Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ.

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ.

Published:Updated:

நடராஜர் 

சிவபிரான் தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்குவதற்காக நடராஜர் ரூபமெடுத்து ஆடி அவர்களை அடக்கியது பாரறிந்ததே!

இது நடந்து கொஞ்ச காலமாக தேவலோகத்தில் எங்கு பார்த்தாலும் இந்த நடராஜரது நடனத்தைப் பற்றியேதான் பேச்சு! ஒரு நாள், விஷ்ணு தம் மனைவி லக்ஷ்மியிடம் பிரமாதமாக இந்த நடனத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். இதை யெல்லாம் கேட்ட ஆதிசேஷன், உடனே எழுந்திருந்து சிவபிரானிடம் ஓடினார். அவர் ஆடிய அற்புதக் கூத்தைத் தாமும் காண ஆடிக் காட்டவேண்டுமென்று மன்றாடினார்.  பக்தனது வேண்டுகோளுக்கிணங்கி, ''நீ போய்த் தில்லையில் வியாக்கிரபாதனுடன் இரு. நாம் அங்கு வந்து நம் நடனத்தைக் காட்டுவோம்' என்றார் சிவபிரான். உடனே, ஆதிசேடனும் 'பதஞ்சலி’ என நாமம் தாங்கி, ஆனந்தக் கூத்தனின் அற்புத நடனத்தைக் காணத் தவம் கிடந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருட்களஞ்சியம்

கடைசியாக, நிருத்த சபைக்கு வந்து சேர்ந்தார் சிவபிரான். நிருத்தசபை அப்போது காளி தேவியின் ஆளுகையில் இருந்தது. சிவபிரானைக் கோவிலுக்குள் விட அவள் சம்மதிக்கவில்லை. நாட்டியத்தில் தன்னுடன் ஆடி வெற்றி பெற்றால் மட்டுமே கோவிலுள் இடம் உண்டு என்று சொல்லிவிட்டாள். ஆகவே, காளிக்கும் சிவனுக்கும் நாட்டியப் பந்தயம் ஆரம்பமாயிற்று. சிவனது நடனமும் அவள் ஆட்டத் துக்குச் சளைக்கவில்லை. என்றாலும், அவளது ஆட்டத்தை வெல்ல முடிய வில்லை. கடைசியாய்ப் பார்த்தார் சிவன். இவளை வெல்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு என்று கண்டார். இடது காலை ஊன்றிக்கொண்டு வலது காலை அப்படியே தூக்கிவிட்டார் தலைக்கு மேலே! சிவன் செய்ததுபோல் தன்னால் செய்யமுடியாது என்று நினைத்து நாணி அப்படியே தலை குனிந்துவிட்டாள். வெட்கிய காளி அப்படியே ஓடி, வெளிப்புறத்தே தங்கினாள். அவளது கோயில்தான் இன்று சிதம்பரத்துக்கு வெளியே உள்ள தில்லை மாகாளி கோயில். அன்று முதல் நிருத்த சபை, ஆடவர் திலகமான சிவபெருமானின் கைவசமாயிற்று!

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பி.ஏ.

** 1940 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

துர்வாஸ கோபம்

''வீதி நெருங்க ஆடல் பாடல்களோடு வெள்ளை யானை மேல் நீல மேகம் போல் தேவேந்திரன் பவனி வருவதை வியந்து நோக்கிக்கொண்டே நெருங்கி வருகிறார் துர்வாஸ முனிவர்'  என்று விச்வாமித்திர முனிவன் தொடங்கினான் கதையை.

பேரிகை முதலான வாத்திய கோஷங்களும், சங்குகள், தாளங்கள் முதலான கோஷங்களும், பெண்கள் பாடும் வாய்ப்பாட்டாகிய மங்கள கீதங்களும் பிரமாதப்படுகின்றன. முனிவர்களின் வேத கோஷமே சமுத்திர கோஷம் போல் இருக்கிறதாம்.

துர்வாஸர் மகிழ்ச்சியோடு வெள்ளை யானைக்குப் பக்கத்திலே வந்து நின்றுகொண்டு, தமக்கு அருமையாகக் கிடைத்திருந்த அந்தப் பூமாலையை நீட்டுகிறார் இந்திரன் கைப்புறமாக. ஆனால் அப்படி யானைமேல் வருகிறவனுக்கு, கீழே வந்து இப்படி நிற்கிறவரை மதிக்கத் தோன்றுமா?

தாம் தரித்திருந்த அந்த மாலையைத் துர்வாஸர் நீட்டியதும், தேவேந்திரன் அதைத் தன் கையால் வாங்குவதுகூடக் கௌரவக் குறைவு என்று நினைத்துவிடுகிறான். அப்படியே அங்குசத்தால் வாங்குகிறான். அப்படி வாங்கியும், தான் அணிந்துகொண்டானா? இல்லை; யானையின் பிடரியிலே சூட்டி வைத்தான், அந்த அங்குசத்தைக் கொண்டே! உடனே அது பனைமரம் போன்ற தன் துதிக்கையினால் அந்த மாலையைப் பறித்து, அடியில் இட்டுத் துவைத்துத் தேய்த்துவிட்டது.

அருட்களஞ்சியம்

இதைக் கண்டதும் துர்வாஸருக்கு எப்படி இருந்திருக்கும்? அந்தத் துர்வாஸ கோபத்தை, 'விச்வாமித்திர கோபம்’ என்று சொல்லுகிறோமே, அத்தகைய விச்வாமித்திரனே வர்ணிக்கிறான்:

கண்ட மாமுனி விழிவழி

ஒழுகுவெங் கனலால்

அண்ட கூடமும் சாம்பராய்

ஒழியுமென்(று) அழியா,

விண்டு நீங்கினர் விண்ணவர்;

இருசுடர் மீண்ட;

எண்தி சாமுகம் இருண்டன;

சுழன்ற(து)எவ் வுலகும்!

மதயானைமீது மதோன்மத்தனாக வீற்றிருந்த அந்த இந்திரனுடைய செருக்கையும் செயலையும் கண்டதும், துர்வாஸ மகரிஷியின் விழிகள் கொடிய கோபக் கனலைக் கக்க ஆரம்பிக்கின்றனவாம், எரிமலை நெருப்பைக் கக்குவது போலே! அண்ட கோளங்களெல்லாம் ஒரு கூடம்போல் அமைந்திருக்கின்றனவாம்; அந்த அண்ட கூடத்தின் மேற்கூரையிலும் தீப்பற்றி, எல்லாவற்றையும் சாம்பலாக்கி விடுமோ என்று நடுங்கிப் போகிறார்களாம் தேவர்கள்.

புகைஎ ழுந்தன உயிர்தொறும்;

எயில்பொடித் தவனில்,

நகைஎ ழுந்தன; நிவந்தன

புருவநன் னுதலில்;

சிகைஎ ழுஞ்சுடர் விழியினன்,

அசனியும் திகைப்ப,

''மிகைஎ ழுந்திடு சதமக!

கேள்' என வெகுண்டான்.

மகரிஷியின் விழியிலிருந்து கனல் ஒழுக, மூச்சிலிருந்து புகை எழுவது போலத் தோன்றுகிறதாம். அந்தக் கோபத்திலே சிரிப்பும் கூட! சிரிப்புகள் தொடர்ச்சியாக! சிரித்துப் புரம் எரித்த சிவனார் போலே சிரிக்கிறார் துர்வாஸ முனிவர் இப்போது! புருவங்கள் நெரிந்து, நெற்றியில் ஏறுகின்றன. ஆம், தகதகவென்றிருக்கும் அந்த நெற்றியிலே!

''கர்வம் பிடித்த இந்திரனே! நூறு யாகம் செய்து இந்திரப் பதவி பெற்ற அந்தச் செருக்கல்லவா உன்னை இந்தப் பாடு படுத்துகிறது? என்ன ஆடம்பரம், என்ன ஆர்ப்பாட்டம்!' என்ற பொருளெல்லாம் உள் அடங்க,

''மிகைஎ ழுந்திடு சதமக!

கேள்' என வெகுண்டான்  என்கிறான் விச்வாமித்திரன்.

துர்வாஸ கோபத்தை வர்ணிக்கும் இந்த இரண்டு பாடல்களையும் பாடிப் பாடிப் பாருங்கள். தசரத சபையில் ஏற்பட்ட விச்வாமித்திர கோபத்தையும் வென்றுவிடுகிறது இந்தத் துர்வாஸ கோபம். கோப வர்ணனைகளில் கம்பனுடைய முதல் பயிற்சி அது என்று கருதலாம்.

துர்வாஸ கோபம் துர்வாஸ சாபமாகிறது.

''உன்னுடைய வைபவத்தைப் பார்த்து, இந்திரா... உனக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தேன் அந்த அழகிய பரிசுத்த மாலையை! உன்னுடைய அலட்சிய புத்தியையும் செருக்கையும் பார்க்கும்போது இந்த வைபவம் உனக்குத் தகாது என்றே தெரிகிறது. உன்னுடைய நிதிகளெல்லாம், வளங்களெல்லாம் கடலிலே போய் மறைய, நீ துன்பமடைவாயாக!' என்று துர்வாஸர் சாபம் கொடுத்தார்.

வறுமை நோய் வந்துவிட்டது தேவலோகத்திலும்! கடைசியாகத் திருமாலின் அருளால் அமிர்தம் பெற்றார்கள் தேவர்கள். சிவபெருமான் அருளால் விஷ பயத்திலிருந்தும் தப்பிப் பிழைத்தார்கள். அமிர்தம் உண்ட தேவர்கள் அசுரர்களைக் கொன்றுவிட்டார்கள். எனவே, அசுரர்களின் தாயும், காசியப முனிவரின் பத்தினியுமான திதி, புத்திர சோகத்தால் மனம் அழிந்து இந்தச் சோலையிலேதான் தவம் புரிந்தாள். இப்படிக் கதையை முடிக்கிறான் விச்வாமித்திரன்.

'கர்வம் கூடாது. கடைசியில் தெய்வ சக்திகளே வெற்றி பெறும்’ என்ற பாடத்தைதான் எவ்வளவு வசீகரமாகக் கற்றுக் கொள்கிறார்கள் ராம லட்சுமணர்கள்!

**  17.9.44 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

மோட்சத் துவாரா! 

இயற்கை அன்னை எழிலாட்சி புரிவதால் சொர்க்கபுரியாகத் திகழும் காஷ்மீர் பகுதியில் அன்னை பராசக்தி ஸ்ரீ வைஷ்ணவி தேவியாக அருளாட்சி புரிந்து வருகிறாள்.

ஜம்முவிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் 'திரிகூட மலை’ இருக்கிறது. அதைச் சுற்றி பாணகங்கை என்ற நதி ஓடுகிறது. தேவி பாணம் தொடுத்ததனால் உண்டான நதி என்பதால் அதற்கு அப்பெயர் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. நதியைக் கடந்து சென்றால் மலையடிவாரத்தில் 'கத்ரா’ என்ற சிற்றூர் இருக்கிறது.

மலையேறி வைஷ்ணவியை தரிசிக்கச் செல்பவர்கள் இந்த ஊரிலிருந்துதான் தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும். இங்கிருந்து வைஷ்ணவி ஆலய குகை சுமார் எட்டு மைல் தொலைவில் இருக்கிறது.

அருட்களஞ்சியம்

செல்லும் வழியில் 'கர்மஜூன்’ என்ற ஒரு குகை வருகிறது. அதில் நுழைந்து செல்லும்போது நம் கர்ம வினைகளெல்லாம்  தொலைந்து விடுவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. எனவே, அந்தக் குகையை 'மோட்சத் துவாரா’ அதாவது 'சொர்க்க வாசல்’ என்று அழைக்கிறார்கள்.

** 14.2.1971 ஆனந்த விகடன் இதழில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism