Election bannerElection banner
Published:Updated:

மஹாளயபட்சம்

முன்னோர் ஆராதனை...ஏன் எதற்கு எப்படி?

சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மஹாளயம் என்று பெயர். இந்த வருடம் புரட்டாசி 11, அதாவது செப்டம்பர் 28ம் தேதி, திங்கட்கிழமை முதல், மஹாளயபட்சம் ஆரம்பமாகிறது. புரட்டாசி 25 அதாவது அக்டோபர் 12ம் தேதி திங்கள்கிழமை மஹாளயபட்ச அமாவாசை திருநாளாகும். 

மஹாளயபட்ச புண்ணிய காலம் எந்த வழிபாட்டுக்கு உகந்தது?

முன்னோர் வழிபாட்டுக்கு உரிய காலம். 'ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறது. நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.

மஹாளயபட்சம்

அவர்களை வழிபட உகந்த காலம் மஹாளயபட்சம்.

நம் தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப் படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில்; அவர்கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது  சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆயு: புத்ரான் யச: ஸ்வர்கம்

கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீஇயம்

பசூன் சுகம் தனம் தான்யம்

ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்

என்றபடி, நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், நல்ல குழந்தைகள், புகழ், சொர்க்கம், ஆரோக்கியம், பலம், செல் வம், பசுக்கள், இன்பம், தானியங்கள் போன்ற அனைத்தும் நமக்குக் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை.

ஒவ்வொரு மாதமும், அமாவாசை போன்ற புண்ணிய தினங்களில் முன்னோரை வழிபடவேண்டும் எனில், மஹாளயபட்சத்துக்கு என்ன தனிச் சிறப்பு?

சைக்கிளில் பயணித்து ஓரிடத்தை அடைவதற்கும், காரில் அந்த இடத்தை அடைவதற்கும் வேறுபாடு இருக்கிறதுதானே! அதேபோல, புண்ணிய காலங்களில் முன்னோர் ஆராதனை செய்வதென்பது மிக உயர்வானது.

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. இவற்றை மஹாளயபட்ச புண்ய காலம் என்பார்கள். தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர், நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

மஹாளயபட்சம்

அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி! சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த நாளே மஹாளயபட்சம் என்பர் பெரியோர்.

மஹாளய பட்ச காலம் முழுவதும் தர்ப்பணம் செய்தே ஆக வேண்டுமா?

மஹாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும். பொதுவாக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யாமல், நம் முன்னோர்கள் குறித்துப் பேசுவதும், அவர்களின் பெயரில் ஏழை, எளியவர்களுக்குத் தான தர்மங்கள் செய்வதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும். மஹாளய காலத்தில் அன்னதானமும் பசுவுக்கு அகத்திக் கீரை, புல், பழமும் அளிக்கலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கும்.

மஹாளயபட்ச காலத்தில் தர்ப்பணம் செய்வதற்கென விசேஷ திருத்தலங்கள் உண்டா?

முன்னோர் தர்ப்பணத்துக்கு கடல் மற்றும் நதி தீரங்களும் தீர்த்தக்கரைகளும் விசேஷமானவை.  ஸ்ரீ ராமன், தன் தந்தைக்கான பித்ரு கடன்களை காட்டில் இருந்தபடியே செய்து நமக்கு வழி காட்டியுள்ளார்.  ஸ்ரீ ராமன், ராவண வதம் செய்த பிறகு சிவ பெருமானைக் குறித்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில், இந்த மகாளயபட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களைச் செய்வது, நம் வாழ்வை செழிக்கச் செய்யும்.

மேலும், மயிலாடுதுறை காவிரி படித்துறை, திருவாரூர் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு கொள்ளிடக்கரை,  ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருநெல்வேலி அருகேயுள்ள வகுளகிரி நதிக்கரை, மூன்று நதிகள் சங்கமிக் கும் பவானி, கன்யாகுமரி கடற்கரை, தேவிப் பட்டணம் நவபாஷாணம் உள்ள கடல்துறை, தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, குடந்தை மகாமகக் குளம், திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளக்கரை போன்ற இடங்கள் தர்ப்பணம் அளிக்க உகந்த இடங்கள்.

இதுபோன்ற தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் என்ன செய்வது? வாரிசு இல்லாத பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பது குறித்த நியதி என்ன?

புண்ணிய க்ஷேத்திரங்களுக்கோ, புண்ணிய நதிக்கரைகளிலோ செய்ய முடியாதவர்கள், அவரவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் தங்களது கடமையை நிறைவேற்றலாம்.

மஹாளயபட்சம்

இறந்துபோனவர் குழந்தை இல்லாதவர் எனில், அவருடைய மனைவியானவர் வாத்தியாரிடமே தர்ப்பணம் செய்யச் சொல் லலாம். இதேபோல், ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில், அந்த வீட்டின் பெண் குழந்தைகள் தங்களின் தந்தைக்காக, பெற்றோருக்காக வேறு ஒருவரை நியமித்துக் கடமையை நிறைவேற்றலாம்.

தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, 'ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். 'எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளி கள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். அவ்வாறே கடைப்பிடித்து  நலம் பெறலாம்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு