மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

பெண்களுக்கு அறம் வரமா... சாபமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? பெண்களுக்கான நவநாகரிக ஆடைஅலங்காரங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்களும், விளக்கங்களும் பத்திரிகை களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கட்டுப்பாடு என்ற பெயரில்  பெண்மையின் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடாது என்றும், சுதந்திரம் என்ற பெயரில் ஆபத்தை விலை கொடுத்து வாங்கக்கூடாது என்றும் வாதப்பிரதிவாதங்கள் எழுகின்றன. இப்படியான நிலையில் அறக்கோட்பாடுகளும், சுயக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு அவசியமா இல்லையா என்பதை தங்கள் பாணியில் விளக்குங்களேன்? 

லலிதா ரகுநாதன், சென்னை-44

'பெண்மை எங்கு பெருமைப்படுத்தப் படுகிறதோ, அங்கு தேவதைகள் மகிழ்ச்சியுற்று அருள்பாலிக்கிறார்கள்’ என்று மனு கூறுவார் (யத்ர நார் யஸ்து பூஜ்யந்தெ நமந்தெதத்ர தேவதா:). வேத ஒலி தேவதைகளை அறிமுகம் செய்தது. அந்த ஒலி, உலக இயக்கத்துக்கு ஒத்துழைக்கிறது. அறத்துக்கு மூலம் அது (வேதோ கிலோதர்ம மூலம்). செயல்முறை அறத்துக்கு ஆதாரம் பெண்மை (ஸ்த்ரீமூலம் ஹிதர்ம:). திருமணம் அறத்தை நடைமுறைப்படுத்த ஏற்பட்டது. பெண்மையின் இணைப்பு அறத்தில் செயல்பட அனுமதி அளிக்கிறது. அற வழியில் வாழ்க்கையை நடத்துவது சிறப்பு. தனிப்பட்ட மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அது நன்மை அளிக்கும்.

? அறம் என்று நீங்கள் வரையறுக்கும் இலக்கணம்தான் என்ன?

சூரியனும் சந்திரனும் உலக இயக்கத்தை துவக்கிவைப்பவர்கள். அவர்கள், தங்களது கடமையில் அக்கறையுடன் செயல்படுகிறார்கள். அதற்குப் பெயர்தான் அறம். திருமணத் தம்பதிகளும் தங்களின் முன்னேற்றத்துகாகவும், சமுதாய வளர்ச்சிக்கும் உகந்த வகையில் கடமையாற்ற வேண்டும். அப்படி செயலாற்றுவதையே தர்மம், அறம் என்றெலாம் விளக்குவர்.

திருமணத்தில் பெண்ணைக் கைப்பிடித்ததும் அறம் ஆரம்பமாகிறது. பெண்மைக்குப் பாதுகாவலனாக இருந்து, அவளது விருப்பங்களை நிறைவேற்றி, அவளது ஒத்துழைப்போடு ஆணானவன் அறத்தை நிறைவுசெய்ய வேண்டும் (ஆவாப்யாம்கர்மாணிகர்தவ்யானிப்ரஜா:சௌத்பாதயிதவ்யா:). அவள் இல்லாமல் அறம் இல்லை என்பதுதான் வேதத்தின் நிலைப்பாடு. வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியுற அறம் பயன்படும். தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைப்பது அறத்தின் ஒரு பகுதியாகும். இயற்கை வளங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்வதும் அறம். இப்போது அறக்கோட்பாடு அறவே அற்றுப்போனதால், வீட்டிலும் வெளியிலும் அமைதியின்மை தென்படுகிறது.

கேள்வி - பதில்

? மகிழ்ச்சியாலும்கூட ஆரவாரங்கள் உண்டாகலாம். அதை எப்படி அமைதியின்மை என்று கூறமுடியும்?

வெற்று ஆரவாரங்களை மகிழ்ச்சியின் அறிகுறியாக ஏற்க முடியாது. பழைமையான நல்ல நடைமுறைகளுக்கு பதிலாக, புதுச் சிந்தனையில் உருவான சீர்திருத்தங்கள் அறத்தை ஒதுக்குவதுடன், அமைதியான வாழ்க்கையை எட்டாக்கனியாக மாற்றியி ருக்கிறது. அன்றாட அலுவல்களைக் கட்டுப்படுத்துவதும், ஊண், உடை, வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதும் சிறப்பாக இருந்தாலும், மன அமைதி நிலவும் சூழலை உருவாக்காத வரையிலும் அத்தனையும் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

அறவழியானது மனப்பக்குவத்துக்கு ஊக்கமும் ஆக்கவும் அளித்து, உலகவியல் சுகபோகங்களைச் சுவைத்து மகிழச் செய்து, பிறப்பைப் பயனுள்ளதாக்கிவிடும். மக்களுக்கு இதய பரிவர்த்தனம் வேண்டும். உடலைப் பராமரிக்கும் அக்கறை, மனப் பராமரிப்பிலும் இணைய வேண்டும். சமுதாய கொந்தளிப்புக்கு கலங்கிய மனம் காரணமாவது உண்டு. அறத்தில் இணைந்த மனம் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கிவிடும். இந்த உண்மையைக் சுட்டிக்காட்டி வழிநடத்தும் மகான்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. பதிலாக, அவர்களில் சிலர், லெளகீக சுகபோக சாதனங்களின் ஈர்ப்பில் வழிதவறிச் செயல் படுவதால், மக்களை முன்னேற்ற உண்மையான மக்கள் தலைவன் இல்லாமல் தவிக்கிறது உலகம்!

? ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாகக் கருதி வாழும் காலத்தில் வாழ்கிறோம். நல்ல படிப்பும், வேலையும் நிறைவைத் தரும்போது, அறம் தர்மம் என்றெல்லாம் போதிப்பது பயன் தருமா?

படிப்பும், பட்டமும், பதவியும், பொருளாதார வாழ்க்கைக்குத் தேவை. ஆனால் அறத்தோடு இணைந்த நடைமுறைகளே அவனை உயர்த்தும். அறத்தை அலட்சியப்படுத்தும்போது, எல்லாம் இருந்தும் மனப் பதற்றத்தின் காரணமாக சிந்தனை தடுமாறி, அவற்றைச் சுவைப்பதிலும் மனம் அமைதி அடைவதிலும் மனிதனால் வெற்றி பெற இயலவில்லை. நலிந்தவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்து, அவர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தாலும், அவர்களின் மனம் அமைதி பெறாமல்தான் இருக்கிறது. மனம் பக்குவப்படாமல் இருக்கும் நிலையில், வாழ்க்கையைச் செம்மையாக நடைமுறைப்படுத்தத் தேவை யான உபகரணங்கள் தாராளமாகக் கிடைத் தாலும், மகிழ்ச்சியை உணர இயலாது.

மனதைக் கட்டுப் படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் நடைமுறைகளை மக்களுக்கு ஓதி, அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் மகான்களைக் காண்பது அரிதாகிவிட்டது. அங்குமிங்குமாகச் சிலர் தென்பட்டாலும் அவர்களில் சிலர் லோகாயத வாழ்வைச் சுவைப்பவர்களாகவே தென்படுகிறார்கள். அறவழியைத் தவிர மாற்று வழி இல்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.

பெண்மைக்குப் பெருமை அளித்து, அவர்களோடு இணைந்து அறவழியில் வாழ்க்கையை நடத்தியவர்கள் நம் முன்னோர். அவர்களைப் பழைமைவாதிகளாகச் சித்திரித்து அறவழியை ஒதுக்குவது தவறு. பெண்மைக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களை விலக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, குடும்ப வாழ்க்கையில் இணைந்து முழு மகிழ்ச்சியைப் பெற முயற்சிக்க வேண்டும். இன்றைய நிலையில் பெண்மையும் சீர்திருத்தவாதிகளின் வலையில் சிக்கித் தவிக்கிறது. ஆக, பெண்மையும் விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

கேள்வி - பதில்

இரண்டாவது  கோணம்...

பண்டைய அறக்கோட்பாடுகள் இன்றைய நாளில் பயன்படாது. ஒரு நாட்டின் தனிக் கலாசாரத்தைத் தக்கவைக்க இயலாது. போக்கு வரத்தும் வியாபாரமும் உலகளாவிய நிலையில் எளிதாக இருப்பதால், கலாசார கலப்படமும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. படிப்பும், வேலையும் தகுதிக்கு உகந்தபடி எந்த நாட்டில் இருந்தாலும் ஏற்கும் எண்ணம் வளர்ந்திருக்கிறது. நாட்டைத் துறந்து மற்ற நாடுகளில் குடியேறும் எண்ணமும் வலுத்திருக்கிறது. பணத்தை ஈட்ட வேண்டும், புலன்களைத் திருப்திப்படுத்த வேண்டும்  இந்த இரண்டும்தான் வாழ்க்கையின் குறிக்கோளாக மாறியிருக்கின்றன.

சுயநலம் ஈடேற திருமணத்தை ஏற்கிறான். சுயநலத்துக்கு இடை யூறு வந்தால் திருமணத்தை முறித்துக்கொண்டு, புதுத் திருமணத்தில் இணைகிறான். பெண்களும் அப்படித்தான். ஆண்பெண் இருவரும் சமம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. மகப்பேற்றைத் தவிர, மற்றவற்றில் இருவரும் சமமாகப் பார்க்கிறார்கள். இருவருக் கும் லோகாயத வாழ்கைதான் குறிக்கோள். அன்றைய நாளில் அறத்தை வைத்து அடிமைப் படுத்தப்பட்ட பெண்மை இன்று விழித்துக் கொண்டுவிட்டது. அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட இயலும். திரும்பவும் அறத்தை ஏற்று அடிமைப்பட பெண்மை தயாராக இல்லை.

? அறத்தை வைத்து பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர் கள்? வேதமும் புராணமும் பெண்மையை எவ்வா றெல்லாம் சிறப்பிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

வேதங்கள் அவர்களை போற்றிப் புகழ்ந்தாலும், நடைமுறையில் அவர்கள் அடிமைகள்தான். ஆணுக்குப் பணிவிடை செய்வதை அறமாகச் சித்திரிக்கிறது. ஆணாதிக்கத்தில் அவர்களை அடக்குவது அறமாகாது. கல்வியிலும் சமுதாயத் திலும் அவர்களுக்கு பங்கு இருக்கவில்லை. பெண்மையை இன்றைய சமுதாயம் பெருமைப்

படுத்துகிறது. காலமாற்றம், சமுதாய மாற்றம் அவர்களுக்கு விழிப்பு உணர்வை அளித்துள்ளது. சுய முயற்சியில் கல்வி பெற்று சமுதாயத்திலும் வளைய வருகிறார்கள். அமைச்சர் முதல் வேலையாள் வரையிலுமாக தகுதிக்கு ஏற்ப வேலை செய்து, அவர்கள் தங்களின் பெருமையை வளர்த்துக்கொள்ள சமுதாயம் இடம் அளித்திருக்கிறது. வருங் காலத்தில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் திறமையை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்கள் போராடிப் போராடியே தனது உரிமைகளைப் பெற்று வளர்ந்திருக்கிறார்கள். இப்படியிருக்க, பண்டைய அறத்தில் அவர்களை இணைய வைக்கும் முயற்சி காலத்துக்கு ஒவ்வாதது.

அறம், பொருள், இன்பம், வீடு என்கிற பழைய கோட்பாடுகள் அவர்கள் நினைவில் இல்லை. பல நூற்றாண்டுகள் பின்தங்கிய சமுதாயத்துக்கு அவர்கள் திரும்பமாட்டார்கள். பண்டைய அறத்தைக் காப்பாற்றுவதில் தங்களைப் பெருமைப்படுத்தி இணைத்துக்கொண்டு வாழ்வதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். மாட்டிக்கொண்டு தத்தளித்த சமுதாயக் கோட்பாட்டில் இருந்து வெளிவந்தவர்கள், திரும்பவும் அதில் நுழையமாட்டார்கள். அறத்தை போதிப்பது, மனப் பரிவர்த்தனம் செய்வது, அவர்களைக் கொண்டாடுவது அத்தனையும் ருத்ராட்ச பூனையின் செயல்பாடு!

? சுய முயற்சி, கல்வியில் வளர்ச்சி என்றெல்லாம் நீங்கள் சொல்வது, லோகாயத வாழ்வுக்குதானே பயன்படும்?

உலகமே லோகாயதத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஆன்மிகம், அறம் ஆகியன பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அங்குமிங்குமாகத் தென்படும் அறமும், ஆன்மிகமும், பக்தியும் லோகாயத வாழ்வில் சோர்ந்துபோனவனுக்கு இளைப்பாறும் இடமாகத் திகழ்கிறது. சிந்தனை வளம் பெறாத அப்பாவி மக்களின் ஒரு பிரிவுதான் ஆன்மிகத்தையும், பக்தியையும், அறத்தையும் ஊன்றுகோலாகப் பிடித்துக்கொண்டு திண்டாடுகிறது. படிப்பை ஏற்க இயலாதவர்கள் ஆன்மிகம், பக்தி, அறம் என்கிற விஷயங்களை அலசி ஆராய்ந்து, அதை பிரசாரம் செய்வதை வேலைவாய்ப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

கேள்வி - பதில்

தற்காலச் சூழலில் ஆண்களே ஏற்கத் தயங்கும் பணிகளையும் பெண்கள் ஏற்று வெற்றி பெற்று விளங்குகிறார்கள். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட பெண்கள் படிப்பிலும், பதவியிலும், பொருளாதாரத்திலும் ஆண்களைவிட பெருமை பெற்று விளங்குகிறார்கள். படிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் உயர் படிப்பில் வெற்றிபெற்று, வேலை வாய்ப்பில் புகழ் பெற்று, அங்கிருந்தபடி தாய்நாட்டுக்கு உதவி செய்கிறார்கள்.

உண்மையில் அன்றைய சமுதாயம் 'அறம்’ என்ற போர்வையில் அவர்களின் முன்னேற்றத்துக்கு தடை போடப்பட்டது. இன்று பெருமையுடன் சுதந்திரமாக தானும் வாழ்ந்து, நாட்டுக்கும் உதவி செய்கிறார்கள். ஆகவே, 'எல்லாம் இருந்தும் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு இதய பரிவர்த்தனம் தேவை’ எனப்போன்ற விஷயங்கள் எல்லாம் ஏற்க இயலாதவை.

மூன்றாவது கோணம்...

கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது. பெண் இனம் தனியே வாழ இயலாது. பிறரோடு சேர்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். மற்றவர்களது சுதந்திரத்தைப் பறிக்காமல், நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தவேண்டும். அதற்குக் கட்டுப்பாடு தேவை. அது ஒரு அறம்.

? அப்படியெனில், தற்போதைய சமூகத்தில் கட்டுப்பாடுகளே இல்லை என்கிறீர்களா?

சுதந்திரம் என்ற பதம் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு இருக்கிறது என்றே சொல்ல வருகிறோம்.

கல்யாணம் ஆகாமலேயே குழந்தைகளை ஈன்றெடுப்பது, குழந்தைகள் பராமரிப்பையும் வீட்டுப் பணிகளையும் வெறும் வேலையாகவே பாவித்து, அதற்கொரு வேலையாளை நியமிப்பது, விருப்பத்துக்கு ஏற்ப கருவைக் கலைப்பது, விவாகரத்து காரணமாக தான் ஈன்ற குழந்தைகளை அநாதைகளாக்குவது, காதலித்து குழந்தையை ஈன்ற பிறகு அதை மற்றவருக்கு தத்துக்கொடுப்பது... இதெல்லாம் பொறுப்பில்லாத சுதந்திரம் அளித்த பரிசு.

அவர்களுக்கு அபயமளிக்கும் வகையில் சமுதாயச் சுமையைத் திணிப்பது, வருங்கால குடிமகனை உருவாக்க வேண்டிய பெண்மை தனது சுயநலத்தால் நாட்டுக்குச் சுமையான வாரிசுகளை உருவாக்குவது... இப்படி, பழைய பண்பாட்டை அலட்சியம் செய்து, தனது சுயநலத்தை வளர்த்துக்கொள்ள, போராடி பெற்ற சுதந்திரம் பல பக்க விளைவுகளுக்கு வித்திட்டுவிட்டது.

சேர்ந்து வாழவேண்டிய தம்பதிகள் பிரிந்து வாழ்வதை விரும்புகிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து (கணவன்மனைவி போல்) வாழ்பவர்களும் தென்படுகிறார்கள். திருமணம் என்கிற கட்டுப்பாடு இல்லாமலே சேர்ந்து வாழ நினைப்பவர்களும் முளைத்திருக் கிறார்கள். தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்க, அவர்களுடைய பெற்றோர்களின் தவற்றை சரி செய்து, தம்பதியாக இணையவேண்டும் என்ற வேண்டுகோளும் காதில் விழ ஆரம்பித்து விட்டது!

? பெண்மைக்கு தடைபோட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா?

கருத்துக்களை எதிர்மறையாக உள்வாங்கிக்கொள்ளக் கூடாது. சமுதாயப் பெருமைக்கு பெண்மை முக்கியம். வருங்கால வாரிசு களை ஈன்றெடுப்பவள் அவள். அவர்களுக்கு

அறக் கட்டுப்பாடு அவசியம். பெண்ணாகப்பிறந்ததாலேயே அவள் அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பெண்மை சீர்குலைந்தால் சமுதாயம் சிதறிவிடும். இனப்பெருக்கத்துக்கு நேரடி தொடர்புடைய பெண்மை, கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரத்தை மட்டுமே சுவைக்க இயலும். பெண்மை கெட்டுப் போனால், சமுதாய முன்னேற்றத்துக்குத் தடையான வகையில் வாரிசுகளை ஈன்றெடுத்தால், சமுதாய நன்மைக் காக அதில் கட்டுப்பாடு விதிப்பது அறம்.

இன்றைக்குக் கெட்டுப்போன பல குழந்தை களின் சரிதத்தை ஆராய்ந்தால், பெண்மை செய்த தவற்றினால் நிகழ்ந்தவையே அதிக எண்ணிக்கையில் தென்படுகிறது. ஆண் தவறு செய்தால் இந்த அளவு சமுதாய பாதிப்பு எழாது. அறக் கட்டுப்பாடு ஆண்களுக்கும்

அவசியம். 'பெண்மை கெட்டுப்போனால் கலப்படம் உருவாகும். கலப்படம் நரக வேதனையை உணரவைக்கும்’ என்று கீதாசார்யர் அறிவுறுத்துவார் (ஸ்த்ரீஷுதுஷ்டாஸு வார்ஷணேய). கலப்படம் எல்லாம் நல்லதல்ல. கலாசாரக் கலப்படமும் தீமையை விளைவிக்கும். கலப்படத்தில் விளைத்த திருமணம் ஏராளம். கலப்படத்தில் இணைந்த திருமணம், இயல்பின் மாறுபாட்டில் திருமண முறிவை ஏற்கவைக்கும். திருமண முறிவு தம்பதிகளை மட்டும் பாதிக்கவில்லை; அதில் பிறந்த நிரபராதியான குழந்தைகளும் அநாதைகளாக்கப்படுகிறார்கள். அவர்களது சுமையை சமுதாயம் ஏற்கவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. அத்தனைக்கும் பெண் அறத்தோடு இணையாததால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம்.

? நீங்கள் குறிப்பிடும் அறம் புதிய விஷயங்களை மறுப்பதும் தடுப்பதும் ஏன்?

பழைமை  புதுமை என்ற பாகுபாடெல்லாம் அறத்துக்குக் கிடையாது. எந்த காலகட்டத்திலும் கட்டுக்கோப்பான சமுதாயத்தை உருவாக்க அறம் ஒன்றுதான் உண்டு. அறம் என்ற சொல்லைக் கேட்டதும், பழைமையை வெறுப்பவர்கள் அறத்தையும் வெறுக்கிறார்கள். அவர்களது அறியாமை சிறந்த கொள்கை ஆகாது. பெண்மை விடுதலை பெற்றாலும் அவர்களுக்கு இழிவை அளிக்கும் செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. விளம்பரத்துக்குப் பெண்மையைப் பயன்படுத்துகிறார்கள். மறைக்கவேண்டிய இடங்களை இலைமறை காய்மறையாக வெளியிட்டு, வியாபாரத்துக்கு ஊக்கமளிக்கப் பயன்படுத்துகிறார்கள். பெண் வர்க்கங்களிலும் சிலர், இதையெல்லம் இழுக்காகப் பார்க்காமல், தனக்குக் கிடைத்த சுதந்திரமாகப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நுகர்பொருளாக பெண்களைப் பார்ப்பவர் களும் உண்டு. காரணம் இல்லாமல் விவாகரத்தில் பெண்களை அலைக்கழிக்கிறார்கள். பெண், கைக்குழந்தையோடு கணவனைப் பிரிந்து வேறு கணவனை ஏற்க முடியாமல் திண்டாடுகிறாள். புதுக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், அதற்கு இடையூறாகத் திகழும் கைக் குழந்தையை அப்புறப்படுத்த நினைக்கிறாள்.

குமாரி, மனைவி, தாய் என்கிற அந்தஸ்து இன்று இல்லை. அந்த உயர்ந்த நிலைகளைக் காப்பாற்ற முற்படாமல் சுயநலத்தில் விருப்பப்படி செயல்படுகிறது பெண்மை. ஒரு கட்டுப்பாடு இல்லாதவரையில் இந்த அவலங்கள் அரங்கேறவே செய்யும். எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அந்த அளவுக்கு சுயநலம் வளர்ந்தோங்கி யிருக்கிறது. ஆகவே, மனமாற்றம் ஒன்றே அவர்களை நல்வழிப்படுத்தும். அதுவும் அறி வழியில் செயல்பட்டால் நீடித்து இருக்கும். பெண்மையின் விடுதலைக்குக் கண்ணீர்

வடிக்கும் சீர்திருத்தவாதிகள் சமுதாயத்தை எட்டிப்பார்க்க வேண்டும். எலிக்கு பயந்து இல்லத்தை சுடக்கூடாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

ஆண்  பெண் இருவரிலும் பிறப்பில் இருக்கும் மாற்றமானது பெண்மை ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்  பெண் சமம் என்பது உண்மைதான். எதில் சமம் என்று கூற வேண்டும். பிறப்பிலேயே சில விஷயங்களில் சமமாக பாவிப்பது தவறு. சமுதாயக் கட்டுக்கோப்பு கலையாமல் இருக்க, பெண்மைக்குச் சில சுய கட்டுப்பாடுகள் தேவை.

இதையொட்டியே கணவன் பணம் ஈட்ட வேண்டும்; பெண் வீட்டைப் பரிபாலிக்க வேண்டும் என்று வைத்தார்கள். எல்லோரும் சமயற் கட்டை விட்டு வெளிவந்து ஆணும் பெண்ணும் வேலையில் அமர்ந்து மகிழ்வது மகிழ்ச்சியல்ல.

அடுத்த வாரிசுகளை பயிராக வளர்த்து எடுக்காமல், களையாக மாற்றி அமைப்பது பெருமையல்ல.

இன்றைக்கு சமையல் தேவையில்லை; வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். வீடுவாசலையும், வாகனத்தையும் வாடகையில் பெறலாம். பணமும், பெருமையும் மட்டும் வாழ்க்கை இல்லை. சமுதாய அங்கங்களை உருவாக்கும் பொறுப்பு பெண்மைக்கு உண்டு. அதை நிறைவேற்ற, அதன் வழி சமுதாயம் அமைதி பெற, அறத்தோடு இணைந்த வாழ்க்கை பெண்மைக்கு அவசியம்.  இன்றையச் சூழலில் அது மனமாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.