மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
கா
ழிச்சீராம விண்ணகரம்- தலத்தின் பெயரிலேயே எவ்வளவு கம்பீரம் பார்த்தீர்களா! இருக்காதா பின்னே?! எப்போதும் தன்னை மார்பில் சுமக்கும் தன் நாயகனை- மாலவனை... திருமாமகள், தன்னுடைய மார்பில் சுமக்கும்

க்ஷேத்திரம் ஆயிற்றே! அதுமட்டுமா... பெருமாளுக்கு, தவிட்டுப் பானை தாடாளன் எனும் சிறப்புப் பெயர் தந்த திருத்தலம், திருமங்கையாழ்வார் வேல் பரிசு பெற்ற திருவிடம் என இன்னும் பல சிறப்புகளும் உண்டு!

சிதம்பரம்- மயிலாடுதுறை பாதையில் அமைந்துள்ளது இந்தத் திவ்யதேசம். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இதன் மற்றொரு பெயர், சீர்காழி!

திருப்பெயரில் மட்டுமா... இந்த ஊரின் மூர்த்தி, தலம், தீர்த்தம், திருக்கதை என்று ஒவ்வொன்றுமே கம்பீரமானவைதான். அதிலும் குறிப்பாக, ரோமச முனிவருக்கு வரம் தந்து, நான்முகனின் கர்வத்தை பங்கம் செய்து, பரம்பொருள் திருவிளையாடிய திருக்கதை... மிக மிக சுவாரஸ்யம்!

பெருமை பிடிபடவில்லை பிரம்மனுக்கு! எந்த ஆதாரமும் இல்லாமல் விண்ணில் சுழலும் கிரகங்கள், ஒளிரும் நட்சத்திரங்கள்... மேலுலகங்களாகிய பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம், ஜன லோகம், தபோ லோகம், மகா லோகம், சத்திய லோகம்...

கீழுலுகங்களாகிய அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என ஈரேழு பதினான்கு லோகங்கள், அவற்றில் வாழும் உயிரினங்கள்... அனைத் தையும் கண்டு பேரானந்தம் அவருக்கு. இப்போது அவருக்குள் ஓர் எண்ணம்...

''ம்ம்ம்... நான் மட்டும் இல்லையென் றால் இவையெல்லாம் சாத்தியம்தானா? அற்புதமான இந்த அண்ட சராசரம் என்னால் அல்லவா விளைந்தது?’

- ஆமாம், ஆனந்தமயமான அவரது அக வீட்டுக்குள்- ஆமையாய்ப் புகுந்தது அகங்காரம்! அகிலம் அனைத்துக்கும், அவற்றைப் படைத்த தனக்கும்கூட அந்த நாராயணனே ஆதாரம் என்பதை ஒருகணம் மறந்துதான் போனார் பிரம்மன்.

கோடானுகோடி சதுர்யுகங்களை ஆயுளாகப் பெற்றவர் என்பதால், தன்னை விடப் பெரியவர் வேறில்லை என்று எண்ணத் தோன்றி விட்டது போலும் பிரம்மனுக்கு. இது தவறல்லவா?

தசாவதாரம் திருத்தலங்கள்!

நிச்சயம் தவறுதான்! அதை அவருக்கு உணர்த்த சித்தம் கொண்டது, இந்தப் பிரபஞ்சத்தின் ஆதிமூலம்.

பூலோகத்தில், புண்ணியம் மிகுந்த காழிச் சீராம விண்ணகரத்தில், எட்டெழுத்தை உச்சரித்தபடி கடும் தவம் செய்துகொண்டிருந்தார் ரோமச முனிவர். இறைவனின் உலகளந்த கோலத்தைத் தரிசிப்பதுதான் அந்தத் தவத்தின் நோக்கம்.

'முனிவரின் தவத்தை மட்டுமல்ல, பிரம்மதேவனின் அகந்தையையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்!’ - திருவுளம் கொண்ட பரம்பொருள், உலகளந்தானாகக் காட்சி கொடுத்தது முனிவருக்கு. அத்துடன் ஒரு வரமும் தந்தது... ''ரோம மகரிஷியே, உமக்கு நீண்ட ஆயுள் உண்டு. பிரம்மனின் ஆயுள் முடியும்போது, உமது உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும்!''

ஆஹா... எப்பேர்ப்பட்ட வரம்! இறைவன், அற்புத மாக ஒரு கணக்கைப் பூர்த்தி செய்துவிட்டார். அந்தக் கணக்கு, பிரம்மனின் அகந்தையைத் தவிடு பொடியாக்கியது.

தனது நீண்ட ஆயுளைக் குறித்துதானே இறுமாந்திருந் தார் பிரம்மன்! இப்போது, தன்னைவிட கோடானு கோடி மடங்கு அதிக ஆயுளை ரோமச முனிவருக்கு இறைவன் தந்தார் என்பதை அறிந்ததும், பிரம்மன் வெட்கினார். அனைத்துக்கும் தானே காரணம் என்ற எண்ணம் காணாமல் போயிற்று. தனக்கும் மேல் தன் தந்தை இருக்கிறார் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தார்; மாலவனைப் பணிந்தார்.

அற்புதமான கதைதான்! இந்தக் கலியுகத்தில், ஓங்கி உயர்ந்து நிற்கும் சீர்காழி தாடாளன் கோயில் கோபுரத்தை ஒருமுறை தரிசித்தாலே போதும்... நம் அகங்காரம் எல்லாம் தவிடுபொடியாகும்; நாம் வெறும் தூசி எனும் எண்ணம் வந்துவிடும்; அவ்வளவு சாந்நித்தியம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

கருடன், ஆண்டாள், ஆழ்வார்கள் சந்நிதிகளுடன் அழகுற அமைந்துள்ளது ஆலயம். உலகளந்த பெருமாள், முதல் அடியாக... இடக்காலை தூக்கி விண்ணை அளந்தது இங்குதான் என்கிறார்கள். உள்ளச் சிலிர்ப்புடன் வலம் வருகிறோம். பிராகாரத்தில் ஸ்ரீராமர் சந்நிதியும், கோயிலுக்கு எதிரே வெளிப் புறத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியும் இருக்கிறது. முறைப் படி அனைவரையும் வழிபட்டு, கருவறை நோக்கி நகர்கிறோம். முன்னதாக தாயார் தரிசனம்.

ஜகம் ஆளும் நாயகியாய், கருணை பொங்கக் காட்சியளிக்கும் அருள்மிகு லோகநாயகித் தாயார், தன் மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாளாம். ஒரு கால் ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலிக்காமல் இருக்க, அவரை இந்தத் தலத்தில் மகா லட்சுமி தாங்குகிறாளாம். எனவே, அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள், கோயிலுக்கு வந்து ஸ்ரீலோக நாயகித் தாயாரை மனமுருகி வழிபட, கணவருடனான பிணக்குகள் தீரும்; பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர் என்கிறார்கள். 9 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து தாயாரை வழிபட, ஆயுள் விருத்தியாகும்; திருமணத் தடை நீங்கும்; புத்திரபாக்கியம், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

மூலக் கருவறையில், புஷ்கலாவர்த்த விமானத்தின் கீழ்... வலக்காலை தரையில் ஊன்றி, இடக் காலை தலைக்கு மேலே தூக்கியபடி திகழ்கிறார். அவரின் கீழ் வலக்கரம் தானம் பெற்ற அமைப்பில் திகழ, இடக்கரத்தால் 'மீதி ஓர் அடி எங்கே?’ எனக் கேட்கும் பாவனையில் அருள்கோலம் காட்டுகிறார். சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் பெருமாளின் சங்கும், பிரயோகச் சக்கரமும் சாய்ந்தபடி இருப்பது விசேஷம்!

புதிதாக நிலம் வாங்குபவர்கள், அங்கிருந்து சிறிது மண்ணை முடிந்து எடுத்துவந்து இங்கே ஸ்வாமியின் திருப்பாதத்தில் ஒரு மண்டல காலம் பூஜையில் வைத்து, வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள். இதனால் அந்த நிலத்தில் விவசாயமோ, அல்லது மனை எழுப்புவதோ, எதுவாயினும் சிறப்பாக நிறைவேறுமாம். நிலை மாலை வழிபாடும் இங்கே விசேஷம். ஆளுயர மாலை சார்த்தி பெருமாளை வழிபட்டு, அந்த மாலையைப் பிரசாத மாக வாங்கிச் சென்று வீட்டின் நிலைப்படியில் (வாசக் காலில்) கட்டித் தொங்கவிடுவார்கள். இதனால் அந்த வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்கும்; தீயசக்திகள், பிணிகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.உற்ஸவரும் விசேஷமானவர்.

மூலவர் திருவடி அருகே, தவிட்டுப் பானை தாடாளன் அருள்கிறார்; வைகுண்ட ஏகாதசி அன்று தரிசிக்க லாம். அன்று இவரைத் தரிசிக்க மறு பிறவி கிடையாது என்கிறார்கள்.

இந்த ஆலயம் சிலகாலம் வழிபாடு இல்லாதிருந்ததாம். அப்போது, மூதாட்டி ஒருவரது வீட்டில் தவிட்டுப் பானைக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்தாராம் இந்த மூர்த்தி.

இந்த நிலையில் திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தார். அவருக்கும் சிவனடியாரான திருஞானசம்பந்தருக் கும் இடையே ஒரு விவாதப் போட்டிக்கு ஏற்பாடானது. முதல் நாள் இரவு, ஆழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் மூதாட்டி வீட்டுத் தவிட்டுப் பானைக்குள் இருப்பதாகவும், தன்னை வணங்கி வாதத்தில் வெல்லும் படியும் சொன்னார். அதன்படியே செய்து வாதத்தில் வென்றார் திரு மங்கையாழ்வார். அவரைப் பாராட்டி, தான் வைத்திருந்த வேலையும் வீரத் தண்டையையும் திருஞான சம்பந்தர் பரிசளித்ததாக ஒரு தகவலை, சிலிர்ப் புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

திருமங்கையாழ்வார்... ஸ்ரீதாடாள னையும், தாயாரையும் பாடியதோடு சுவாமி எழுந்தருளக் காரணமான ரோமச முனிவரையும் சேர்த்து, தன் பெயர் அனைத்தையும் குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணரை வழிபட, புத்திரப் பேறு கிடைக்கும். வைகாசி (சுவாதி)யில் திரிவிக்கிரமனுக்கு பிரம்மோற்ஸவம்!

நாமும் நம் ஆணவம் தொலைத்து, ஆனந்தமயமான வாழ்வு பெற சீர்காழி திரிவிக்கிரமனை வழிபட்டு வருவோம்.

- அவதாரம் தொடரும்...
படங்கள்: கே.கார்த்திகேயன்