ஸ்ரீசாயிநாதருக்கு தம்முடைய மகா சமாதிக்கான காலம் நெருங்கிவிட்டது என்பது தெரிந்துவிட்டது. எல்லாம் தெரிந்தவர்தானே அவர்?! தம்முடைய சமாதிக்குப் பிறகும் தாம் உயிர்ப்புடனும் அளவற்ற சக்தியுடனும் திகழப்போவதாகவும், தம்மை நம்பி வரும் பக்தர்களை சகல துன்பங்களில் இருந்தும் காப்பாற்றப் போவதாகவும் அவர் அளித்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமே! 

அப்போது, பாபாவை தரிசிக்க நாக்பூரைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான பூட்டி என்பவர் ஷீர்டிக்கு வந்திருந்தார். பாபாவை தரிசித்துவிட்டு, ஷாமாவுடன் தீஷிட்வாடாவில் உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கனவில் தோன்றிய பாபா, ஓர் இடத்தை அவருக்குக் காண்பித்து, அங்கே ஒரு கட்டடமும் அதன் நடுவில் ஓர் ஆலயமும் கட்டும்படி கட்டளை இட்டார்.

சட்டென உறக்கம் கலைந்து எழுந்த பூட்டி, தனக்கு அருகில் படுத்திருந்த ஷாமா அழுதபடி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். அது குறித்து விசாரித்தபோது, ''என் கனவில் பாபா தோன்றி, 'இங்கே ஆலயத்துடன் கூடிய கட்டடம் ஒன்றை பூட்டி கட்டுவார். நீ அவருக்குத் துணையாக இரு. பூட்டிவாடா என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் இருந்தபடி, நான் உங்களுக்கெல்லாம் எப்போதும் துணையாக இருப்பேன்’ என்று கூறினார். அவர் பேசிய விதம், அவர் நம்மை விட்டுப் பிரியப்போகிறார் என உணர்த்துவதுபோல் இருக்கவே என்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தினேன்'' என்றார் ஷாமா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 23

அதைக் கேட்டு வியந்த பூட்டி, தன் கனவிலும் பாபா தோன்றி உத்தரவிட்டதைத் தெரிவித்தார்.

அதற்கடுத்த சில நாட்களிலேயே, பாபா குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில் ஆலயத்துடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கான வரைபடத்தை எடுத்துக்கொண்டு, பூட்டியும் ஷாமாவும் பாபாவிடம் சென்று, அவருடைய ஆசிகளை வேண்டினர். பாபாவும் அந்த வரைபடம் சரியாக இருப்பதாகச் சொல்லி, உதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார்.

ஒரு நல்ல நாளில் கட்டடப் பணிகள் தொடங்கின. அங்கே அமைய இருந்த ஆலயத்தில் ராதா கிருஷ்ணரின் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினார் பூட்டி. தன் விருப்பத்தை ஷாமாவிடம் தெரிவித்தார். ஷாமாவும் ஒப்புக்கொள்ள, இருவரும் சிற்பி ஒருவரிடம் சென்று, ராதா கிருஷ்ணரின் விக்கிரஹம் ஒன்றைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

நாட்கள் நகர்ந்தன. பூட்டி கட்டத் தொடங்கிய கட்டடப் பணியும் நிறைவு பெற்றது. அதன் நடுவில் அமைந்திருந்த ஆலயத்தில், தான் நினைத்ததுபோல் ராதா கிருஷ்ணரின் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்யலாம் என்று கனவு காணத் தொடங்கினார் பூட்டி.

சர்வ சமய சமரசத்தை நிலைபெறச் செய்வதற்காக அவதரித்த ஸ்ரீசாயிநாதரின் ஸ்தூல சரீரத்தின் இறுதி நாளும் வந்தது. அவருடைய போக்கில் சிற்சில மாறுதல்கள் தெரியவந்தன. அடிக்கடி தம்மைக் காண வரும் பக்தர்களிடம், இனிமேல் தம்மைக் காண்பதற்காக ஷீர்டிக்கு வரவேண்டியதில்லை என்றும், அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தம்மை வணங்கலாம் என்றும், தம்முடைய அருளும் ஆசியும் எப்போதும் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஒருநாள், பாபா வெளியில் சென்றிருந்தார். வழக்கம்போல் துவாரகாமாயியை மாதவ் என்ற பையன் பெருக்கிக்கொண்டு இருந்தான். அங்கே தரையில், பாபா எப்போதும் தம் உயிரைப் போல் போற்றி வந்த செங்கல் இருப்பதைப் பார்த்துவிட்டு, தான் பெருக்கும் குப்பை அந்தச் செங்கல்லின் மேல் பட்டு, அதன் புனிதத்தைக் கெடுத்துவிடக்கூடாதே என்று நினைத்து, அதைக் கையில் எடுத்தான். என்னதான் அவன் அதை கவனமாக எடுத்தாலும், கை தவறிக் கீழே விழுந்து, இரண்டு துண்டுகள் ஆனது. பாபா வந்தால் கோபிப்பாரே என்று அந்தப் பையன் ரொம்பவும் பயந்து போனான்.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 23

பாபா பாலகனாக வெங்குசாவிடம் இருந்தபோது, வெங்குசா பாபாவிடம் மிகவும் பிரியமாக இருப்பதைப் பார்த்துப் பொறாமை கொண்டவர்கள், பாபாவும் வெங்குசாவும் தனியாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, பாபாவைக் கொல்வதற்காக ஒரு செங்கல்லை அவர் மேல் எறிந்ததையும், வெங்குசா அந்தச் செங்கல் கீழே விழாதபடி அதை அந்தரத்திலேயே நிறுத்தியதையும் நாம் முன்பே பார்த்தோம். பாபாவுக்கு விடை கொடுத்து அனுப்பியபோது, தாம் அந்தரத்தில் நிறுத்திய செங்கல்லை பாபாவிடம் கொடுத்து அனுப்பினார் வெங்குசா. பாபா தம் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த செங்கல் அதுதான். அந்தச் செங்கல்தான் இப்போது உடைந்துபோனது.

சற்று நேரம் பொறுத்து பாபா திரும்பி வந்தார். நடந்ததைத் தெரிந்துகொண்டார். ஆனால், அந்தப் பையன் பயந்ததுபோல் பாபா அவனைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவருக்குத் தம்முடைய இறுதிநாள் நெருங்கிவிட்டது என்பது புரிந்து போனது. செங்கல் உடைந்த சில தினங்களிலேயே பாபாவின் உடல்நலம் குன்றியது. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டும் வந்தது. இந்நிலையில் ஒருநாள், பாபாவைப் பார்க்க வந்த வாகே என்பவரிடம், இந்தி மொழியில் உள்ள ராம விஜயம் என்ற நூலைப் படிக்கும்படி கூறினார். வாகேவும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக அந்தப் புத்தகத்தை இரண்டு முறை படித்தார். அவர் மிகவும் தளர்ந்து காணப்படவே, பாபா அவரை மேற்கொண்டு படிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அன்று விஜய தசமி திருநாள். அம்பிகை அதர்மத்தை வெற்றி கொண்ட திருநாள். எதிர்ப்படப்போகும் பெரும் துன்பத்தை எதிர்பார்க்காதவர்களாக ஷீர்டி கிராம மக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் மூழ்கி இருந்தனர். உலகத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவச் செய்வதற்காகவே அவதரித்த அந்த மகானின் ஜீவித காலம் முடிவுக்கு வரக்கூடிய நேரம் நெருங்கியே விட்டது. துவாரகாமாயியில் பகல் ஆரத்தி முடிவு பெற்றதும் அனைவரையும் சாப்பிடச் செல்லுமாறு கூறி அனுப்பினார் பாபா. அனைவரும் சென்ற பிறகு நானா சாகேப், பாகோஜி, லக்ஷ்மிபாய், பாயாஜாபாய் ஆகியோர் மட்டும் பாபாவின் அருகிலேயே இருந்தனர்.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 23

அவர்களிடம் பாபா, ''எனக்கு இங்கே இருப்பது மிகவும் அசௌகர்யமாக இருக்கிறது. என்னை பூட்டி கட்டி இருக்கும் வாடாவுக்கு எடுத்துச் சென்றால், மிகவும் சௌகர்யமாக இருக்கும். அங்கே நான் சுகமாக இருப்பேன்'' என்று கூறியபடியே பாயாஜாபாயின் மடியில் சாய்ந்துவிட்டார். தம்மைக் காடு மேடெல்லாம் தேடித் தேடி வந்து உணவு கொடுத்து மகிழ்ந்த அந்த பாயாஜாபாயின் மடியிலேயே பாபாவின் உயிர் பிரிந்தது. பாபா மயங்கித்தான் தன் மடியில் சரிந்துவிட்டதாக எண்ணிய பாயாஜாபாய், நானா சாகேபிடம் பாபாவுக்குத் தண்ணீர் புகட்டுமாறு கூறினாள். நானா சாகேபும் பாபாவின் வாயில் தண்ணீர் புகட்டினார். ஆனால், தண்ணீர் வெளியில் வழிந்தது.

பாபா மகா சமாதி ஆகிவிட்டார் என்ற செய்தி காற்றை விடவும் வேகமாக ஷீர்டி கிராமத்தில் பரவிவிட்டது. கிராமமே பெருத்த சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் அனைவருமே துவாரகாமாயி வாசலில் கூடிவிட்டனர்.

பாபா சர்வ சமய சமரசத்தை உலகத்தவர்க்கு உணர்த்தவே அவதரித்த ஒப்பற்ற மகான். அவருடைய துவாரகாமாயி பலருக்கும் பல வகைகளில் புனிதத் தலமாகத் திகழ்ந்தது. அங்கே சதாகாலமும் பாபாவினால் எரியவிடப்பட்ட துனி என்ற அக்கினி குண்டம் இருந்த காரணத்தால், இந்துக்களுக்கு அது கோயிலாகவே தோன்றியது. அங்கே மாடம் இருந்த காரணத்தால், இஸ்லாமியர்கள் அதைத் தங்கள் தொழுகைக்கு உரிய மசூதியாகக் கருதினார்கள். ஒவ்வொரு வேளையும் மணியோசை ஒலித்ததால், கிறிஸ்தவர்களுக்கு அது தேவாலயமாகவே திகழ்ந்தது.

இப்படி அனைத்துத் தரப்பினராலும் அவரவர் முறைப்படி வழிபடப் பெற்ற சாயிநாதரின் மகா சமாதிக்குப் பிறகு, இந்து பக்தர்களுக்கும் இஸ்லாமிய பக்தர்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுவிட்டது. இஸ்லாமிய பக்தர்கள் பாபாவின் திருமேனியைத் தங்கள் வழக்கப்படி திறந்தவெளியில்தான் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று சொல்ல, இந்து பக்தர்களோ பாபாவின் விருப்பப்படி அவருடைய தெய்வத் திருமேனியை பூட்டியின் வாடாவில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 23

காலமெல்லாம் சமய சமரசம் நிலவவேண்டும் என்பதற்காகவே உலகத்தில் அவதரித்த சாயிநாதரை, அவர் இருக்கும் வரை ஒற்றுமையுடன் வழிபட்ட இந்துக்களும் இஸ்லாமியர்களும், அவருடைய மகா சமாதிக்குப் பிறகு இப்படி சர்ச்சையில் இறங்கியது அங்கிருந்த பெரியவர்களுக்குப் பிடிக்கவில்லை. பாபாவின் விருப்பம் எது என்பதை வாக்கெடுத்து முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறவே, இரண்டு தரப்பினரும் பெரியவர்களின் முடிவுக்கு இசைவு தெரிவித்தனர். அதன்படி, கோபர்கானைச் சேர்ந்த கிராம முன்சீப்பின் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், பாபாவின் விருப்பப்படியே அவருடைய திருமேனியை பூட்டிவாடாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என முடிவாயிற்று.

பாபாவின் மேனியை அடக்கம் செய்வதிலாவது தங்களுடைய மதத்தின்படி செய்யவேண்டும் என்று இஸ்லாமியர்கள் வற்புறுத்தினார்கள். அவர்களின் திருப்திக்காக அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, பாபாவின் மேனியை ஒரு பெட்டியில் வைத்து, பூட்டிவாடாவுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன. இஸ்லாமிய பக்தர்கள் அந்தப் பெட்டியைத் தூக்கி வர இந்து பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால், மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அவர்களின் இந்த சர்ச்சைகளால் மிகவும் நொந்துபோன மகல்சாபதி, ''நீங்கள் உங்கள் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டு இப்படி சர்ச்சை செய்கிறீர்கள்? பாபா உங்களை இந்த வகையிலா வழிநடத்தினார்? அவருடைய அவதாரத்துக்கே உங்களது இந்தச் செயல் களங்கம் கற்பிப்பதுபோல் இருக்கிறதே!'' என்று கடிந்துகொண்டார். அவ்வளவில் அவர்கள் சர்ச்சையை விட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இறுதியில், பாபாவின் உடலை ஒரு பெட்டியில் வைத்து, இரண்டு தரப்பினரும் சேர்ந்து பூட்டிவாடாவுக்குக் கொண்டு சென்றனர். அங்கே சென்றதும், பாபாவின் உடலை எப்படி அடக்கம் செய்வது என்பது குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பி, பாபாவின் அருளால் அதுவும் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

ஸ்ரீ்சாயி பிரசாதம் - 23

பூட்டிவாடாவிலேயே ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பாபாவின் சமாதி ஏற்படுத்தப்பட்டது. கண்கண்ட தெய்வமான பாபா, தாம் கோயில்கொள்ளத் தக்கதொரு இடத்தைத் தன் மூலமாகத் தேர்வு செய்துகொண்டதில் நெகிழ்ந்து போனார் பூட்டி. முரளிதர கிருஷ்ணனுக்கு என்று தான் நினைத்து அமைத்த அந்தத் திருவிடத்தில் முரளிதரனாய் பாபாவே கோயில்கொண்ட அற்புதத்தை எண்ணி காலமெல்லாம் பூரித்துப் போனார்.

பிராமண குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய தம்பதியரிடம் ஒப்புவிக்கப்பட்டு, மீண்டும் ஓர் இந்து பிராமணரான வெங்குசாவிடம் அடைக்கலம் தரப்பட்டார் பாபா. வெங்குசா பிராமணராக இருந்தாலும், பாபாவை ஓர் இஸ்லாமியராகவே வளர்த்து வந்தார். உரிய காலத்தில் வெங்குசாவினால் விடை கொடுத்து அனுப்பப்பட்ட பாபா, ஷீர்டி கிராமத்தை அடைந்து, அங்கேயே தம்முடைய ஜீவித காலம் முழுவதும் பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி, சர்வ சமய சமரசத்துக்காகப் பாடுபட்டார். தாம் சொன்னதுபோலவே தம்முடைய சமாதிக்குப் பிறகும் அனைத்து தரப்பினருக்கும் கண்கண்ட தெய்வமாக இருந்து, அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் சாந்தியையும் தந்தபடி, ஷீர்டியில் மட்டுமின்றி, சர்வவியாபியாய் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்.

இன்றைக்கும் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அவருடைய அருளாடல்கள் ஸ்ரீசாயி பிரசாதமாக கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

’நீங்கள் என்னை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், நான் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைத்து அருள் புரிவேன்.'

- ஷீரடி சாயிபாபா

(சுபம்)

ஸ்ரீசாயிநாதர் வழிபாடு... 

ஸ்ரீசாயிநாதரை வழிபடுவதில் மிகவும் சிறப்பானது அவருடைய சத்சரிதத்தை முறைப்படி பாராயணம் செய்வதே ஆகும்.

ஸ்ரீசாயிநாதரின் திவ்விய சரிதத்தை அவருடைய அனுமதியுடனும் ஆசிகளுடனும் மராட்டிய மொழியில் ஹேமத்பந்த் என்பவரால் எழுதப்பெற்று, இன்று பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீசாயிநாதரை சத்சரித பாராயணம் செய்து வழிபட விரும்பும் அன்பர்கள், ஸ்ரீசாயி சத்சரித புத்தகத்தை வாங்கி பாபாவின் ஆசிகளுடன் பாராயணம் செய்யலாம்.

சத்சரித பாராயணத்தை ஒரு வியாழக்கிழமை அன்று தொடங்கி அடுத்த புதன்கிழமை அன்று நிறைவு செய்யவேண்டும். ஒவ்வொருநாளும் தங்கள் பெயர், நட்சத்திரம், கோரிக்கை முதலானவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகே பாராயணத்தைத் தொடங்கவேண்டும். பாராயணம் முடிந்ததும் பாதாம், முந்திரி, உலர்ந்த திராட்சை போன்றவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும்.

ஏழாவது நாளான புதன்கிழமை அன்று பாராயணம் நிறைவு பெற்றதும், தங்களால் முடிந்த இனிப்பு வகைகளை வீட்டிலேயே தயாரித்து நைவேத்தியம் செய்யவேண்டும். மறுநாள் அருகில் உள்ள பாபா கோயிலுக்குச் சென்று பாபாவை வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்யவேண்டும்.

இந்த முறைப்படி பாபாவின் சத்சரிதத்தை பாராயணம் செய்து, சாயிநாதரின் அருளால் காரிய ஸித்தி பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism