Published:Updated:

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி!

விகடன் விமர்சனக்குழு
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி!
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி!

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலத்தில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் இன்று அனுமன்ஜெயந்தி விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர்

மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் தனிச் சன்னதியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.  மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார்.  இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

அழியா வரமும், அளவிலா ஆற்றலும் பெற்ற ஆஞ்சநேயர், இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்தார். திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.  எனவே, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.  

நாடெங்கும் நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டாலும், ஆஞ்சநேயர் அவதரித்த மார்கழி மாத மூல நாட்சத்திர நாளன்றுதான் இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம். எனவே, இன்று ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்தனர். வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சை பழ மாலை ஆகியவற்றை ஆஞ்சநேயருக்கு அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். ஆஞ்சநேயரை வழிபட்டால், அறிவுக் கூர்மையாகும், உடல் வலிமையாகும், நோய் நொடிகள் பறந்துபோகும், அச்சம் அகலும் என பக்தர்கள் நம்புவதால் வெயில் சிரமத்தையும் பாராமல் வணங்கி வழிபட்டார்கள்.  பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு