ்ஞான ஜோதிடம், தெய்விக ஜோதிடர் என்ற அடைமொழிகளால் சிறப்பை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடாது. ஜோதிடம் விஞ்ஞானம். அது வானவியல். ஜோதிடன் தெய்வமாகமாட்டான். அப்படி அவன் தெய்வமாகிவிட்டால் ஜோதிடம் சொல்லி வாழ்க்கையை நடத்தமாட்டான். ஆக, பள்ளிக்கூடம் போகாமல், கணக்கு பூகோளம் போன்றவற்றில் அறிவு பெறாமல், விஞ்ஞான ஜோதிடராகவும், தெய்வ ஜோதிடராகவும் உருவாவது நம்பிக்கைக்கு உகந்ததல்ல. இதுபோன்ற பிரலபங்கள், ஜோதிடம் தனது களையை இழக்காமல் பொலிவுடன் விளங்க ஒத்துழைக்க வேண்டும். முன்னோரின் அறிவுரைகள் நம்மை செம்மைப்படுத்த உதவும். விஞ்ஞான மாற்றம் ஜோதிடத்தை பாதிக்காது. சட்ட திட்டத்தோடு தோன்றி மறையும் சூரியனும், சந்திரனும் ஜோதிடத்தின் அடிப்படை தத்துவம். அது நிலையானது.
லக்னம் கன்னி; 7ல் (மீனத்தில்) செவ்வாய். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால் அவனது தாம்பத்திய வாழ்க்கை நிம்மதி அளிக்காது. அவனுடைய மனைவியை இழக்கவைத்தாவது தாம்பத்தியத்தை சுவைக்க விடாமல் செய்துவிடும். அவன் அற்பாயுள் கொண்ட மனைவியைக் கைப்பிடிக்க நேர்ந்தால் இழப்பு நடைமுறைக்கு வந்துவிடும் (உம்: 2).
கணவனை இழந்த மனைவிகளும், ஒத்துவராமல் கணவனைத் துறந்த பெண்மணிகளும் எண்ணிக்கையில் அதிகமாகத் தென்படும் நிலையில், தாம்பத்தியத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம். எனினும், கர்மவினையைத் தோற்கடித்துவிடலாம் என்று சமாதானம் அடைய முடியாது. ஒருவேளை நீண்ட ஆயுளைப் பெற்ற மனைவி கிடைத்தாலும், கர்மவினை யானது தாம்பத்திய சுகத்தைச் சுவைக்க முடியாமல் செய்துவிடும். எல்லாம் நிறைவாக இருந்தும் அதை அனுபவிக்க முடியாத மனப் போக்கை கர்மவினை ஏற்படுத்திவிடும். கர்ம வினையைக் கரைத்து, நீண்ட ஆயுள் உடைய வளைக் கைப்பற்றினால் தாம்பத்தியம் மகிழ்ச்சி யளிக்கும். அதற்கு தர்மசாஸ்திரம் உதவும். எந்த உயர்ந்த பதார்த்தமானாலும், அதை அழுக்கான ஒரு கரண்டியில் எடுத்து உண்டால், சுகாதாரம் பறிபோய்விடும். கரண்டியின் அழுக்கை அகற்ற வேண்டும்.

விதவைகளும், கணவனைத் துறந்தவர்களும் ஏராளம் இருந்தால் போதாது. அவளின் மனம் சுவைக்கும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். பெண் மனம் உயர்ந்த சேலைகளை விரும்பும். அழகு இருப்பவர்களின் அழகை ஆடைகள் விரிவுபடுத்தும். ஆனால், சேலையே அழகை அளிக்கும் என்று தப்புக்கணக்கு போடும் பெண்மணிகளும் உண்டு!
மனைவி கிடைத்தால் இன்பம் உண்டு என்று நினைப்பதும் அறியாமை. லக்னத்தில் இருந்து 7ம் வீடு, வரப்போகும் மனைவியின் லக்னமாகும். அங்கு செவ்வாய் அமர்ந்து இருக்கிறான். அந்த செவ்வாய், 7ம் பார்வையாக லக்னத்தைப் பார்க்கிறான். அந்தப் பார்வை, லக்னத்தின் குறையை அதாவது அவன் கர்மவினையின் தரத்தை தாம்பத்திய விஷயத்தில் நிர்ணயம் செய்கிறது (உம்:3). செவ்வாய் 7ல் இருப்பதால், மனைவியின் தரத்தை உறுதி செய்யும் விஷயத்தில் முனைகிறான். இப்போது 7ஐ லக்னமாக வைத்து பெண்ணின் (வரப்போகும் மனைவி) ஜாதகத்தைச் சுட்டிக்காட்டு வான். ஏழின் ஏழு அதாவது லக்னம். அது அவளுடைய கணவனின் வீடு. அங்கு முழுப் பார்வையாக செவ்வாய் பார்க்கி றான். அந்தப் பார்வையால், கணவனின் இணைப் பால் கிடைக்கும் சுகத்தை இழக்கவைக்கிறான்.

அந்தச் செவ்வாய் 8ம் பார்வையாக லக்னத் தின் 8யும் பார்ப்பான். அங்கு முழுப் பார்வை உண்டு. 8 அவளது ஆயுள்; ஆயுளை இழக்க வைக்கிறான். ஆகவே, தாம்பத்திய சுகம் இனிக் காது என்பதை 7ம் பார்வையிலும், அதற்கு தனது இழப்பு காரணம் என்பதை 8ம் பார்வை யிலும் உறுதிப்படுத்துகிறான்.
இந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு வரப் போகும் மனைவியின் ஜாதகத்தை உருவாக்கலாம். மனைவியாக யார் வந்தாலும், அவளிடம் கிடைக்கும் இன்பத்தை, இவனது ஜாதகத்தில் 7ஐ வைத்தே நிர்ணயிக்கவேண்டும். செவ்வாய் இருக்கும் ராசி அவளது லக்னம். அதன் '7’ கணவனின் தரத்தை நிர்ணயம் செய்யும். அதேநேரம், கணவனிடம் இருந்து தனக்கு கிடைக்கும் அன்பையும் இறுதி செய்யும். செவ்வாய் 7ஐ பார்ப்பதால், கணவன் சுகத்தை இழக்கவைக்கிறான். 8ம் பார்வையாக 8ஐ (அவளது ஆயுளை) பார்ப்பதால் ஆயுளுக்குத் தீங்கு விளைவிக் கிறான். ஆகையால், வரப்போகும் மனைவி ஆயுளை இழப்பாள் என்று உணரவைக்கிறான் செவ்வாய்.
புருஷ ஜாதகத்தின் அமைப்பை வைத்து வரப்போகும் மனைவியின் தரத்தை வரையறுக்கும் ஜோதிடம். வரப்போகும் மனைவிக்கு பிறந்தவேளை ஜாதகம் உண்டு. அதன் பலமே அவளிடம் தென்படும். அந்த பலனை புருஷ ஜாதகம் சுட்டிக்காட்டாது. ஆனால், பிறந்தவனின் கர்மவினையானது, வருங்கால மனைவியை எப்படி இழக்க வைக்கும் என்பதை அது விளக்கும். அவனது கர்மவினைக்கு உகந்த மனைவியை அவனது சிந்தனை தேர்ந்தெடுத்து விடும். இங்கு, பிறந்தவனின் ஜாதகம் அலசி ஆராயப்படுகிறது. அவன் கர்மவினையின் செயல்பாடுகள் விளக்கப்படுகிறது. வருங்கால மனைவி இவனுக்குத் தீங்கு இழைக்கவில்லை. அதே போல், வருங்கால மனைவியின் ஜாதகமும் இவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவனது கர்மவினையே பலனைத் திணித்தது.

7ல் செவ்வாய் இருந்தால், எப்படி அந்த புருஷ ஜாதகனுக்கு தாம்பத்தியம் சுவையில்லாமல் போய்விடுகிறது, அதற்கு ஆதாரமான மனைவியின் இழப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஜோதிடம் விளக்கும். அதற்காக, 7ம் பாவத்தை லக்னமாக வைத்து ஆராயும் முறையை எடுத்துரைக்கிறது ஜோதிடம். இந்த நடைமுறை எல்லா பாவங்களையும் ஆராயப் பயன்படும். ஆக, இழப்புகளுக்கு அந்தந்த பாவங்கள் காரணம் இல்லை; பிறந்த வேளையில் தென்படும் கர்மவினையே காரணம் என்பதை இறுதி செய்ய இது உதவுகிறது.
லக்னம் கன்னி. 8ல் அதாவது மேஷத்தில் செவ்வாய். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால் தாம்பத்தியமும் உண்டு. மனைவியும் மறையமாட்டாள் என்கிறது ஜோதிடம் (உம்:4).
வரப்போகும் மனைவியின் ராசி மீனம். அது அவளது லக்னம். அவளது லக்னத்தில் (மீனம்) செவ்வாய் இல்லை; அவன் கணவன் லக்னமான கன்னியைப் பார்க்கவில்லை; தாம்பத்தியத்தையும் இழக்கவில்லை, தன்னையும் இழக்கவில்லை. இதை செவ்வாய் தோஷமாக சித்திரிப்பது தவறு என்கிறது ஜோதிடம். இந்த புருஷ ஜாதகத்தின் கர்மவினை மனைவியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். இங்கு, வரப்போகும் பெண்ணின் ஜாதகப்படி, பெண்ணின் லக்னமான மீனத்தில் இருந்து 2ல் இருக்கும் செவ்வாய், அவளது 8ஐ அதாவது துலாம் ராசியையும், 8ம் பார்வையாக விருச்சிகத்தையும் பார்ப்பதால், இழப்பு இல்லாமல் போய்விடுகிறது. அவளது பாக்கிய ஸ்தானத்தை (9ஐ) அந்த ஸ்தானத்துக்கு உடைய செவ்வாய் பார்ப்பதால், அவளுக்கு சகல சுகங்களும் கிடைத்துவிடுகின்றன. தாம்பத்தியத்தில் அவனுக்கு நெருடலும் இல்லை மனைவியின் இழப்பும் இல்லை என்று வரையறுக்கிறது ஜோதிடம்.

புருஷ ஜாதகத்தில் மனைவி இழக்கப்படுவாள் என்று சொன்னால் மட்டும் போதாது, அந்த இழப்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்கவேண்டும். அதுவும் புருஷ ஜாதகத்தை வைத்து விளக்க வேண்டும். ஏனென்றால், அது புருஷனுக்கு இழப்பு. எனவே, அவனது ஜாதகத்தை வைத்து ஆராய்வது சிறப்பு.
ஜோதிடம் சொல்லும் நடைமுறையை அலட்சியப்படுத்தி புதுவிதமான விளக்கத்தை அறிமுகம் செய்யும் எண்ணம் ஜோதிட பிரபலங்களிடம் தென்படக்கூடாது. பகுத்தறிவான விளக்கம், விஞ்ஞான விளக்கம் என்பதெல்லாம் ஜோதிடம் கையாண்ட விளக்கங்கள்தான். புது விளக்கங்கள் அத்தனையும் பெரும்பாலும் ஜோதிடம் ஏற்காத விளக்கங்களாகவே தென்படுகின்றன. ஆகவே, பழைய விளக்கங்கள் மக்களை ஈர்காத நிலையில், புது விளக்கம் சொல்லிப் பலன் அளிப்பது ஜோதிட சேவை ஆகாது.
பாவத்தில் அமர்ந்த கிரகம், பார்க்கும் கிரகம் இந்த இரண்டுக்கும் வேறுபாடு பார்க்காமல் துணிந்து பலன் சொல்லும் துணிவு பிரபலங்களுக்கு இருக்கக்கூடாது. 12, 1, 2, 4, 5 ஆகியவற்றில் அமர்ந்த செவ்வாயை வைத்து மனைவி இழப்பு அல்லது கணவன் இழப்பை வெளியிடும் தகவல்கள் அத்தனையும் ஜோதிடம் ஏற்காத ஒன்று. இவை அத்தனையையும் அந்தந்த பாவங்களை லக்னமாக வைத்து ஆராயும்போது, 7வது பாவத்துக்கோ, அதை சுவைக்கும் லக்ன பாவத்துக்கோ எந்தத் தொடர்பும் இல்லாமல் இருப்பதை அறியலாம்.

எந்த பாவமும் லக்னாதிபதி சம்பந்தத்தோடும், லக்ன பாவத்தோடும் இணைய வேண்டியது அவசியம். அதை ஒதுக்கிவிட்டு பலன் சொன்னால், அது முழுமை பெறாது. பஞ்சாங்கங்களில் கொடுத்திருக்கும் செவ்வாய் தோஷ விளக்கம் நன்கு ஆராயாமல் விளக்கப்பட்டவை. அதை நம்பி பிரபலங்கள் பலரும் முடிவெடுத்து விடுகிறார்கள். பிறப்புரிமையை ஒருவரும் இழக்கக்கூடாது. தடங்கல் இருந்தால் அதை விலக்கி, விருப்பத்தை அவனும் சுவைக்கவேண்டும் என்ற கோணத்தில் ஜோதிடம் நமக்கு உதவும். 'கர்மவினை எது’ என்று சுட்டிக்காட்ட ஜோதிடம் நமக்கு வேண்டாம். அது தானாகவே அனுபவத்துக்கு வரும். அப்போது அதைத் தெரிந்து கொள்ளலாம். விபரீதமான கர்மவினையி லிருந்து மீள ஜோதிடம் வேண்டும்.
பெண் ஜாதகத்தில் 7லும், 8லும், ஆண் ஜாதகத்துக்கு 7ல் அமர்ந்த செவ்வாய் மட்டுமே தாம்பத்திய சுகத்தின் இழப்பு, கணவன் அல்லது மனைவியின் இழப்பைச் சொல்ல இயலும் பார்வை தோஷமாக மாறாது. பாப கிரகங்களின் பார்வை என்பதில் அது அடங்கிவிடும். பாவாதிபதி, லக்னாதிபதி, அந்த பாவத்துக்கு ஏற்படும் சுப கிரக பார்வைகள் ஆகியன இந்த செவ்வாய் பார்வையைச் செயலிழக்கச் செய்து விடும். 12, 1, 4ல் இருக்கும் செவ்வாய்க்கு மட்டும்தான் 7ல் பார்வை இருக்கும். மற்ற இடத்துக்கான பார்வைகள் 7ன் தரத்தையும், லக்னத்தையும் எந்தவிதத்திலும் பாதிக்காது. தோஷத்தை உறுதி செய்வதில் பார்வைக்குப் பங்கு இல்லை. இருக்கும் தோஷத்தை திடப் படுத்தவோ, விலக்கவோதான் பார்வையால் இயலும் (உம்:5).
ஆகவே, ஜோதிடம் சொல்லும் நுணுக்கங் களை அலசி ஆராய்ந்தால் பலன் சொல்லும் விஷயத்தில் நம்பிக்கை வலுக்கும். அப்போது, பல விவாகரத்துக்களை உருவாகாமல் செய்து விடலாம். மனம் விரும்பிய விஷயங்களில் தவறான முடிவை ஏற்பதற்கு அவனது கர்ம வினை காரணமாகிறது. அதை விளக்குவது ஜோதிடம்.
தொடரும்...