மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே! 

சுந்தரகாண்டம்  இலங்கையில் அனுமன் சீதையைத் தேடும் சம்பவத்தை விவரிக்கும் கம்பர், மயன் மகளான மண்டோ தரியை, பெரும் கற்புக்கரசியாகப் போற்றுகிறார்.

ஒரு நிலையில், 'சீதைதான் இவளோ’ என்று அனுமன் சந்தேகப்படும் அளவுக்கு, அவளுடைய கற்புநெறி கம்பரால் உயர்த்திப் பேசப்படுகிறது.

இப்படி ஓர் உளவியல் நிலையை கம்பன் எடுத்த பிறகு, இறுதி வரையிலும், மண்டோதரியின் பாத்திரப் படைப்பு குறித்த தனது போக்கிலிருந்து கம்பர் பின்வாங்கவே இல்லை எனலாம்.

புத்திரர்களான அக்ககுமாரனும், இந்திரஜித்தும் மாண்டபோது கதறித் துடித்த மண்டோதரியின் தாய்மையையும், அந்தப்புர மகளிரின் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் மாண்பு மன்னர்களுக்கு இல்லாமல் போன நிலை குறித்த தனது பார்வையையும் மிகத் தெளிவுற விளக்கு கிறார் கம்பர்.

ராவணன் இறந்த பிறகு, மண்டோதரியின் புலம்பலாய் வெளிப் படும் கம்பரின் வார்த்தைகள், அவளின் மாண்பை இன்னும் உயர்த்திக் காட்டுகின்றன. 

'கள் இருக்கும் மலர்க் கூந்தல்

சானகியைமனச் சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து,

தடவியதோ ஒருவன் வாளி...’

என்று ராமனின் வில் திறனைப் பாராட்டுகிறாளே ஒழிய, ராமனை ஒரு தெய்வமாக அவள் போற்றவில்லை. இதையே வேறோர் இடத்தில் கம்பன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12

'ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ?’ என்று வியக்கிறாளே அன்றி, ராமன் கடவுள், அவன் மகா விஷ்ணுவின் அவதாரம் என்று எங்கும் மண்டோதரி பேசவில்லை.

'காந்தையருக்கு அணி இஅனைய சானகியார்

பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும்,

அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால்

வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

என்று மொத்த ராமாயணத்தையும் ஒரே பாடலில் கூறுகின்றாளே தவிர, அவள் ராமனை தெய்வப்பிறவி என்று குறிப்பிடவே இல்லை. மட்டுமின்றி, அடுத்த பாடலில் ராமன் ஒரு மானுடப் பிறவி என்பதனை தெள்ளத் தெளிவாகக் கூறுகிறாள்.

'தேவர்க்கும், திசைக் கரிக்கும்...’ என்று தொடங்கும் பாடலின் இறுதியில், 'வலியன் ஒரு மானுடன் உளன் என்று கருதினேனோ?’ என்பதன் மூலம், ராமனை ஒரு மானுடனாகவே மண்டோதரி நினைக்கிறாள்.

இனி, வால்மீகி ராமாயணத்தைக் காண்போம். ராவணன் இறந்துபட்டுக் கிடப்பதைக் காண வரும் மண்டோதரி, 'அன்புக் கணவனே! உம்முடைய சக்தி அளப்பரியது. இருப்பினும், ராமரை உங்களால் எதிர்க்க முடியாது. மிகுந்த தவ வலிமையாலும், அதனால் பெற்ற வரத்தினாலும் நீர் கர்வம் அடைந்துள்ளீர். அதன் காரணமாக இந்தப் பூமிக்கு பாரமாகிவிட்டீர். இந்த ராமன் சாக்ஷாத்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 12

மகாவிஷ்ணுவின் அவதாரம். இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள்’ என்று அரற்றுகிறாள்.

ஆக, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் மண்டோதரி ராமனை மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே காண்கிறாள்.

அப்படிப்பட்ட மண்டோதரியைப் போன்று, தான் ராமனை தெய்வம் என்று கூறமுடியாமல் போனதால், திருக்கோளூரில் இருக்கும் தகுதி தனக்கு இல்லை என்று அப்பெண்பிள்ளை அகல்கிறாளாம்.

20. 'அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!’

ராமாயண காலத்தை ரிஷிகளின் காலம் என்றால் மிகையாகாது. தசரதனின் குலகுரு வசிஷ்டர் பிரம்ம ரிஷி. சீதையின் தந்தை ஜனகரும் பிரம்மரிஷிதான். பிராட்டியுடன் பெருமானைச் சேர்த்து கதையின் போக்கை மாற்றும் விசுவாமித்திரரோ ராஜரிஷி!

தண்டகாரண்யத்தில் அத்ரி முதற்கொண்டு கௌதமர், காச்யபர், அகத்தியர் என்று கதை நெடுகிலும் ரிஷிகள்தான். எனில், அந்த த்ரேதா யுகம் எவ்வளவு புண்ணிய காலமாக இருந்திருக்கவேண்டும்!

சரி, கதைக்கு வருவோம். தசரதனிடம் ஓர் உதவி கேட்டு அயோத்திக்கு வருகிறார் விசுவாமித்திரர்.

சித்தாஸ்ரமத்தில் அவருடைய தலைமைப் பொறுப்பில் நிகழவுள்ள ஆறு நாள் யாகத்துக் குக் காவலனாக ராமனை தன்னுடன் அனுப்பும்படி தசரதனிடம் கேட்கிறார். இந்த வேண்டுதல் உயிரைப் பறிக்கும் கூற்றம் போல இருந்ததாம் தசரதனுக்கு.

'செருமுகத்துக் காத்தி என நின் சிறுவர்

நால்வரினும் கரிய செம்மல்

ஒருவனைத் தந்திடுதி என உயிர் இரக்கும்

கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்’

என்கிறார் கம்பர். மேலும், அப்போதைய தசரதனின் நிலையை, 'கண் இலான் பெற்று இழந்தான் போல’ என்று விவரிக்கிறார்.

இந்த இடத்தில்தான் ராமன் இன்னார் என்று விசுவாமித்திரர் தெரிவிக்கும் மிக உயர்ந்த சுலோகம் இடம்பெறுகிறது. இதற்குச் சொல்லப்படும் வியாக்கியானங்களுக்கு ஒரு முடிவே கிடையாது என்ற அளவுக்குப் பலராலும் விளக்கப்பட்டுள்ளது.

'அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்யபராக்ரமம் வசிஷ் டோபி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்திதா:’

''நான் ராமனை மகாத்மா என்று உண்மை யாய் அறிகிறேன். மகா தேஜஸ்வியான வசிஷ் டரும்கூட அறிவார்! மட்டுமின்றி, தவத்தில் நிலைத்திருக்கும் எல்லோரும் அறிவார்கள்'' என்கிறார் விஸ்வாமித்திரர்.

அஹம் வேத்மி என்ற வார்த்தைகள், 'வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்’ என்று புருஷ சூக்தத்தில் வரும் வாக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. புருஷம் இங்கு ஸத்ய பராக்ரமமாகவும், மஹாந்தம் மஹாத்மாவா கவும் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஆனால், 'ராமன் பரம்பொருள்’ என்று, தான் உணர்ந்த சத்தியத்தை மற்றவர்களுக்கும் அழுத்தமாக உணர்த்த வசிஷ்டரையும் ராஜ ரிஷி துணைக்கு அழைத்ததில் இருந்து, அந்த சத்திய வார்த்தைகளின் மகத்துவத்தை அறியலாம்.

''அப்படி, விஸ்வாமித்திரர் 'அஹம் வேத்மி’ என்று சொன்னதைப் போல, நான் சொல்ல வில்லையே! பிறகு எதற்காக நான் இந்தத் திருக்கோளூரில் இருக்கவேண்டும்?'' என்று திருக்கோளூர் பெண் பிள்ளை கேட்கிறாளாம். 

இங்ஙனம், திருக்கோளூர் பெண் பிள்ளையா னவள் உடையவர் ஸ்ரீ ராமானுஜரிடம் உரைத்தது 81 வாக்கியங்கள்!

பின்னர், ராமானுஜரிடம், ''இதுகாறும் நான் குறிப்பிட்டவர்களில் ஒருவருடைய ஞானமாயினும் எனக்கு உண்டாயிருந் தாலன்றோ, நான் இத்திருக்கோளூரில் தங்கியிருக்கும் தகுதியுண்டு. அஃதில்லையே! முசல் புழுக்கை வயலில் கிடந்தென்ன, வரப் பில் கிடந்தென்ன?'' என்றாளாம்.

ஸ்ரீ ராமானுஜர் அந்தப் புனிதவதியை ஆசீர் வதித்து, அங்கேயே தங்கும்படி ஆக்ஞாபித்து அருளினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை குறிப்பிட்டவற்றில் 20 வாக்கியங்களையும் அதற்கான விளக்கங்களையும் பார்த்தோம். மீதமுள்ள வாக்கியங்களும் அரும்பெரும் தகவல்களைக் கொண்டவை. அவை, விகடன் இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறும்.