Published:Updated:

சனிபகவானைக் குளிரச்செய்யும் பரிகாரங்கள் என்னென்ன? #Sanipeyarchi2017

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சனிபகவானைக் குளிரச்செய்யும் பரிகாரங்கள் என்னென்ன? #Sanipeyarchi2017
சனிபகவானைக் குளிரச்செய்யும் பரிகாரங்கள் என்னென்ன? #Sanipeyarchi2017

சனிபகவானைக் குளிரச்செய்யும் பரிகாரங்கள் என்னென்ன? #Sanipeyarchi2017

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குருப்பெயர்ச்சி, ராகுகேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என மூன்று முக்கியமான பெயர்ச்சிகள் இருந்தாலும், சனிப்பெயர்ச்சியைத்தான் எல்லோரும் உற்றுக் கவனிப்பார்கள். காரணம், ஒரு ராசியில் சனி பகவான் மட்டுமே நீண்ட காலம் அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் இருப்பார்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி என்று சனிபகவான் பல வகைகளிலும் தொல்லை கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் சனிப்பெயர்ச்சியை நினைத்து, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பலரும் பயப்படுவார்கள். ஆனால், அப்படி பயப்படத் தேவையில்லை என்கிறார், ஜோதிடர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன். அது பற்றி அவர் நம்மிடம் கூறிய விவரங்கள் இங்கே...  

“சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா, தவறா என்று கேட்டால், தவறு என்றுதான் சொல்லவேண்டும். உண்மையும் அதுதான். சனிபகவான் ஜாதகத்தில் எங்கு நின்றாலும், அந்த இடத்தை - பாவத்தைத் தூய்மைப்படுத்தவே நிலைபெறுகிறாரே தவிர, நாம் நினைப்பதுபோல் நம்மைச் சோதிப்பதற்கு அல்ல. ஒரு தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு 'ஹாலிடே பீரியட்' என்று ஒன்று இருக்கும். அதாவது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றுக்கு ஒய்வுகொடுத்து, சரி செய்தபிறகு மீண்டும் இயக்குவார்கள்.  அதைப்போலத்தான் நம் மனித உடம்பும். அதைச் சரி செய்வதே சனீஸ்வரன்தான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சனிபகவானுக்கு சுபத்தன்மை உண்டா, இல்லையா என்று கேட்டால்,  நிச்சயமாக உண்டு.  சூரியனின் புதல்வனான அவர் தன் தந்தையின் குணத்துக்கு எதிராக, எப்படிச் செயல்படுவார்?! வானியல் ஆய்வுகளின்படி சூரியனில் இருப்பது, ஹைட்ரஜன் வாயு. சனியில் இருப்பதும் இதேதான். ஆனால், சற்றுக் குறைவு. அத்துடன் ஹீலியம் வாயுவும் உண்டு. இவை இரண்டும்தான் ஓர் அணு உருவாகக் காரணிகள். ஆகவேதான், சனியின் தன்மை  செயல்களுக்கான (கர்மா) காரணியாக இருந்து கர்மகாரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல், ஒரு செயலும் நடைபெறாது. 

அவரவர்களின் கர்ம வினைகளுக்கேற்பத்தான் பலன்களைத் தருவார்,   செய்வார். சனி, நல்லது செய்ய வேண்டும் என்றால், அதை குருவின் மூலமாகவோ அல்லது லக்ன சுபர் மூலமாகவோத்தான் செய்வார். சனீஸ்வரனுக்கு 'வேலைக்காரன்' என்ற பெயரும் உண்டு. ஒரு ஜாதகருக்கு வேலையை ஏற்படுத்தித் தருவதே இவர்தான். என்னதான் ஜாதகத்தில் 10-ம் இடம் (பத்தாம் பாவம்) ஒருவரின் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வது என்றாலும், அந்தத் தொழிலில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை சனியின் இருப்பிடத்தை வைத்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம் பெற்றாலும் சரி, அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி, அவர் தன் நிலையில் இருந்து சற்றும் விலகாமல் அவரவர் கர்ம வினைக்கேற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார். 

நல்ல கர்ம வினை உள்ளவர்களுக்கு நல்ல பலன்களையும் அது சரியில்லாதவர்களுக்குக் கஷ்ட பலன்களையும் தருவார். தர்ம நியதிகளின்படி நடப்பவர்களுக்கு சனீஸ்வரன் எந்த ராசியில் நின்றாலும் அவர்களுக்கு நல்ல பலன்களைத்தான் தருவார்.

ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். தினமும் நாம் ஈடுபடும் அத்தனை கர்மாவுக்கும் சனியே பிரதானமாகிறார். ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆன்மிகத்தில் உள்ளவர் இல்லாதவர் அதாவது இறை பக்தி உள்ளவர், இல்லாதவர் என அவர் எவராக இருந்தாலும், தன் ஒழுக்கத்தில் இருந்து தவறுபவராக இருந்தால்,அதற்குரிய  தண்டனையைத் தருபவர் சனீஸ்வரன்தான்.

சனீஸ்வரன் சூரிய குடும்பத்தில் கடைசி வட்டத்தில் இருப்பவர். அதனால் அவர் ராசிச் சக்கரத்தை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் முப்பது வருடங்கள்.  ஒரு ராசியில் முப்பது மாதங்கள் இருப்பார்.  'சனீஸ்வரன் 8-ம் இடத்தில் நின்றாலும், மீன ராசியில் இருந்தாலும் ஆயுள் தீர்க்கம் உண்டு' என்பார்கள்.  ஆனால், அப்படி இல்லாதவர்களுக்கு ஆயுள் குறைவாக இருக்கிறதா என்று கேட்டால், அப்படி இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  

கர்மாவின் கணக்கு சீக்கிரம் நேரானவர்களுக்கு எதற்கு அதிக ஆயுள்? ஆயுள் அதிகம் என்றாலே அதற்கேற்ப அதிகக் கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டுமல்லவா. சனீஸ்வரனின் வீடுகளான மகரம், கும்பம் இரண்டுமே அருகருகே இருப்பதால், மேஷ லக்னத்தில் இருந்து மீன லக்னம் வரை ஒவ்வொரு ராசிக்கும் இவரது வீடு ஒரு சுப வீடாக வரும். ஆகவே ஒவ்வொரு லக்னத்துக்கும் அவர் சுப பலனைத் தந்துதானே ஆகவேண்டும்.

ஒருவரின் வாழ்க்கையில் கிட்டதட்ட பதினெட்டு ஆண்டுகள் அவர் சஞ்சரிக்கும் ராசிக்கு ஏற்ப,  விரயச் சனி, ஜன்மச் சனி, குடும்பச் சனி, அர்த்தஷ்டமச் சனி, களத்திரச் சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி என்கிற ரீதியில் பலன்களைத் தருவார். சிலருக்கு சுப பலனையும், சிலருக்கு அசுப பலனையும் தருவார்.  அதனால் அவருக்கு பெயர் கர்மாதிபதி என்று பெயர்.

கர்மாதிபதி தன் கர்ம பலனை சுபமாகத் தரவேண்டும் என்றால், தர்மாதிபதி எனும் குருவோடு தொடர்பு வேண்டும்.  ஆகவே ஒருவர் ஜாதகத்தில் சனியும் குருவும் தொடர்பில் இருந்தால், அவருக்கு கோசாரத்தில் சனி எந்தப் பாதிப்பையும் தரமாட்டார். ஜாதகத்தில்  ஒருவரின் பூர்வ புண்ணியாதிபதி அல்லது பாக்கியாதிபதி தொடர்பு இருந்தால் நல்லது.  

ஒருவருக்குத் தொழில் சரியாக நடக்கவில்லையென்றால், அதற்கு சனீஸ்வரன்தான் காரணம், ஒருவருக்கு உடல் நிலை கஷ்டப்படுத்துகிறது என்றால், அதற்கும் சனீஸ்வரன்தான் காரணம் என்று சொல்லியே பழக்கப்பட்டு விட்டோம்.  

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கறுப்பாகப் பிறந்து விட்டால் அதற்கும் காரணம் சனீஸ்வரன்தான். அவனைக் கூப்பிடும்போதெல்லாம் 'சனியனே' என்றுதானே கூப்பிடுவார்கள். தனக்கு சுக்கிர தசை வந்தால் மகிழ்ச்சி என்பதாக நினைக்கும் மனம் சனி தசை வந்தால் கஷ்டப்படுகிறது.   

கிரகங்களின் பலத்தைப் பற்றி நுணுக்கமாகச் சொல்லப் போனால் உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நமக்கு நன்மை செய்யும் என்றால், நமது ஞானிகள் சுப கிரகங்கள் பாப கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஏன் என்றால், சிலருக்கு செவ்வாயும் லக்னாதிபதியாக வருவார்.  இன்னும் சிலருக்கு சனீஸ்வரனும் லக்னாதிபதியாக வருவார்.  

சூரியனும் லக்னாதிபதியாக வருவார். சனீஸ்வரன் வீட்டில்தான் செவ்வாய் உச்சமாகிறார்.  ஆனால், சுப கிரகமான குரு அங்கு நீசமாகிறார்.   மற்றொரு சுப கிரகமான சுக்கிரன் வீட்டில்தான் சனீஸ்வரன் உச்சமாகிறார். ஆகவே எவரும் சுபரும் இல்லை. பாவியும் இல்லை. 
சனிப் பெயர்ச்சி காலங்களில் மனம் தளராமல் தன் வேலைகளை நன்றாகச் செய்து வந்தால் அதுவே சிறப்பைக் கொண்டு வரும்.

சனிபகவானுக்கு உரிய பரிகாரங்கள்:

கோள் சார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்துக்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால், பாதகப் பலன்கள் குறைவாகத்தான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள்

ஏற்படலாம்.

ஆகவே பொதுவான பரிகாரமாக  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது.  தன்னை விட பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது,  சனீஸ்வர காயத்ரியை தினம் 108 முறை ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது. வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது, குரங்குகளுக்கு வாழைப் பழம் வாங்கி தருவது ஆகியவை சனிபகவானைக் குளிரச்செய்யும் சிறந்த பரிகாரங்கள்.

பொதுவாக, ஜன்மச் சனி நடப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில்  ஆகிய இடங்களுக்குச் சென்று ஜன்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சனீஸ்வரனைப் போல் கொடுப்பார் இல்லை. கால புருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார். சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்தால், சனி பகவான் நன்மையே செய்வார்" என்று கூறினார்.

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் -2017 அனைத்து ராசியினருக்குமான பலன்களை அறிந்துகொள்ள...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு