Published:Updated:

நல்லன எல்லாம் தருவாள்!

சண்முக சிவாச்சார்யர்

நல்லன எல்லாம் தருவாள்!

சண்முக சிவாச்சார்யர்

Published:Updated:

'யாதேவி ஸர்வ பூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா’ 

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அன்னை ஆதிசக்தி தாய்மையாக

நல்லன எல்லாம் தருவாள்!

விளங்குகிறாள். அவளே சக்தியாக, புத்தியாக, ஒழுக்கமாக, செல்வமாக, வித்யையாக, ஏன் நம்முடைய இந்திரியங்களில் இருக்கக்கூடிய ஒவ்வோர் அணுவிலும் எல்லாம் வல்ல அன்னையே ஆட்சி செய்கிறாள் என்று, மார்க்கண்டேய புராணத்தில் உள்ள 'தேவி மகாத்மியம்’ எனும் துதியில் உள்ள 700 ஸ்லோகங்களில் தேவியின் பிரபாவங்கள் விளக்கப்படுகின்றன. அந்தத் தாயை  ஜகன்மாதாவை வழிபட உகந்த திருநாட்களே நவராத்திரி புண்ணிய தினங்கள்!

'பிரயோஜனம் அனுத்திஷ்ய மந்தோபிந பிரவர்த்ததே’ என்கின் றன நமது சாஸ்திரங்கள். அதாவது, பயன் இல்லாத காரியத்தை மந்த அறிவுடைய மனிதன்கூட செய்யமாட்டான் என்று பொருள். ஆக, நம் சாஸ்திரங்கள் கூறும் அனைத்தும் பயனுள்ளவையே. பயன் இல்லாத எதையும் சாஸ்திரங்கள் கூறாது. ஆக, இந்த நவராத்திரி வழிபாட்டினை பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்ற உயர்ந்த கருத்துக்களை அறிந்து, நாம் மட்டும் அல்லாது நமது குடும்பத்தினரும், நமது ஊரும், நாடும், ஏன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மையடையக்கூடிய வழி முறையினை தெரிந்துகொள்வோம்.

'நவ’ என்பது ஒன்பது; ராத்திரி என்பது இரவு. ஒன்பது இரவுகள் கொண்ட நாட்களை 'நவராத்திரி’ என வழிபடுகின்றனர். அதுசரி, ஒன்பது நாள் வழிபாட்டினை ஒவ்வொரு மாதமும்தான் கொண்டாடலாம். அது ஏன் குறிப்பிட்ட மாதத்தில்குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம் எனும் கேள்வி நம் எல்லோருக்கும் எழலாம்.

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் 'ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி. குறிப்பாக 'சாரதா நவராத்திரி’ எனப் போற்றப்படுகிறது.

நல்லன எல்லாம் தருவாள்!

தேவி பாகவதத்தில் வசந்த காலமும், சரத் காலமும் எமனுடைய கோரப் பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த காலங்களில் மக்களுக்கு தீமைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், எல்லாம் வல்ல பராசக்தியை வழிபட்டு, தீமைகளை போக்கிக் கொள்ளவேண்டும். எப்படி ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதன் வேரில் தண்ணீர் ஊற்றினால் பயன் கிடைக்கிறதோ அதுபோல், அன்னைக்கு செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகிறது என்று நமது முன்னோர் அறிந்து இவற்றை தவறாது செய்து வந்தனர். நாமும் இந்த உயர்ந்த காலத்தில் தேவியை வழிபட்டு நற்பலன்களைப் பெறுவோமாக!

'பூஜை’ என்ற பதம் ஆகமங்களில் 'பூஜா’ என்று இரண்டு எழுத்துக்களால் கூறப்பட்டு உள்ளது. 'பூ’ என்றால் 'பூரியந்தே ஸர்வ கர்மானி’; 'ஜா’ என்றால் 'ஜாயதே ஞானம் ஆத்மனி’ என்று விரிவாக்கம் தரலாம்.

'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்பது அறவழிக் கோட்பாடு. அதன்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துவிதமான ஆசைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, எல்லாம் வல்ல பராசக்தி அருளினால், நாம் யார், நாம் எதற்காக இங்கு வந்துள்ளோம் என்கிற ஆத்ம சாட்சாத்காரத்தை மிக எளிய வழியில் உணர்த்துவதாகவும், அதேநேரம் மிக உயர்ந்த பலனையும் அளிக்கக் கூடியதாகவும் திகழ்கிறது இந்த நவராத்திரி.

ஸ்ரீராமபிரான் இந்த சரத் நவராத்திரி காலத்தில் எல்லாம் வல்ல பராசக்தியைக் குறித்து விரதம் இருந்து ராவணனை அழித்ததாக தேவி பாகவதம் விளக்குகிறது. சிவபெருமானால் அருளப்பட்ட 28 சிவாகமங்களில் ஒன்றான காரணாகமத்தில் இந்த நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதன் வேண்டிய பலன்களை எளிதில் அடைகிறான் என்று உறுதியுடன் விளக்கப்படுகிறது.

வழிபடுவது எப்படி?

எப்படி ஒரு தாயானவள் தன் குழந்தையின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப பணிவிடைகள் புரிகிறாளோ, அதுபோல ஸ்ரீமாதா என்று போற்றப்படும் ஜகன்மாதாவான ஸ்ரீபுவனேஸ்வரியும்,  ஜீவராசிகள் அனைவரும் பலன் அடையும் பொருட்டு, இதுபோன்ற எளிமையான விரதங்களை முனிவர்கள் மூலமாக நமக்கு அளித்திருக்கிறாள்.

நவராத்திரி நாட்களில் பிரதமை முதல் நவமி வரை இன்னின்ன தெய்வங்களை இன்னின்ன நாட்களில் முறைப்படி வழிபட வேண்டும் என்று விளக்குகின்றன ஞானநூல்கள். முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் ஸ்ரீலட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீசரஸ்வதிதேவியையும் வழிபட்டு வேண்டிய அருள் பெறலாம். இது பொதுவான முறை. விரிவான முறையில் வழிபடுவோர், புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும். முன்னதாக, நவராத்திரி பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும்படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றை படைக்கலாம். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

விரதம் எனில் கட்டுப்பாடு. நமது அன்றாட செயல்களில் இருந்து மாறுபட்டு, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் மிகச் சிறந்த பயிற்சியாகும். நாம் அன்றாடம் நம் உணவில் சேர்த்துக்கொள்வது அரிசி. ஆனால் இந்த நாட்களில் நாம் அதை தவிர்த்து, அதனினும் எளிமையான உணவை உட்கொள்ளும்போது, 'ய்த்ருச்சா லாப ஸந்துஷ்டகா:’ அதாவது எது கிடைக்கிறதோ அதை வைத்து மகிழ்ச்சி அடைதல் என்கிற எண்ணமானது நமக்கே அறியாமல் நம்முள் பதிந்துவிடுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த நாட்களில் நம்மால் இயன்ற அளவு தான தர்மங்களைச் செய்வதால், அந்த அறங்களை நம் குழந்தை கள் கவனித்து, அவர்களும் பின்பற்றும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், ஏழை எளியவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றிய மனத்திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.

9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள்... சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

முக்கியமாக இந்த 9 நாட்கள் எல்லோரும் பொய் பேசாமல், பிறர் குறித்து குறை கூறாமல் இருத்தல், பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளாது இருத்தல் போன்ற அடிப்படையான தர்மங்களை பழகிக் கொண்டோமானால், நம் வாழ்நாள் முழுவதும் அம்பாள் நம்மை இந்த அடிப்படை தர்மங்களை பின்பற்ற வைப்பாள்.

Click to enlarge

நல்லன எல்லாம் தருவாள்!

'ஸம்ஸர்கஜா தோஷ குணாபவந்தி’  அதாவது, நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளே நம்மை நல்லவனாகவோ தீயவனாகவோ மாற்றுகின்றன என்பார் மகாகவி காளிதாஸன். அந்த வகையில் நம் சூழலையும் நம்மையும் நன்மை மிக்கதாக மாற்றும் வல்லமையும் நவராத்திரி வழிபாட்டுக்கு உண்டு.

எல்லாம்வல்ல பராசக்தியை இந்த நாட்களில், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் முழுமையான சரணாகதி நிலையிலும் எவரொருவர் வழிபடுகிறாரோ அவருக்கு... எப்படி ஒரு காந்தத்துக்கு அருகில் வெகுகாலம் இருக்கும் இரும்புக்கும் எப்படி காந்தத்தன்மை வந்தடைகிறதோ, அதுபோல் தேவியின் அம்சம் வாய்த்து நிலைக்குமாம். பிறகு அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? அவர்களால் இவ்வுலகில் சாதிக்க முடியாதது என்று என்ன இருக்கிறது?  அன்னையின் அருளால் அவர்களுக்கு நல்லன எல்லாம் கைகூடும். அகிலமும் வசப்படும்!

 கொலு வைப்பது எப்படி?

அம்பிகையே, அனைத்திலும் உள்ளாள்; அவளே அனைத்தையும் நிர்வகிக்கிறாள் என்பதன் புற வெளிப்பாடே கொலு. ஒன்பது படிகள் அல்லது பதினோரு படிகள் வைப்பது முறை. மேல் படியில் (11 என்றால், 11வது படியில்), கலசம் வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் (எழுந்தருள) செய்யவேண்டும். அதற்கு அடுத்த (10வது) படியில், மும்மூர்த்திகள்; மும்மூர்த்திகள் தோன்றுவதற்கும், உலகின் பற்பல செயல்கள் நடைபெறுவதற்கும், ஆதிசக்தியான அவளே காரணம்.

நல்லன எல்லாம் தருவாள்!

அடுத்த (9வது) படியில், பிற தெய்வ வடிவங்கள். 8வது படியில் மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்கள், மற்ற கடவுளரின் வெவ்வேறு வகை அவதாரங்கள். 7வது படியில், ரிஷிகள், முனிவர்கள். 6வது படியில், மனிதர்களின் உருவங்கள். 5 மற்றும் 4வது படிகளில், பறவைகள், விலங்குகளும். 3வது படியில் புழுபூச்சி வகைகள். 2வது படியில், கடல் சிப்பி மற்றும் நுரை போன்றன. முதல் படியில், தாவரங்களும் அஃறிணைப் பொருட்களும் இருக்கும். இதுவொரு முறை.

இப்போதெல்லாம் இத்தனை படிகள் வைக்கமுடியாவிட்டாலும், இதன் உள்ளுறைப் பொருளை உணர்தல் அவசியம். ஆன்மா, படிப்படியாகப் பரிணாமம் அடைகிறது. ஒன்றுமில்லாத அஃறிணை தன்மையில் தொடங்கி, ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிரினங்கள் தொடர்ந்து, ஆறறிவு நிலையும் கண்டு, அதனையும் தாண்டி, முனிவராய் மனமும் மதமும் அடங்கி, பின்னர் தெய்விக நிலைக்கு உயர்கிறது. அவ்வாறு உயரும் ஆன்மாவை, அம்பிகை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறாள் என்பதே கொலு வைப்பதன் தாத்பரியம்.

விஜயதசமிக்கு மறுநாள் கொலுவை எடுத்து வைப்பது வழக்கம். இந்த முறை வெள்ளிக்கிழமை என்பதால், இரண்டு பொம்மைகளை அப்படியே சாய்த்து வைத்துவிட்டு, மறுநாள் (சனிக்கிழமை) பொம்மைகளை எடுத்து வைக்கவேண்டும்.

பூஜிக்க உகந்த நேரம்...

இந்த வருடம், வரும் அக்டோபர் 13ம் தேதி, செவ்வாய்க்கிழமை (புரட்டாசி26) அன்று நவராத்திரி ஆரம்பம். அக்டோபர் 21ம் தேதி புதன்கிழமையன்று (ஐப்பசி4) சரஸ்வதி பூஜை. நவமி திருநாளான அன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு. ஆகவே, அதாவது சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை 6 முதல் 7:30 மணிக்குள் ஏடு அடுக்கி,ஸ்ரீசரஸ்வதி தேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம்.

நல்லன எல்லாம் தருவாள்!

ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் அக்டோபர் 22ம் தேதி, வியாழன் அன்று (ஐப்பசி5) விஜயதசமி. அன்றைய தினம், காலை 7:30 மணிக்குமேல் பூஜித்து, ஏடு பிரிக்கலாம்.