Published:Updated:

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

புரட்டாசி தரிசனம்!ம.மாரிமுத்து

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

புரட்டாசி தரிசனம்!ம.மாரிமுத்து

Published:Updated:

தேனியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சுருளி தீர்த்தம் என்னும் அழகிய ஊர். அங்கு மகாவிஷ்ணு, பூதநாராயண பெருமாள் எனும் திருநாமம் ஏற்று, கோயில் கொண்டு இருக்கிறார். 

தல வரலாறு: திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், சுருளிமலைப் பகுதியில் இருந்த பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்துகொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து வரும்படி, தன்னிடம் அடிமைப்பட்டிருந்த சனீஸ்வரரை அனுப்பி வைத்தான். அவரும் வேறு வழி இல்லாமல் தன் தலைவிதியை நொந்தபடி சுருளிமலைப் பக்கம் வருகிறார். அதை உணர்ந்துகொண்ட பெருமாள் தம்முடைய சக்ராயுதத்தை ஏவி, சனீஸ்வரரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறார். அப்படி சனீஸ்வரர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஊர்தான் குச்சனூர். பெருமாளின் சக்ராயுதம் தடுத்துத் தாக்கியதால், குச்சனூர் சனீஸ்வரரின் இடது கரம் சேதம் அடைந்தது. அந்தக் கோலத்திலேயே சனீஸ்வரர் இங்கே காட்சி தருகிறார்.

சனீஸ்வரர் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி அறிந்த ராவணன், தேவர்களை அழிப்பதற்காக அசுரப் படைகளை சுருளிமலைக்கு அனுப்பி வைத்தான். தான் அருள்புரியும் இடத்தில் அசுரர்கள் நுழைவதா என்று சினம் கொண்ட பெருமாள், பூத வடிவம் கொண்டு விசுவரூபம் எடுத்து, அசுரர்களை வதம் செய்தார்.

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

அன்று முதல் இந்தத் தலத்து இறைவன் பூதநாராயண பெருமாள் என்று திருப்பெயர் கொண்டார்.

பித்ரு கடன் தீர்ப்பவர்: பூத வடிவம் கொண்டு நின்ற பெருமாளை பிரமனும் சிவபெருமானும் சாந்தப்படுத்தினர். மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட மூன்று கடன்களில் ஒன்று பித்ரு கடன். அதை நிறைவேற்றுவதற்கு உகந்த தலமாகக் கருதப்படுகிறது இந்தத் தலம். காரணம், காசியைப் போலவே இந்தத் தலத்திலும் சுருளியாறு, அருவியாறு, வெண்ணியாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இந்தச் சங்கம தீர்த்தத்தில் நீராடி, பூதநாராயண பெருமாளை வழிபட்டு, அவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால், பித்ருக்களின் சாபம் நீங்கி நலம் பெறலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. 

சிறப்புமிகு திரிவேணி சங்கமம்: வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் ஆகிய தலங்களைப் போலவே, மூன்று நதிகளும் ஒன்று சேரும் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பது மிகவும் புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு சிறு பகுதி இங்கே கரைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

தர்ப்பண விசேஷம்: ஆடி அமாவாசை, புரட்டாசிமஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர் களுக்கு இங்கு வந்து தர்ப்பணம் செய்துவிட்டு, இயன்ற அளவு தானம் செய்தால், இறந்த முன்னோர்களின் பரிபூரண ஆசிகள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

அதேபோல் இங்கு வரும் பக்தர்கள், பெருமாளுக்கு மோட்ச அர்ச்சனை செய்து வழிபட்டால், மறைந்த முன்னோர்கள் மோட்சம் அடைவார்கள் என்று இந்தப் பகுதி மக்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். விரதம் இருந்து சபரிமலைக்கும் பழநிக்கும் செல்லும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து மாலை போட்டுக் கொள்கிறார்கள். அப்படிச் செய்வதால் யாத்திரை சுபமாக நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.

பரிவார தெய்வங்கள்: இந்தக் கோயிலில் கிழக்கு நோக்கி அருளும் பூதநாராயண பெருமாளுடன் அத்தி மரத்தால் ஆன உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி  மற்றும் நவகிரக சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன.

தினமும் காலை, மாலை என இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பித்ரு கடன் தீர்க்கும் பூதநாராயண பெருமாளை வணங்கி, நாமும் சகல செளபாக்கியங்களும் பெறுவோம்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி                

எப்படிச் செல்வது..?

தேனியில் இருந்து கம்பம் சென்று, பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்ஸிலோ ஷேர் ஆட்டோவிலோ சுருளிதீர்த்தத்தை அடையலாம்.           

பித்ரு கடன் தீர்ப்பார் பூதநாராயண பெருமாள்

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.