மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 1

புதிய தொடர் கதைஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 1

இன்றைக்கு ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி 7ம் நூற்றாண்டின் மத்தியில், இந்தியத் துணைக்கண்டம் அரசியல் மற்றும் சமய ரீதியாக பல திருப்புமுனைகளைச் சந்தித்தது. 

வடக்கே பேரரசர் ஹர்ஷரின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்திருக்க, தென்னகத்தில் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, செழித்தோங்கித் திகழ்ந்தது பல்லவப் பேரரசு. அதன் வட எல்லையில், வாதாபி வீழ்ச்சிக்குப் பழிதீர்க்கவும், பல்லவர்களை விழுங்கவும் தருணத்தை எதிர்நோக்கியிருந்தது சாளுக்கியம்!

மேலும், தென் தீபகற்பத்தில் களப்பிரர் ஆட்சி ஒழிக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருந்தது. அங்கே பாண்டியர்கள் பலமாக வேரூன்றியிருந்தனர். பல்லவப் பேரரசுக்கும் பலம் வாய்ந்த பாண்டியத் திருநாட்டுக்கும் இடையே ஒரு சிற்றரசாகக் குறுகிக் கிடந்தது சோழம். சேரர்களோ 'வில்வேலி’ என்பானின் தலைமையில் பலம் பெற்றிருந்தனர். நமது இந்தக் கதை நிகழ்ந்ததும் அதே காலகட்டத்தில்தான்.

அரியாசனங்களுக்காகவும் மணிமகுடங்களுக்காகவும் இந்தப் பூமண்டலத்தில் நிகழ்ந்த ரத்த சரித்திரங்களை நாமறிவோம். ஆனால், சிவ பக்தியில் சிறந்த பண்டைய தமிழ் வேந்தர்கள், தத்தமது மணிமகுடங்களைக் காட்டிலும், தென்னாடுடையானின் திருத்தாள்களை மகுடமாகத் தம் சிரத்தில் ஏந்துவதையே பெரும் பேறாகக் கருதி வாழ்ந்தனர். பிற்காலத்தில், ராஜ ராஜ சோழன், 'சிவபாத சேகரன்’ என்று திருப்பெயர் ஏற்றதும், அதுவே தனக்குப்பிடித்தமான நாமம் என்று பறைசாற்றியதும் தமிழக வேந்தர்களின் சிவபக்திக்கு அத்தாட்சி!

விதிவசத்தால் அத்தகைய சிவப் பேற்றினை இழந்து, சமணத்தின்பால் நாட்டம் கொண்டிருந்தான் தென்னவன் பாண்டியன். அவன் சிந்தையை சிவத்தின்பால் திருப்பி, பாண்டியத் திருநாட்டை மீட்டெடுத்து, அங்கு மீண்டும் சைவம் தழைத்தோங்கிட பாண்டியனுக்கு 'சிவ மகுடம்’ சூட்டியருளினாள் சோழர்குல மாதரசி. அதற்கு அவள் மேற்கொண்ட பெரும்பணிகள்... நடத்திய அரசியல் சதிராட்டங்கள்... வெற்றிக் கனியைப் பறிப்பதற்கு அவள் நடத்திய வீர விளையாட்டுகளை விவரிக்கும் திருக்கதையே இந்தச் 'சிவ மகுடம்’!

அதோ... சோழ தேசத்தின் எல்லையில் 'புரிசை மாமதிற் புலியூர்’ நம்மை இருகரம் கூப்பி வரவேற்கிறது!

வாருங்கள், செல்வோம்!

புலியூரில் தோன்றிய கரும்புரவி!

சித்திரை மாதத்தின் வைகறைப் பொழுது மெள்ள மெள்ள விடிந்து கொண்டிருந்தது. அது வேனிற் காலம் ஆனாலும், பருவத்துக்குச் சம்பந்தம் இல்லாமல் கூடிநின்ற கார்மேகங்கள் நாலாதிசையிலும் இருளைக் கவிழ்த்திருந்தன. புலீச்சுரமுடையார் திருக்கோயிலில் அதிகாலை பூசையின் பொருட்டு வழக்கமாக ஒலிக்கப்படும் சங்கநாதமும் எழுப்பப்படவில்லையாதலால், புலியூர் விழித்துக்கொள்ளாமல் இருந்ததில் வியப்பில்லைதான்!

சிவமகுடம் - 1

எனினும், ஊர்க்காவல் படையின் நடமாட்டத்தால் எழுந்த குதிரைகளின் குளம்படிச் சத்தங்கள் ஆங்காங்கே நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்க... கோயிலுக்கு அருகில் படித்துறைகளுடன் கூடிய அந்தத் தாமரைத் தடாகத்தில் பேருருவம் ஒன்று மூழ்கி எழுந்ததால், அதன் நீர்ப்பரப்பில் உண்டான சலசலப்பும் தன் பங்குக்கு அமைதியைக் குலைத்தது!

ஊரின் தொடக்கத்தில் *அர்ச்சனாபோகமாகவும், அபிஷேக போகமாகவும் வழங்கப்பட்ட இறையிலி நிலங்கள் விரிந்துகிடக்க, அதை ஊடறுத்துச் செல்லும் கால்வாய்க்கும் திருக்கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த அந்தத் தடாகத்தில், இன்னும் கதிரவக் காதலனைக் காணாமல் தலைகவிழ்ந்து கிடந்தன தாமரை மொக்குகள். நீர்ப்பரப்பின் சலசலப்பால் அவை அசைந்தாடிய காட்சி, நீரில் மூழ்கியெழுந்த பேருருவத்தை நோக்கிச் சலிப்புடன் தலையசைத்தது போலிருந்தது. கால்வாயில் இருந்து தடாகத்துக்கு நீர் வர ஏதுவாக அமைந்த மடைமுகங்களை புலிச்சிற்பமாக அமைத்திருந்தார்கள். அப்படியொரு புலிமுகத்தின் வாயிலிருந்து குளத்துக்குள் வேகமாக வந்து விழுந்த மீன்கள் இரண்டு, 'இனி தங்களை இலச்சினையாகக் கொண்ட தென்னவனுக்கே யோக காலம்’ எனக் குதூகலமாய்க் கட்டியம் கூறுவதுபோல் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

இவை யாவற்றையும் கவனிக்கும் மனோபாவம் இல்லாது, தடாகத்தின் நீரில் மூன்றாவது முறையாக மூழ்கி எழுந்த பரமேசுவரப் பட்டர், எதிர்க் கரையில் தெரிந்த ஆலய விமானத்தை நோக்கினார். அதிக வெளிச்சம் இல்லாததால் நிழலுருவமாகத் தென்பட்ட விமானத்துடன், இடப் பக்கத்தில் சற்று மேலே யதேச்சையாக வான் பரப்பில் மங்கித் தெரிந்த சுக்லபட்சத்து நான்காம்பிறை மிக அழகுறப் பொருந்த, அந்தக் காட்சியானது சாட்சாத் பிறைசூடிய பெம்மானே அங்கு அமர்ந்திருப்பதாகப்பட்டது பட்டர்பிரானுக்கு. சாதாரண தருணமாக இருந்திருந்தால், அதைக் கண்டு சிலிர்த்தும் வியந்தும் போயிருப்பார் அவர். ஆனால், அது அசாதாரணமான சூழல். அவருக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சோழ தேசத்துக்கும்தான்!

போர்வெறி கொண்டிருக்கிறான் தென்னவன் பாண்டியன். காரணம், பாண்டிய தேசத்து எல்லைகளில் சேரரர்களின் அத்துமீறல்கள். அதற்குச் சோழர்களும் பக்கத்துணை என்பது பாண்டியனின் யூகம். ஆகையால், பாண்டிய சைன்னியம் எப்போது வேண்டுமானாலும் சோழத்தின்மீது பாயலாம். அப்படி ஒன்று நேர்ந்தால், பாண்டிய திமிங்கிலத்தின் முதல் இலக்கு இந்தப் புலியூராகத்தான் இருக்கும்.

சிவமகுடம் - 1

இதையொட்டி சோழரும் எச்சரிக்கையாகவே இருக்கிறார். எல்லைப்புறத்தில் மிதமிஞ்சிய வகையில் கட்டுக்காவல் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லையை ஒட்டிய கிராமங்களிலும் நேரம் காலம் பார்க்காது ஊர்க்காவல் படை சுற்றிவருகிறது. போர்க்காலம் என்பதால், ஆலயங்களில்கூட மிகச் சத்தமாக வாத்தியங்கள் முழங்கவோ, மணிகள் ஒலிக்கவோ, பூஜைக்காக சங்கநாதம் எழுப்பவோ தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், இந்த முன்னேற்பாடுகள் எல்லாம் போதுமானதா? தற்போதுள்ள சூழலில் பாண்டியரின் படைபலத்தை ஒப்பிட்டால், நாழிகைப் பொழுதில் சோழ தேசத்தை அவர்கள் நசுக்கிவிட முடியுமே! சோழம் வீழ்ந்தால் சைவமும் அல்லவா வீழும்? சமணத்தின் வயப்பட்டிருக்கும் பாண்டியனின் ஆதிக்கம் மேலோங்கினால் பிறகு, சிவாலயங்கள் ஏது... வழிபாடுகள்தான் ஏது?

அடுக்கடுக்கான எண்ணங்கள் பரமேசுவரப் பட்டரின் மனதை அலைக்கழிக்க, அதையும் மீறி சிறு நம்பிக்கை அவருள்...

'மணிமுடிச் சோழர் மாவீரர். அவரது தலைமையும் வியூக அனுபவங்களும் நிச்சயம் சோழ தேசத்தைக் காப்பாற்றும். இறைவா, என் ஈசனே... அதற்கான ஆற்றலை நீதான் அவருக்கு அளித்தருள வேண்டும்!’  மனம் பிரார்த்திக்க, அனிச்சையாய் சிரமேற் கரம் குவித்து விமானத்தை வணங்கித் தொழுது, கரையேறினார் பட்டர்பிரான்.

அதே தருணம் அவர் பார்வையில், தடாகத்தைத் தாண்டி வயல்களின் ஊடாக நீண்டுகிடந்த ஒற்றையடிப் பாதையில், தூரத்தில் கரும்புள்ளியாய் ஓர் உருவம் ஊரை நோக்கி விரைந்து வருவது தென்பட்டது. அருகில் நெருங்க நெருங்க, போர் உடை அணிந்த ஆஜானுபாகுவான வீரன் ஒருவன் ஆரோகணித்திருக்கும் கரும்புரவியாய் அது பரிணமித்தது. அதன் பாய்ச்சலும் புயல் வேகத்துடன் இருந்தது. சில விநாடிகள்தான்... பட்டர்பிரான் இன்னும் கூர்ந்து நோக்குவதற்குள், வாயு வேகம் மனோ வேகமாய் அது அவரைக் கடந்து சென்றுவிட்டது.

அந்தப் புரவி பாய்ந்து சென்ற வேகமானது, ஆகிருதியான பட்டர்பிரானையே அரைவட்டமாகச் சுழற்றிவிட்டு விட்டது. நிலைகுலைந்த அந்தக் கணப்பொழுதிலும், பட்டர் அந்த அபாயத்தைக் கவனிக்கத் தவறவில்லை. அவரது உயரமும், குதிரையின்மீது ஆரோகணித்திருந்த வீரனின் இடைக்கச்சையும் ஒரே மட்டத்தில் இருந்ததால், அதில் செருகப்பட்டிருந்த குறு வாளின் மீன் இலச்சினை மிகத் தெளிவாகவே பட்டர்பிரானின் பார்வையில் பட்டுவிட்டது.

பேராபத்து வந்தேவிட்டது என்றுணர்ந்ததும், சடுதியில் சுதாரிக்க முயன்றார் பட்டர். ஆனால், அதற்குள் அந்தக் கரும் புரவி திருக்கோயிலின் வாயிலை அடைந்துவிட்டது. கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு வெகு சிரமத்துடன் பட்டர்பிரான் ஓடோடி வருவதற்குள், கோயிலுக்குள் நுழைந்தேவிட்டான் அந்தக் குதிரைவீரன்.

பட்டர் கோயிலை அடைந்ததும், அந்த விசித்திரத்தைக் கண்டு திகைத்துப் போனார். அர்த்தமண்டபத்தில் நின்று, மூலவரை  புலீச்சுரமுடைய இறைவனை வணங்கியபடி இருந்தான் குதிரைவீரன். பட்டர்பிரான் சற்றும் தாமதிக்கவில்லை; மதிலோரம் பதுங்கியபடி சென்று ஆலயமணியை இருமுறை விசையுடன் இழுத்து அடித்தார். அவருக்குத் தெரியும், ஆபத்தான காலங்களில் ஆலய மணியோசை அபாய ஒலியாகக் கருதப்படும் என்று!

அடுத்த சில விநாடிகளில் கோயிலுக்குள் பாய்ந்து வந்த சோழ வீரர்கள், குதிரை வீரனைச் சூழந்துகொண்டார்கள். அவர்களின் வீரவாள்கள் குதிரை வீரனின் மார்பை நோக்கி நீண்டன. 'இனி, குதிரைவீரன் தப்ப முடியாது’ என்று நிச்சயித்துக்கொண்ட பட்டர், தானும் அர்த்த மண்டபத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால், அவர் நினைத்தது ஒன்று; நடந்ததோ வேறு!

தனது இடைக்கச்சையில் ஒரு முடிப்பில் இருந்த வஸ்துவை எடுத்து, படைத் தலைவனாகத் தெரிந்தவனின் முகத்துக்கு நேராக நீட்டினான் குதிரைவீரன்.

''ஹூம்... கயல் முத்திரை! இதற்கு இந்தச் சோழ தேசத்தில் மரியாதை கிடைக்காது!'' என்று அலட்சியமாகப் பதிலுரைத்த படைத்தலைவன், ''இவனைக் கட்டி இழுத்து வாருங்கள்'' என்று படையினருக்குக் கட்டளையும் இட்டான்.

சிவமகுடம் - 1

பதிலுக்கு, 'ஓஹோ... அப்படியா! இப்போதாவது மரியாதை கிடைக்குமா?'' என்று கனகம்பீரமாகக் குரலெழுப்பிய குதிரை வீரன் தன் முகத்திரையை விலக்கினான். மறுகணம், பயபக்தியுடன் அவன் முன் மண்டியிட்டனர் சோழ வீரர்கள். புலித்தோல் இடையுடுத்தும் பரமனுக்கும், புலிக்கொடிக்கும் மட்டுமே தாழ்ந்து பணியும் அந்த வீரர்களின் சிரங்களும் அவர்களது வீர வாள்களும் ஒருசேரத் தரை தாழ்ந்தன. அதிர்ந்துபோனார் பட்டர்பிரான்!

''என்ன ஆயிற்று இந்த மடையர்களுக்கு? இருக்கட்டும்... நானே அவனை ஓரு கை பார்க்கிறேன்'' என்று இரைந்தவண்ணம் குதிரைவீரனை நெருங்கினார்.

அருகில் சென்று அவன் முகத்தைக் கண்டதும், சப்தநாடியும் ஒடுங்கிப்போனது பட்டருக்கு. அப்படியே சிலையாகி நின்றவரின் வாய், அவரையும் அறியாமல் முணுமுணுத்தது...

''தாங்களா? இங்கே ஏன் வந்தீர்கள்..? அதுவும் இந்த அகாலச் சூழலில்!''

மகுடம் சூடுவோம்

'பிரமித்தேன்!’

''சிவமகுடம்  ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டும் எனில் 'பிரமிப்பு’!

சிவமகுடம் - 1

சரித்திரக் கதைகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதனுடன் ஆன்மிகமும் சேரும்போது, கேட்கவே வேண்டாம் மிகப் பிரமாண்டம்... மிக அழகு! அதிலும் எழுத்தாளர் ஆதிரையான் விவரித்த கிளைக் கதைகளும், அதில் வரும் கதாபாத்திரங்களின் தன்மையும் பிரமிக்கவைத்தன. சரித்திரம், சமயம் தொடர்பாக அவ்வளவு தகவல்களைக் கொட்டி கதையாக்கியிருக்கிறார்.

அடுத்தடுத்த அத்தியாயங்களை அவர் விவரிக்க விவரிக்க பாண்டியனோடு சேர்ந்து வாள் சுழற்றுவது போன்ற பிரமை, பட்டர் பிரானோடு ஊர் சுற்றும் உணர்வு! படம் வரையும்போது எனக்குள் அவ்வளவு சந்தோஷம், உற்சாகம். நீங்களும் தொடர்ந்து படியுங்கள். எனது அந்த சந்தோஷமும் உற்சாகமும் உங்களையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.''

 - ஓவியர் ஸ்யாம்.