Published:Updated:

தேடி வந்தாள்; கோயில் கொண்டாள்!

தேவி தரிசனம்...பி.என்.பரசுராமன்

ன்பு இரக்கம் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் தெய்வம் வந்து முன்னால் நிற்கும்; அன்பும் இரக்கமும் கொண்ட உயிர்களுக்கு, அல்லல் தீா்த்து அருள்மழை பொழியும். இதை விளக்கும் அம்பிகையின் திருக்கதை... 

ராமாபுரம் எனும் ஊருக்கு அருகில் பூங்காவனம் என்ற காடு இருந்தது. பெயரில்தான் பூ இருந்ததே தவிர, அந்த வனம் வறண்டு கிடந்தது. காட்டையொட்டி இருந்த ராமாபுரத்தில் மகிசுரன் என்பவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்ப மகிஷாசுரனைப் போலவே நடந்தான் மகிசுரன்!

எவராவது நிம்மதியாக  மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிந்தால் போதும்; மகிசுரன் மனம் உடைந்துபோவான். எப்பாடு பட்டாவது, அந்த மனிதனின் மகிழ்ச்சியைக் கெடுத்து, அவன் அழுவதைப் பாா்த்தால்தான் மகிசுரனுக்குத் தூக்கம் வரும்! யார் வந்து உதவி எனக் கேட்டாலும், அவா்களின் நிலத்தை அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டுதான் உதவி செய்வான். ஊரில் உள்ள பெரும்பாலானோரின் நிலங்கள் அவனிடம்தான் இருந்தன. அப்படிப்பட்ட தீயவனுக்கும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் பெயா் பொன்மேனி. அவனிடமும் நிலத்தை எழுதிவாங்கிக் கொண்டுதான், அவன்கேட்டதைக் கொடுத்தான் மகிசுரன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாவம்! தீயவனிடம் உதவிபெற்றதாலோ என்னவோ, பொன்மேனியின் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. அவன் வீட்டில் எறும்புகளுக்குக்கூட, என்றென்றும் ஏகாதசிதான்.பொன்மேனியின் மனம் நல்வாழ்வுக்கு ஏங்கியது. மனைவியும் தாயும், ''அன்னை பராசக்தியை வேண்டுங்கள்! அந்த ஆதிபராசக்தி அல்லல்களைக் களைவாள்'என்று அறிவுரை கூறினார்கள். பொன்மேனியும் அப்படியே செய்தான். அவன் கனவு கூட, காளி வழிபாடாகவே இருந்தது.

தேடி வந்தாள்; கோயில் கொண்டாள்!

என்ன இருந்து என்ன செய்ய? பொன்மேனியால் நிலத்தை மீட்க முடியவில்லை; அது முழுகிப்போனது. அதுமட்டுமல்ல! மீதி இருந்த கடனும், வட்டி வட்டிக்குமேல் வட்டி என்று போய், கடைசியில் பொன்மேனியும் அவன் குடும்பத்தாரும் மகிசுரனிடம் அடிமை வேலை பார்க்கும் படியாக ஆகிவிட்டது! கொத்தடிமையாகப் போய், கொண்ட கடனை அடைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா என்ன?

திருப்பிக் கொடுக்கமுடியாத கடன் தொகை மிக அதிகமாக சேர்ந்து போனதால், ஒருநாள்... மகிசுரன் பொன்மேனியை புளியமரத்தில் கட்டிவைத்துப் புளிய விளாறினாலேயே நன்றாக அடித்தான். அதைக்கண்ட பொன்மேனியின் மனைவி மயங்கி விழுந்தாள். ஊரார் அதிர்ச்சி அடைந்தார்கள். வாயில் வந்தபடி மகிசுரனைத் திட்டினார்கள்.

கடைசியில் மகிசுரன் சற்று இறங்கி வந்தான். ''வரும் சிவராத்திரியன்று பொன்மேனி தனி ஒருவனாக இருந்து, பக்கத்தில் உள்ள பூங்காவனத்தை உழுது, நெல் விதைத்து நீா் பாய்ச்சவேண்டும். அப்படிச் செய்தால், அவன் நிலம் அவனுக்குச் சொந்தம்' எனக் கூறினான். அது, நடக்காத செயல் எனத் தெரிந்திருந்தும் செய்வதாக ஒப்புக்கொண்டான் பொன்மேனி.

'எட்டி மரங்களும் இலுப்பை மரங்களும் அடர்ந்து இருக்கும் பூங்காவனக் காட்டை, உழுது பயிரிட இவன் ஏன் ஒப்புக் கொண்டான்? மகிசுரனிடம் அடிமைப்பட்டு அணு அணுவாக இறப்பதைவிட, இது எவ்வளவோ மேல் என நினைத்துவிட்டான் போலிருக் கிறது’ என்று பொன்மேனியைப் பார்த்தவர்கள் வருந்தினார்கள்.

அனைவரும் எதிர்பார்த்த சிவராத்திரி நெருங்கியது. அந்த நேரத்தில் எழுபது வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவரும் அவருடைய மனைவியும் அந்த ஊருக்கு வந்தார்கள். கிழவரின் உடலில் முதுமையின் அடையாளங்கள் இருந்தனவே தவிர, அவருடைய நடையில் தள்ளாமை இல்லை. அவருடைய மனைவி, அடர்ந்த கூந்தலைக் கோடரிக் கொண்டையாகப் போட்டு, ஒரு கையில் தடியும், இடுப்பில் கூடையும் சுமந்து வந்தாள்.

இருவரும் பூங்காவனத்துக்குள் நுழைந்தார்கள். திடுமென கிழவி, ''எனக்கு மிகக் களைப்பாக இருக்கிறது. இனி, ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. தாகம்வேறு உயிர்போகிறது. குடிக்க தண்ணீர் வேண்டும்'' என்றாள்.

கிழவா் நீரைத்தேடி நதிக் கரையை அடைந்தார்.   மகிசுரன் மனதைப் போலவே, நதியும் ஈரமின்றி வறண்டு கிடந்தது. எனவே,  சிறிய நீர்க் குவளையுடன் ஊருக்குள் சென்றார். ஒரு வீட்டுள் இருந்து முனகல் சத்தம் கேட்டது அது. பொன்மேனியின் வீடு. புளிய விளாறினால் பட்ட அடிகளின் வலி தாங்காமல் தவித்ததுடன், சிவராத்திரியன்று பூங்காவனத்துக்குச் செல்ல வேண்டியதை நினைத்தபடி படுத்திருந்தவன்தான் முனகிக் கொண்டிருந்தான். அவன் வீட்டுக் கதவைத்தட்டி நீா் கேட்டார் கிழவா்.

அவரைப் பார்த்ததும் பொன்மேனி துடித்துப் போனான். முதியவர் ஒருவர் ஒருவாய் தண்ணீருக்கு அல்லல்பட நேரிட்டதே என அங்கலாய்த்தவன், ''தாயே! தேவி! என்னம்மா இது? அகில உலகங்களையும் காக்கும் உன்னால், இவா் தாகத்துக்கு ஒருவாய் தண்ணீா்கூட தர முடியவில்லையே!' என்று அம்பிகையை நினைத்துப் புலம்பியபடி, அருகில் மயக்க நிலையில் படுத்திருந்த மனைவியை எழுப்பி, ''இந்த முதியவா் தாகத்தால் தவிக்கிறார் பார்! இவருக்கு நீா் கொடு!'என்றான்.

அவளும் எழுந்திருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். அதை முதியவர் பெற்றுச் சென்ற அதே விநாடி, பொன்மேனியின் உடம்பு 'தகதக’வென ஜொலித்தது. அடிபட்ட வலிகளெல்லாம் நீங்கிப்போயிருந்தன. பொன்மேனிக்கும் அவன் மனைவிக்கும் ஒன்றும் புரியவில்லை.

சிவராத்திரித் திருநாளன்று பொன்மேனி புதுக் கலப்பையைத் தோளில் சுமந்தபடி பூங்காவனத்தை நோக்கிப் புறப்பட்டான்.மனைவியும் ஊராரும் பின்தொடர, மகிசுரனும் வந்து சோ்ந்து கொண்டான். அனைவருமாகப் பூங்காவனத்தை அடைந்தபோது கிழவா் வந்து, ''என் மனைவி காணாமல் போய்விட்டாள்'என்று வருத்தத்தோடு முறையிட்டார். அதுபற்றி விசாரிப்பதற்குள், ''ம்! வந்த வேலையைக் கவனி!' என்று கத்தினான் மகிசுரன். எனவே, பொன்மேனி கிழவரைப் பார்ப்பதை விடுத்து, கண்களை மூடி அம்பிகையைத் தியானித்து, கலப்பையை மண்ணில் வைத்துக் காலால் அழுத்தி ஊன்றி வேலையைத் துவங்கினான். என்ன அதிசயம்! பாா்வைக்குப் பாறைபோல் இருந்த நிலம், அப்படியே புட்டுத் துகள் போலப் 'பொலபொல’வென நெகிழ்ந்து கொடுத்தது. கலப்பை, நூல் பிடித்தாற்போல நேரே வழுக்கிக் கொண்டு சென்றது. அதைப்பார்த்து அனைவரும் வியந்து கொண்டிருக்க, அது எதையும் கவனிக்காதது போலிருந்த கிழவர், மெள்ள புன்னகைத்தார்.

