Election bannerElection banner
Published:Updated:

புண்ணிய பூமி

புண்ணிய பூமி
புண்ணிய பூமி

மாங்கல்ய பலம் அருளும் லிங்கராஜா!காஷ்யபன்

டலமைப்பில் மெல்லியலாளர்கள் என்றாலும், உள்ளத்தில் ஒப்பற்ற உறுதி கொண்ட பெண்களுக்கென பாரத கலாசாரத்தில் பாங்கானதோர் இடமுண்டு. 

கணவனைக் காலனிடமிருந்து மீட்ட சாவித்திரியின் கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். மத்ர தேசத்தை ஆண்ட மாமன்னன் அச்வபதி குழந்தைப் பேறுக்காக குலதெய்வமான சாவித்திரியைக் குறித்துத் தவமிருந்தான்.

சாவித்திரி தேவியின் அருளால் அவனுக்குப் பெண் மகவு பிறந்தது. மன்னனும் அதற்கு சாவித்திரியின் பெயரையே சூட்டிப் பெரும் பிரியத்துடன் வளர்த்தான்.

அழகிற்கு அடையாளமாக வளர்ந்த சாவித்திரி கல்வி கேள்விகளில் கரை கண்டாள். அவள் மணப் பருவம் அடைந்ததும் அந்த நாளைய வழக்கப்படி தனக்கேற்ற மணாளனைத் தேடி வருமாறு மகளைப் பணித்தான் அவளது தகப்பன்.

பரிவாரங்களுடன் சாவித்திரி நாடு நகரங்களைச் சுற்றினாள். ஒரு நாள் ஒரு நதிக்கரையில் இருந்த ஓர் ஆசிரமத்தை அடைந்தாள். வஞ்சகர்களின் சூழ்ச்சியால்

அரசன் துய்மத்சேனன் நாட்டையும், தனது பார்வையையும் பறிகொடுத்து விட்டு அங்கு வாழ்ந்து வந்தான். கண்ணிழந்த தந்தையை உடனிருந்து காத்து வந்தான் அவனது மகன் சத்தியவான். சர்வ லட்சணங்களும் பொருந்திய சத்தியவானே தன் கணவன் என சாவித்திரி மன்னனிடம் மனமார உரைத்தாள்.

புண்ணிய பூமி

அந்த நேரத்தில் அரசவைக்கு வருகை புரிந்திருந்த நாரதர், சத்தியவானின் முன்வினைப்படி அவனது ஆயுள் முடிய இன்னும் ஒரு வருட காலமே உள்ளது எனத் தெரிவித்தார். அது கேட்ட மன்னன், மகள் வாழ்வு மண்ணாகிப் போகுமே என மனம் பதைத்தான். மகளிடம் வேறொரு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான்.

சாவித்திரி சத்தியவானையே மணம் புரிவேன் என்று பிடிவாதம் பிடித்து அவனையே மணந்து

கொண்டாள். ஓராண்டு அவனோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள். மாமனாருக்கும் பணிவிடைகள் புரிந்தாள். விதி விதித்திருந்த அந்த இறுதி நாள் வந்தது. சத்தியவானுக்கு உடல் நலம் கெட்டது. அவனது உயிரைக் கவர்ந்து செல்ல எருமை மீதமர்ந்து யமன் வந்து சேர்ந்தான். சத்தியவான் தன்னுயிரைத் தானே ஈந்தான். யமன் அவனது உயிருடன் தன்னுலகு நோக்கிப் புறப்பட்டபோது சாவித்திரியும் அவனுடன் சென்றாள். அவளது ஆயுள் முடியும்

வரை அவளை அழைத்துச் செல்லமுடியாது என யமன் மறுத்தான். கணவன் எங்கு சென்றா லும் உடன் செல்வது தன் கடமை என சாவித் திரி வாதாடினாள்.

சாவித்திரியைத் திருப்பி அனுப்பும் பொருட்டு, அவளுக்கு வரம் தருவதாக வாக்களித்தான் யமதருமன்.

உடனே சாவித்திரி, 'தர்ம தேவதையே! ஏழடி தூரம் ஒருவனுடன் நடந்து சென்றாலே, நட்பு  துணை என்றெல்லாம் சாஸ்திரங்கள் விரிவாகச் சொல்கின்றன. அவ்வாறு இருக்கும்போது தங்களுடன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். மேலும் எவரும் தரிசிக்க முடியாத தங்களைத் தரிசித்திருக்கிறேன். என் கணவர் உயிரைத் திருப்பித் தந்து அருள்புரியுங்கள்!'' என வேண்டி துதித்தாள். அப்போது சாவித்திரி செய்த துதி,    

புண்ணிய பூமி

யமாஷ்டகம்' எனப்படும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் யமதர்மனுக்கு! சாவித்திரி கேட்ட வரத்தைக் காலனால் மறுக்க முடியவில்லை. சத்தியவான் உயிர் பெற்று எழுந்தான்.

காலதேவனால் பறிக்கப்பட்ட கணவனின் இன்னுயிரை, சளைக்காது போராடி மீட்டவள் காரிகை சாவித்திரி. அவளின் பெரும் புகழை நிலைநிறுத்தும் ஆலயம் புவனேஸ்வரம் லிங்க ராஜா ஆலயம்!

இந்த ஆலயத்து லிங்கராஜா பல்வேறு ஆலயங் களில் அருள் பொழியும் லிங்கங்களுக்கெல்லாம் அரசன் என்று புகழ்பெற்றவரும் கூட!

பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட லிங்கராஜா கோயில் கலிங்கத்து ஆலயங் களுக்கு உன்னதமானதோர் உதாரணம். அளவிலும், அழகிலும் பிரமாண்டமானது.

புண்ணிய பூமி

127 அடி உயர கோபுரம், பெருமதில்கள். கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கில் மூன்று வாயில் கள். இருபுறமும் சிங்கதுவாரகர்கள் கொண்ட கிழக்கு வாயில் பிரதானமானது. கோயிலின் பிரதான கதவுகளில் ஒன்றில் சிவ சூலமும், மற்றதில் விஷ்ணுவின் சக்கரமும் பதிக்கப் பட்டிருக்கின்றன. உள்ளேயிருப்பது ஹரியா, ஹரனா?

நுழைந்தவுடன் அந்த ஆச்சரியத்தை அதிகரிக் கிறது, நெடிதுயர்ந்து நிற்கும் நந்தி ஸ்தம்பம். அதன் உச்சியில் நந்தியின் அருகில் கருடனும் வீற்றிருப்பது, சிவனும், மாலனும் சேர்ந்து குடிகொண்ட கோயில் இது என்று குறிப்பு தருகிறது. அடுக்கடுக்கான கோபுரங்களுடன் காட்சியளிக்கும் கோயிலின் முக்கியக் கட்டட அமைப்புகள் நான்கு பகுதிகளாக அணிவகுத்து நிற்கின்றன.

நந்திஸ்தம்பத்தை ஒட்டி போகமண்டபம். இங்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அடுத்திருப்பது அர்த்தநாரீஸ்வரரின் அழகுச் சிற்பம் அமைந்துள்ள நடமந்திர். ஒடிசாவின் புகழ்பெற்ற ஒடிசி நாட்டிய நிகழ்ச்சிகள் நடை பெறும் மண்டபம் இது.

மூன்றாவதாக ஜகமோகன் மண்டபம். மக்கள் கூடும் அவை என்று பொருள். உலக அமைதிக்கான மகாயாகம் இங்கு நிகழ்த்தப்படுவதால், இதற்கு யக்ஞ மண்டபம் என்ற பெயரும் உண்டு. இதன் அடுக்குச் சுவர்களில், மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களின் போர்க் காட்சிகளைச் சித்திரிக்கும் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

அடுத்து லிங்கராஜா கோலோச்சும் முக்கிய கருவறை. மிக உயரமான கோபுரம் கொண்ட இப்பகுதி ஸ்ரீ மந்திர் என்று அழைக்கப்படுகிறது.

புண்ணிய பூமி

கருவறையில் காண்பதற்கரிய காட்சியாக லிங்கராஜா! எட்டடி விட்டத்தில் வட்ட வடிவில் கருங்கல் ஆவுடையார். மலர்மாலைகளும், மயக்கும் வண்ண வஸ்திரங்களும் அணிவிக்கப் பட்ட பிரதான தெய்வம்.

மத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாளக் கிராமம் விஷ்ணுவாக வழிபடப்படுகிறது.

சிவன் என்றும், நாராயணன் என்றும் தெய்வங்களுக்குள் எந்தப் பாகுபாடும் இல்லை. இதைப் பாங்குடன் எடுத்தியம்ப, ஆவுடை யாராக சிவனும், மையத்தில் சாளக்கிராமமாய் விஷ்ணுவும் இழைந்து ஒரே உருவாய்க் கருவறை யில் காட்சி தருகின்றனர். இதை உறுதி செய்வதுபோல், ஆலயத்தில் வில்வம், துளசி இரண்டும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

இந்தக் கருவறை தெய்வம் கற்புக்கரசி சாவித்திரியின் பிரதிபலிப்பே என்றும் ஒரு நம்பிக்கை இங்கே நிலவுகிறது. வட்ட வடிவ கல் அமைப்பு பெண்ணைக் குறிக்கும் அமைப்பாக விளங்குவதால் இந்த நம்பிக்கை. சாவித்திரியின் புகழ் பாடும் விரதநாளில், இங்கே பெண்கள் எண்ணிலடங்கா வான் நட்சத்திரங்கள் போல் ஏகி வந்து வழிபடுகிறார்கள்.

கருவறை மண்டபத்திலேயே, லிங்கராஜா சந்நிதிக்கு இடது புறத்தில் ஒரு தனிச் சந்நிதியில் மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கிறாள். செவ்வாடையும், செக்கச் சிவந்த உதடுகளும், அஞ்சன விழிகளும் கொண்ட அழகு தேவதையான அன்னையை தரிசித்தால் அங்கம் முழுக்கப் பரவசம் பற்றுகிறது.

புண்ணிய பூமி

லிங்கராஜாவையும், மகா லக்ஷ்மியையும் தரிசித்து வெளியே வந்தால், பிராகாரம் முழுக்கக் கவனத்தைக் கவர்ந்திழுக்கும் சிறு கோயில்கள் பல குவிந்திருக் கின்றன. இந்தச் சிறு சந்நிதிகளில் பெரும்பாலும் சிவலிங்கங்கள்.

கண்ணையும், கருத்தையும் கவரும் வேறு பல முக்கிய சந்நிதிகளும் உண்டு.

தெற்குப் பிராகாரத்தின் துவக்கத்தில், ஒரு மேட்டில் அமைந்திருக்கிறது லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி. இரண்யனை வதம் செய்த பின், கோபம் தீர்ந்து சாந்தமாகி வீற்றிருக்கும் நரசிம்மர் கொள்ளை அழகு. அவரது மடியில் சிறு குழந்தை போல் மகாலக்ஷ்மி. இருபுறங்களிலும் சிவனும், பிரம்மாவும் தவம் புரிய, பாதத்தின் அருகில் அவரைச் சாந்தப்படுமாறு வேண்டித் தொழுதுகொண்டிருக்கிறான் பக்தபிரகலாதன்.

இதே பிராகாரத்தில், கருவறை கோபுரத்தின் கோஷ்ட தெய்வமாக பதினைந்தடி உயர மகாவிநாயகர் பிரமாண்டமாக நிற்கிறார். அவரது இரு செவிகளும் நரம்புகளோடிய அரசிலையின் வடிவில் அமைந்துள்ளன. சுமார் பதினைந்து படிகள் மேலேறிச் சென்று இவரை தரிசிக்க வேண்டும்.

தென்மேற்கில், தாழ்வான தளத்தில் சாவித்திரிக்கென தனி சந்நிதி. கணவனுக்காக காலனிடம் போராடிய காரிகையின் அழகுச் சிற்பம்.

அடுத்து சத்தியவானின் உயிரைப் பறிக்க வந்த யமராஜாவுக்கு ஒரு சந்நிதி. மேற்கு பிராகாரத்தில் பூரியில் உள்ளது போல் ஜகந்நாதர் சந்நிதி. அதற்கு மேலே கோபுர கோஷ்டத்தில் கார்த்திகேயனின் சந்நிதி.

வடக்குப் பிராகாரத்தில் லிங்கராஜாவின் ஈடற்ற இணையான அன்னை பார்வதிக்கு தனிச் சந்நிதி.

கலிங்கச் சிற்ப வேலைப்பாடுகளின் அற்புத வெளிப்பாடாக, அன்னை பார்வதி கொள்ளை அழகுடன் காட்சி தருகிறாள். சிரத்தின் மீது சிங்கார கிரீடம். திருநெற்றியில் துலங்கும் சந்தனம். அருள் பொழியும் விழிகளைச் சுற்றி அலங்காரமாய்த் தீட்டப்பட்ட மை. பெண்துறவி போல் மேனியைப் போர்த்திய ஒற்றை ஆடை. வலது திருக்கரத்தில் நீண்ட தண்டுடன் மலர்ந்த தாமரைப் பூ. இடது திருக்கரத்தில் அள்ளி வழங்கும் அமிர்தப் பாத்திரம். அவளது அழகில் மயங்கியும், அருளை இரந்தும் நிற்கையில், விழிகள் வேறு திசை திரும்ப மறுக்கின்றன.

நந்திக்கென ஒரு தனிச் சந்நிதியும் உண்டு. அந்தச் சந்நிதி கொள்ளாமல் நந்தி நிறைந் திருப்பதே ஓர் அழகு.

தம்பதி சமேதராய்க் காட்சி தரும் லக்ஷ்மி நாராயணன், ஆலயத்தின் இன்னோர் அழகுச்

சிற்பம். ஒருவரை ஒருவர் திருமுகம் பார்த்து அமர்ந்திருக்கும் திருமகளுக்கும், திருமாலவனுக் கும் இடையில் காணப்படும் அந்நியோன்னியம் தம்பதிகள் தரிசிக்க வேண்டிய அற்புதம்!

இவர்களைத் தவிர சத்யநாராயணன், புவனேஸ்வரி, விஸ்வகர்மா இவர்களுக்கெல்லாம் சந்நிதி உண்டு.

புராண காலத்து சாவித்திரி என்ற பெயரே மணமான மங்கையரிடம் சிலிர்ப்பேற்படுத்தும். ஜேஷ்ட அமாவாசையன்று சாவித்திரி விரதமிருக்கும் நாளில், பெண்கள் இங்கே குவிகிறார்கள்.

அன்னை சாவித்திரியை அடிபணிந்துவிட்டு, லிங்கராஜனையும் தொழுத பின்பு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில், பரமேஸ்வர் கோயில் அருகில் அமைந்திருக்கும் பெரிய ஆலமரத்தைச் சுற்றி மங்கல மஞ்சள் கயிறு கட்டி தங்கள் தாம்பத்யம்  நிலைத்திருக்க வேண்டுகின்றனர்.

புண்ணிய பூமி

கோயில் நிறை புவனேஸ்வரத்தில் இறை நம்பிக்கை மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்: புவனேஸ்வர்

தலம் அமைந்திருக்கும் மாநிலம் : ஒடிசா

சுவாமியின் திருநாமம்: லிங்கராஜா

எப்படிப் போவது?  : சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் நேரடியாக புவனேஸ்வர் செல்லலாம்.

எங்கே தங்குவது? : புவனேஸ்வரில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.

தரிசன நேரம் : காலை 6.00 முதல் பகல் 12.30 வரை; மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு