Published:Updated:

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 4

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 4
காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 4

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 4

பயணங்கள் எல்லாமே மகிழ்ச்சியைத் தருபவைதான். அது கடவுளைத்தேடிச் செல்லும் ஆன்மிகப் பயணமாக மாறும்போது 'உள்முகப் பயணமாக' மாறிவிடுகிறது. ஆம், தன்னைத்தானே தேடும் முயற்சியாக மாறும்போதுதான் பயணம், யாத்திரையாகிவிடுகிறது. ஆன்மிகப் பயணத்தில் கோயிலைச் சுற்றுவது, மொட்டை அடித்துக்கொள்வது, காவடி தூக்குவது எல்லாமே ஓர் அடையாளம்தான். கடவுளைத் தேடுகிறோம் என்ற சாக்கில் நம்மை நாமே தேடிக்கொள்ளும் ஓர் ஆன்ம விசாரிப்புதான் யாத்திரை. ஏன் இங்கு பிறந்தோம்... பிறந்ததன் நோக்கம் என்ன? இப்படிக் கேள்விகள் எழும்பிக்கொண்டே போனால், கடைசியில் தெரிவது சரணாகதிதான். பிரமாண்டமான இறைவடிவத்தின் முன்பு நாம் ஒன்றுமே இல்லை என்பதை அறிந்துகொள்வதே சரணாகதி. நாம் ஒன்றுமே இல்லை என்பதை இயற்கை மட்டும்தான் உணர்த்தும். அந்த இயற்கையின் பிரமாண்ட வடிவம்தான் மலை. அதனாலேயே மலைகளின் மீது கடவுளர்களை வைத்து வணங்கத் தொடங்கினோம்.

மலை எத்தனை பிரமாண்டமானோதோ அத்தனைக்குப் பொறுமையானதும்கூட. அதாவது கடவுளைப்போல. மரங்களைப்போலவோ, கடலைப்போலவோ, தீயைப்போலவோ ஏன்... மற்ற எந்த இயற்கையின் வடிவம்போலவும் மலை சலனப்படுவதே இல்லை. சற்றுக்கூட அசைவதில்லை. எல்லாவற்றுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. அதுவே மலையைக் கடவுளின் வடிவமாக வணங்கக் காரணமாகிறது. ஆனால், 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதுபோல் அமைதியான மலையே தனது பொறுமையை இழந்தால், சலனப்பட ஆரம்பித்தால், எரிமலையாக வெளிப்படும். எரிமலையின் குமுறலை உயிர்களால் தாங்க முடியாது என்பது நமக்குத் தெரிந்த உண்மை. மலை, பொறுமையின் வடிவமாக இருக்கிறது என்றால், அதுவே நமக்கு மானசீக குருவாகவும் விளங்குகிறது. மலையே ஒரு குருவடிவம்தான் என்று எண்ணிக்கொண்டு ஞானமலை மீது ஏறிக்கொண்டிருந்த எங்களுக்கு, மலைப்படிகளின் இறுதியில் வலப் புறமாக தவமியற்றிக்கொண்டிருந்த குருவுக்கெல்லாம் குருவான தட்சிணாமூர்த்தியின் காட்சி கிடைத்தது.

தென்முகக் கடவுளை தத்ரூபமாக தரிசிப்பதைப்போலவே அந்த ஆலமர்ச்செல்வனின் ரூபம் எங்களை வசீகரித்தது. கல்லால மரத்தின் அடிப்பகுதி இயற்கையாகவே பீடம்போல் அமைந்திருக்க, அந்தப் பீடத்தில் அமர்ந்திருந்தார் ஞானத்தின் தலைவரான தட்சிணாமூர்த்தி. சின்முத்திரை தாங்கி, புன்னகை தவழும் திருமுகத்துடன் காட்சிதரும் இவரை `ஞான தட்சிணாமூர்த்தி’ என்றே வணங்குகிறார்கள். அன்பு இருக்குமிடத்தில் கருணை இருக்கும். ஞானம் இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். அமைதியான அந்த இடத்தில் அமர்ந்து மௌனத்தாலேயே உபநிஷதங்களை உபதேசித்த குருவை தியானித்து அருள் பெற்றோம்.

ஞான தட்சிணாமூர்த்தியை தியானித்துவிட்டு, மேலே தொடர்ந்தோம். அடுத்து நாம் சென்ற இடம், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபம். ஆறுமுகப்பெருமானே அனைத்தும் என்று வாழ்ந்த அருணகிரிநாதருக்கு யோகாநுபூதி அளித்த தலம் இது என்பதால், இங்கு இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது போலும்! பக்தர்கள் தங்கிச் செல்லவும், சுமைகளை இறக்கிவைக்கவும் இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபம் தாண்டி சற்று தூரம் நடந்தால் ...

ஞானபண்டித சாமியின் ஆலயம்! ஞானத்தின் வடிவமாக, ஓம்காரத்தின் நாதமாக, ஒரு நாமம், ஒரு வடிவம் ஒன்றுமில்லாத, தேவர்க்கெல்லாம் தலைவனான முருகப்பெருமானை நோக்கி விரைவாக நடைபோட்டோம். கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம் தாண்டி கோயிலுக்குள் நுழைந்தோம். அடடா... மிகச்சரியாக நாங்கள் சென்ற வேளை, வேலனுக்கு அபிஷேகங்கள் நடக்கவிருந்தன. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்ட முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் தாங்கி, முன் வலக்கை அபயமுத்திரை காட்ட, முன் இடக்கை இடுப்பிலும் அமைந்தவாறு `பிரம்ம சாஸ்தா' வடிவில் காணப்படுகிறார். பிரணவத்தின் பொருளை மறந்த பிரம்மாவை தண்டித்த முருகப்பெருமானின் கோலமே பிரம்ம சாஸ்தா வடிவம்.

இது பல்லவர் காலத்து சிலை வடிவம் என்று கூறப்படுகிறது. மூன்றடி உயர வடிவில் ஞானவல்லி, ஞானகுஞ்சரி சமேதராக அருள்செய்யும் முருகப்பெருமான் பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி... எனப் பலவகை திரவியங்களால் அபிஷேகிக்கப்பட்டு ஆனந்தமடைந்துகொண்டிருந்தார். 'திறந்த விழி திறந்தபடி' என்று சொல்வதுபோல் கண்களை இமைக்காமல் நாங்களும் அந்த அற்புதக் காட்சியை கண்டு தரிசித்தோம். 'தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா' என்று அருணகிரிநாதர் வணங்கிப் போற்றிய முருகனை, திருமால் மருகனை வணங்கி, 'அருணகிரிக்கு அருள்செய்து காட்சி தந்த பெருமானே, இங்கே உன்னை தரிசித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற அடியவர்களுக்கும் மனமிரங்கி காவல் செய்ய வேண்டும்’ என்று உருகினோம். அபிஷேகத்தின் நிறைவில் அலங்காரமும் ஆராதனையும் நடைபெற்றன. அலங்கார பூஷிதனாக அந்த ஆறுமுகப்பெருமானை ஆரத்தி ஒளியில் தரிசித்தோம். `ஞானம் இருக்குமிடத்தில் பயம் இருப்பதில்லை’. எனவே, `யாமிருக்க பயமேன்?’ என்று உரைத்தவனின் திருவடியை வணங்கி ஆரத்தியை கண்களில் ஒற்றிக்கொண்டோம்.

'இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்திபாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே' என்று அருணை முனிவன் தொழுது போற்றிய ஞானபண்டிதனை கண்ணார தரிசித்துவிட்டு, கருவறைவிட்டு வெளியே வந்தோம். அப்போதுதான் கோயிலைத் தாண்டி செல்லப்போகும் பகுதியில் இருக்கும் கல்வெட்டுகள், தேவசுனை, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் காலடித் தடங்கள் என்று ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டோம். `ஆஹா... இந்த மலை யாத்திரையின் முக்கியக் கட்டத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்’ என்று உணர்ந்து அந்த இடங்களை நோக்கி நடைபோட்டோம். எங்களோடு கரிய முகில்களும் தலைக்கு மேலாக விரைந்து சென்றன.

அடுத்த கட்டுரைக்கு