பொன்மேனி உற்சாகமாக உழுதுகொண்டிருந்தான். திடீரென எதன் மீதோ பட்டதைப் போலக் கலப்பை அப்படியே நின்றது. அது இடித்து நின்ற இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கலப்பையில் வழிந்தது. பொன்மேனி அலறியபடியே மண்ணில் விழுந்தான். பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் பதைபதைத்தார்கள்.

அப்போது அசரீரியாக ஒலித்தது அம்பிகையின் குரல்:

''பொன்மேனி! அச்சப்படாதே! என் கணவா் தண்ணீா் கொண்டு வரப்போனதும், இங்கே படுத்த நான் மண் புற்றாக மாறிவிட்டேன். கலப்பையின் முனை என்னைக் குத்தியதால், ரத்தம் பீறிட்டது. உனது வேண்டுகோளுக்காகவே நானும் ஈஸ்வரனும் இங்கு வந்து அமர்ந்தோம். உன் பக்தியின் மூலம் இங்கே என்னை வெளி்படுத்திய நீ, எப்போதும் என்னையும் ஈஸ்வரனையும் வழிபடும் பாக்கியத்தைப் பெறுவாய்!'

அந்த ஒலி அடங்குவதற்குள் மண் விலகி புற்று ஒன்று தென்பட்டது. அங்கே மல்லாந்து படுத்த நிலையில் திருக்காட்சி தந்தாள் அன்னை. கிழவரும் அங்கே வந்து அமா்ந்து ஈசனாகக் காட்சிக் கொடுத்தார்.

நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த மகிசுரன், ''அன்னையே! எந்தவிதப் பிரதிபலனும் இல்லாமல், அனைத்தையும் படைத்த நீ வந்து அருள் செய்திருக்கிறாய். பாவியான நானோ, இவா்களிடம் இருந்தே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, இவா்களையே வாட்டி வதைத்திருக்கிறேனே! அது மட்டுமா? உறக்கத்தில் இருந்த உன் திருமேனியில் ரத்தம் வரக் காரணமாகி விட்டேனே! இனி நான் உயிருடன் இருப்பதில் நியாயமே இல்லை' என்று கதறியபடி தீயில் விழுந்து தன் வாழ் நாளை முடித்துக்கொண்டான். மனம் திருந்தி வருந்திய அவனுக்கும் முக்தி கொடுத்தாள் அம்பிகை.

அடியார்களின் பக்திக்காக அன்னை இவ்வாறு அருளாடல் நிகழ்த்திய அந்தத் திருத்தலம் சென்னை அருகே திருவள்ளூா் மாவட்டத்தில் அமைந்துள்ள புட்லூரில் உள்ளது. அன்னை அங்காள பரமேஸ்வரி எனும் திருநாமத்தில் எழுந்தருளி உள்ளாள்! 

ஹே மாத்ருகா சொரூபிணீயே!

'எந்த பீஜாக்ஷரமானது, சகல வேத  சாஸ்திர  ஸ்மிருதி  புராணங்களையும், சகல சப்தங்களையும், சகல மொழிகளையும், பசுபட்சிகள் முதலானவைகளின் ஒலியாகவும், சகல சந்தஸுகளையும், சர்வ ஸ்வரங்களையும், தாளங்களையும், பஞ்ச வாத்தியங்களின் தொனிகளையும் தனது சுயப் பிரகாசத்தால் விளக்கமுறச் செய்கிறதோ, எது சந்திர மண்டலத்தின் அமிர்தத்துக்கு ஒப்பாய் இருக்கிறதோ, எது சகலமான பதங்கள், பதங்களால் ஆகிய வாக்கியங்கள், தோற்றங்கள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கிறதோ... அத்தகைய மேலான வாக்பவ பீஜமாகும் உனது திருவடிவை வணங்குகிறேன்’.

துர்வாசர் அருளிய 'சக்தி மஹிம்ந ஸ்தோத்திர’த்தில் உள்ள ஒரு பாடலின் விளக்கம் இது. இதைப் படித்து அம்பாளை வழிபட, சகல நன்மைகளும் கைகூடும்.